search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "livestock"

    • மர்ம விலங்கு கடித்ததில் கன்று குட்டிகள் காயம் ஏற்பட்டு இறந்து கிடந்தது.
    • கால்நடை மருத்துவர் மூலமாக பிரேத பரிசோதனையும் செய்யப்பட்டது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த சின்னவீரம் பட்டியைச் சேர்ந்தவர் அருளானந்தம்.விவசாயி. இவருக்கு சொந்தமான நிலம் பெரிய கோட்டை கிராமத்தில் உள்ளது. அருளானந்தம் சாகுபடி பணிகளுடன் சேர்த்து கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டு வருகிறார்.இவர் சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க இரண்டு கன்று குட்டிகளை தோட்டத்து சாளையில் கட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.நேற்று காலை வந்து பார்த்தபோது அடையாளம் தெரியாத மர்ம விலங்கு கடித்ததில் கன்று குட்டிகள் வயிறு மற்றும் தொடை பகுதியில் காயம் ஏற்பட்டு இறந்து கிடந்தது.

    அதைத்தொடர்ந்து சந்தேகம் அடைந்த அருளானந்தம் உடுமலை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.அதன் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.அதைத் தொடர்ந்து கன்றுக் குட்டிகளுக்கு கால்நடை மருத்துவர் மூலமாக பிரேத பரிசோதனையும் செய்யப்பட்டது.அதில் தெரு நாய்கள் கடித்ததில் கன்று குட்டிகள் இறந்தது தெரிய வந்தது.அதைத் தொடர்ந்து வனத்துறையினர் சார்பில் அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு உள்ளது.மேலும் ரோந்து பணியிலும் வனத்துறையினர் ஈடுபட்டு வருவதுடன் வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.வனத்துறையினரின் நடவடிக்கையால் விவசாயிகள் நிம்மதி அடைந்து உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,

    சின்னவீரம்பட்டி பகுதியில் வளர்ப்பு கோழி பண்ணைகள் உள்ளது.அதில் இறக்கும் கோழிகளை முறையாக அப்புறப்படுத்துவதில்லை. ஆங்காங்கே திறந்த வெளியில் வீசி விடுகின்றனர்.இதனால் அந்தப் பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்கள் இறந்த கோழிகளை உணவாக்கி வருகிறது.கோழிகள் கிடைக்காத சமயத்தில் மாமிசத்தின் மீது உள்ள மோகத்தால் விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளை தெருநாய்கள் துன்புறுத்தி வருகிறது. இதனால் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் பண்ணைகளில் இறக்கும் கோழியை முறைப்படி குழி தோண்டி புதைப்பதும் அவசியமாக உள்ளது.அவர்களது அலட்சியமே தெரு நாய்களுக்கு ரத்தவெறி பிடித்து கால்நடைகள் பாதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக இழப்பு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து சம்மந்தப்பட்ட துறையினர் கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதும் கடமையாகும் என்று தெரிவித்தனர்.

    • 21,22,23 ஆகிய மூன்று நாட்கள், வெப்பநிலை புதிய உச்சத்தை தொடலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
    • வயதானவர்கள், குழந்தைகள் மதிய நேரங்களில் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.

    தாராபுரம் :

    வெப்பநிலை அதிகரிப்பால் 21,22,23 ஆகிய தேதிகளில் முறையே 2,3,4 மி.மீ., மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, கோவை வேளாண் பல்கலைக்காக காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. இது குறித்து அந்த மையத்தின் தலைவர் ராமநாதன் கூறியதாவது:- பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள எல் நீனோ நிகழ்வு காரணமாக நாடு முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.அக்னி நட்சத்திரம் சமயங்களில் வழக்கமாக, 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும். தற்போது, 40 டிகிரி செல்சியஸ் எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    21,22,23 ஆகிய மூன்று நாட்கள், வெப்பநிலை புதிய உச்சத்தை தொடலாம் என கணிக்கப்பட்டுள்ளது. 23ந் தேதி இதுகுறித்த பதிவுகள் உறுதிசெய்யப்படும்.வயதானவர்கள், குழந்தைகள் மதிய நேரங்களில் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. அதிகமாக நீர் பருக வேண்டும். அடுத்த ஐந்து நாட்களுக்கு வறண்ட வானிலையுடன், சராசரியை காட்டிலும் 2-3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்து காணப்படும்.மதியம் 12 மணி முதல்4 மணி வரை கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

    பகல், இரவு வெப்பநிலை உயர்ந்தும், காற்றின் ஈரப்பதம் குறைந்தும் காணப்படுவதால் மதியம் 2மணி முதல் 3 மணி வரை உள்ளூர் பகுதிகளில் சுழற்காற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஐந்து மாத வயதுடைய வாழை மரங்களுக்கு முட்டு கொடுப்பது நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கால்நடைகள் உட்பட அனைத்து உயிரினங்களும் பல்வேறு நோய் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.
    • கால்நடைகளின் சாணம், புழுக்கை மற்றும் கழிவு விவசாய நிலங்களுக்கு மீண்டும் இயற்கை உரம் சிறந்த உரமாக கிடைக்கிறது.

    பாபநாசம்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் விவசாயத்திற்கு கால்நடை களின் கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்த சமீப காலமாக விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    முந்தைய காலங்களில் கால்நடை கழிவுகளை இயற்கை உரமாக வயல்களுக்கு இட்டு அதிக அளவில் விவசாயம் செய்து வந்தனர். அதற்காக விவசாயிகள் அதிக அளவில் வீடுகளில் கால்நடைகளை வளர்த்து வந்தனர்.

    சமீப காலமாக கிராமங்களில் கால்நடைகள் வளர்ப்பவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டதால் கால்நடை கழிவுகள் அதிக அளவில் கிடைப்பதில்லை. அதனால் இயற்கை உரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்து வந்தது. இரசாயன உரங்களால் மண்வளம் பாதிக்கப்படுவதோடு, அதில் விளைவிக்கக்கூடிய தானியங்களை உண்ணும் மனித இனம் மட்டுமின்றி கால்நடைகள் உட்பட அனைத்து உயிரினங்களும் பல்வேறு நோய் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.

    சமீப காலமாக இரசாயன உரங்கள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக சில விவசாயிகள் மீண்டும் இயற்கை உரத்திற்கு மாறி வருகின்றனர்.

    கால்நடைகளை அடைத்து வைப்பதன் மூலம் கால்நடைகளின் சாணம், புழுக்கை மற்றும் கழிவு விவசாய நிலங்களுக்கு மீண்டும் இயற்கை உரம் சிறந்த உரமாக கிடைக்கிறது.

    இதற்காக ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகள், மாடுகள், வாத்துகள் தஞ்சை உட்பட டெல்டா மாவட்டங்களுக்கு மேய்ச்சலுக்காகவும், இயற்கை உரத்திற்காகவும் கொண்டுவரப்பட்டு கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் கிடை அமைக்கும் பணிகளில் தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம் நடந்தது.
    • இதில் 136 பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் காயல்குடி பேரூராட்சியில் சேர்மன் மாரியப்பன் தலைைமையில் செயல் அலுவலர் சேகர் முன்னிலையில் செல்ல பிராணிகளுக்கு பேரூராட்சி அலுவலகம் முன்பு தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் 136 பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    பேரூராட்சி தலைவர் மாரியப்பன், கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநர் டாக்டர் சிவகுமார், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் டாக்டர் நேரு குமார், கால்நடை மருத்துவர் அரவிந்தன், மணி, கால்நடை ஆய்வாளர்கள் இளமதி, கோதை நாயகி கால்நடை பராமரிப்பு உதவியாளர் கண்ணதாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கால்நடைகளுக்கு 21 நாட்கள் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
    • 12 ஊராட்சி ஒன்றிய தலைமை கால்நடை மருந்தகங்களில் பாதுகாப்பான முறையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், கண்டாங்கிப்பட்டி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் கீழ், கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின் 3-வது சுற்று தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கால்நடைகளின் நலன் காத்திடும் பொருட்டு, எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அரசின் தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சார்பில் கால்நடை பரா மரிப்புத்துறையின் மூலமாக 3-வது சுற்று (கோமாரி) தடுப்பூசி போடும் பணி, சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து மாட்டினங்க ளுக்கும் இலவசமாக 21 நாட்கள் தொடர்ச்சியாக மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடத்திட திட்டமிடப்பட்டு, அதற்கான பணி சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்டாங்கிப்பட்டி கிராமத்தில் தொடங்கி உள்ளது.

    இதன்மூலம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பசுக்கள் 2 லட்சத்து11 ஆயிரத்து 458 மற்றும் எருமை மாடுகள் 742 என மொத்தம் 2 லட்சத்து 12 ஆயிரத்து 200 மாடுகள் பயன்பெற உள்ளன. இதற்கான தடுப்பூசிகள் மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றிய தலைமை கால்நடை மருந்தகங்களில் பாதுகாப்பான முறையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள 57 குழுவினர் மூலம் ஒவ்வொரு கிராமத்திற்கும் வழங்கு வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை கால்ந டைகளுக்கு செலுத்து வதனால், இதன் வாயிலாக தங்களது கால்நடைகளை, கால் மற்றும் வாய்க்காணை (கோமாரி) நோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்திட முடியும்.

    இதனால் கறவை மாடுகள் பால் உற்பத்தி, எருதுகளின் வேலைத்திறன், கறவை மாடுகளின் சினை பிடிப்பு போன்றவைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு பாதுகாக்கப்படும். இதனை கால்நடை வளர்ப்போர் கருத்தில் கொண்டு, தங்களது பகுதிகளில் நடைபெறும் முகாமை நல்லமுறையில் பயன்படுத்திக்கொண்டு, அனைத்து மாட்டினங்களுக்கும் இலவசமாக கோமாரி தடுப்பூசியினை செலுத்தி, உங்கள் கால்நடைகளை கோமாரி நோயில் இருந்து பேணி பாதுகாத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் நாகநாதன், துணை இயக்குநர் முகமதுகான், துணைப்பதிவாளர் (பால்வளம்) செல்வம், பொது மேலாளர், ஆவின் (காரைக்குடி) சாமமூர்த்தி, கண்டாங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தலைவர் மந்தக்காளை, உதவி இயக்குநர்கள், கால்நடை ஆய்வாளர்கள், பொமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பொங்கல் பண்டிகையின் போது விவசாயிகள், தங்களது குடும்பத்தினருக்கு புத்தாடை மற்றும் அணிகலன்கள் வாங்கித்தந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தி அழகு பார்த்து அன்பை பகிர்ந்து மகிழ்கின்றனர்.
    • விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் மாட்டு பொங்கலையொட்டி அணிகலன்களை பூட்டி அலங்கரித்து கொண்டாடினர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், பேளூர், கருமந்துறை பகுதி கிராமங்களில் மாட்டுப் பொங்கலன்று, விவசாயிகள் வளர்த்து வரும் ஜல்லிக்கட்டுக் காளைகள், எருதுகள் மட்டுமின்றி, கறவை பசுக்கள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளையும் குளிப்பாட்டி, வண்ணப் பொடித் துாவியும், வண்ண அச்சுகளை வைத்தும் விவசாயிகள் அழகுபடுத்துவதும், கொம்புகளை சீவி வண்ணம் தீட்டுவதோடு, கால்நடைகளுக்கு புதிய மூக்கணாங்கயிறு, கழுத்துமணி , கொம்பு கொப்புச் சலங்கை, கால் சலங்கை, தலைக்கயிறு, கழுத்துச் சங்கிலி, நெற்றிப்பட்டை ஆகிய அணிகலன்கள் மற்றும் பலுான், ரிப்பன் ஆகியவற்றை வாங்கி அணிவித்து அலங்கரிப்பதை ஊர்வலமாக அழைத்து செல்வதை பெருமையாக கருதுகின்றனர்.

    இதனால், வாழப்பாடி அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், பேளூர், கருமந்துறை, தும்பல் வாரச்சந்தை களிலும், கிராமங்கள் வைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளிலும் கால்நடை அணிகலன்கள் விற்பனை அமோகமாக நடந்தது. பொங்கல் பண்டிகையின் போது விவசாயிகள், தங்களது குடும்பத்தினருக்கு புத்தாடை மற்றும் அணிகலன்கள் வாங்கித்தந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தி அழகு பார்த்து அன்பை பகிர்ந்து மகிழ்வதோடு மட்டுமின்றி, விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் மாட்டு பொங்கலையொட்டி அணிகலன்களை பூட்டி அலங்கரித்து கொண்டாடினர்.

    • பல விவசாயிகள் கால்நடைகளுக்கு போதுமான தீவனத்தை உற்பத்தி செய்ய போராடி வருகின்றனர்.
    • கால்நடை தீவனத்துடன் இணைத்து கொடுக்கும்போது பால் உற்பத்தி 15 முதல் 20 சதவீதம் அதிகரிக்கும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டாரம், திருவத்தேவன் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் அசோலா வளர்ப்பு செயல்விளக்கம் விவசாயிகளுக்கு நடத்த ப்பட்டது.

    மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) பாலசரஸ்வதி விவசாயிகளிடம் பேசிய போது, அசோலா ஒரு அற்புதமான பசுந்தீவ னம். மேலும் இது ஒரு மிதக்கும் நீர்வாழ் உயிரி ஆகும்.

    இது தண்ணீரின் மேற்பரப்பில் வளரக்கூ டியது. கால்நடை தீவனப் பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு காரண மாக பல விவசாயிகள் கால்ந டைகளுக்கு போதுமான தீவனத்தை உற்பத்தி செய்ய போராடி வருகின்றனர்.

    அசோலா கால்நடைகள், மீன், முயல் மற்றும் கோழி களுக்கு ஏற்ற நிலையான தீவனமாகும். இது தவிர பண்ணையில் உயிர் உரமாகவும் பயன்படுத்த ப்படுகிறது. அசோலா சாகுபடிக்கு குறைந்த அளவு முதலீடு போதுமானது.

    இது நல்ல தீவனம் மற்றும் உயிர் உரத்திற்கான குறைந்த விலை கொண்ட மாற்றுத் தீர்வாகும் என எடுத்துக் கூறினார்.

    அசோலா வளர்ப்பு குறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி (பொ) பேசியதாவது, அசோலா வளர்ப்ப தற்காக பிளாஸ்டிக் தாள் தொட்டி மற்றும் குளத்தை பயன்படுத்தலாம். அசோலா சாகுபடி குளத்தை உருவாக்குவதற்கு ஓரளவு நிழலாக உள்ள பகுதியை தேர்ந்தெடுத்தால் மிகவும் சிறப்பு.

    ஏனெனில் 30 சதவீதம் சூரிய ஒளி தேவைப்படுகிறது. அதிக சூரிய ஒளி வளர்ச்சியை பாதிக்கும். மரத்தின் அடியில் உள்ள பகுதி மிகவும் ஏற்றதாகும். பெரிய அளவில் அசோலாவை வளர்க்க திட்டமிட்டால் சிறிய கான்கிரீட் தொட்டியை உருவாக்கலாம்.

    கோழிகளுக்கு அசோலா அளிப்பதால் எடை மற்றும் முட்டை உற்பத்தி அதிகரிக்கிறது.1.5 முதல் 2 கிலோ அசோலா கால்நடை தீவனத்துடன் இணைத்து கொடுக்கும்போது பால் உற்பத்தி 15 முதல் 20 சதவீதம் அதிகரிக்கும்.

    ஆடு, முயல் மற்றும் மீன்களுக்கு அசோலா உணவளிக்கலாம் என்றார்.அசோலா வளர்ப்பு செயல் விளக்கத்திற்கான ஏற்பாடு களை உதவி வேளாண்மை அலுவலர் எம்.பிரதீபா, அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ஆ.தமிழழகன் மற்றும் வீ.ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • திட்ட தொழில் சாரா வல்லுநர் லெட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
    • 62 பயனாளிகளுக்கு சுமார் ரூ.75 ஆயிரம் மதிப்பில் அலுமினிய அன்னக்கூடை வழங்கப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிராமத்தில் தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் குழுவில் உள்ள கால்நடைகள் வளர்க்கும் பெண்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய கவுன்சிலர் மோகன் தலைமையில் நடைபெற்றது.

    ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி முன்னிலை வகித்தார்.

    முன்னாக திட்டத்தின் தொழில் சாரா வல்லுநர் லெட்சுமி அனைவரையும் வரவேற்றார்.

    இதில் 62 பயனாளிகளுக்கு சுமார் ரூ.75 ஆயிரம் மதிப்பில் அலுமினிய அன்னக்கூடை, சில்வர் பால் வாலி ஆகியவை வழங்கப்பட்டது.

    இதில் ஊராட்சி உநுப்பினார்கள் பாலசுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன், செங்குட்டுவன், லோகநாதன், கலையரசன், குழு நிர்வாகிகள், உறுப்பினார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முகாமில் 650-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்றன.
    • கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதாரம், தோல் கழலை நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. முகாமானது கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் சஞ்சீவ்ராஜ் அறிவுரையின் பேரிலும், உதவி இயக்குனர்கள் விஜயகுமார் உத்தரவின் பேரிலும் நடைப்பெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத்தலைவர் முகம்மது சலாவுதீன் தலைமை தாங்கினார். கால்நடை உதவி மருத்துவர்கள் சிவப்பிரியா, முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் கால்நடை நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.

    முகாமில் 650-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்றன.

    இதில் சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் சசிக்குமார், கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஸ்ரீதர், செயற்கை முறை கருவூட்டாளர் தம்பிராஜா மற்றும் கால்நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் வடகரை ஊராட்சி திருப்பனையூரில் நடைபெற்ற முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் மோகன் ஊராட்சி செயலாளர் பிரகாஷ் குமார் ஆகியோர் தலைமை வகித்து முகாமை நடத்தி வைத்தனர். அதே போல் ஆதலையூரில் நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் தென்மதி சந்திரசேகர் தலைமை வகித்துமருத்துவ முகாமை நடத்தி வைத்தார்.

    • கால்நடை சிறப்பு மருத்துவ முகாமை ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி ஆண்டி தொடங்கி வைத்தார்.
    • மருத்துவர்கள் ஊத்துமலை ரமேஷ், வீராணம் சந்திரன், ஆலங்குளம் ராஜா ஜூலியட் ஆகியோர் அடங்கிய குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், கிடாரக்குளம் ஊராட்சியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி ஆண்டி முகாமை தொடங்கி வைத்தார். மருத்துவர் பொன்னுவேல் வரவேற்றார். மருத்துவர்கள் தியோபிலஸ் ரோஜர், மகேஸ்வரி, ஜான் சுபாஷ் ஆகியோர் தொழில்நுட்ப உரையாற்றினர்.

    மருத்துவர்கள் ஊத்துமலை ரமேஷ், வீராணம் சந்திரன், ஆலங்குளம் ராஜா ஜூலியட் ஆகியோர் அடங்கிய குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். நெட்டூர் கால்நடை உதவி மருத்துவர் ராமசெல்வம் நன்றி கூறினார்.

    • வெயில் தோன்றும் வரை கால்நடைகளை தோட்டம் மற்றும் திறந்த வெளியில் மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • மாடுகளுக்கு நிமோனியா காய்ச்சல் வர வாய்ப்புள்ளதால் வெயில் தோன்றிய பின்னரே மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.

    உடுமலை :

    தற்போது பனிக்காலம் என்பதால் உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் காலை 8 மணி வரை குளிர் நிலவுகிறது.இதனால் அதிகாலையில், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    சில பகுதிகளில் கால்நடைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதால் அவற்றை அருகில் உள்ள மருத்துவமனைக்கு, சிகிச்சைக்கு அழைத்துச்செல்லப்படுவதும் அதிகரித்துள்ளது.இந்நிலையில் வெயில் தோன்றும் வரை கால்நடைகளை தோட்டம் மற்றும் திறந்த வெளியில் மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து கால்நடை டாக்டர்கள் கூறியதாவது:- குளிரில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பதன் வாயிலாக பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க முடியும்.குறிப்பாக கோழிகளுக்கு மழை, குளிர் காலங்களில் வெள்ளைக்கழிச்சல் நோய் தாக்கப்படும் என்பதால் 4 மாதத்துக்கு ஒருமுறை தடுப்பூசி போட வேண்டும்.ஆடுகளை திறந்த வெளி பட்டியில் அடைக்காமல் கூரை அல்லது நான்கு புறமும் பனிச்சாரல் வீசாத வகையில் தார்ப்பாய் போட்டு மூடி பாதுகாக்க வேண்டும்.மாடுகளுக்கு நிமோனியா காய்ச்சல் வர வாய்ப்புள்ளதால் வெயில் தோன்றிய பின்னரே மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மேய்ச்சல் நிலங்கள் குறைந்து விட்ட இன்றைய நிலையில் கால்நடைகளுக்கான தீவனச்செலவு என்பது மிக அதிகமாக உள்ளது. வருவாயில் பெரும்பகுதியை தீவனங்களுக்கே செலவழிக்கும் நிலையிலிருந்து விவசாயிகளை மீட்டெடுத்து அள்ள அள்ளக்குறையாத ஆரோக்கிய தீவனத்தை வழங்கக் கூடிய அட்சய பாத்திரமாக அசோலா உள்ளது. பெரிய முதலீடு இல்லாமல் தொடங்கக் கூடிய தீவன உற்பத்தித் தொழிற்சாலை என்று அசோலாவை சொல்லலாம்.

    நிழலான பகுதியில் 2 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலத்துக்கு செங்கல்லை வரிசையாக அடுக்கி தொட்டி போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும்.அதனுள் பழைய பிளாஸ்டிக் சாக்குகளை விரித்து, அதன் மீது தார்பாலின் ஷீட்டை விரிக்க வேண்டும். அதன் மீது 15 கிலோ அளவுக்கு வளமான மண்ணைப் பரப்பிவிடவேண்டும். இந்த தொட்டிக்குள் ஒரு கிலோ பசும் சாணியையும், 20 கிராம் ராக்பாஸ்பேட் (கல்மாவு) அல்லது சூப்பர் பாஸ்பேட்டை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்துவிட வேண்டும்.தொட்டியின் உள்பகுதியில் 10 செ.மீ உயரத்துக்கு தண்ணீர் இருந்தால் ஊற்றி அதில் 500 கிராம் அசோலாவை போடவேண்டும்.

    இதனையடுத்து 10 முதல் 15 நாட்களில் தினமும் அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வரை அசோலா அறுவடை செய்யலாம். மேலும் 5 நாட்களுக்கு ஒருமுறை 10 கிராம் சூப்பர் பாஸ்பேட், அரை கிலோ சாணத்தை கரைத்து அந்த தொட்டியில் ஊற்ற வேண்டும்.இதனால் தொடர்ச்சியாக சீரான அளவில் அசோலா அறுவடை செய்ய முடியும். இவ்வாறு அசோலா உற்பத்தி செய்வதற்கு ஒரு கிலோவுக்கு ரூ.1-க்கும் குறைவாகவே செலவு பிடிக்கும். அதேநேரத்தில் கறவை மாடுகளுக்கு அதிக பால் உற்பத்தி, ஆடுகளுக்கு அதிக இறைச்சி, கோழிகளுக்கு அதிக இறைச்சி மற்றும் சத்தான முட்டை உற்பத்திக்கும் அசோலா கைகொடுக்கிறது.

    இதுதவிர மீன், பன்றி, முயல் போன்றவற்றுக்கும் அசோலா சிறந்த உணவாக இருக்கும்.மனிதர்களும் வடை, போண்டா போன்ற உணவுப் பண்டங்களில் அசோலாவை கீரை போன்று பயன்படுத்தலாம்.அசோலா வளர்க்கும் இடங்களில் கொசுத் தொல்லை குறைவாக இருக்கும் என்பதால் கொட்டகைக்கு அருகிலேயே நிழற்பாங்கான இடத்தில் அசோலா தொட்டிகளை அமைக்கலாம். நெல் வயலில் தேங்கியிருக்கும் நீரில் அசோலா பயிரிடுவதால் சிறந்த நுண்ணுயிர் உரமாக செயல்படுகிறது.

    மேலும் தண்ணீர் ஆவியாவதைக் குறைப்பதுடன் களையைக் கட்டுப்படுத்தி அதிக மகசூலுக்கு உதவுகிறது.கறவை மாடுகளுக்கு தினசரி 1.5 கிலோ முதல் 2 கிலோ வரையும், கறிக்கோழிகளுக்கு 20-30 கிராமும், ஆடுகளுக்கு 300-500 கிராமும் அசோலா உணவாகக் கொடுக்கலாம். கால்நடைகளுக்கு அதிக பால், இறைச்சி, முட்டை உற்பத்தி மட்டுமல்லாமல் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியும் தரக்கூடிய அற்புத உணவாக அசோலா உள்ளது.


    • கால்நடை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • சிறந்த கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் யூனியன் செய்யாமங்கலம் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. பரமக்குடி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் சிவகுமார், மேலக்கொடுமலூர் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், கால்நடை உதவி மருத்துவர்கள் சுந்தரமூர்த்தி, வினிதா, கால்நடை ஆய்வாளர் முனீஸ்வரி, வீரகேசரி, கால்நடை உதவியாளர் அழகுமீனாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் 142 மாடுகள், 483 வெள்ளாடுகள், 892 செம்மறியாடுகள், 21 நாய்கள், 386 கோழிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறந்த கிடேரி கன்று வளர்த்த உரிமையாளர்களுக்கு பரிசுகளும், சிறந்த கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    ×