search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Murugan Temple"

    • விசாக திருவிழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி கொழுந்துமாமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவில் ஸ்ரீமத்பரசமய கோளரிநாத ஆதீன கமிட்டி தலைவர் அனந்த நாராயணன் ஆச்சாரி, செயலாளர் வக்கீல் ஆறுமுகராஜ், பொருளாளர் அசோக்ராஜ், அறங்காவலர்கள் ஆறுமுகநயினார், சக்திவேல், சுப்பிரமணியசாமி, கந்தன், கண்ணன், வக்கீல் முருகமுரளிதரன், நெல்லை குமார், அர்ச்சகர் பாலாஜி சர்மா, வக்கீல் பரமசிவகுமார், சங்கரன் ஆச்சாரி, வேலு ஆச்சாரி, ஆறுமுக ஆச்சாரி மற்றும் அகில பாரத விஸ்வகர்மா உறவுகள் இளைஞர் அணி நிர்வாகிகள் நரசிம்மன், சுதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விசாகத்தை யொட்டி பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    • மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மலா் அலஙகாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருப்பூர் :

    வைகாசி விசாகத்தையொட்டி திருப்பூர் கொங்கணகிாி முருகன் கோவிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் நேற்று காலை மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடா்ந்து வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மலா் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தா்கள் காலை முதல் நீண்ட வாிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

    மதியம் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் தோில் எழுந்தருளினார். மாலை 5 மணிக்கு அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க பின்னால் இருந்து டிராக்டர் தேரை நகர்த்தியது. தேர் கோவிலை சுற்றிவந்து நிலையை அடைந்தது. தேரோட்டம் முடிந்தவுடன் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • குன்றுதோறும் குமரன் இருப்பது வழக்கம்.
    • கோவிலுக்கு வெளியே முருகன் வேலால் உருவாக்கிய சக்தி தீர்த்தம் உள்ளது.

    முருகப்பெருமானுக்கு பிடித்தமான ஆலயங்கள் இரண்டு என்பார் அருணகிரிநாதர். ஒன்று திருச்செங்கோடு, மற்றொன்று திருச்சி வயலூர். வயலூரின் சிறப்பே அருணகிரிநாதருக்கு, முருகன் மயில் மீது அமர்ந்து காட்சி கொடுத்து திருப்புகழ் பாட வைத்ததுதான். அவர் நீண்டகாலம் தங்கியிருந்து முருகப்பெருமானை வழிபட்டு, பாடி பரவசப்பட்ட இடம் இந்த வயலூர். குன்றுதோறும் குமரன் இருப்பது வழக்கம். ஆனால், இங்கு குன்றில்லாத சமவெளியில் முருகன் குடிகொண்டுள்ளார்.

    அருணகிரிநாதரை திருவண்ணாமலையில் கம்பத்து இளையவராக தடுத்தாட்கொண்ட முருகப்பெருமான், முதன்முதலில் வயலூருக்குத்தான் வரச்சொல்லி உத்தரவிட்டார். அருணகிரிநாதர் இங்குள்ள முருகப்பெருமானை வழிபட்டு 18 பாடல்கள் பாடிய பெருமை கொண்ட தலம் இது. இங்கிருந்தே திருப்புகழ் எனும் பெரும் பொக்கிஷம் உருவானது என்பதும் இவ்வாலய பெருமைகளில் ஒன்று. முருகப்பெருமானின் பெருமை சொல்லும் ஆலயமாக இது இருந்தாலும், ஆதியில் இது சிவாலயமாகவே உருவானது என்கிறது தலவரலாறு.

    உறையூரை தலைநகராக கொண்டு சோழர்கள் ஆட்சி செய்த காலம் அது. காட்டு விலங்குகளை வேட்டையாட சென்ற ஒரு சோழ மன்னன், அங்கிருந்த கரும்பு ஒன்றை ஒடிக்க வாளால் வெட்டினான். அப்போது ஒடிந்த கரும்பிலிருந்து ரத்தம் வடிந்தது. இதனால் பதறிய சோழன் வயலை தோண்டிப் பார்க்கையில், அங்கே ஈசன் லிங்கமேனியாக காட்சி அளித்தார். அங்கேயே அவருக்கு ஓர் ஆலயம் எழுப்பி, ஆதிநாதர் என்ற திருநாமம் இட்டு வணங்கினான் என்று சொல்லப்படுகிறது. 9-ம் நூற்றாண்டில் இந்த ஆலயம் மீண்டும் புனரமைக்கப்பட்டது.

    ராஜகேசரிவர்மன், குலோத்துங்கச் சோழன், பரகேசி வர்மன், ராஜேந்திர சோழன் ஆகியோரால் திருப்பணிகள் கண்ட இந்த கோவிலின் கல்வெட்டுகள் ஆலயத்தின் பழமையை எடுத்துக் கூறுகின்றன. இங்குள்ள ஆதிநாதர் தம்மை நாடிவரும் பக்தர்கள் கேட்பதை மறக்காமல் கொடுப்பதால் 'மறப்பிலி நாதர்' என்றும், அக்னி பகவான் வழிபட்டதால் 'அக்னீசுவரர்' என்றும், விடங்கப்பெருமான், திருமகாதேவன், திருக்கற்றளி பெருமான் என பல நாமங்களால் வணங்கப்படுகிறார். இங்கு அம்பிகையின் திருநாமம் ஆதிநாயகி. வன்னி மரம் இத்தலத்தின் விருட்சமாகும். கோவிலுக்கு வெளியே முருகன் வேலால் உருவாக்கிய சக்தி தீர்த்தம் உள்ளது.

    தாய், தந்தையை வழிபட்டு அனைவருக்கும் வழிகாட்டுகிறார் வயலூர் முருகன். அதனால் கோவிலுக்குள் சென்றதும் நாம் எதிர்கொள்வது சிவ சொரூபமே. இந்த திருத்தலத்தில் உள்ள கணபதி 'பொய்யாக்கணபதி' என்று பெயர் கொண்டுள்ளார். இவரிடம் வேண்டினால் பொய்க்காது என்பது வாக்கு. இவர் சன்னிதிக்கு அருகே இங்கு அருணகிரிநாதருக்கும் சன்னிதி உள்ளது. ஆனி மூலத்தன்று இவர் முருகனுடன் புறப்பாடாவார்.

    எதிர்புறம் தட்சிணாமூர்த்தியின் தவக்கோலக்காட்சி. பொய்யாக்கணபதி சன்னிதியை அடுத்து முத்துக்குமாரசாமி. மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள முருகனை காண கண் கோடி வேண்டும். முத்துக்குமாரசாமியை தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சகிதமாக காட்சியளிக்கிறார். வடபுற மூலையில் மகாலட்சுமி அருள்பாலிக்கிறார். வயலூர் முருகனை தரிசிப்பவருக்கு எனது அருள் கண்டிப்பாக உண்டு என்பதுபோல காட்சி தருகிறாள் மகாலட்சுமி.

    மூலஸ்தானத்தில் முருகனின் மயில் வடக்கு பக்கம் பார்த்து இருக்கிறது. இதற்கு தேவமயில் என்று பெயர். ஆதிநாயகி ஏனைய தலங்களில் வடக்கு முகம் பார்த்தே இருப்பாள். இங்கு மட்டும் தென்முகம் பார்த்து இருப்பது அபூர்வமானது. ஏனைய தலங்களில் முருகப்பெருமான் தாய், தந்தையரை தனித்து நின்று பூஜை செய்வார். ஆனால் தெய்வ குஞ்சரி வள்ளியோடு சேர்ந்து பூஜை செய்கின்ற தனிச்சிறப்பு வயலூர் தலத்திற்கு உண்டு.

    சிவன் சன்னிதிக்கு பின்புறம் தான் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். இது சிவத்தலம் என்றாலும், இவரே விசேஷ மூர்த்தியாக வணங்கப்படுகிறார். கந்த சஷ்டியின்போது முருகன்-தெய்வானைக்கும், பங்குனி உத்திர திருவிழாவில் முருகன்-வள்ளி திருக்கல்யாணம் நடக்கும். வள்ளி திருமணத்தின்போது, முருகனுக்கு வேடன், கிழவன் போல அலங்காரம் செய்தும், யானையால் வள்ளி விரட்டப்படுவது போலவும் பாவனையாகச் செய்வர். தைப்பூசத்தன்று அருகிலுள்ள 4 கோவில் சுவாமிகளுடன், முருகன் சேர்ந்து பஞ்ச மூர்த்திகளாக காட்சி தருவார்.

    வயலூரில் முருகன் தனது வேலினால் தடாகம் உருவாக்கி அம்மை அப்பரை வழிபட்டார். கோவிலின் வெளியே கல்லால மரத்தடியில் வேல் வடிவில் உள்ள தோற்றத்தை 'இடும்பன் கோவில்' என்றும், 'கிராம தேவதைக் கோவில்' என்றும் சொல்கிறார்கள். முருகன் கை வேலின் வடிவமாகிய தேரடியான் கோவிலும் வந்தோர்க்கு வளம் தரும் அம்சமாக காட்சியளிக்கிறது.

    திருவண்ணாமலையில் முருகப்பெருமானால் காப்பாற்றப்பட்ட அருணகிரிநாதர் "முத்தைத் திரு" பாடியபின்பு "வயலூருக்கு வா" என்று முருகன் சொல்ல, அதன்படி அருணகிரியார் இங்கு வந்துள்ளார். இங்குள்ள பொய்யாகணபதிதான் அருணகிரியாருக்கு அருள் தந்தவர் என்று செல்லப்படுகிறது. இங்குதான் அருணகிரி நாதர் திருப்புகழ் பாடும் ஆற்றலையும், அறிவையும் பெற்றார். இத்தலத்து முருகனே அருணகிரி நாதருக்கு நாவில் 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எழுதி, திருப்புகழை சரளமாக பாட அருள் செய்தார். அத்தகைய ெபரும் சிறப்பும் கொண்ட முருகன் தலம். திருப்புகழின் பெருமையில் வயலூர் முருகனுக்கு தனிச்சிறப்பு உண்டு. அருணகிரியார் திருப்புகழ் பாட அருளிய முருகன் என்பதால், எழுத்துத் துறையில் உள்ளவர்கள், பாடலாசிரியர்கள் இங்கு வேண்டிக்கொள்ள கலையில் சிறப்பிடம் பெறலாம். அருணகிரிநாதர் மட்டுமல்ல, ஞானவரோதயர் என்ற அடியாருக்கு அருள் புரிந்த திருத்தலம். இந்த ஞானவரோதயர், கந்தபுராணத்தில் 7-வது காண்டமாகிய உபதேச காண்டம் பாடியவர். விராலிமலைத் தலப்புராணமும் இவர் பாடியிருக்கிறார்.

    எண்ணினாலும், தரிசித்தாலும் எண்ணிலடங்கா பேறுகளையும், வரங்களையும் அள்ளித்தரும் வயலூரானை நேரில் தரிசித்தால், நலம் பெருகும். வளம் தழைக்கும் என்பது வாரியார் சுவாமிகள் வாக்கு.

    வயலூர் சுப்பிரமணியர் மணக்கோலத்தில் குமரனாக இருப்பதால், செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை ஏற்பட்டவர்கள் இவரை வழிபட, தோஷம் நீங்கி நல்ல வரன் அமையும். அருணகிரிநாதருக்கு திருமண கோலத்தில் குமாரராக காட்சி தந்ததால் தடைபட்ட திருமணங்கள் நடைபெறும் என்பது ஐதீகம். திருமண தோஷம் மற்றும் தடைகள் உள்ளவர்கள், முதல் நாள் இரவே இங்கு வந்து தங்கி, மறுநாள் சக்தி தீர்த்தத்தில் நீராடி, முருகப்பெருமானை வழிபட்டால் திருமணம் நடந்தேறும் என்பது நம்பிக்கை. பழனி, திருச்செந்தூருக்கு வேண்டுதல் வைத்தவர்கள் இந்த கோவிலில் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தலாம். ஆனால், வயலூரானுக்கு வைத்த வேண்டுதலை வேறு கோவிலில் செலுத்த முடியாது. அசலோடு வசூலித்து விடுவான் இந்த வடிவேலன் என்பது இந்த ஊர் மக்களின் சொல்லாக இருக்கிறது.

    • முருகன் வள்ளி- தெய்வானையுடன் கையில் வில்லும், அம்பும் தரித்த நிலையில் காட்சியளித்ததார்.
    • சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் தற்போதுள்ள கோவிலைக் கட்டியதாக வரலாறு கூறுகின்றது.

    இந்து கடவுளர்களில் இளம் வயது கடவுள், முருகப்பெருமான் மட்டுமே. 'முருகு' என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள். முருகன் என்றால் இளமையான அழகன் என்று கூறலாம். முருகு என்பதிலுள்ள மூன்று எழுத்துக்களும் (ம்+உ, ர்+உ, க்+உ - முருகு) உகார எழுத்துக்களாகும். இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியவற்றைக் குறிக்கின்றன. நம் முன்னோர்கள் கடைப்பிடித்த ஆறு வகை சமயங்களில் ஒன்றான 'கவுமாரம்' என்பதன் தெய்வமும் முருகனே ஆவார். மேலும் இவர் தமிழ்க் கடவுளாகவும் போற்றப்படுகிறார்.

    சிவன் தன் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்படுத்திய நெருப்பு காமனை எரித்த பின்னர், வாயு பகவானால் சரவணப்பொய்கை ஆற்றில் விடப்பட்டது. அந்த நெருப்புஆறு குழந்தைகளாக உருவாகி கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி அந்த ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று சமய நூல்கள் கூறுகின்றன. இவருக்கு கந்தன், கடம்பன், வேலாயுதன், சரவணபவன், குமரன், வேலவன், தண்டாயுதபாணி போன்ற பல பெயர்கள் உள்ளன.

    ஒருநாள் நாரதர், கயிலாயம் சென்று சிவன் மற்றும் பார்வதி ஆகியோரிடம் ஒரு ஞானப்பழத்தைக் கொடுத்தார். அந்த பழம் தனக்கு வேண்டும் என முருகனும், விநாயகரும் முரண்டுபிடித்தனர். அதைப் பெறுவதற்காக உலகை மூன்று முறை சுற்றி வர வேண்டும் என்று சிவபெருமான் போட்டி வைத்தார். முருகன் தனது மயில் வாகனத்தில் ஏறி உலகைச் சுற்ற புறப்பட்டார். ஆனால் விநாயகர் தம் அறிவுக்கூர்மையால் 'தாய் தந்தையரே உலகம்' என்று கருதி அவர்களை மும்முறை சுற்றி வந்து ஞானப்பழத்தைப் பெற்றுக் கொண்டார்.

    உலகை சுற்றிவந்த முருகன் இந்தச் செயலால் கோபம் கொண்டு, பழனி மலை மீது ஆண்டிக்கோலமாக அமர்ந்தார். அதனடிப்படையில் மலை தோறும் முருகன் கோவில்கள் உருவானது. தென்னிந்தியாவில் மலைகள் அதிகம் என்பதால் முருகன் கோவில்களும் அதிகமானது, அவரை வழிபடும் பக்தர்கள் கூட்டமும் உயர்ந்தது. முருக பக்தர்கள் அதிகரிக்க மலைகளைத்தாண்டி சமவெளிப் பகுதிகளிலும் முருகன் கோவில்கள் உருவானது. இப்படி உருவான முருகன் கோவில்களில் ஒன்றே வேலுடையான்பட்டு சிவசுப்ரமணிய சுவாமி கோவில்.

    தலவரலாறு

    புராண காலத்தில், ஆலயம் அமைந்துள்ள இந்தப் பகுதி அடர்ந்த வனமாக இருந்துள்ளது. அதனுடைய அடையாளமாக ஆலயத்தைச் சுற்றி இன்றளவும் அதிக ஆலமரங்கள் இருப்பதைக் காணலாம். முருகப்பெருமான் வள்ளியை மணம் செய்து கொள்ள வள்ளிமலைக்கு வந்துவிட, தேவர்களும் முனிவர்களும் பெருமானைத் தேடி பூலோகம் வந்து அலைந்து திரிந்தனர். பல இடங்களில் தேடியும் அவர்களால் முருகனை காணமுடியவில்லை. இதனால் அவர்கள் மனதளவில் துவண்டு வருத்தமுற்றனர். அப்போது அருவமாக தோன்றிய முருகன், "இங்கிருந்து இரண்டரை காத தூரத்தில் நான் உங்களுக்கு காட்சி தருவேன்" என்று கூறினார்.

    அதன்படி இடும்பன், வீரன், ஐயனார் ஆகியோர் சூழ ஒரு அழகிய சோலையின் நடுவே ஜோதி வடிவமாக காட்சியளித்தார். இந்த ஜோதி வடிவத்தை சப்த கன்னிகளும், தேவர்களும், முனிவர்களும் கண்டுகளித்தனர். ஆனால் அதில் நிறைவு கொள்ளாத அவர்கள் மீண்டும் அருட்காட்சி தரவேண்டும் என்று வேண்டினர். அதை ஏற்ற முருகன் வள்ளி- தெய்வானையுடன் கையில் வில்லும், அம்பும் தரித்த நிலையில் காட்சியளித்ததார். அதனால் இத்தலம் 'வில்லுடையான்பட்டு' என பெயர் பெற்றது. பிறகு தமது வேலாயுதத்தை ஊன்றி நீரோடை ஒன்றை உருவாக்கி அதற்கு 'சரவண தீர்த்தம்' என்று பெயரிட்டார். இவ்வாறு முருகன் காட்சியளித்து தனது வேலையும் இங்கு ஊன்றியதால் இந்த ஊர் 'வேலுடையான்பட்டு' என்று அழைக்கப்பட்டது. அனைவருக்கும் காட்சியளித்த முருகப்பெருமான் அந்த இடத்தில் கல்லுருவமாய் மாறி பூமியில் நிலைத்தார்.

    இவ்விடத்தில் முருகப்பெருமானுக்கு சிறப்பான ஆலயம் அமைக்கப்பட்டது. காலப்போக்கில் ஆலயம் மண்மேடிட்டு மறைந்தது. அதன்பின்னர் இப்பகுதியை ஆட்சிசெய்த சித்திரகாடவன் என்னும் பல்லவ வம்சத்து அரசன், சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் தற்போதுள்ள கோவிலைக் கட்டியதாக வரலாறு கூறுகின்றது. கி.பி. 13-ம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த அம்மன்னனின் பசுக்கள், இந்தப் பகுதியில் மேயச் செல்வது வழக்கம். ஆனால், அரண்மனைக்குத் திரும்பியதும் பால் கொடுப்பதில்லை. மன்னருக்கு ஒன்றும் விளங்கவில்லை.

    ஒருநாள் மேயச் செல்லும் பசுக்களை பின் தொடர்ந்து சென்றார். வனத்தில் ஒரு புதருக்கு அருகில் பசுக்கள் தானாக பாலைச் சொரிந்து கொண்டிருந்ததைப் பார்த்தார். வியப்புற்ற மன்னன் அந்த இடத்தை மண்வெட்டியால் வெட்டினான். அப்போது ரத்தம் பீறிட்டு எழவே திடுக்கிட்டு அந்த இடத்தில் இருந்த புதரை மெள்ள மெள்ள அப்புறப்படுத்திவிட்டுப் பார்த்தபோது, மண்வெட்டி பட்டதால் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு, ரத்தம் பெருகிய நிலையில் சிலையாக முருகப்பெருமான் காட்சி தந்தார். அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றிய முருகப்பெருமான், தமக்கு அந்த இடத்தில் ஒரு கோவில் கட்டும்படி உத்தரவிட்டார். அப்படி உரு வானதுதான் வேலுடையான்பட்டு வில்லேந்திய வேலவனின் திருக்கோவில்.

    மூலவர் மண்ணிலிருந்து சுயம்புவாகத் தோன்றியவர் என்றால், உற்சவரோ கடலிலிருந்து கிடைத்தவர். ஆம்! இங்குள்ள உற்சவர் சிலை, கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டு, கோவிலில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டது. ஆனால் எங்கு எப்போது கிடைத்தது என்பதற்கான சான்றுகள் எதுவுமில்லை.

    ஆலய அமைப்பு

    கிழக்கு நோக்கி அமைந்துள்ள இவ்வாலயம் கோபுரமின்றி தெய்வானை திருமண சிற்பத்துடன் கூடிய தோரண வாசலுடன் அமைந்துள்ளது. அதை அடுத்து முகப்பு மண்டபத்தில் ஐந்து சூலாயுதங்களும், பலிபீடமும், கொடிமரமும், மயில் சிற்பமும் இடம் பெற்றுள்ளன. மகாமண்டபத்திற்கு வெளிப்புறத்தில் இடது பக்கத்தில் விநாயகர், ஆதிலிங்கம், வலது பக்கத்தில் தண்டாயுதபாணி ஆகியோரின் சிறு சன்னிதிகள் உள்ளன. மகாமண்டபத்தின் உட்புறம் இடது பாகத்தில் அருணகிரிநாதர், நால்வர் சன்னிதிகளும், அதற்கு நேர் எதிரில் தூணில் ஆஞ்சநேயரும், தெற்கு நோக்கி நடராஜர் சபையும் அமைந்துள்ளது.

    கருவறைச் சுற்றிலும் விநாயகர், விசாலாட்சி, விசுவநாதர், அகத்தியர்-லோபமுத்ரா, துர்க்கை ஆகிய சன்னிதிகளும், சனிபகவான், ஐயப்பன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். அர்த்தமண்டபத்தைத் தாண்டி உள்ளே செல்ல கருவறையில் சுயம்புவான மூலவர் வள்ளி- தெய்வானை உடனாய சிவசுப்ரமணியசுவாமியாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். வெளிப்பிரகாரச் சுற்றில் வடக்கு பகுதியில் கிழக்கு நோக்கிய சுந்தரேசுவர பெருமான் சன்னிதியும், தெற்கு நோக்கிய மீனாட்சி அம்பாள் சன்னிதியும், மேற்கு நோக்கிய பைரவர் சன்னிதியும் அதனை ஒட்டி முருகப்பெருமானின் வாகனமான மயில்கள் வாழுமிடமும் இடம் பெற்றுள்ளது.

    ஆலயத்தின் வாசலை ஒட்டி வலதுபுறம் நவக்கிரக சன்னிதியும், தலவிருட்சங்களும், தேர் வடிவ வசந்த மண்டபமும் இடம்பெற்றுள்ளது. ஆலயத்திற்கு வெளியே முருகப்பெருமானை நோக்கியவாறு இடும்பன் உள்ளார். அவருக்குப்பின்னால் முருகன் தன் சூலாயுதத்தை நட்டு உருவாக்கிய சண்முக தீர்த்தம் பரந்து விரிந்து காட்சியளிக்கிறது. தீர்த்தத்தின் படித்துறையில் கிழக்கு நோக்கியவாறு வலம்புரி செல்வ விநாயகர் அமர்ந்துள்ளார்.

    அமைவிடம்

    கடலூர் மாவட்டம் நெய்வேலி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. சென்னை-கும்பகோணம் சாலையில் பண்ருட்டிக்கும் வடலூருக்கும் இடைபட்ட வடக்குத்து என்ற ஊரிலிருந்து மேற்காக செல்லும் சாலையில் 3 கிலோமீட்டர் பயணித்தால் ஆலயத்தை அடையலாம். வடலூரில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.

    -நெய்வாசல் நெடுஞ்செழியன்.

    • இது முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட இடமாகும்.
    • முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகும்.

    திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளுள் ஒன்று. இது மதுரைக்கு தென்மேற்கில் சுமார் எட்டு கி.மீ தொலைவில் உள்ளது. இது முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட இடமாகும். இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள சரவண பொய்கை புனித தீர்த்தமாக போற்றப்படுகின்றது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். முருகப் பெருமான் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட தலம். அறுபடை வீட்டு முருகப் பெருமான் கோவில்களில் இக்கோவில் அளவில் பெரியதாகும்.

    லிங்க வடிவில் மலை : திருப்பரங்குன்றம் லிங்க வடிவமாகக் காட்சியளிக்கும் அருட் செறிந்த மலை. இந்தத் திருப்பரங்குன்றத்தில் தங்கி சிவசக்தியை நோக்கி ஆறுமுகப் பெருமான் தவமிருந்தார். இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது. இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும். இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார்.

    தல வரலாறு

    கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதி தேவிக்கு ஒம் எனும் பிரணவ(பரம்பொருளே எனும் பொருளுடைய) மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும் போது, தன் தாயாரின் மடிமீது முருகப் பெருமான் அமர்ந்திருந்தார். தாய்க்குத் தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோதுமுருகப்பெருமானும் அவ்வுபதேசத்தைக் கேட்டார்.புனிதமான மந்திரப்பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ள வேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.

    முருகப்பெருமான் பிரணவ மந்திரத்தினையும் அதன் உட்பொருளையும் பிரம்மதேவனுக்கு உபதேசித்த போதிலும், சிவபெருமானும், முருகப்பெருமானும் ஒருவரேயானாலும், உலக நியதிக்கு ஒட்டாத, சாத்திரங்கள் ஒப்பாத ஒரு காரியமாக அமைந்துவிட்டபடியால், இக்குற்றத்திற்குப் பரிகாரம் தேடி முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார்.

    இந்நிலையில் சிவபெருமானும், பார்வதி தேவியாரும் தோன்றி, முருகப் பெருமானுக்கு அங்குக் காட்சி தந்து தவத்தைப் பாராட்டினார்கள். சிவபெருமான் – பார்வதிதேவி இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி என்றும் பெயர் பெற்றார்கள்.இவர்கள் காட்சியளித்த திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. எனவே திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் முதலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபடுதல் நல்லது என்பது ஐதீகமாகக் கடைப்பிடிக்கப் படுகிறது.

    முருகப்பெருமானுக்கு சிவபெருமான் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று காட்சித் தந்தார். எனவே தைப்பூசத்தன்று சிவபெருமானையும், முருகக் கடவுளையும் வழிபடுகின்றவர்கள் இஷ்ட சித்திகளைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. எனவே திருப்பரங்குன்றத்தில் தைப்பூச விழா பத்து நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமான் அவதாரம் செய்ததன் நோக்கமே சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும்.

    அவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார்.இதனால் மகிழ்ச்சியடைந்த தேவர்கள் துயர் களையப் பெற்றார்கள். அதனால் முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி முருகன் -தெய்வானை திருமணம் இந்த திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

    திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க, இந்திரன் தெய்வயானையைத் தாரை வார்த்து கொடுக்க, முருகப்பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டதாகத் திருப்பரங்குன்றப் புராணம் கூறுகிறது.

    பெயர்க்காரணம்

    பரம்பொருளான சிவ பெருமான் குன்றம் எனும் மலை வடிவாகக் காட்சியளிக்கும் இடம் திருப்பரங்குன்றம்.திரு + பரம் + குன்றம் எனப் பிரிக்கப்படுகிறது. பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான் குன்றம் என்றால் குன்று (மலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகதச் சேர்த்து திருப்பரங்குன்றம் என ஆயிற்று.

    இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது. இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும். இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார்.

    இத்திருத்தலத்திற்கு இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன.

    சிறப்புகள்

    முருகப் பெருமானின் அறுபடை வீட்டு கோவில்களில் இக்கோவில் அளவில் பெரியதாகும்.

    லிங்க வடிவில் இருக்கும் இம்மலையைப் பற்றி சைவ சமயக் குரவர்களில் சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் இவ்வூருக்கு வந்து ஆலய வழிபாடு செய்து பதிகங்கள் பல பாடியுள்ளனர்.

    சங்ககாலப் புலவரான நக்கீரர் இத்தலத்து முருகப் பெருமானை வழிபட்டு தனது குறை நீக்கிக் கொண்டார்.

    கோவில் அமைப்பு

    இக்கோவிலின் கோபுர வாயிலுக்கு முன்னால் சுந்தரபாண்டியன் மண்டபம் என்னும் ஆஸ்தான மண்டபம் ஒரு சிற்பக் கலை மண்டபமாக அமைந்துள்ளது. இம்மண்டபத் தூண்களில் உள்ள யாளிகள், குதிரை வீரர்கள், சிவனின் திரிபுரதகனம், நர்த்தன விநாயகர், துர்க்கை, தேவசேனாதேவி, வீரவாகு தேவர், தேவசேனாதேவியின் திருமணக்கோலம் முதலிய சிற்பங்கள் அற்புத வேலைப்பாடுகளுடன் விளங்குகின்றன. ஆஸ்தான மண்டபத்தை அடுத்து ஏழுநிலைகள் கொண்ட ராஜகோபுரமும், கல்யாண மண்டபமும் அமைந்துள்ளன.

    கல்யாண மண்டபத்தின் கிழக்கு பகுதியில் லட்சுமி தீர்த்தமும், மேற்கு பகுதியில் பிரம்மனால் உண்டாக்கப்பட்ட பிரம்மகூபம் என்ற சந்நியாசிக் கிணறும் அமைந்துள்ளது. இந்த சந்நியாசிக் கிணற்றில் மூழ்கி கோவிந்தாரத்துவசன் என்னும் பாண்டியன் தன்னை பிடித்திருந்த வெண்குட்ட நோய் நீங்கப்பெற்றான் என்று வரலாறு கூறுகிறது. இக்காலத்திலும் நீரழிவு முதலிய நோய்கள் இத்தீர்த்தத்தில் நீராடினால் நீங்குகின்றன என்று கூறப்படுகிறது இத்தீர்த்த நீரே கன்றிலுறை குமரன் அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றது.

    கல்யாண மண்டபத்தையடுத்துக் கொடிமர மண்டபமும், கொடிமரத்தின் முன்புறம் மயில், நந்தி, மூஷிகம் ஆகிய மூன்று வாகனங்களும் உள்ளன. இது இத்தலத்தின் சிறப்பாகும்.. கொடிமர மண்டபத்திலிருந்து மகாமண்டபம், மகாமண்டப வாயிலின் இருமருங்கிலும் இரட்டை விநாயகர், நந்திதேவர் காணப்படுகின்றனர்.

    மகாமண்டபத்தில் சோமாஸ்கந்தர், நடராசர், சண்டிகேசுவரர், நவவீரர்கள், தட்சிணாமூர்த்தி, பைரவர், சந்திரன், சாயாதேவி, சமிஞாதேவிசமேத சூரியன் ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன. இம்மண்டபத்தின் கீழ்ப்பாகத்தில் உள்ள கோவில் வள்ளி தெய்வயானையோடு உள்ள ஆறுமுகப்பெருமானுக்கும், அருணகிரிநாதர், பஞ்சலிங்கம், சுவரதேவர், சனீசுவரர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.. மகாமண்டபத்திலிருந்து மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட அர்த்த மண்டபம், கருவறை அமைந்துள்ளன.

    அர்த்த மண்டபத்தை அடைய ஆறுபடிகளைக் கடந்து செல்ல வேண்டும். இந்த ஆறுபடிகளும் சடாட்சரப் படிகள் என்று கூறப்படுகின்றன. கருவறையில் ஒரு பெரிய பாறை,. அந்த பாறையின் மத்தியில் மகிசாசுரமர்த்தினியின் உருவமும், அதனருகில் கீழ்ப்பாகத்தில் மூலவரான முருகப்பெருமான் திருமணக்கோலம் கொண்டு காட்சி தருகின்றார். மேற்பாகத்தில் கற்பக விநாயகரின் உருவமும் அழகாக குடைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. மூலவரான முருகப்பெருமானது திருவடியின் கீழ் அப்பெருமானின் வாகனங்காளாகிய யானை, ஆடு ஆகியவற்றின் உருவங்களும், காவல் தேவதைகளின் உருவங்களும் பாறையில் வடிக்கப்பபட்டுள்ளன.

    இந்த யானை இந்திரனுடைய ஐராவதம் என்றும், தெய்வயானையை பிரிய மனமில்லாது முருகனுக்குத் தொண்டு புரிய வந்து நிற்கின்றது என்றும் கூறுவர். மூலவர் திருச்சந்நிதிக்கு அருகில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட கோவிலில் பவளக் கனிவாய்ப் பெருமாள் மகாலக்ஷ்மியுடன் மதங்க முனிவருடன் காட்சியளிக்கிறார். இக்கோவிலின்வெளிப்புறச் சுவரில் ஆதிசேடன் மீது பாற்கடலில் அமர்ந்திருக்கும் பெருமாள் வராகமூர்த்தி முதலிய உருவங்கள் காணப்படுகின்றன

    கற்பக விநாயகருக்கு அருகிலுள்ள குடைவரைக் கோவில் சத்யகிரீசுவரர் என்னும் சிவலிங்கபெருமான் காட்சிதருகிறார். மூலவர் திருமணக் கோலங்கொண்ட முருகன் உயர்ந்த இடத்தில் எல்லாத் தெய்வங்களும் சூழ காட்சி தருகின்றார். இப்பெருமானின் திருமணச்சடங்கிற்கு அனைத்துத் தெய்வங்களும் வந்து சூழ்ந்துள்ளன எனக் கூறும் வகையில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது.

    பரங்குன்றின் அடிவாரத்துக் கீழ்திசையில் சரவணப் பொய்கை அமைந்துள்ளது. இதை முருகன் தம் வேலினால் உண்டாக்கினார் எனக் கூறுவர். திருப்பரங்குன்றத்தின் தென்பகுதிக்குத் தென்பரங்குன்றம் என்று பெயர். இத்தென்பரங்குன்றத்தில் உமையாண்டவர் கோவில் என்று வழங்கப்படுகின்ற குடைவரைக் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோவிலில் கலைத்திறன் மிக்க சிற்பங்கள் பல உள்ளன. இதன் மேற்குப் பகுதியில் மலை மீது சிறிது தொலைவில் பஞ்சபாண்டவர் படுக்கை எனப்படும் குகை ஒன்று உள்ளது. அக்குகையில் கல்லில் செதுக்கப்பட்ட ஐந்து படுக்கைகள் சுனை ஆகியவை உள்ளன.

    அமைவிடம்

    தமிழ்நாட்டில் சிறப்புற்று விளங்கும் மதுரை நகரிலிருந்து தென்மேற்கில் தேசிய நெடுஞ்சாலை வழியே 9 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு நகரப் பேருந்துகள் அதிக அளவில் செல்கிறது. மதுரையிலிருந்து இத்திருத்தலத்திற்கு ஏராளமான நகரப் பேருந்துகள் செல்கின்றன. பேருந்து நிறுத்தம் கோவிலுக்கு அருகிலேயே உள்ளது. ரயில் வழியாகவும் இவ்வூரை அடையலாம் மதுரையிலிருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி செல்லும் ரயில் பாதையில் திருப்பரங்குன்றத்தில் ரயில் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.

    • மயிலாடுதுறை அருகிலுள்ள சிறுகுடி மங்களநாதர் கோவிலில் செவ்வாய் அருள் பாலிக்கிறார்.
    • முருகனுக்கு உகந்தது செவ்வாய் கிழமை

    செவ்வாய் கிரகத்திற்குரிய அதிதேவதை முருகன். பிரபலமான செவ்வாய் தலங்களாக வைத்தீஸ்வரன். கோவிலும், பழனியும் கருதப்படுகின்றன.

    வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமி சன்னதிக்கும், பழனி தண்டாயுதபாணி சன்னதிக்கும் சென்று வந்தால் மன ஆறுதல் கிடைப்பதுடன் செவ்வாய் தோஷத்தால் தடைபடும் திருமணங்கள் விரைவில் நடக்கும் என்பது ஐதீகம்.

    இது தவிர மயிலாடுதுறை அருகிலுள்ள சிறுகுடி மங்களநாதர் கோவிலில் செவ்வாய் அருள் பாலிக்கிறார். இங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால் செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. முருகனுக்கு உகந்தது செவ்வாய் கிழமை.

    செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள சிவன் கோவில் அல்லது முருகன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி முருகப்பெருமானை வழிபடலாம்.

    இவ்வாறு தொடர்ந்து (ஒவ்வொரு செவ்வாய் கிழமை) விரதமிருந்து நெய் தீபம் ஏற்றி வந்தால் திருமணம் தடைபடும் திருமணம் விரைவில் நடைபெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

    • தைப்பூசத்தன்று முருகப்பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.
    • தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர்.

    தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையட்டியோ (ஓரிரு நாள் முன்பின்) தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது. இந்தநாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

    தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. தைப்பூசத்தன்று முருகப்பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.

    தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர்.

    கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்களால், அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது. அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார்.

    சிவபெருமானின் தேவியான அன்னனை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான். அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான்.

    தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருககடவுள். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.

    தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள்.

    முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்து வதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக்கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் அவர்களைப் பிடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப்பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள்.

    • பக்தர்கள் நதிகளுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர்.
    • சென்னிமலை மலை கோவிலை 16 கிலோ மீட்டர் சுற்றி கிரிவலம் வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் அக்னி நட்சத்திர விழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் 40-வது ஆண்டாக கடந்த 11-–ந் தேதி அடிவாரத்தில் உள்ள இடும்பன் கோவிலில் விசேஷ அபிஷேகத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது.

    இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டு மன்ற நிர்வாகி சுப்புசாமி தலைமையில் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி, காவிரி ஆகிய நதிகளுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர்.

    பிறகு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்னிமலை மாரியம்மன் கோவிலில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு சப்த நதி தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு சென்னிமலை மலை கோவிலை 16 கிலோ மீட்டர் சுற்றி கிரிவலம் வருகின்றனர். இவர்கள் இரவு மலைமீதுள்ள முருகன் கோவிலை வந்தடைந்தடைவர்.

    மேலும் இன்று காலை 9 மணிக்கு சென்னிமலை மலை மீதுள்ள முருகன் கோவிலில் கணபதி ஹோமம் மற்றும் பூர்ணாகுதி, முதல்கால வேள்வி பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.

    முக்கிய நிகழ்ச்சியாக முருகப்பெருமானுக்கு சப்தநதி தீர்த்த அபிஷேகம், 1008 கலச அபிஷேகம் மற்றும் மழை வேண்டி மகா வருண ஜெப ஹோமம் ஆகியவை நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் நடைபெறுகிறது. பிறகு பகல் 12 மணிக்கு மேல் மகா தீபாராதனையும் அதைத்தொடர்ந்து உற்சவமூர்த்தி புறப்பாடும் நடைபெறுகிறது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றத்தினர் செய்து வருகின்றனர்.

    • 26-4-2023 கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ளது.
    • இந்தக் கோவிலில் சிவபெருமான், குபேர திசையில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூரில் உள்ளது, பழமையான வள்ளி - தெய்வானை உடனாய சுப்பிரமணிய சுவாமி ஆலயம். இந்த ஊரைச் சுற்றிலும் முன்காலத்தில் 'பிரம்பு' எனப்படும் முள்செடி காடாக இருந்தால் 'பிரம்பில்' என்றும், தட்சனின் யாகத்தில் பங்கேற்ற சாபம் நீங்க பிரம்மதேவன் சிவபெருமானை வழிபட்ட தலம் என்பதால் 'பிரம்ம மங்களபுரம்' என்றும் அழைக்கப்பட்டுள்ளது. 'பிரம்பில்' என்பதே காலப்போக்கில் 'பிரம்பூர்' என்றும், பின்னர் 'பெரம்பூர்' என்றும் பெயர் பெற்றுள்ளது.

    தல வரலாறு

    இந்த ஆலயம் முருகப்பெருமானை மூலவராகக் கொண்டது என்றாலும், ஆதியில் இது சிவாலயமாக இருந்துள்ளது. தாருகாவனத்து முனிவர்களால் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவபெருமானை, சூரபத்மனை சம்ஹாரம் செய்து, தெய்வானையை திருமணம் முடித்து திரும்பிய முருகப்பெருமான் வழிபட்டார். அந்த தம்பதிக்கு அருளாசி வழங்கிய ஈசன், தன் மகனை இத்தலத்திலேயே இருந்து அருள்பாலிக்குமாறு கூறினார். அதன்படியே முருகப்பெருமான் இங்கு தங்கியதாக தல வரலாறு சொல்கிறது.

    பிரம்ம தேவன் வழிபட்ட அஷ்ட பிரம்ம தலங்களில் இதுவும் ஒன்று. அதுமட்டுமின்றி, சூரபத்மனால் அமைக்கப்பட்ட கந்தபுஷ்கரணியை தல தீர்த்தமாக கொண்டது, சூரபத்மன் மயிலாக வந்து முருகனை வழிபட்டு ஞானோபதேசம் பெற்ற தலம், ஆறுமுகங்களுடன் அருளும் இறைவனை வழிபடுவதால் ஆறுபடை வீடுகளையும் வழிபட்ட பலனை தரும் ஆலயம், அகத்தியர் வழிபட்ட தலங்களில் ஒன்று, பிரம்பு என்னும் முள்செடியை தல விருட்சமாகக் கொண்ட ஆலயம், ராஜராஜசோழன் பிரதிஷ்டை செய்த இடஞ்சுழி விநாயர் சன்னிதி அமைந்த ஆலயம் என பல்வேறு சிறப்புகளுடன் விளங்குகிறது, இந்த சுப்பிரமணியர் கோவில்.

    பொதுவாக சிவன் கோவில்களில், சிவன் முதன்மை தெய்வமாக தனிச்சன்னிதியில் கிழக்கு நோக்கியும், அம்மன் தெற்கு நோக்கியும் அருள்பாலிப்பார்கள். சிவன் சன்னிதிக்கு பின்புறம் அல்லது வடமேற்கு திசையில் முருகனுக்கு தனிசன்னிதி இருக்கும். ஆனால் இத்தலத்தில் முருகப்பெருமான் பிரம்மாவுக்கும், மயிலாக மாறிய சூரபத்மனுக்கும் ஞானோபதேசம் அளித்து ஞானகுருவாக விளங்குவதால், அவரே மூலவராக கிழக்கு நோக்கியும், தெய்வானை தனி சன்னிதியில் தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தின் வடமேற்கில் சிவனார் 'பிரம்மபுரீஸ்வரர்' என்ற பெயரில் கிழக்கு நோக்கியும், ஆனந்தவல்லி அம்மன் தெற்கு நோக்கியும் வீற்றிருக்கின்றனர். தந்தை இருக்கும் இடத்தில் இருந்து மகனும், மகன் இருக்குமிடத்தில் இருந்து தந்தையும் அருள்பாலிக்கும் அமைப்பு இங்கு மட்டுமே உள்ளதாக சொல்கிறார்கள்.

    இத்தல இறைவனை, திருநாவுக்கரசர் வழுவூர் கோவிலில் இருந்து பாடியுள்ளார். ஆனாலும் இந்த ஆலயம் தேவார வைப்புத்தல பட்டியலில் இடம்பெறவில்லை. ஆலயம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள தலவரலாற்று கையேட்டில் அப்பாடல் இருக்கிறது. இவ்வாலயம் பற்றி சிதம்பரநாதமுனிவர், தனது ஷேத்திரக் கோவை பிள்ளைத்தமிழில் ஒரு பதிகம் பாடியுள்ளார்.

    கிழக்கு நோக்கிய நிலையில் ஐந்து நிலை கோபுரத்துடன், 7 கலசத்துடன் கூடிய பிரமாண்ட கோபுரம், இரண்டு பிரகாரங்கள், அர்த்தமண்டபம், மகாமண்டபம் என கோவில் பெரியதாக அமைந்துள்ளது. கோவில் நுழைவு வாசலில் விநாயகர், இடும்பன் சன்னிதிகள் உள்ளன. உட்புறம் வசந்தமண்டபம், அதன் எதிரே தீர்த்தக் குளமான கந்தபுஷ்கரணி இருக்கிறது. பிரதான ஆலயத்தில் முருகப்பெருமான் சன்னிதியும், மகாமண்டபத்தில் தெய்வானை சன்னிதியும் உள்ளன. மூலவர், வள்ளி- தெய்வானை உடனாய ஆறுமுகப்பெருமானாக பன்னிரு கரங்களுடன் மயில் மீது அமர்ந்து காட்சி அருள்கிறார். மகாமண்டபத்தில் ராஜராஜசோழன் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்த இடஞ்சுழி விநாயகரின் சன்னிதியைக் காணலாம்.

    வெளிப்பிரகாரத்தின் வடமேற்கு திசையில் பக்தர்களின் கடன் நிவர்த்திக்கு அருள்பாலிக்கும் பிரம்மபுரீஸ்வரர் குபேரலிங்க வடிவிலும், அம்பிகை ஆனந்தவல்லி என்ற திருநாமத்துடனும் எழுந்தருளியுள்ளனர். சிவாலய கோஷ்டத்தில் தெற்கில் அகத்தியர், தட்சிணாமூர்த்தி, மேற்கில் பெருமாள், வடக்கில் துர்க்கை மற்றும் தனி சன்னிதியில் சண்டிகேஸ்வரர் இருந்து அருள்பாலிக்கின்றனர். சிவாலயம், முருகப்பெருமான் கோவிலுக்குள் உள்ளதால் தனிக்கொடிமரம் இல்லை. உட்பிரகாரத்தில் சனீஸ்வரருக்கு தனி சன்னிதியும், நவக்கிரக சன்னிதியும், ஐயப்பன் சன்னிதியும் உள்ளது. இவ்வாலய தட்சிணாமூர்த்தி 'குக தட்சிணாமூர்த்தி'யாகவும், சண்டிகேஸ்வரர் 'குக சண்டிகேஸ்வர'ராகவும் விளங்குகின்றனர்.

    சிவன் மற்றும் முருகனுக்குரிய தலமாக இது விளங்குவதால், தினசரி ஐந்துகால பூஜைகளுடன், வழக்கமான நித்ய, வார, பட்ச பூஜைகளும், ஆண்டு உற்சவங்களாக பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம், சித்ரா பவுர்ணமி, தனுர்மாத பூஜை ஆகியவையும் சிறப்பாக நடத்தப்பெறுகின்றன.

    இக்கோவில் பிற்கால சோழர்களால் படிப்படியாக கட்டப்பட்டுள்ளது. 20-ம் நூற்றாண்டில் மிளகு செட்டியார் என்னும் பக்தரால் ஆலயம் புதுப்பிக்கப்பட்டதுடன், ராஜகோபுர திருப்பணிகளும் தொடங்கப்பட்டது. ஐந்து நிலைகள் கொண்ட இதன் ராஜகோபுரத்தில் மூன்று நிலைகள் மட்டுமே அவரால் கட்ட முடிந்தது. பின்னர் 1960-ல் மேலும் 2 நிலைகள் கட்டி முடிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 1994-ல் அனைத்து சன்னிதிகளும் பாலாலயம் செய்யப்பட்டு, முழுமையாக திருப்பணி நடைபெற்று மீண்டும் 2001-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற 26-4-2023 (புதன்கிழமை) மீண்டும் கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ளது.

    அமைவிடம்

    காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும் இந்த ஆலயம், ஆடுதுறையில் இருந்து பொறையார் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலைகள் சந்திக்கும் மங்கநல்லூரில் இருந்து கிழக்கில் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலிருந்து மங்கநல்லூர், சங்கரன்பந்தல் வழியாக நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் பெரம்பூர் வழியே செல்கின்றது. மயிலாடுதுறை, பொறையார், காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களிலிருந்து நேரடி பேருந்து வசதியும் உள்ளது.

    பிரார்த்தனையும் நேர்த்திக்கடனும்

    இவ்வாலய முருகப்பெருமானை, தொடர்ந்து 6 வாரங்கள் 6 அகல்விளக்கு தீபம் ஏற்றி, செவ்வரளிப் பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத் தடை அகலும். முருகப்பெருமானுக்கு சண்முக அர்ச்சனை செய்தால், பிறப்பற்ற நிலை உண்டாகும். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தல முருகனை பிரார்த்தனை செய்துகொண்டால் விரைவில் குழந்தைப் பேறு கிடைக்கும். இழந்தப் பதவியைப் பெற விரும்புபவர்கள், புதிய பதவி கிடைக்க வேண்டுவோரும், நம்பிக்கையுடன் இத்தல முருகப்பெருமானை வணங்கி வரலாம். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், முருகனுக்கு காவடி எடுத்தும், பால் அபிஷேகம் செய்தும், சந்தனத்தால் அலங்காரம் செய்தும் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபடுகின்றனர்.

    இந்தக் கோவிலில் சிவபெருமான், குபேர திசையில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அவரை திங்கட்கிழமை, பிரதோஷம், சிவராத்திரி போன்ற நாட்களில் வில்வம் சமர்ப்பித்து வழிபட்டால், கடன் நிவர்த்தி மற்றும் தொழில் அபிவிருத்தி ஏற்படும். இத்தலத்தில் உள்ள துர்க்கை மிகுந்த சக்தி படைத்தவள். சாந்த துர்க்கையாக இருக்கும் அந்த தேவியை செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்திலும், துர்க்காஷ்டமியின் போதும் தீபமேற்றி வழிபடுவோருக்கு, வேண்டும் வரம் அருள்வாள். ஆண்டுதோறும் தை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று 501 திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. அதில் பங்கேற்றால் சகல பலன்களும் கிடைப்பதுடன், குடும்ப பிரச்சினைகள் தீர்ந்து செல்வம் கொழிக்கும்.

    -நெய்வாசல் நெடுஞ்செழியன்

    • வள்ளியூர் முருகன் கோவில் சித்திரை திருவிழா நாளை (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
    • முருக கடவுளின் அறுபடை வீடுகளுக்கு இணையான பெருமையுடையது வள்ளியூர் முருகன் கோவில்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் முருகன் கோவில் சித்திரை திருவிழா நாளை (வியாழக்கிழமை) கொடி யேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    குகை கோவில்

    முருக கடவுளின் அறுபடை வீடுகளுக்கு இணையான பெருமையுடையது வள்ளியூர் முருகன் கோவில். இக்கோவில் குகைகோவிலாக அமைந்து ள்ளது. தென்மாவட்டங்க ளிலுள்ள குகைகோவில்களில் இத்திருத்தலம் சிறப்பு பெற்றதாகும்.

    இக்கோவில் சித்திரைத் திருவிழா நாளை காலை 9.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகின்ற திருவிழாவில் தினமும் சுவாமி ,அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெறுகிறது. தினமும் இரவு சிவதொண்டர் செல்வராஜின் பக்தி சொற்பொழிவு நடைபெறு கிறது. இரவு சுவாமி அம்பாளுடன் பூதம், கிளி, அன்னம், யானை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து காட்சியளிக்கிறார்.

    தேரோட்டம்

    ஒவ்வொரு நாள் திருவிழாவும் வெவ்வேறு சமுதாயத்தினர் சார்பில் நடைபெறுகிறது. வருகிற 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை 9.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி, அம்பாளுடன் எழுந்தருளுகிறார். பின்னர் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுக்கின்றனர்.

    10-ம் திருவிழா இரவு சுவாமி அம்பாளுடன் மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து காட்சியளிக்கிறார். திருவிழா ஏற்பாடுகளை முருக பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    • ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவாச்சாரியார் சிறப்பு பூஜை நடத்தினார்.
    • பக்தர்கள் தேர் மீது உப்பு, மிளகு தூவி வணங்கினர்.

    சென்னிமலை, 

    சென்னிமலை முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதையொட்டி நேற்று இரவு திருக்கல்யாணம் நடந்தது.

    பின்பு இன்று அதிகாலை உற்சவருக்கு சிறப்பு அபிஷேகமும், வழிபாடும் நடந்தது. அதை தொடர்ந்து சாமி புறப்பாடு காலை 6.10 மணிக்கு நடைபெற்றது.

    சாமி தேர் நிலையை மூன்று முறை வலம் வந்தது. தேர்நிலையில் வைக்கப்பட்டு தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவாச்சாரியார் சிறப்பு பூஜை நடத்தினார். அதை தொடர்ந்து காலை 6.20 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் இழுத்தனர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் அரோகரா... அரோகரா... முருகனுக்கு அரோகரா... கந்தனுக்கு அரோகரா... என பக்தி கோஷங்களை எழுப்பினர்கள்.

    பின்பு தேர் கிழக்கு, தெற்கு, மேற்கு, ரத வீதிகள் வழியாக வலம் வந்து வடக்கு வீதியில் நிறுத்தப்பட்டது. பக்தர்கள் தேர் மீது உப்பு, மிளகு தூவி வணங்கினர். பின்பு இன்று மாலை தேர்நிலை சேரும்.

    தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நாளை வியாழக்கிழமை காலை பரிவேட்டை நிகழ்ச்சியும். இரவு தெப்பத்தேர் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    வெள்ளிக்கிழமை காலை 8மணிக்கு மகாதரிசன நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் பங்குனி உத்திர விழா நிறைவு பெறுகிறது.

    • உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடைபெற்றது.
    • காணிக்கையாக ரூ.59 லட்சத்து 58 ஆயிரத்து ௧௯௧ செலுத்தி இருந்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வைக்கப்பட்டு இருந்த உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடை பெற்றது.

    திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் கோவில் உதவி ஆணையரும், செயல் அலுவலருமான ரமணி காந்தன் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

    இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.59 லட்சத்து 58 ஆயிரத்து 191 ரூபாய் செலுத்தி இருந்தனர். மேலும் தங்கம் 291 கிராமும், வெள்ளி 6 கிலோ 152 கிராமும் காணிக்கையாக இருந்தது.

    உண்டியல் திறப்பில் சென்னிமலை முருகன் கோவில் செயல் அலுவலர் ஏ.கே.சரவணன், கோபி சரக ஆய்வர் ஹரி மற்றும் நந்தா பொறியியல் கல்லூரி மற்றும் எம்.பி.என்.எம்.ஜே பொறியியல் கல்லூரி மாணவர்கள், பக்தர்கள், கோவில் பணியாளர்கள், அர்ச்சக ர்கள் ஈடுபட்டனர்.

    ×