search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mlas"

    தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.

    பொருளாளர் துரைமுருகன், துணை பொதுச் செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஜெ.அன்பழகன், பி.கே.சேகர்பாபு, மா. சுப்பிரமணியம், மாதவரம் சுதர்சனம், ஆவடி நாசர், தா.மோ. அன்பரசன், காஞ்சீபுரம் சுந்தர், பொன்முடி, கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 63 பேர் மாவட்ட செயலாளர்கள் மற்றும் 88 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஒவ்வொரு தொகுதியிலும் கடுமையாக உழைக்க வேண்டும், அதற்கான ஆக்கப்பூர்வமான பணிகளில் மாவட்ட செயலாளர்கள் ஈடுபட வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது.

    மேலும் தற்போது குட்கா ஊழல் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் பற்றி மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

    வாக்காளர் பட்டியலில் தி.மு.க. உறுப்பினர்கள் பெயர்கள் விடுபடாமல் இருப்பதற்கு நாளை நடைபெறும் சிறப்பு முகாமில் ஒவ்வொரு பூத்திலும் தி.மு.க. பிரதிநிதிகள் அமர்ந்து வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    இது தவிர அரசியல் நிகழ்வுகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.



    தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    கூட்டத்தில் வேலூர் மாவட்டம் சார்பில் தேர்தல் நிதியாக ரூ.1 கோடி மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. #DMK #MKStalin

    மராட்டியத்தில் மராத்தா சமூகத்தினர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து 2 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். #Maharashtrabandh #MarathaQuotaStir
    மும்பை:

    மராட்டிய மாநிலத்தில் மராத்தா சமூகத்தினர் மாநில மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் உள்ளனர். அரசியல் செல்வாக்கு மிக்கவர்களாக கருதப்படும் இவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கோரி நடத்தி வரும் போராட்டம் வன்முறையாக மாறியது.

    மும்பையில் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையொட்டி பல இடங்களில் சாலை மறியல் நடந்தன. அப்போது பஸ்கள் மீது கல்வீசப்பட்டது. ஒரு பஸ் தீவைத்து எரிக்கப்பட்டது. பல பஸ்களின் டயர்கள் சேதப்படுத்தப்பட்டன.

    பல்வேறு பகுதிகளில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் 3 போலீசார் காயம் அடைந்தனர்.

    மும்பை மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பேரணி நடந்தது. ரெயில் மறியலும் நடந்தது. சிலஇடங்களில் ரெயில்கள் மீது கற்கள் வீசப்பட்டன. இதனால் ரெயில்சேவை பாதிக்கப்பட்டது.


    இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி மேலும் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். ஏற்கனவே 2 பேர் தற்கொலை செய்து இருந்தனர்.

    மராத்தா சமூகத்தினர் 2016-17ம் ஆண்டு 58 பேரணியை நடத்தி இருந்தனர். இது அமைதியாக நடந்து முடிந்தது. ஆனால் நேற்று நடந்த முழு அடைப்பு கலவரமாக மாறியது. 2 போலீஸ் வாகனம் உள்பட 50 வாகனங்கள் கொளுத்தப்பட்டன.

    இந்த நிலையில் மராத்தா சமூகத்தினர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து 2 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். அவுரங்காபாத்தை சேர்ந்த சிவசேனா எம்.எல்.ஏ. ஹர்‌ஷவர்தன் ஜாதவ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அவர் இ.மெயில் மூலம் சபாநாயகருக்கு அனுப்பியுள்ளார்.

    இதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரும் பதவி விலகியுள்ளார்.

    மராத்தா சமூகத்தினரின் போராட்டம் பட்னாவிஸ் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. #MarathaReservation #Maharashtrabandh #MarathaQuotaStir #MarathaReservationProtest
    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், உறுப்பினர் சேர்க்கை குறைந்தது குறித்து முக்கிய ஆலோசனை செய்யப்படுகிறது.
    சென்னை:

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெறுகிறது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், உறுப்பினர் சேர்க்கை குறைந்தது குறித்து முக்கிய ஆலோசனை செய்யப்பட இருக்கிறது.

    ஏற்கனவே, மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா, அ.தி.மு.க.வில் 1½ கோடி தொண்டர்கள் இருப்பதாக கூறிவந்தார். இந்த எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டது. மேலும், பழைய உறுப்பினர்களை தக்கவைத்துக்கொள்ளவும் உறுப்பினர்கள் புதுப்பிப்பு பணியும் நடைபெற்றது.

    ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு, டி.டி.வி.தினகரன், திவாகரன், ஜெ.தீபா ஆகியோர் தலைமையில் புதிய அணிகள் உருவானதால், எதிர்பார்த்த அளவுக்கு உறுப்பினர்கள் சேர்க்கையை நடத்த முடியவில்லை. இதனால், உறுப்பினர்கள் சேர்க்கைக்கான காலக்கெடு அதிகரிக்கப்பட்ட போதிலும், அந்தப் பணி மந்தகதியிலேயே நடைபெற்றது.

    நேற்று முன்தினம் வரை புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, பழைய உறுப்பினர்கள் புதுப்பிப்பு என 90 லட்சம் பேர் மட்டுமே அ.தி.மு.க.வில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இருந்த 1½ கோடி தொண்டர்களில் இருந்து பெரும் பாலானவர்கள் விலகியதை கேட்டு, அ.தி.மு.க. தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.

    இந்த நிலையில்தான், அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், உறுப்பினர்கள் சேர்க்கை குறைந்தது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கருத்து கேட்க இருக்கின்றனர். அவர்களின் கருத்துகளின் அடிப்படையில் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கை அ.தி.மு.க. தலைமை எடுக்கும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
    தமிழக சட்டசபையில் நீட் தேர்வு தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து அமைச்சர் விஜயபாஸ்கரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். #TNAssembly #DMKCongressWalkout #NEETissue
    சென்னை:

    நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தமிழக மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக சட்டசபையில் இன்று தி.மு.க. சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் மீது பேசிய மு.க.ஸ்டாலின், நீட் தேர்விற்கு 2017ல் அனிதாவையும் இந்த ஆண்டு பிரதீபாவையும் இழந்திருப்பதாக கூறினார். மேலும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு அரசு என்ன செய்தது? என்றும் கேள்வி எழுப்பினார்.

    நீட் தேர்வு தொடர்பாக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்றும் கேள்வி எழுப்பினார்.



    இதற்கு பதிலளித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். அப்போது நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகள் குறித்து விளக்கினார். தீர்ப்புக்கு கட்டுப்பட்டு நீட் தேர்வை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

    அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்களும் சபை நிகழ்வுகளை புறக்கணித்து வெளியேறினர்.  #TNAssembly #DMKCongressWalkout #NEETissue

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி, திருமாவளவன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர். #SterliteProtest #DMKBandh
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள்.

    இதற்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக கோரியும், டி.ஜி.பி. ராஜேந்திரனை பதவி நீக்கம் செய்ய கோரியும், தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள மதுராந்தகம் சென்றிருந்தார். அங்கு திருமணத்தை நடத்தி வைத்த பின் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அவருடன் புதுமண தம்பதியும், கட்சி தொண்டர்களும் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை எழும்பூரில் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, எம்.எல்.ஏ.க்கள் பி.கே.சேகர்பாபு, ப.ரங்கநாதன், கே.எஸ்.ரவிச்சந்திரன், தாயகம் கவி மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர். எடப்பாடி பழனிசாமி அரசு உடனே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள். மறியலிலும் ஈடுபட்டனர். உடனே கனிமொழி- திருமாவளவன் உள்பட எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

    தியாகராயநகர் பஸ் நிலையம் அருகே மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் கண்டன முழக்கமிட்டனர்.

    இதில் அண்ணாநகர் மோகன், கு.க.செல்வம், பகுதி செயலாளர்கள் ஜெ.கருணாநிதி, கே.ஏழுமலை, அகஸ்டின்பாபு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

    சைதாப்பேட்டையில் மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்- மறியல் நடைபெற்றது.

    இதில் தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், தி.மு.க. பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சைதை குணசேகரன், மகேஷ்குமார் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகளும் கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனர்.

    குன்றத்தூரில் மாவட்டச்செயலாளர் தா.மோ. அன்பரசன் எம்.எல்.ஏ. தலைமையில் பஸ் நிலையம் அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பட்டூர் ஜபருல்லா, சத்தியமூர்த்தி உள்பட ஏராளமானோர் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

    குரோம்பேட்டை பஸ் நிலையத்தில் பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி தலைமையில் மறியல் பேராட்டம் நடைபெற்றது.

    இதில் காங்கிரஸ் கட்சி பிரமுகர் தீனதயாளன், ம.தி.மு.க. சார்பில் ரஜினி மற்றும் ஜோசப் அண்ணா துரை, ரமேஷ் உள்பட ஏராளமானோர் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதே போல் நகரின் பல பகுதிகளில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் மறியலில் ஈடுபட்டு கைதானார்கள். #SterliteProtest #DMKBandh
    குதிரை பேரத்தில் 200 கோடி ரூபாய் கொடுத்தாலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் விலைபோக மாட்டார்கள் என தேவேகவுடா தெரிவித்துள்ளார். #KarnatakaCMrace #Devegowda
    ஐதராபாத்:

    கர்நாடக சட்டசபையில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு உள்ள பெரும்பான்மையை நாளை மாலை 4 மணிக்கு நிரூபிக்குமாறு சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ள நிலையில், ஐதராபாத் நகரில் முகாமிட்டுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் 37 பேரும் பெங்களூரு புறப்படுகின்றனர்.



    மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பா.ஜ.க. 100 கோடி ரூபாய்வரை பேரம் பேசுவதாகவும், மந்திரி பதவிகளை அளிப்பதாக கூறி ஆசைகாட்டி வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

    இந்நிலையில், ஐதராபாத் நகரில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவே கவுடா, ‘100 கோடி அல்ல, 200 கோடி கொடுத்தாலும் எங்கள் எம்.எல்.ஏ.க்கள் விலைபோக மாட்டார்கள். அவர்கள் எங்களுடன்தான் இருக்கிறார்கள். இன்று மாலை அல்லது நாளை அதிகாலை நாங்கள் பெங்களூருவுக்கு புறப்பட்டு செல்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளார். #KarnatakaCMrace #Devegowda
    கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி தருவதாகவும், ரூ.100 கோடி வரை ரொக்கமாக தருவதாகவும் ஆசை காட்டி பா.ஜனதா ஆட்சியை பிடிக்க பார்ப்பதாக குமாரசாமி குற்றம்சாட்டி உள்ளார். #KarnatakaElection #Kumaraswamy
    பெங்களூர்:

    கர்நாடகத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள பா.ஜனதாவும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி காங்கிரசுடன் இணைந்தும் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளன.

    இந்த நிலையில் பெங்களூரில் இன்று மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் குழு தலைவராக குமாரசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த கூட்டத்துக்கு பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    காங்கிரசுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என நாங்கள் முடிவு செய்து விட்டோம். இதன் அடிப்படையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இந்த முடிவை மாற்றுவது குறித்த கேள்விக்கே இடமில்லை.



    பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை. அந்த கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்.

    மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளது. இதற்காக ரூ.100 கோடியும், 3 கேபினட் மந்திரி பதவியையும் பா.ஜனதா பேரம் பேசி வருகிறது. எங்கள் கட்சியை உடைக்க கருப்பு பணத்தை பயன்படுத்த முயற்சிக்கிறது.

    அதிகாரத்துக்கு ஆசைப்படுவன் நான் இல்லை. எங்கள் குடும்பம் நாட்டு நலனுக்காக பிரதமர் பதவியை துறந்தது.

    பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார். குதிரை பேரம் நடைபெறுவதை வருமானவரித்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பதா? ஜனாதிபதியும், கவர்னரும் தலையிட்டு குதிரை பேரம் நடைபெறுவதை தடுக்க வேண்டும்.

    எங்கள் எம்.எல்.ஏ.க்களில் ஒருவரை நீங்கள் இழுக்க முயன்றால் உங்களிடமிருந்து 2 பேரை நாங்கள் இழுப்போம். 10 பேரை இழுத்தால் 20 பேரை இழுப்போம்.

    பா.ஜனதாவில் இருந்து 10 முதல் 20 எம்.எல்.ஏ.க்கள் வரை எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். எங்கள் அணிக்கு வர தயாராக இருக்கிறார்கள். “ஆபரே‌ஷன் கமலா” வெற்றிகரமாக நடந்ததை பா.ஜனதா மறந்து விடக் கூடாது.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.

    அவரது இந்த குற்றச்சாட்டு கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. #KarnatakaElection #Kumaraswamy
    ×