என் மலர்
செய்திகள்

மராட்டியத்தில் வன்முறை நீடிப்பு - 2 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா
மராட்டியத்தில் மராத்தா சமூகத்தினர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து 2 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். #Maharashtrabandh #MarathaQuotaStir
மும்பை:
மராட்டிய மாநிலத்தில் மராத்தா சமூகத்தினர் மாநில மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் உள்ளனர். அரசியல் செல்வாக்கு மிக்கவர்களாக கருதப்படும் இவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கோரி நடத்தி வரும் போராட்டம் வன்முறையாக மாறியது.
மும்பையில் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையொட்டி பல இடங்களில் சாலை மறியல் நடந்தன. அப்போது பஸ்கள் மீது கல்வீசப்பட்டது. ஒரு பஸ் தீவைத்து எரிக்கப்பட்டது. பல பஸ்களின் டயர்கள் சேதப்படுத்தப்பட்டன.
பல்வேறு பகுதிகளில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் 3 போலீசார் காயம் அடைந்தனர்.
மும்பை மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பேரணி நடந்தது. ரெயில் மறியலும் நடந்தது. சிலஇடங்களில் ரெயில்கள் மீது கற்கள் வீசப்பட்டன. இதனால் ரெயில்சேவை பாதிக்கப்பட்டது.

இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி மேலும் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். ஏற்கனவே 2 பேர் தற்கொலை செய்து இருந்தனர்.
மராத்தா சமூகத்தினர் 2016-17ம் ஆண்டு 58 பேரணியை நடத்தி இருந்தனர். இது அமைதியாக நடந்து முடிந்தது. ஆனால் நேற்று நடந்த முழு அடைப்பு கலவரமாக மாறியது. 2 போலீஸ் வாகனம் உள்பட 50 வாகனங்கள் கொளுத்தப்பட்டன.
இந்த நிலையில் மராத்தா சமூகத்தினர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து 2 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். அவுரங்காபாத்தை சேர்ந்த சிவசேனா எம்.எல்.ஏ. ஹர்ஷவர்தன் ஜாதவ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அவர் இ.மெயில் மூலம் சபாநாயகருக்கு அனுப்பியுள்ளார்.
இதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரும் பதவி விலகியுள்ளார்.
மராத்தா சமூகத்தினரின் போராட்டம் பட்னாவிஸ் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. #MarathaReservation #Maharashtrabandh #MarathaQuotaStir #MarathaReservationProtest
Next Story






