search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister VijayaBaskar"

    குட்கா விவகாரத்தில் தினகரன் கட்சியைச் சேர்ந்த நிர்வாகியான வக்கீல் வேலு கார்த்திகேயனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். #GutkhaScam #Gutkha #CBI
    சென்னை:

    தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்ய கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் மீண்டும் பூதாகரமாகி உள்ளது.

    கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றம் அருகே உள்ள குட்கா குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைக்கு பிறகே குட்கா ஊழல் வெளிச்சத்துக்கு வந்தது. குடோனில் கைப்பற்றப்பட்ட டைரியில் ஒவ்வொரு மாதமும் அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்ட பணம் குறித்து பட்டியல் போடப்பட்டு இருந்தது.

    அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளின் பெயரும் குட்கா விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர். முன்னதாக குட்கா வழக்கில் குடோன் அதிபர் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களில் 3 பேர் சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆவர். இவர்கள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    குட்கா ஊழல் வழக்கில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் அதன் பின்னர் சி.பி.ஐ. அதிகாரிகள் அமைதி காத்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குட்கா விவகாரத்தை சி.பி.ஐ. மீண்டும் கையில் எடுத்துள்ளது.

    அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனுக்கு சம்மன் அனுப்பி சி.பி.ஐ. அலுவலகத்துக்கு வரவழைத்த அதிகாரிகள் அவரிடம் 2 நாட்களாக விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் அவர் அளித்த தகவல்களை மையமாக வைத்து அமைச்சர் விஜயபாஸ்கரையும் விசாரணை வளையத்துக்குள் சி.பி.ஐ. கொண்டு வந்தது. முன்னாள் அமைச்சரான ரமணாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ரகசியமாக ஆஜரான விஜயபாஸ்கரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு அதிகாரிகள் திணற அடித்தனர்.

    இதன் எதிரொலியாகவே இன்னொரு உதவியாளரான சீனிவாசன் வீட்டில் நேற்று சோதனை நடத்தப்பட்டு உள்ளது. சென்னை வளரசவாக்கத்தில் உள்ள சீனிவாசனின் வீட்டில் நேற்று சோதனை நடத்திய போலீசார் சில ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் குட்கா விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையாக தினகரன் கட்சியைச் சேர்ந்த நிர்வாகியான வக்கீல் வேலு கார்த்திகேயனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக விசாரணை நடத்தி உள்ளனர்.


    குட்கா ஊழல் வழக்கில் சென்னையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருக்கு வேலு கார்த்திகேயன் ஜாமீன் வாங்கி கொடுத்துள்ளார்.

    இதையடுத்து தஞ்சை மாதாக்கோட்டை சாலை வங்கி ஊழியர் காலனியில் வசித்து வரும் வேலு கார்த்திகேயன் வீட்டில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

    குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜேந்திரனுக்கு ஜாமீன் வாங்கி கொடுத்தது எப்படி? ராஜேந்திரனுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு? அமைச்சர் விஜயபாஸ்கரோ அல்லது அவரது உதவியாளர்கள் யாரும் ராஜேந்திரனை ஜாமீனில் எடுக்கும் படி கூறினார்களா? சென்னையை சேர்ந்த ராஜேந்திரனை உங்களுக்கு எப்படி தெரியும்? என்பது உள்ளிட்ட கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர்.

    அதற்கு வேலு கார்த்திகேயன் சென்னை வக்கீல் நண்பர் மூலம் ராஜேந்தினுக்கு ஜாமீன் வாங்கி கொடுத்தேன் என கூறி உள்ளார்.

    3 மணி நேரம் விசாரணைக்கு பின்னர் வக்கீல் வேலு கார்த்திகேயன் வீட்டில் இருந்து சில ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர்.

    வக்கீல் வேலு கார்த்திகேயன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வக்கீல் பிரிவு மாநில செயலாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    டெல்லியில் இருந்து வந்து இருந்த சி.பி.ஐ. அதிகாரிகளே சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களது சோதனையை முடித்துக் கொண்டு நேற்று இரவே டெல்லி புறப்பட்டு சென்றனர்.

    குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து நடத்தி வரும் விசாரணை அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #GutkhaScam #Gutkha #CBI #Vijayabaskar
    சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து பேசினார். #GutkhaScam #EdappadiPalaniswami #Vijayabaskar
    சென்னை:

    தமிழ்நாட்டில் தடையை மீறி குட்கா விற்பனை செய்ய அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா, போலீஸ் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்பட அரசு ஊழியர்களுக்கு ரூ.40 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கடந்த 2016-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

    செங்குன்றத்தில் உள்ள குட்கா குடோனில் கடந்த 2016-ம் ஆண்டு மத்திய வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது சிக்கிய ரகசிய டைரி மூலம் இந்த தகவல்கள் அம்பலமானது.

    அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு எந்தெந்த தேதியில் எவ்வளவு தொகை லஞ்சமாக கொடுக்கப்பட்டது என்ற விவரம் தேதிவாரியாக அந்த டைரியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    அந்த டைரி தகவலை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்த தமிழக அரசுக்கு வருமானவரித் துறை பரிந்துரை செய்தது. ஆனால் விசாரணை தாமதமானதால் சி.பி.ஐ விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்பேரில் டெல்லி சி.பி.ஐ அதிகாரிகள் குட்கா ஊழல் வழக்கை விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    தற்போது குட்கா ஊழல் வழக்கில் அடுத்தக்கட்ட விசாரணை தீவிரமடைந்து உள்ளது. இதற்காக டெல்லியில் இருந்து சி.பி.ஐ அதிகாரிகள் சென்னை வந்து கடந்த ஒருவாரமாக முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது உதவியாளர் சரவணன், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோருக்கு சம்மன் அனுப்பி வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. உதவியாளர் சரவணனிடம் 3 நாட்கள் விசாரணை நடந்து உள்ளது.

    அமைச்சர் விஜயபாஸ்கர் 2 நாட்கள் வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். அவரிடம் சுமார் 10 மணி நேரத்திற்கு மேல் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏராளமான கேள்விகளை கேட்டு விசாரித்தனர். குறிப்பாக அவரது வீட்டில் நடந்த சோதனையின் போது சி.பி.ஐ ஆவணங்கள் மற்றும் டைரி குறிப்புகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடந்தது.


    இன்று 3-வது நாளாக விஜயபாஸ்கர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இன்று காலை திடீரென அவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு சென்றார்.

    அவர்கள் இருவரும் நீண்ட நேரம் தனியாக பேசிக்கொண்டிருந்தனர். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #GutkhaScam #EdappadiPalaniswami #Vijayabaskar
    குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரமணா இன்று சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். #GutkhaScam #CBI #Vijayabaskar #Ramana
    சென்னை:

    தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்களை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதித்து கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது.

    ஆனாலும் தமிழகத்தில் குட்கா தொடர்ந்து ரகசியமாக விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் குட்கா உற்பத்தியாளர் மாதவராவ் வீடு மற்றும் செங்குன்றத்தில் உள்ள குட்கா உற்பத்தி ஆலைகள் மற்றும் குடோன்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    இந்த சோதனையின் போது டைரி ஒன்று சிக்கியது. அதில் அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ், அப்போதைய புழல் உதவி கமி‌ஷனர் மன்னர் மன்னன், அப்போதைய செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது.

    அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் ரூ.40 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கு முதலில் லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு மாற்றப்பட்டது. பின்னர் ஐகோர்ட்டு உத்தரவின்படி சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

    சில மாதங்களுக்கு முன்பு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் போலீஸ் டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை இந்த வழக்கில் போலீஸ் அதிகாரிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.

    இந்த வழக்கில் குட்கா தயாரிப்பு நிறுவன அதிபர் மாதவராவ், சுகாதாரத்துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என 6 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர்.


    இந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த வாரம் 2 நாட்கள் விசாரணை நடத்தினார்கள். அப்போதே அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

    இந்தநிலையில் வழக்கில் திடீர் திருப்பமாக அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், முன்னாள் அமைச்சர் ரமணாவுக்கும் சி.பி.ஐ. போலீசார் நேற்று சம்மன் அனுப்பினார்கள்.

    அந்த சம்மனில் அவர்கள் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) ஆஜர் ஆகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

    அந்த சம்மனை ஏற்று முன்னாள் அமைச்சர் ரமணா இன்று சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மாலையில் ஆஜராகிறார். அப்போது அவரிடம் விசாரணை நடத்தப்படும்.

    குட்கா வழக்கில் இதுவரை அதிகாரிகள் மட்டத்தில் சி.பி.ஐ. விசாரணை நடந்தது. இப்போது புதிய திருப்பமாக அமைச்சரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    அடுத்த கட்டமாக ஏற்கனவே விசாரிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது. #GutkhaScam #CBI #Vijayabaskar #Ramana
    குட்கா ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் 5 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. #MinisterVijayabaskar #gutkhaissue
    புதுடெல்லி:

    இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.40 கோடி குட்கா ஊழல் வழக்கை டெல்லி சி.பி.ஐ. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதில் குட்கா வியாபாரியும், தொழில் அதிபருமான மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் செந்தில்முருகன், சிவக்குமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த ஊழல் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆகியோரின் வீடுகள் உள்பட 35 இடங்களில் சி.பி.ஐ. போலீசார் சோதனை நடத்தினார்கள். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி சி.பி.ஐ. போலீசார் விசாரித்தார்கள். இருவரிடமும் தலா 2 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. இந்தநிலையில் சி.பி.ஐ. போலீசார் குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக திடீரென்று கடந்த மாதம் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிகையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட தொழில் அதிபர் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் மீது மட்டும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    முதல்கட்ட குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெறவில்லை. ஆனால் தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும், தேவைப்பட்டால் 2-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் சி.பி.ஐ. போலீசார் தெரிவித்தனர். இந்தநிலையில் டெல்லியில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னை வந்து முகாமிட்டனர். அடுத்தக்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணைக்கு ஆஜராகுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனுக்கு சி.பி.ஐ. போலீசார் சம்மன் அனுப்பினர். அவரிடம் விசாரணையை மேற்கொண்டனர். 

    இப்போது குட்கா ஊழல் வழக்கில் நாளை விசாரணைக்கு ஆஜராக  அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் 5 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.  #MinisterVijayabaskar #gutkhaissue
    வருகிற 16-ந்தேதி வரக்கூடிய புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். #TNCyclone #MinisterUdhayakumar #TNGovt
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் வழங்கினர் .

    பின்னர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் கஜா புயலின் போது அதிக உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு புயல் நிவாரண நிதியாக ரூ.1,104 கோடி வழங்கியுள்ளது. வேளாண்மைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு இன்னமும் ரூ.2500 கோடி தேவைப்படுகிறது.

    மத்திய அரசு இதுவரை எந்த நிதி உதவியும் புயலுக்கு வழங்கவில்லை. அவர்கள் ஏற்கனவே வழங்கிய நிதியானது பேரிடர் மீட்பு நிலுவைத்தொகை. தற்போது நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்ப வேண்டும். அவர்களுடைய கோரிக்கையை அரசு பரிசீலனை செய்ய தயாராக உள்ளது.


    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எங்களுடைய நண்பர். அவர் அவசரப்பட்டு தி.மு.க.வில் இணையும் முடிவை எடுத்து விட்டார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதனால்தான் நாங்கள் நிலையாக நிற்கிறோம். தினகரனின் பழமொழி எல்லாம் இனி மக்களிடம் எடுபடாது.

    வருகிற 16-ந்தேதி வரக்கூடிய புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. புயலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். புயல் எந்த திசையில் வரும் என்று உறுதி செய்துவிட்டு அதற்கு தகுந்தாற்போல் மக்களிடம் தெரியப்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-

    ஆயிரம் பேர் ஆயிரம் பேசலாம். ஆனால் அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தான் கஜா புயலின் போது அதிக உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 99 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டது. அடுத்தது விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய மின் கம்பங்களை சீரமைக்கும் பணி தொடங்க உள்ளது என்றார்.

    விழாவில் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:-

    கஜா புயலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திய அரசாக தமிழக அரசு இருந்தது. கஜா புயலை வைத்து எதிர்க்கட்சிகள் தமிழகத்தை போராட்ட களமாக மாற்ற நினைத்தால் மக்கள் அவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பல்வேறு சோதனையான காலகட்டத்தை கடந்து சுகாதாரத் துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். அவர் பதவியிலேயே தொடர முடியாது என்று பேசப்பட்ட சோதனை காலக்கட்டத்தில் கூட கலங்கி விடாமல், சோர்ந்து போகாமல் சோதனைகளை சாதனைகளாக மாற்றியமைத்தவர் விஜயபாஸ்கர்.

    கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களோடு களத்தில் நின்று மீட்பு பணிகளில் துரிதமாக ஈடுபட்டவர். அவர் மேற்கொண்ட நடவடிக்கையால் தான் புயல் பாதித்த மாவட்டங்களில் தொற்று நோய் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. நிவாரண பணிகள் முடிந்த பிறகு எந்த விவாதத்திற்கும் நாங்கள் தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #TNCyclone #MinisterUdhayakumar #TNGovt
    டி.டி.வி.தினகரனை முதல்வராக்குவேன் என்று கூறிய செந்தில்பாலாஜி அவரை நடுரோட்டில் விட்டு விட்டு வந்து விட்டார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கடுமையாக தாக்கி பேசினார். #ADMK #MRVijayabaskar #SenthilBalaji #TTVDhinakaran
    கரூர்:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் தினகரனால் தொடங்கப்பட்ட அ.ம.மு.க.வில் இணைந்தார். தற்போது அவர் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைய போவது உறுதியாகியுள்ளது.

    இதனால் அதிருப்தியடைந்த அரவக்குறிச்சி ஒன்றிய அ.ம.மு.க. செயலாளர் மணிகண்டன், கரூர் நகர பாசறை செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    பின்னர் கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் பேசியதாவது:-

    ஆர்.கே.நகர் தேர்தலில் டி.டி.வி.தினகரன் இருபது ரூபாய் நோட்டை காண்பித்த போதே கூறினேன். அப்போது தினகரனை முதல்வராக்காமல் விடமாட்டேன் என்றார். மேலும் தினகரனின் கூடாரம் காலியாகும் எனவும் கூறினேன். ஆனால் தற்போது 2 வாரத்தில் காலியாகி விட்டது.

    டி.டி.வி.தினகரனை முதல்வராக்குவேன் என்று கூறிய செந்தில்பாலாஜி அவரை நடுரோட்டில் விட்டு விட்டு வந்து விட்டார். தி.மு.க.வில் இணைந்தால் செந்தில்பாலாஜிக்கு மட்டுமே மரியாதை கிடைக்கும். அவருடன் செல்வபவர்கள் வாசல் வரை சென்று திரும்பும் நிலையே ஏற்படும். அங்கிருந்து அ.தி.மு.க.விற்கு வரும் நபர்களுக்கு உரிய மரியாதையும் பாதுகாப்பும் கொடுக்கப்படும்.

    கட்சியில் போட்டிகள் இருக்கலாம். ஆனால் விசுவாசமாக இருக்க வேண்டும். பதவி வெறியில் திரியும் அவர் விரைவில் தினகரனை விட்டு சென்று விடுவார் என கூறி வந்தேன்.


    ஏற்கனவே செந்தில்பாலாஜி ம.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.விற்கு சென்று பின்னர் பதவிக்காக அ.தி.மு.க.விற்கு வந்தார். தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்த அவர் தி.மு.க.விற்கு செல்கிறார். அடுத்து எத்தனை கட்சிக்கு செல்வார் என்பது தெரியவில்லை. நமக்கு அ.ம.மு.க. எதிரி கிடையாது.

    நான் தான் சாகிற வரைக்கும் மந்திரி என்பது நடக்காதது. பதவி எல்லாம் அவரவர் தலையெழுத்துப்படிதான் அமையும். பிறந்தபோதே மந்திரியாக இருந்ததை போல் செந்தில்பாலாஜி செயல்படுகிறார். எனக்கு ஆண்டவனும், ஜெயலலிதாவும் கொடுத்த பதவி இது. 3 மாதங்களுக்கு முன்பே கட்சி தாவ செந்தில்பாலாஜி முடிவு செய்து விட்டார். தற்போது 4 தினங்கள் முன்பு வரை தினகரனுடன் இருப்பதாக ஏமாற்றியுள்ளார்.

    ஒரு அ.தி.மு.க. தொண்டன் கூட செந்தில்பாலாஜியின் பின்னால் தி.மு.க.வில் சென்று இணைய மாட்டார்கள். ஒரு வினைக்கு எதிர் வினை என்பது எப்போதும் உண்டு. அதேபோல் தி.மு.க.விற்கு சென்றாலும் அவரின் அமைச்சர் கனவு பலிக்காது. மேலும் அ.ம.மு.க.வில் இருந்து அ.தி.மு.க.விற்கு திரும்பியவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறினார்.

    செந்தில்பாலாஜி அ.தி.மு.க.விற்கு வருவதை எதிர்த்ததால் தான் அவர் தி.மு.க.விற்கு செல்வதாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது யாரையும் கட்சியில் சேர்ப்பது குறித்து கட்சி ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளரும் தான் முடிவு செய்வர் என்றார். மேலும் செந்தில்பாலாஜி தி.மு.க.வில் சேருவது குறித்து கேட்டபோது, அதனை அவரிடம் தான் கேட்க வேண்டும். என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என கூறினார். #ADMK #MRVijayabaskar #SenthilBalaji #TTVDhinakaran
    குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் இன்று 3-வது நாளாக சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜர் ஆனார். #Gutkha #GutkhaScam
    சென்னை:

    குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக குடோன் அதிபர் மாதவராவ் மற்றும் 3 அதிகாரிகள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அடுத்த கட்ட நடவடிக்கையாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனிடமும் விசாரணை செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக அவருக்கு 2 முறை சம்மன் அனுப்பினார்கள்.

    ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே 3-வது முறையாக சி.பி.ஐ. சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.


    இதையடுத்து, சரவணன் கடந்த 7-ந்தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் குட்கா ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடந்தது.

    தொடர்ந்து 8-ந்தேதியும் சரவணனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை செய்தனர். மீண்டும் 11-ந்தேதி ஆஜர் ஆகும்படி சி.பி.ஐ. அதிகாரிகள் கூறி இருந்தனர். அதன்படி இன்று 3-வது நாளாக சரவணன் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அப்போது சி.பி.ஐ.அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இவரிடம் நடந்த விசாரணையின் அடிப்படையில் வேறு சிலருக்கு சம்மன் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது. இதில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. #Gutkha #GutkhaScam #Vijayabaskar
    அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் சென்றடைந்து விட்டது என்று உறுதி செய்த பின்னர் தான் சென்னை செல்வேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #GajaCyclone #Vijayabaskar
    புதுக்கோட்டை:

    ‘கஜா’ புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு சார்பில், நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    புயல் பாதித்த பகுதிகளில் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய கான்கிரீட் வீடுகள் அரசால் அமைத்து தர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இது தவிர புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதிப்பு சேத விபரங்கள் துல்லியமாக அலுவலர்கள் மூலம் கணக்கெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ஏற்கனவே 100 சதவீதம் மின் இணைப்பு வழங்கப்பட்ட நிலையில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தற்போது 100 சதவீதம் மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. குக்கிராமங்கள் மற்றும் விவசாய மின் இணைப்புகளை 100 சதவீதம் விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றார்.

    தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொதுமக்கள் தங்களுடைய பிரச்சனைகளை கூறுகையில், அவர்களின் குறைகளை காது கொடுத்து கேட்க வேண்டியது அரசின் கடமை. அவர்களின் கோரிக்கையை முடிந்த அளவுக்கு அரசால் செய்து கொடுக்க வேண்டும். அல்லது சொந்த முயற்சியால் அதை நிறைவேற்றித்தர வேண்டும். முடியவில்லை என்றால் அவற்றை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு நான் செய்ததால் தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் நிவாரண பணியின் போது என்னுடைய காரை யாரும் மறிக்கவில்லை.

    புதுக்கோட்டை மாவட்டத் தில் 95 சதவீதம் மீட்பு பணிகள் முடிந்து உள்ளது. குறிப்பாக மின்சாரம் 95 சதவீதம் வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 5 சதவீதம் பணிகள் 2 அல்லது 3 நாட்களில் முடிவடையும். அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் சென்றடைந்து விட்டது என்று உறுதி செய்த பின்னர் தான் நான் சென்னை செல்வேன்.

    கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் இருந்து புதுக்கோட்டை விரைவாக மீண்டதற்கு அரசு மற்றும் அரசுடன் இணைந்து பொதுமக்கள் தன்னார்வலர்கள் ஆகியோர் பணியாற்றியது தான் காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #Vijayabaskar
    குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் இன்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். #Gutkha #GutkhaScam #Vijayabaskar
    சென்னை:

    குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோர் மீதும் இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

    புழல் உதவி கமி‌ஷனராக பணியாற்றிய மன்னர்மன்னன், செங்குன்றத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த சம்பத் ஆகியோரது பெயர்களும் குட்கா விவகாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

    ஆனால் இவர்கள் யார் மீதும் இதுவரையில் நடவடிக்கை பாயவில்லை. அதே நேரத்தில் சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    குட்கா குடோன் அதிபர் மாதவரராவ் உள்ளிட்ட 6 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் அதிகாரிகள் ஆவர்.


    குட்கா வழக்கில் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக சி.பி.ஐ. அதிகாரிகள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனிடம் விசாரணை நடத்த திட்டமிட்டனர்.

    இதன்படி அவருக்கு ஏற்கனவே 2 முறை சம்மன் அனுப்பி இருந்தனர். இதனை ஏற்று சரவணன் விசாரணைக்காக ஆஜராகவில்லை. இதன் காரணமாக 3-வது முறையாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து சரவணன் இன்று காலை 10 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். குட்கா ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சரவணனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதன் பின்னர் குட்கா விவகாரத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Gutkha #GutkhaScam #Vijayabaskar
    கோர்ட்டு உத்தரவை மீறி ஹெல்மெட் அணியாமல் வந்த வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #ministervijayabaskar #maduraihighcourt

    மதுரை:

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் சுகாதார துறை சார்பில் நல வாழ்வு முகாம் நடந்தது. இதில் கலந்துகொண்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 100 பேர் ஹெல் மெட் அணியாமல் சென்றுள்ளனர்.

    கோர்ட்டு உத்தரவை மீறி ஹெல்மெட் அணியாமல் சென்ற அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இதேபோல் சர்கார் படத்துக்கு எதிராக மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் மதுரை அண்ணா நகரில் உள்ள தியேட்டர் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிராபிக் ராமசாமி மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு கடந்த மாதம் 22-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது விதிமீறலில் ஈடுபட்டவர்களை எதிர் மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் இன்று (டிசம்பர் 6) ஒத்தி வைத்தனர்.

    வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேச வலு ஆகியோர் வழக்கின் எதிர் மனுதாரர்களான அமைச்சர் விஜயபாஸ்கர், ராஜன்செல்லப்பா எம். எல்.ஏ. ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தர விட்டதோடு விசாரணையை வருகிற 17-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர். #ministervijayabaskar #maduraihighcourt

    புதுக்கோட்டையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் விஜயபாஸ்கர், எதிர்கட்சியுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசரை சந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Thirunavukkarasar #MinisterVijayabaskar
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் புத்தகங்கள் கஜா புயலால் நனைந்து வீணாகியது. இதனால் அவற்றிற்கு மாற்றாக மாணவர்களுக்கு புதிய புத்தகப்பை, சீருடை, புத்தகங்களை தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது.

    இதனை புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்று சுகாதார பணிகளை மேற்கொண்டு வரும் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார். மேலும் புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு பைக்கில் சென்று ஆய்வு செய்தார்.

    பின்னர் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு விருந்தினர் மாளிகைக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி துரை. திவ்யநாதனின்வீட்டின் முன்னர் ஏராளமான கார்கள் அணிவகுத்து நின்றன. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் காரும் அங்கு நின்று கொண்டிருந்தது.

    மேலும் அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லும் பணியும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனை பார்த்த அமைச்சர் விஜயபாஸ்கர் அங்கு கூடியிருந்த காங்கிரஸ் கட்சியினரிடம் திருநாவுக்கரசர் வந்துள்ளாரா? என கேட்டு தெரிந்து கொண்டார்.


    திருநாவுக்கரசர் வந்திருப்பதை உறுதி செய்து கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், காங்கிரஸ் கட்சியினர் எதிர்பாராத வகையில் திவ்யநாதனின் வீட்டிற்குள் சென்றார். இதனை பார்த்த கட்சியினர் நடப்பது என்ன என தெரியாமல் திகைத்தனர்.

    பின்னர் அங்கு கட்சியினருடன் அமர்ந்திருந்த திருநாவுக்கரசரை, அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 5 நிமிடங்கள் வரை தொடர்ந்தது. அதனை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் அங்கிருந்து புறப்படுவதாக கூறி சென்றார். அப்போது திருநாவுக்கரசர் வாசல் வரை வந்து இன்முகத்தோடு அவரை வழியனுப்பினார்.

    தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான விஜயபாஸ்கரும் கஜா புயல் பாதிப்புகள் குறித்தும், மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது.

    இருப்பினும் ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சரும், கட்சியின் முக்கிய நிர்வாகியுமான அமைச்சர் விஜயபாஸ்கர், எதிர்கட்சியுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசரை சந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Thirunavukkarasar #MinisterVijayabaskar
    குட்கா ஊழல் வழக்கில் உரிய விசாரணை கோரி சி.பி.ஐ. இயக்குனர் மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஆகியோருக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கடிதம் அனுப்பியுள்ளார். #dmk #gutkhacase #cbidirector #ministervijayabaskar
    சென்னை:

    சி.பி.ஐ. இயக்குனர் மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஆகியோருக்கு, தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தையே உலுக்கிய குட்கா ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக கண்ணன், உதவி அதிகாரியாக பிரமோத்குமார் ஆகியோர் இருந்து வந்தனர். அவர்கள் மூலம் இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் இருவருமே மாற்றப்பட்டு இருக்கின்றனர்.

    அதேநேரம் சி.பி.ஐ. இயக்குனரும் கட்டாய விடுப்பில் சென்றிருக்கிறார். அவருக்கு பதிலாக புதிய இயக்குனர் அவசரமாக பொறுப்பேற்றிருக்கிறார். அதேவேளை இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றபத்திரிகையிலும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளின் பெயர் இடம்பெறவில்லை. இந்த போக்கு குட்கா வழக்கில் தவறான முன்னுதாரணமாக இருக்கிறது.

    எனவே குட்கா ஊழல் வழக்கில் உரிய விசாரணை நடத்தப்பட்டு உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காட்டப்பட வேண்டும். இந்த தவறான போக்கு தொடரும் பட்சத்தில் சரியான நீதியை அடைய சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று வழக்கு தொடரவேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்படுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #dmk #gutkhacase #cbidirector #ministervijayabaskar
    ×