search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீகாளஹஸ்தி"

    • வீதிகளில் ஊர்வலமாகக் கொண்டு சென்றனர்.
    • பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து தரிசனம் செய்தனர்.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி நகரின் வடகிழக்குத் திசையில் எழுந்தருளி உள்ள கருப்பு கங்கையம்மன் கோவிலுக்கு பெயர், ஊர் விவரம் குறிப்பிடப்படாத பக்தர் ஒருவர் வெள்ளியாலான கிரீடம், கவசம், நாகப்படகு ஆகியவற்றை காணிக்கையாக வழங்கினார். அதை கோவில் நிர்வாகிகள் பெற்று, அந்த பக்தருக்கு தரிசன ஏற்பாடுகளை செய்து வைத்தனர்.

    அதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகிகள் உற்சவர் அம்மனுக்கு அலங்காரம் செய்து, மேளதாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகளில் ஊர்வலமாகக் கொண்டு சென்றனர். வழிநெடுகிலும் பக்தர்கள் கங்கையம்மனுக்கு தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் தரிசனம் செய்தனர்.

    • உற்சவர் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.
    • பக்தர்களுக்கு உகாதி பச்சடி பிரசாதமாக வழங்கப்பட்டது.

    ஸ்ரீ காளஹஸ்தி:

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் தெலுங்கு வருடப் பிறப்பு உகாதியை முன்னிட்டு பல வண்ண மலர்களாலும், மின் விளக்குகளாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அலங்கார மண்டபத்தில் உற்சவர் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.

     முன்னதாக வேதப்பண்டிதர்கள் கலச ஸ்தாபனம் செய்து, சிறப்பு பூஜைகள் மற்றும் பால், தயிர். பஞ்சாமிர்தம், தேன், நெய், வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தூப தீபங்கள் சமர்ப்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு உகாதி பச்சடி பிரசாதமாக வழங்கப்பட்டது.

    தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி கோவில் சார்பில், பக்த கண்ணப்பர் கோவிலுக்கு சீர்வரிசை பொருட்கள் தேவஸ்தானம் சார்பில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு, தாரக சீனிவாசுலு மற்றும் செயல் அலுவலர் நாகேஸ்வரராவ், கோவில் அதிகாரிகள், ஊழியர்கள், வேத பண்டிதர்கள் ஆகியோர் தலைமீது சுமந்து கொண்டு கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்று தேர் வீதியில் உள்ள பக்தக் கண்ணப்பர் கோவில் அர்ச்சகரிடம் வழங்கப்பட்டது.

    இதில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர சுவாமி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுனிதா, ரமாபிரபா, சீனிவாசலு, சிறப்பு அழைப்பாளர்கள் சிந்தாமணி பாண்டு, உதய்குமார், சுரேஷ், தேவஸ்தான தலைமை அர்ச்சகர்கள், தேவஸ்தான உதவி ஆணையர் மல்லிகார்ஜுன பிரசாத், கோவில் கண்காணிப்பாளர் நாகபூஷணம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா.
    • சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் 4 மாட வீதிகளில் உலா.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 11 மணியளவில் கங்காபவானியுடன் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் ஹம்ச வாகனத்திலும், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    உடன் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகன், பக்த கண்ணப்பர் உலா வந்தனர். முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மேள தாளங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க ராஜகோபுரம் வரை கொண்டு வந்து அந்தந்த வாகனங்களில் உற்சவர்களை எழுந்தருள செய்தனர். வீதி உலா முன்னால் கோலாட்டம், நாட்டிய, நடன நிகழ்ச்சிகள் நடந்தன. இசை வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.

    இதேபோல் இரவு 9 மணியளவில் ராவணாசூர வாகனத்தில் சோமசுந்தரமூர்த்தி, மயில் வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    • ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம் கோலாகலமாக நடந்தது.
    • வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம் கோலாகலமாக நடந்தது.

    முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள தங்கக் கொடிமரம் அருகில் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி, தெய்வானை சமேதசுப்பிரமணியசாமி, கங்காபவானி சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார், பக்தகண்ணப்பர், சண்டிகேஸ்வரரை மூலவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சன்னதி அருகில் வைத்தனர்.

    வேதப் பண்டிதர்கள், அர்ச்சகர்கள் கலச ஸ்தாபனம், சிறப்புப்பூஜை, ஹோமப் பூஜை செய்தனர். வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களைமுழங்க கலசங்களில் உள்ள புனித கங்கை நீரால் தங்கக் கொடி மரத்துக்கு அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பித்தனர்.

    அதன் பிறகு மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்க முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் வேத மந்திரங்கள், சிவ நாமங்கள் முழங்க பக்தர்கள் வழங்கிய சேலைகள், வெள்ளைநிற பிரம்மோற்சவ விழா கொடியை கம்பத்தில் ஏற்றினர்.

    அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் `ஹர ஹர மகாதேவா சம்போ சங்கரா' எனப் பக்தி கோஷம் எழுப்பினர். அப்போது அர்ச்சகர்கள் கொடிக்கம்பத்துக்கு தீப தூப நெய்வேத்தியம் சமர்ப்பித்தனர்.

    • ஸ்ரீகாளஹஸ்தியில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் நடந்து வருகிறது.
    • நேற்று முதல் ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. நேற்று முதல் ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் மிகுந்த பக்தியுடன் ஈடுபடும் ராகு, கேது சர்ப்பதோஷ நிவர்த்தி பூஜைகள் இந்த ஆண்டு தடை செய்யப்படவில்லை வழக்கம் போல் நடைபெறும்.

    ராகு, கேது பூஜை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை குறிப்பிட்ட நேரத்தில் செய்யப்படும் என காளஹஸ்தி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
    • பக்தர்கள் சுவாமிக்கு தீப தூப நெய்வேத்தியம் சமர்பித்தனர்.

    ஸ்ரீ காளஹஸ்தி:

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் தேவஸ்தானத்தில் பீஷ்ம ஏகாதசியை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி வீதி உலா நான்கு மாட வீதிகளில் நடைபெற்றது. முன்னதாக சிவன் கோவிலில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சப்பரங்களில் ஊர்வலமாக புறப்பட்டு பாபு அக்ரஹாரம் குளம் வழியாக குமார சுவாமி திப்பா வரை மேளதாளங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க சென்றார்.

    பக்தர்கள் சுவாமிக்கு தீப தூப நெய்வேத்தியம் சமர்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுனிதா, ரமாபிரபா, தேவஸ்தான அதிகாரிகள், கோவில் உதவி ஆணையர் மல்லிகார்ஜுன பிரசாத், தேவஸ்தான முதன்மை அர்ச்சகர் கருணாகர் குருக்கள், தட்சிணாமூர்த்தி, தேவஸ்தான பணியாளர்கள், கோவில் ஆய்வாளர் ஹரி யாதவ், சுதர்சன் ரெட்டி காமேஸ்வர ராவ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீகாளஹஸ்தியில் நவராத்திரி உற்சவம் நடந்து வருகிறது.
    • மீனாட்சி தேவி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் பல்வேறு கோவில்களில் நவராத்திரி உற்சவம் நடந்து வருகிறது. விழாவின் 2-நாளான நேற்று ஞானப்பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவிலில் உற்சவர் அம்மன், பிரம்மசாரினிதேவி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    ஸ்ரீகாளஹஸ்தி கனகாசலம் மலைமீதுள்ள கனகதுர்க்கையம்மன் கோவிலில் உற்சவர் அம்மன் மீனாட்சி தேவி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பங்காரம்மன் கோவிலில் உற்சவர் அம்மன் காயத்ரிதேவி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    முத்தியாலம்மன் கோவிலில் உற்சவர் அம்மன் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.

    • சிவன் கோவிலில் 5 நாட்கள் வருடாந்திர பவித்ரோற்சவம் நடக்கிறது.
    • வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் 5 நாட்கள் வருடாந்திர பவித்ரோற்சவம் நடக்கிறது. முதல் நாளான நேற்று கோவிலில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் பிரத்யேக கலசம் ஏற்பாடு செய்து, அங்கு 'ஸ்ரீ' என்னும் சிலந்தி, 'காள' என்னும் பாம்பு, 'ஹஸ்தி' என்னும் யானை உருவச்சிலைகள், பரத்வாஜ் முனிவர் சிலையை வைத்து பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. அதன் பிறகு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மூலவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மற்றும் பிற சன்னதிகளில் பவித்ர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

    பவித்ரோற்சவத்தில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, நிர்வாக அதிகாரி சாகர்பாபு, ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ.வின் மனைவி, மகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்தப் பவித்ரோற்சவம் 29-ந்தேதி வரை நடக்கிறது.

    பவித்ரோற்சவ நாட்களில் மூன்று கால அபிஷேகங்கள், மாலை 6 மணிக்கு நடக்கும் பிரதோஷ தீபாராதனை ஆகியவை கோவில் சார்பில் மட்டுமே நடத்தப்படுகின்றன. பக்தர்களுக்கு தீபாராதனை டிக்கெட்டுகள், கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் வி.ஐ.பி.களுக்கும், பிரமுகர்களுக்கும் பூர்ண கும்ப வரவேற்பு அளிக்கப்பட மாட்டாது. கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் வருகிற 29-ந்தேதி வரை நடக்கிறது.

    • சுகப்பிரம்மா ஆசிரமம் அருகில் உள்ள குளத்தை தூர்வாரி தூய்மைப்படுத்துதல்.
    • பக்தர்களின் வசதிக்காக கனகாசலத்தின் இருபுறமும் பைபர் ஷீட்கள் பொருத்துதல்.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    ஆயிரம் லிங்கா கோணா கோவிலில் புதிய ராஜகோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடத்த அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு தலைமை தாங்கினார். முக்கிய விருந்தினராக ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன்ரெட்டி பங்கேற்றார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அவை வருமாறு:-

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவிலான தர்மராஜா கோவில் அருகில் காலியாக உள்ள பகுதி தனி நபர்களால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகாமல் இருக்க 2 திருமண மண்டபங்களை கட்டுவது.

    வெயிலிங்கால கோணா (ஆயிரம் லிங்கா கோணா) கோவிலில் புதிய கோபுரம் கட்டி மகா கும்பாபிஷேகம் நடத்துவது.

    சுகப் பிரம்மா ஆசிரமம் அருகில் உள்ள குளத்தை தூர்வாரி தூய்மைப்படுத்துதல், பக்தர்களின் வசதிக்காக ஞானப்பிரசுனாம்பிகா சதன் முதல் பரத்வாஜ் சதன் வரை சாலை அமைக்க தேவையான நிலத்தை கையகப்படுத்துதல்.

    சொர்ணமுகி ஆற்றில் ராம-சேது பாலத்துக்கும் புதிய பாலத்துக்கும் இடையே உள்ள பகுதியில் கிழக்கு நோக்கிய சூரியநாராயணமூர்த்தி உருவச்சிலை, மேற்கு நோக்கிய கால பைரவர் சிலை ஏற்பாடு செய்தல்.

    ஜல விநாயகர் கோவிலின் முன் தெற்கு நோக்கிய குரு தட்சிணாமூர்த்தி சிலையை அமைத்தல். பக்த கண்ணப்பர் மலையில் கட்டப்பட்டுள்ள சிவன்-பார்வதி சிலைகளை சுற்றி மலர் செடிகளை நடுதல்.

    சாமியின் நெப்பல மண்டபத்தையொட்டி உள்ள நகராட்சி வணிக வளாகத்துக்கு நஷ்டஈடு வழங்குவதன் மூலம், அதைக் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்தல்.

    பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவில் சன்னதியில் வரலட்சுமி விரதம், கோதா தேவி கல்யாணம், சீதா-ராம கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த தென்மேற்கு பகுதியில் மண்டபம் அமைத்தல்.

    பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் ஸ்ரீகிருஷ்ணா மந்திரம் புதிதாக கட்டுவது.

    பெத்தக்கன்னலியில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவில், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவில் என்பதை பக்தர்கள் அறியும் வகையில் பிரதான சாலையில் வளைவு அமைத்தல்.

    கனகதுர்காதேவி நவராத்திரி கொண்டாட்டத்தின்போது, பிரசாதம் வழங்க மலையின் உச்சியில் சமையல் அறை அமைப்பது. அஞ்சூரு மண்டபம் முதல் துபான் சென்டர் வரை, சுற்று வட்டாரக் கிராம மக்களின் விருப்பம் மற்றும் கோரிக்கையின் படி சாமி, அம்பாளுக்கு ஆரத்தி எடுக்க நிரந்தரமாக நான்கு ஓய்வு மண்டபங்கள் கட்டுதல்.

    பக்தர்களின் வசதிக்காக கனகாசலத்தின் இருபுறமும் பைபர் ஷீட்கள் பொருத்துதல். கோவிலுக்குள் வாகன மண்டபம் மற்றும் ஆச்சார்யா மண்டபம் நவீன மயமாக்குவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • கோவிலுக்குள் செல்போனை கொண்டு சென்றால் புனிதம் கெடுகிறது.
    • சிலர் மூலவரை செல்போனில் படம் பிடிக்கின்றனர்.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு கூறியதாவது:-

    ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும், சாமி தரிசனம் செய்ய வரும் அனைத்துத் தரப்பு பக்தர்களும் சிவன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தாலும், இன்னும் தடையை மீறி ஒருசிலர் செல்போனை கோவிலுக்குள் எடுத்துச் செல்கின்றனர். கோவிலுக்குள் செல்போனை கொண்டு சென்றால் புனிதம் கெடுகிறது. சிலர் மூலவரை செல்போனில் படம் பிடிக்கின்றனர். இது, தகாத செயலாகும். கோவிலின் புனிதத்தை காக்க ஒவ்வொரு அரசியல் கட்சியினரும், பக்தர்களும் கோவில் நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள், பக்தர்கள் யாரேனும் கோவிலுக்குள் செல்போன் கொண்டு சென்றால், ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடை உத்தரவு நகலை அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு அனைத்து அரசியல் கட்சியினருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • குரு தட்சிணாமூர்த்திக்கு அஷ்டோத்ர சத சங்காபிஷேகம் நடக்கிறது.
    • அபிஷேக சேவையில் பக்தர்கள் பங்கேற்று வழிபடலாம் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    குரு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும் காலத்தில் குரு தட்சிணாமூர்த்தியை பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

    இந்த வருடம் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறுவதையொட்டி வருகிற 23-ந்தேதி உலக நன்மைக்காக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் உள்ள குரு தட்சிணாமூர்த்திக்கு அஷ்டோத்ர சத சங்காபிஷேகம் நடக்கிறது.

    இந்த அபிஷேக சேவையில் பக்தர்கள் பங்கேற்று வழிபடலாம் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பரத்வாஜ் முனிவருக்கு (உற்சவர்) சாந்தி அபிஷேகம் செய்யப்பட்டது.
    • தீப, தூப, நெய்வேத்தியங்களை சமர்ப்பித்தனர்

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கடந்த 13-ந்தேதி பக்த கண்ணப்பர் கொடியேற்றத்துடன் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வந்தது. 13-வது நாளான நேற்று முன்தினம் இரவு ஞானப்பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு ஏகாந்த சேவை நடந்தது.

    முன்னதாக உற்சவமூர்த்திகளை சிறிய பல்லக்குகளில் வைத்து ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் மூலவர் சன்னதி எதிரில் இருந்து ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மூலவர் சன்னதி எதிரில் உள்ள சயன மந்திரத்துக்கு ஊர்வலமாகக் கொண்டு சென்றனர்.

    கோவிலின் நடை சாத்தும் நேரத்தில் இரவு 9.30 மணியளவில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் உற்சவரை பல்லக்கில் வைத்து கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் உற்சவரை அதே பல்லக்கில் வைத்து ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மூலவர் சன்னதி எதிரில் உள்ள சயன மந்திரம் அருகில் கொண்டு வந்தனர்.

    அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட ஊஞ்சலில் (படுக்கை) சாமி-அம்பாளை வைத்து தீப, தூப நெய்வேத்தியங்கள் சமர்பித்து வேத மந்திரங்கள் முழங்க கதவுகள் சாத்தப்பட்டதும் ஏகாந்த சேவை நடந்தது.

    இந்தநிலையில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான நேற்று பஞ்சமூர்த்திகள் மற்றும் பரத்வாஜ் முனிவருக்கு (உற்சவர்) சாந்தி அபிஷேகம் செய்யப்பட்டது. வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா பூஜை முறைகளில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள், வேத பண்டிதர்கள் யாரேனும் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளை நிவர்த்தி செய்வதற்காக சாந்தி அபிஷேகம் செய்யப்பட்டது.

    கங்காதேவி சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாா், விநாயகர், வள்ளி, தெய்வானை, சமேத சுப்பிரமணியசாமி, சண்டிகேஸ்வரர், பக்த கண்ணப்பர், திரிசூலம் மற்றும் பரத்வாஜ் முனிவர் உற்சவர்களுக்கு வேதப் பண்டிதர்கள் பல்வேறு சுகந்த திரவியங்களால் அபிஷேகம் செய்து தீப, தூப, நெய்வேத்தியங்களை சமர்ப்பித்தனர்.

    முன்னதாக அர்ச்சகர்கள் கலசம் ஏற்பாடு செய்து யாகம் வளர்த்தனர். அதைத்தொடர்ந்து அபிஷேக, அலங்காரம், ஆராதனை நடந்தது. அதில் கோவில் அதிகாரிகள், அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இத்துடன் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.

    ×