search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Koyambedu"

    கோயம்பேடு மார்க்கெட்டில் தொழிலாளியை வெட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    கோயம்பேடு பூ மார்கெட்டில் தங்கி வேலை செய்து வருபவர் முருகன் (48). நேற்று மாலை அவர் பூ மார்கெட்டில் உள்ள கடைக்கு வந்து கொண்டிருந்தார் அப்போது முருகனை வழிமறித்த வாலிபர் பணம் கேட்டு மிரட்டினர். திடீரெனஅவன் முருகனை கத்தியால் வெட்டி பையில் இருந்த பணத்தை பறித்து தப்பி சென்றுவிட்டான்.

    கையில் வெட்டு காயமடைந்த முருகன் இதுகுறித்து கோயம்பேடு போலீசில் புகார் அளித்தார் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார்

    இதில் வழிப்பறியில் ஈடுபட்டது நெற்குன்றம் சீமாத்தம்மன் நகர் 2வது செக்டாரைச் சேர்ந்த சரண் என்பது தெரிந்தது. மதுரவாயலில் பதுங்கி இருந்த சரணை நேற்று இரவு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். கைதான சரண் ஏற்கனவே கோயம்பேடு பஸ் நிலையம், கோயம்பேடு மார்க்கெட் , மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்தவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    கோயம்பேட்டில் ஓடும் பஸ்சில் 2 பெண்களிடம் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    போரூர்:

    சாலிகிராமம் மதியழகன் நகர் கே.கே. சாலையை சேர்ந்தவர் ஜெயகுமாரி (வயது40). இவர் தனது மகள் பிருந்தாவின் திருமணத்திற்காக நகை வாங்க ரூ. 40 ஆயிரம் பணம் மற்றும் வீட்டில் இருந்த 6 பவுன் நகைகளை எடுத்து கொண்டு அண்ணா நகரில் உள்ள நகைக்கடைக்கு மாநகர பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.

    கோயம்பேடு 100 அடி சாலை வந்தபோது நகை மற்றும் பணம் இருந்த பையை காணாமல் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி பஸ்சில் வந்த மர்ம நபர்கள் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜெயகுமாரி கோயம்பேடு பஸ் நிலைய போலீசில் புகார் அளித்தார்.

    மற்றொரு சம்பவம்...

    பெருங்குடி கல்லுக்குட்டை அன்னை தெரசா தெருவைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (48). இவர் நேற்று நெற்குன்றத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையம் வந்தார்.

    பின்னர் நெற்குன்றம் செல்லும் மினி பஸ்சில் ஏறி அமர்ந்தார். பஸ் கிளம்பி சிறிது தூரம் சென்றதும் தனது கைப்பை கிழிந்து கிடந்ததை நாகலட்சுமி கண்டார்.

    மர்ம நபர்கள் பையை கிழித்து அதிலிருந்த 5 பவுன் நகைகளை திருடி சென்றது தெரிந்தது. இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோயம்பேடு அருகே கத்தியை காட்டி மிரட்டி ஆட்டோ டிரைவரிடம் பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    போரூர்:

    மாதவரம் சாத்தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகர். ஆட்டோ டிரைவர். இவர் நேற்று இரவு கோயம்பேடு நூறடி சாலையில் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் ஏறிய 3 பேர் கும்பல் விருகம்பாக்கம் செல்லுமாறு கூறினர். ஆட்டோ சிறிது தூரம் சென்றதும் திடீரென அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி குணசேகர் பையில் இருந்த ரூ.1000த்தை பறித்து 3 பேரும் தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து கோயம்பேடு பஸ்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கோயம்பேடு மார்க்கெட்டில் பதுங்கி இருந்த திருமுல்லை வாயில் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய கூட்டாளிகள் 2 பேரை தேடி வருகின்றனர்.

    கோயம்பேடு அருகே கஞ்சாவுடன் மருத்துவ மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    கோயம்பேடு நூறடி சாலையில் இன்று காலை கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தனியார் வணிக வளாகம் முன்பு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டு இருந்த வாலிபரை பிடித்து அவரது பையை சோதனை செய்தனர்.

    அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நஜூமோன்மியா (வயது20) என்பதும் பாண்டிச்சேரியில் தங்கி மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.

    அவரை போலீசார் கைது செய்து 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். நஜூமோன்மியா யாரிடம் இருந்து கஞ்சா பெற்றார், கல்லூரியில் உடன் படிக்கும் மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வருகிறாரா என்கிற கோனத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 6 நாட்கள் இருக்கும்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் இப்போதே கரும்பு, மஞ்சள் விற்பனை தொடங்கி உள்ளன. #Pongal
    போரூர்:

    பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையில் கரும்பு, மஞ்சள் முக்கிய இடம் பிடிக்கும்.

    பண்டிகைக்கு இன்னும் 6 நாட்கள் இருக்கும்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் இப்போதே கரும்பு, மஞ்சள் விற்பனை தொடங்கி உள்ளன.

    கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வியாபாரிகள் சிறப்பு சந்தைகள் அமைத்து பொங்கல் பொருட்கள் விற்பனையை தொடங்கி உள்ளனர்.

    முதல்கட்டமாக நேற்று முதல் பூ மார்க்கெட் பின்புறம் உள்ள பகுதியில் கரும்பு மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது.

    பண்ருட்டி அருகில் உள்ள சத்திரம், சேத்தியாத்தோப்பு ஆகிய பகுதிகளில் இருந்து கரும்புகள் வர தொடங்கி உள்ளன. நேற்று 9 லாரிகளிலும் இன்று காலை வரை 7 லாரிகளிலும் கரும்புகள் வந்துள்ளது.

    20 கரும்பு கொண்ட ஒரு கட்டின் விலை தற்போது ரூ. 250 முதல் ரூ. 300 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கரும்பு வியாபாரி ரஜினிகாந்த் கூறியதாவது:-

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 11-ந் தேதிக்கு பிறகு மதுரை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 400 முதல் 500 லாரிகள் வரை கரும்பு லோடுகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். 2 நாட்களுக்கு பிறகு கரும்பு விலை சற்று உயரும்.

    மஞ்சள் கொத்து தற்போது குறைந்த அளவே சந்தைக்கு வந்துள்ளது. ஒரு மஞ்சள் கொத்து 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் விலை உயரும்’ என்றார். #Pongal

    மாதவரம் மற்றும் கோயம்பேடு மெட்ரோ ரெயில் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. #ChennaiMetroTrain


    உலகத்தரம் வாய்ந்த நகர்புறப் பொதுப்போக்கு வரத்து சேவையை சென்னை மாநகரில், சென்னை மெட்ரோ ரெயில் உருவாக்கி உள்ளது.

    2019-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் முதற் கட்டத்திட்டத்தின் அனைத்து வழித்தடங்களிலும் சேவைகள் முழுமையாக இயக்கப்படும்.

    சுமார் 3,770 கோடி ரூபாய் செலவில் வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரையிலான முதற்கட்ட விரிவாக்க திட்டச்சேவைகள். 2020-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் திட்டமிட்டபடி துவங்கப்படும்.

    மூன்று வழித்தடங்களை உள்ளடக்கிய இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தினை, 107,55 கிலோ மீட்டர் நீளத்திற்கு செயல்படுத்துவதற்கு மாநில அரசு ஏற்கனவே கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கி உள்ளது.

    ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையானது 20,196 கோடி ரூபாய் நிதிஉதவியினை, 52 கிலோ மீட்டர் நீளத்திற்கான மாதவரம்- சோழிங்கநல்லூர் மற்றும் மாதவரம்- சென்னை புறநகர் பேருந்து நிலையம் வரையிலான முன்னுரிமை வழித்தடப்பகுதிகளுக்கு தற்போது ஒப்புதல் வழங்கி உள்ளது.

    ஏறத்தாழ 4,770 கோடி ரூபாய்க்கான முதல் தவணைக்கான கடன் ஒப்பந்தம் 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ம் நாளன்று கையொப்பமிடப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    ஒருங்கிணைக்கப்பட்ட பன்முகப் போக்குவரத்து அமைப்பை செயல்பாட்டிற்கு கொண்டு வரும்முயற்சியாக, சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்துக் குழுமச் சட்டம் மற்றும் அதற்கான சட்ட விதிகள், 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் நாளன்று அறிவிக்கை செய்யப்படும்.

    பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கீழ்ப்பாக்கம் ஈகா தியேட்டர் சந்திப்பில் தொடங்கி கோயம்பேடு மேம்பாலம் வரையில் 10 கி.மீ. தூரத்தில் 437 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
    சென்னை:

    சென்னையில் அனைத்து பகுதிகளிலும் கேமிராக்கள் பொருத்தும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் தங்களது பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவி வருகிறார்கள்.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மையமாக வைத்து குற்றங்களை குறைக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்கள் பிடிபட்டு வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்னர், போக்குவரத்து போலீஸ்காரர் தர்மன் என்பவரை மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே தள்ளி விட்ட இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனும் கேமரா பார்வையில் சிக்கினார். இப்படி கண்காணிப்பு கேமராக்கள் குற்றம் செய்யும் அனைவரையுமே காட்டி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கீழ்ப்பாக்கம் ஈகா தியேட்டர் சந்திப்பில் தொடங்கி கோயம்பேடு மேம்பாலம் வரையில் 10 கி.மீ. தூரத்தில் 437 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


    இதனை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று தொடங்கி வைத்தார். இதில் 88 கேமராக்கள், போக்குவரத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    அண்ணா சாலை, ஆர்.கே. மடம் சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் விரைவில் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

    சென்னையில் 31 ஆயிரத்து 802 கடைகள் மற்றும் 15 ஆயிரத்து 345 இடங்களில் கேமராக்கள் பொருத்தும் வசதி இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

    கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது பற்றி கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியதாவது:-

    கேமராக்கள் மூலம் குற்றங்கள் குறைந்துள்ளன. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். சென்னையில் 60 சதவீதம் அளவுக்கு கேமராக்கள் பொருத்தும் பணி முடிந்துள்ளது. போலீஸ் அதிகாரிகள் தவறு செய்யக் கூடாது. அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கோயம்பேடு மார்க்கெட்டில் மலைபோல் குவிந்த குப்பை கழிவுநீர் துர்நாற்றத்தால் வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை மார்க்கெட்டில் காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனை தினமும் மும்முரமாக நடந்து வருகிறது. சென்னை, புறநகர் பகுதிகளை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகள் தினமும் மார்க் கெட்டுக்கு வந்து காய்கறி, பழங்கள், பூக்களை வாங்கி சென்று வருகிறார்கள்.

    இங்கு வருகை தரும் வியாபாரிகளின் வாகனங்களை நிறுத்துவதற்காக மார்க்கெட் வளாகத்தில் உள்ள காலி இடத்தில் ‘பார்க்கிங்’ வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த ‘பார்க்கிங்’ இடத்தில் சரிவர பராமரிப்பு பணி இல்லாததால் மழைநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் ஆங்காங்கே மலை போல் குப்பைகள் குவிந்துள்ளன.

    இதனால் அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. மேலும் பூ மார்க் கெட்டில் உள்ள கழிவுகள் அங்கு கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது.

    பூ மார்க்கெட்டில் மொத்தம் 470 சிறிய, பெரிய பூக்கடைகள் உள்ளன. இங்குள்ள கழிவு பூக்கள் திறந்த வெளி ‘பார்க்கிங்’ இடத்தில் கொட்டப்பட்டு வருவதால் அங்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள் துர்நாற்றம் மற்றும் கொசுத் தொல்லையால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் குப்பைகள், மழைநீர், கழிவுநீர் தேக்கம் ஆகியவற்றை உடனடியாக அகற்ற மார்க்கெட் மேலாண்மை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அங்கு வடிகால் வசதி அமைக்க வேண்டும் என்று வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோயம்பேடு பகுதியில் கொள்ளை-வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    கோயம்பேடு விருகம்பாக்கம் சாலையில் நேற்று முன்தினம் இரவு குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் தீபக்குமார் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அந்த வாலிபர் கொருக்குபேட்டை மீனாம்பிகை நகர் 6-வது தெருவைச் சேர்ந்த ராமசந்திரன் (25) பண்டிகையை முன்னிட்டு வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருக்கும் வீடுகளை பகல் நேரத்தில் நோட்டமிட்டு பின்னர் இரவு நேரத்தில் வீடு புகுந்து கைவரிசை காட்டி வந்தார் என்பது தெரிய வந்தது.

    அவரிடம் இருந்து 11 பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து ராமசந்திரனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    இதுபோல் கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலைய அலுவலகம் முன்பு நேற்று கோயம்பேடு பேருந்து நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த பழைய வண்ணாரப் பேட்டையை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த வாலிபர் இரவு நேரங்களில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருக்கும் சொகுசு பைக்கை திருடுவதும், செயின் பறிப்பில் ஈடுபடுவதும் பின்னர் அந்த பைக்கை விற்பனை செய்து விடுவதும் தெரியவந்தது. கோயம்பேடு பகுதியில் தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி செயின் பறிப்பில் ஈடுபட வந்த வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது சென்னையில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் செயின் பறிப்பு வழக்குகள் உள்ளது.

    தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். #Diwali
    சென்னை:

    தீபாவளியையொட்டி தமிழக அரசு 5-ந் தேதியை (திங்கட்கிழமை) அரசு விடுமுறையாக அறிவித்ததால், தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இதனால் வெளியூர் மக்கள் பெரும்பாலானோர் 2-ந் தேதி (அதாவது, நேற்று) சொந்த ஊர் செல்ல திட்டமிட்டனர்.

    இதையடுத்து வெளியூர் செல்லும் பஸ்களில் கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு, 2-ந் தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்றும், 5 தற்காலிக பஸ்நிலையங்கள் செயல்பட தொடங்கும் என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்தார்.

    அதன்படி சென்னை கோயம்பேடு எம்.ஜி.ஆர். பஸ்நிலையம், தாம்பரம் சானடோரியம், தாம்பரம் ரெயில் நிலையம், மாதவரம் புதிய பஸ்நிலையம், பூந்தமல்லி பஸ்நிலையம், கே.கே.நகர் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் இருந்தது. நேற்று மட்டும் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 750 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    கூடுதல் போலீஸ் கமிஷனர் தினகரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதேபோல், தாம்பரம், ஊரப்பாக்கத்தில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சிறப்பு பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டதாலும், மற்ற வாகனங்கள் அதிகளவில் வந்ததாலும் கோயம்பேடு பஸ்நிலையம், தாம்பரம், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம் போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.



    தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவதற்காக நேற்று ரெயில்களிலும் பலர் பயணம் செய்தனர். சென்னை எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களான திருச்செந்தூர், கன்னியா குமரி, தூத்துக்குடி, அனந்தபுரி, ராமேஸ்வரம், நெல்லை, பொதிகை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்பட பல ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    நேற்று பிற்பகலிலும், இரவிலும் சென்னை எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில் ஒன்று இயக்கப்பட்டது. அதேபோல், சென்னை சென்டிரலில் இருந்து சேலம், கோவை, பெங்களூரு மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களிலும் நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது.

    ரெயில்கள் நடைமேடைக்கு வந்ததும் முன்பதிவு செய்திருந்த பெட்டிகளை தவிர, முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிகள் முண்டியடித்து கொண்டு ஏறினார்கள். ரெயில்வே போலீசார், முன்பதிவில்லாத ரெயில் பெட்டிகளில் பயணிகளை வரிசைப்படுத்தி ஏற்றினார்கள்.

    சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் திருட்டு சம்பவங்கள் எதுவும் நடைபெற்றுவிடாமல் இருப்பதற்காக ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருக்கின்றனர். #Diwali
    எனக்கு தீபாவளி பண்டிகை கோயம்பேட்டில் தான் என்றும், சென்னையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பஸ்களின் சேவையை கண்காணிக்க உள்ளதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். #Diwali #Vijayabhaskar
    கரூர்:

    போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு மாநில அரசுக்கு தரவேண்டிய நிதியை கேட்டு பெறுவதில் எந்த தவறும் இல்லை. இதற்கு தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய நினைத்தால் எந்த மாநிலத்திலும் ஆட்சி நடக்காது.

    தீபாவளி கால கட்டங்களில் சென்னையில் இருந்து தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அது போல் இந்த ஆண்டும் பஸ்கள் இயக்கப்படுகிறது.



    குறிப்பாக தொழிலாளர்கள் அதிகம் நிறைந்துள்ள கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் எந்தவித சிரமமும் இன்றி செல்ல கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    தீபாவளியன்று குழந்தைகள் பட்டாசு வெடிக்க ஆர்வமாக இருப்பார்கள். பெற்றோர்கள் அவர்களுடன் இருந்து பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். எனக்கு தீபாவளி பண்டிகை கோயம்பேட்டில் தான்.

    நான் நாளை முதல் சென்னையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பஸ்களின் சேவையை கண்காணிக்க உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Diwali #Vijayabhaskar
    சென்னை கோயம்பேடு அருகே வீட்டில் போதை பாக்கு தயாரித்து விற்பனை செய்து வந்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தடை செய்யப்பட்ட ‘மாவா’ எனப்படும் போதைப்பாக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதையடுத்து அங்குள்ள பூ மார்க்கெட் அருகே சந்தேகப்படும் நிலையில் 2 சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து கோயம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் விசாரித்தார்.

    அப்போது அவரிடம் போதை பாக்கு பவுடர் (மாவா) பாக்கெட்டுகள் இருந்தன. எனவே அவரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவனது பெயர் ஜித்தேந்திர குமார் படேல் (24) என தெரிய வந்தது. இவர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

    ஜித்தேந்திரகுமார் நெற்குன்றம் சுப்பிரமணியசாமி கோவில் தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். அங்கு யாருக்கும் தெரியாமல் மாவா (போதைப்பாக்கு) தயாரித்து கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்து வந்ததாக கூறினார்.

    உடனே வீட்டுக்கு சென்ற போலீசார் அங்கு தயாரித்து வைத்திருந்த 5 கிலோ எடையுள்ள மாவாவை பறிமுதல் செய்தனர். மேலும் மாவா தயாரிக்க பயன்படுத்திய 2 கிரைண்டர், 2 மிக்சி, ஒரு 2 சக்கரவாகனம், ரொக்கப்பணம் 600 ரூபாய் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அப்போது இவரது கூட்டாளி உதயம் படேல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
    ×