search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kerala flood"

    கேரளாவில் தொடர்ந்து பெய்த கனமழையால் வீடுகளை இழந்து முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகளை நடிகைகள் மகிழ்வித்துள்ளனர். #KeralaRain #KeralaFloods
    கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பில் இருந்து மீள முடியாமல் அங்குள்ள மக்கள் தவித்து வருகிறார்கள். வெள்ள பாதிப்பின் போது 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முகாமில் தங்கியிருந்தனர். மழை குறைந்ததை தொடர்ந்து முகாமில் தங்கியிருந்தவர்கள் வீடு திரும்பத் தொடங்கினர். ஆனால் வீடுகள் முழுமையாக இழந்தவர்கள் எங்கு செல்வது என தெரியாமல் தொடர்ந்து முகாமிலேயே தங்கியுள்ளனர்.

    மாநிலம் உள்ள முகாம்களில் தற்போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கியிருக்கிறார்கள். இவர்களில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர். 15 நாட்களுக்கும் மேலாக அவர்கள் முகாமிலேயே தங்கி பரிதவித்து வருகிறார்கள்.

    அவர்களை அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், தன்னார்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்கள். நிவாரண உதவிகளும் அவர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

    முகாம்களில் சோர்வுடன் இருக்கும் அவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் மலையாள நடிகைகள் ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல், பார்வதி ஆகியோர் களமிறங்கினர். பத்தனம்திட்டாவில் உள்ள நிவாரண முகாமுக்கு சென்ற அவர்கள் அங்கிருந்த பெண்கள், குழந்தைகள் மத்தியில் அமர்ந்து பாடல்கள் பாடி அவர்களை மகிழ்வித்தனர்.

    மேலும் அவர்களுடன் செல்பியும் எடுத்து நிவாரண உதவிகளையும் வழங்கினர். தங்களுடன் நடிகைகள் அமர்ந்து பாடுவதை கேட்ட குழந்தைகள், முகாம்களில் தங்கியிருக்கிறோம் என்பதையும் மறந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

    இதேபோல பிரபல பின்னணி பாடகி சித்ரா கோழிக்கோடு நிஷாகந்தி என்ற இடத்தில் உள்ள முகாமுக்கு சென்றார். அங்கிருந்த பெண்கள் மத்தியில் அமர்ந்து அவர் பாடல்களை பாடி மகிழ்வித்தார். பின்னர் நிவாரண பொருட்களையும் அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கேரள மந்திரி கடகம்பிள்ளை சுரேந்திரன், கலெக்டர் வாசுகி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
    முன்ஜாமின் கேட்டு மனு செய்த மூன்று பேரின் டெபாசிட் தொகையை கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு பணம் செலுத்த வேண்டும் என ஜார்கண்ட ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #KeralaCMReliefFund #JharkhandHC
    ராஞ்சி:

    ஜார்கண்ட் மாநிலத்தில் மோசடி வழக்குகளில் தொடர்புடைய மூன்று நபர்கள் தங்களுக்கு முன்ஜாமின் கோரி ஜார்கண்ட ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். உரிய கட்டணத்துடன் அந்த மனுக்களை ஏற்று பரிசீலித்த நீதிபதி ஏ.பி.சிங் வித்தியாசமான முறையில் நேற்று உத்தரவிட்டார்.

    முன்ஜாமின் பெறுவதற்கான முன்வைப்பு (டெபாசிட்) தொகையான 7 ஆயிரம் ரூபாயை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள முதல் மந்திரியின் நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும். பணம் செலுத்தியதற்கான ரசீதை காட்டி முன்ஜாமின் உத்தரவுக்கான கோர்ட்டின் நகலை பெற்று செல்லலாம் என தனது உத்தரவில் நீதிபதி ஏ.பி.சிங் குறிப்பிட்டுள்ளார்.

    வழக்கமாக முன்ஜாமினுக்கு செலுத்தப்படும் தொகையை ஜாமின் காலம் முடிந்த பின்னர் செலுத்திய நபர்கள் பெற்று செல்லலாம். ஆனால்,  முதல் மந்திரியின் நிவாரண நிதிக்கு செலுத்திய பின்னர் அந்த தொகை மாநில அரசுக்கு வந்த நன்கொடை கணக்கில் சேர்ந்துவிடும். எனவே, பணத்தை செலுத்திய நபர் மீண்டும் அந்த தொகையை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. #KeralaCMReliefFund  #JharkhandHC
    கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பார்வையிட்டார். #KeralaFloods #Congress #RahulGandhi
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த 8-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 11 நாட்கள் பெய்த பேய் மழை காரணமாக மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது.

    கேரள மழை வெள்ள சேதங்களை பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் மத்திய அரசு சார்பில் ரூ.600 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்கப்படும் எனவும் அறிவித்தனர்.

    இந்நிலையில் கேரள மழை வெள்ள சேதங்களை பார்வையிட அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கேரளா வந்தார்.

    இதற்காக டெல்லியில் இருந்து இன்று காலை விமானம் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டார். காலை 8.30 மணிக்கு அவர் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்திறங்கினார்.

    அவரை மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் அவர் மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் செங்கனூர் பகுதிக்கு சென்றார்.

    கேரளாவில் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செங்கனூரும் ஒன்று. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். அங்குள்ள ஒரு முகாமுக்கு நேரில் சென்ற ராகுல் காந்தி, அங்கு தங்கியிருந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.


    மேலும் மழை வெள்ள பாதிப்பு குறித்து அவர்கள் கூறிய தகவல்களையும் கவனமுடன் கேட்டுக்கொண்டார்.

    செங்கனூர் பயணம் முடிந்த பின்பு அவர் ஆலப்புழா செல்கிறார். அங்கும் மழை வெள்ள சேதங்களை பார்வையிட்ட பின்பு நிவாரண முகாம்களுக்கும் செல்கிறார். தொடர்ந்து இன்று பிற்பகல் ஆலப்புழா பகுதியில் கேரள மீனவர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்கிறார்.

    கேரளாவின் உட்புற கிராமங்கள், அங்கு ஏற்பட்ட மழை சேதங்களையும் ராகுல் காந்தி பார்வையிட உள்ளார். இதற்காக அவர் நாளையும் கேரளாவில் தங்குகிறார்.

    நாளை காலையில் அவர் கோழிக்கோடு, வயநாடு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்கிறார். இங்கும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறியபின்பு அவர் நாளை மாலை டெல்லி புறப்படுகிறார். #KeralaFloods #Congress #RahulGandhi
    கேரள வெள்ள நிவாரணத்துக்கு நிதி திரட்ட டெல்லியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் பாடிய சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. #KeralaFloodRelief
    புதுடெல்லி:

    கேரளா மழை வெள்ளப் பாதிப்பில் இருந்து மீண்டு வர பல்வேறு மாநிலங்களும் நிவாரண நிதி வழங்கி வருகிறது.

    இது தவிர தன்னார்வலர்கள், தனியார் நிறுவனங்களும் நாடு முழுவதும் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டு பத்திரிகையாளர்களும், சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் நேற்று கேரள நிவாரண பணிகளுக்கு நிதி திரட்ட இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர்.

    இதில் பிரபல பாலிவுட் பாடகர் மொகித் சவுகான் பங்கேற்று பாடினார். இந்நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதிகள் குரியன் ஜோசப், கே.எம். ஜோசப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி தொடங்கியதும் சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகளில் ஒருவரான குரியன் ஜோசப் மேடைக்கு சென்று கேரள வெள்ள சேதம் பற்றிய பாடலை உருக்கமாக பாடினார்.

    கேரளம் விரைவில் மீண்டெழும், இதயத்தின் அடி ஆழத்தில் இருந்து நம்பிக்கையுடன் கூறுகிறேன். ஒரு நாள் நாங்கள் மீண்டெழுவோம் என்ற கருத்துள்ள பாடலை சத்தமாக பாடினார்.

    நீதிபதி குரியன் ஜோசப், இந்த பாடலை பாடியபோது அரங்கத்தில் இருந்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்பட அனைவரும் தன்னுடன் சேர்ந்து பாடும்பாடி கேட்டுக்கொண்டார்.

    அதன்படி, அனைவரும் கேரளம் மீண்டெழும், அந்த நாள் விரைவில் வரும் என்று சேர்ந்து பாடினர்.

    கே.எம். ஜோசப் பாடியபோது எடுத்த படம்

    சுப்ரீம் கோர்ட்டுக்கு சமீபத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட கே.எம். ஜோசப் அடுத்த பாடலை பாட வந்தார். அவர், கேரளாவில் வெற்றிகரமாக ஓடிய மலையாள படமான அமரம் படத்தில் இருந்து ஒரு பாடலை பாடினார்.

    அது மீனவர்களின் துணிவையும், அவர்களின் சேவையையும் பாராட்டும் வகையில் இருந்தது. பாடலை பாடிய பின்பு நீதிபதி கே.எம். ஜோசப் கூறியதாவது:-

    கேரள மக்களை மழை வெள்ளம் சூழ்ந்தபோது யாரும் சொல்லாமலேயே மீனவர்கள் உதவிக்கு ஓடி வந்தனர். அவர்களின் படகுகளையும், வள்ளங்களையும், கட்டுமரங்களையும் எடுத்து வந்து எண்ணற்ற மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் சேர்த்தனர். அவர்களின் சேவை மனப்பான்மைக்கு இதயம் நிறைந்த பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    இந்த இசை நிகழ்ச்சி மூலம் கேரள வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 லட்சத்திற்கும் மேல் நிதி திரண்டது. இதுபற்றி நீதிபதி குரியன் ஜோசப் கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சார்பில் ஏற்கனவே இரண்டு முறை வெள்ள நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு கேரளாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. 3-வது முறையாக சேகரிக்கப்பட்ட பொருட்கள் அடுத்து அனுப்பப்பட உள்ளது என்றார்.

    இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற கே.எம். ஜோசப் கூறும்போது, சில நாட்களுக்கு முன்பு குரியன் ஜோசப் என்னை தொடர்பு கொண்டு நிவாரண நிதி திரட்ட இசை நிகழ்ச்சி நடத்த இருப்பதையும், இதில் நான் பங்கேற்று பாட வேண்டும் என்றும் கூறினார். நான் எப்படி பாடுவேன். வாழ்க்கையில் இதுவரை பாடியதே இல்லையே என்று கூறினேன். அதற்கு அவர், உன் பாடல் தென் இந்தியாவிற்கு சென்றால் நாம் முன் ஜாமீன் எடுத்துக் கொள்ளலாம் என்று வேடிக்கையாக கூறினார்.

    ஆனால் இசை நிகழ்ச்சியில் கே.எம். ஜோசப் பாடியதும் அரங்கமே அவருக்கு பாராட்டு தெரிவித்தது. #KeralaFloodRelief

    கேரள மாநிலத்துக்கு 2-ம் கட்டமாக ரூ.27 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
    வேலூர்:

    கேரள மாநிலத்தில் வரலாறு காணாத கனமழை பெய்தது. அதனால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர். பெரும்பாலானோர் தங்கள் வீடுகள், உடைமைகளை இழந்தனர். வீடுகளை இழந்த பெரும்பாலானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மழை, வெள்ளத்தால் கேரள மாநிலத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தற்போது அங்கு சிறிது, சிறிதாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.

    கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முதற்கட்டமாக கடந்த 20-ந் தேதி ரூ.1 கோடியே 69 லட்சம் மதிப்பில் அரிசி, பிஸ்கெட் பாக்கெட்டுகள், சேலைகள், வேட்டிகள், போர்வைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

    அதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் பொதுமக்கள் கொடுத்த நிவாரண பொருட்களும் சேகரிக்கப்பட்டு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் வைக்கப்பட்டிருந்தன. பருப்பு, மளிகை சாமான்கள், சமையல் பாத்திரங்கள், போர்வைகள் உள்ளிட்டவை மொத்தம் ரூ.27 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டது.

    அவை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து லாரி ஒன்றில் நேற்று கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு அனுப்பப்பட்டது. வேலூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை தாசில்தார் சச்சிதானந்தம் லாரியை அனுப்பி வைத்தார். இதில் வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதல் நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்தார். #KeralaFlood #Modi
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பணிகள் குறித்து, டெல்லியில் நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்து மாநில கவர்னர் சதாசிவம் எடுத்துரைத்தார். அப்போது அவரிடம் பேசிய பிரதமர் மோடி, கேரளாவுக்கு தற்போது மத்திய அரசு வழங்கியுள்ள ரூ.600 கோடி, வெறும் முன்பணம் மட்டும்தான் எனவும், மாநிலத்துக்கு மேலும் கூடுதல் நிதியுதவி விரைவில் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார். தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு இந்த நிதி வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி கூறினார்.



    இதைப்போல உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கையும் சந்தித்த கவர்னர் சதாசிவம், மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு நிலவரம் மற்றும் வெள்ள நிவாரண நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். அப்போது, கேரளாவில் சேத விவரங்கள் கண்டறியும் பணிகள் முடிவடைந்ததும் கூடுதல் நிதி வழங்கப்படும் என உள்துறை மந்திரியும் உறுதியளித்தார்.

    இந்த தகவல்கள் அனைத்தும் கேரள கவர்னர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. #KeralaFlood #Modi
    கேரள வெள்ள பாதிப்புக்கு ம.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். #KeralaFlood #MDMKVaiko
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கேரள மாநிலத்தில் நூறாண்டு காலத்தில் ஏற்படாத இயற்கை பேரிடராக நேர்ந்த பிரளயம் போன்ற வெள்ளப் பெருக்கால் அம்மாநிலமே தண்ணீரில் தத்தளிக்கிறது. கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று, அவர்கள் வேண்டுகிற நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    கேரள மாநில அரசுக்கு ம.தி.மு.க. ரூ.10 லட்சம் ரூபாய் நிதி வழங்குகிறது. மேலும், தேவையான நிவாரணப் பொருட்களைச் சேகரித்து அனுப்புகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #KeralaFlood #MDMKVaiko
    தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு அரிசி மற்றும் மருந்து பொருட்களை நடிகர் பார்த்திபன் அனுப்பி வைத்துள்ளார். #Kerala #KeralaFlood
    கேரளாவில் பெய்த தொடர் மழை, வெள்ளம் காரணமாக மாநிலம் முழுவதிலும் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து உதவிகள் கிடைத்து வருகின்றன. தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களும் தங்கள் உதவிகளை வழங்கி வருகின்றனர்.

    நடிகர் பார்த்திபன் தனது ஆர்.பார்த்திபன் மனிதநேய மன்றம் சார்பாக 1250 கிலோ அரிசி மற்றும் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள மருந்து, மாத்திரைகளை நிவாரணமாக அனுப்பி வைத்துள்ளார்.

    ‘கேரளாவில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வரும் அமலாபால் என்னை தொடர்பு கொண்டு நிவாரண பொருட்களை சேகரித்து தருமாறு வேண்டினார். நான் என்னுடைய மன்றம் சார்பிலேயே வழங்கி இருக்கிறேன். என் படமான கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் லாபத்தில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருவது தான் இந்த மன்றம்.



    நிவாரண பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் வாகனத்தில் கொண்டு செல்லும் போது யார் அனுப்புவது என்று இல்லாமல் இருந்தால் தேவையில்லாத பாதுகாப்பு பிரச்சினைகள் வரும் என்று டிரைவர் பயந்தார். எனவே தான் இது முழுக்க முழுக்க என் பொறுப்பில் அளிக்கப்படும் நிவாரண பொருட்கள் என்று அதில் பெயர் எழுத வேண்டியதாகி விட்டது. என் கையெழுத்தும் அவசியம் என்று கேட்டார்கள். எனவே இது வெளியில் தெரிந்துவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முகாமில் இருந்து வெள்ள நிவாரண பொருட்களை திருடிய 2 வி.ஏ.ஓ.க்களை போலீசார் கைது செய்தனர். #KeralaFloodsRelief
    கொழிஞ்சாம்பாறை:

    கேரளாவில் கடந்த வாரம் பெய்த வரலாறு காணாத மழை மாநிலத்தையே சின்னாபின்னமாக்கியது. வெள்ளத்தில் சிக்கி 370-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். லட்சக்கணக்கானோர் வீடு, உடமைகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்தனர்.

    ரூ.20 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டது. கேரளாவுக்கு இந்தியா மட்டுமல்லாம் வெளிநாடுகளில் இருந்தும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள். வெள்ள பாதிப்பு இன்னும் குறையாமல் இருப்பதால் பலர் இன்னும் நிவாரண முகாமிலேயே தங்கியுள்ளனர்.

    இந்நிலையில் கேரள மாநிலம் வயநாடு பனமரம் பகுதியில் சிறப்பு கிராம நிர்வாக அதிகாரியாக உள்ளவர் தினேசன் (வயது 42), உதவி அதிகாரி ‌ஷனிஷ் (41). இவர்கள் நேற்று ஒரு லாரியை எடுத்துக்கொண்டு முகாமுக்கு சென்றனர். முகாமில் கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு செல்லப்பட்ட அரிசி, பருப்பு, எண்ணை, மிளகாய் உள்ளிட்டவைகள் குவிக்கப்பட்டிருந்தன.

    இது தவிர ஓணம் திருவிழாவுக்காக கிப்ட் பொருட்களும் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. லாரியில் சென்ற வி.ஏ.ஓ.க்கள் அங்கிருந்த உணவுப்பொருட்களை மூட்டை மூட்டையாக எடுத்து லாரியில் அவசர அவசரமாக ஏற்றினர். சந்தேகம் அடைந்த அங்கு தங்கிருந்த நபர் இதுகுறித்து கேட்டபோது வேறு முகாமிற்கு கொண்டு செல்வதாக கூறினர்.

    அவர்களின் செயலில் மேலும் சந்தேகம் அந்த நபர் இது குறித்து மானந்தவாடி தாசில்தாருக்கு தகவல் கொடுத்தார். தாசில்தார் மானந்தவாடி போலீசாருடன் சம்பவ இடத்திற்கு வந்தார்.

    அங்கு வி.ஏ.ஓ.க்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 2 பேரும் நிவாரண முகாமில் இருந்து லாரி மூலம் உணவுப்பொருட்கள் திருடியது தெரியவந்தது. உணவுப்பொருட்களை மீட்ட போலீசார் வி.ஏ.ஓ.க்கள் தினேசன், ‌ஷனிஷ் ஆகியோரை கைது செய்தனர்.

    இது குறித்து மானந்தவாடி தாசில்தார் கூறும்போது, முகாமில் உணவுப்பொருட்கள் திருடிய 2 வி.ஏ.ஓ.க்களையும் சஸ்பெண்டு செய்ய உத்தரவிட்டுள்ளேன். நிவாரண முகாமில் அரசு அதிகாரிகள் திருடினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. இந்த மனிதாபிமானமற்ற செயலை செய்த அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    கைது செய்யப்பட்ட வி.ஏ.ஓ.க்கள் இன்று மானந்தவாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். #KeralaFloodsRelief
    கேரளாவில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திப்பதாக கூறியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தேவைப்பட்டால் உதவி செய்ய தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார். #ImranKhan #Pakistan #KeralaFlood
    இஸ்லாமாபாத்:

    கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழையால் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 20 ஆயிரம் கோடி மதிப்பில் சேதம் அடைந்துள்ளது. 

    இந்நிலையில், இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மக்களுக்கு பாகிஸ்தான் மக்கள் சார்பாக பிராத்தனை தெரிவிக்கொள்கிறேன். மேலும் எந்த வகையான உதவியையும் பாகிஸ்தான் செய்ய தயாராக உள்ளது என அவர் கூறியுள்ளார்.
    பழனியில் இருந்து கேரள மாநில பகுதிகளான பாலக்காடு, குருவாயூர், திருவனந்தபுரம், திருச்சூர் ஆகிய பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    பழனி:

    கேரள மாநில பகுதிகளில் பெய்த மழையால் சாலைகள், பாலங்களும் சேதம் அடைந்தன. இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பஸ்களில் பல கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டன.

    இதற்கிடையே சீரமைப்பு பணிகளையும் கேரள அரசு துரிதமாக மேற்கொண்டது. இதையடுத்து கேரள மாநிலம் மூணாறு தவிர மற்ற பகுதிகளான பாலக்காடு, குருவாயூர், திருவனந்தபுரம், திருச்சூர், எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு முதல் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக பழனி கிளை அதிகாரிகளிடம் கேட்ட போது, பழனியில் இருந்து கேரள மாநில பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் மூணாறு தவிர மற்ற அனைத்து பகுதிகளுக்கும் கேரளா, தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படுகின்றன. பகல் வேளையில் இயக்கப்படும் பஸ்கள் அட்டவணைப்படி வரத்தொடங்கியுள்ளன.

    இரவு நேர பஸ்கள் மட்டும் இன்னும் முறையாக இயக்கப்படவில்லை. விரைவில் அந்த பஸ்களும் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கேரளாவுக்கு குறைந்த அளவிலேயே பயணிகள் செல்கின்றன. ஓரிரு நாட்களில் சகஜமான நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் இணையதளம் மூலமாகவோ அல்லது போக்குவரத்து கழக அலுவலகத்துக்கு வந்தோ பஸ்களில் தங்களுக்கான இருக்கைகளை முன்பதிவு செய்யலாம் என்றனர்.
    கேரளாவில் ஓணத்தை கொண்டாட வேண்டிய மக்கள் தொடர்ந்து முகாம்களிலேயே முடங்கி உள்ளதால் அவர்களால் ஓணத்தை கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. #KeralaFloods #Onam
    திருவனந்தபுரம்:

    கேரளா இதுவரை சந்தித்திராத பேரழிவை தற்போது எதிர்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதுமே மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கேளாவில் மழை நின்று வெள்ளம் வடியத் தொடங்கி உள்ளது.

    ஆனாலும் பாதிப்பு அதிகம் என்பதால் பொது மக்களால் உடனடியாக இயல்பு நிலைக்கு திரும்ப முடியாத சூழ்நிலையே உள்ளது. பல ஆயிரம் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன, ஏராளமான வீடுகள் பொது மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்து உள்ளது. தப்பி பிழைத்த வீடுகளும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதை சீரமைப்பது என்பது உடனடியாக நடைபெற முடியாத செயல் என்பதால் மக்கள் முகாம்களில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தபடி உள்ளனர்.

    அதிக பாதிப்பை சந்தித்த எர்ணாகுளம், ஆலப்புழா மாவட்டங்களை சேர்ந்த 6 லட்சம் பொதுமக்கள் அங்கு உள்ள நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். திருவனந்தபுரம், கோட்டயம், பத்தனம்திட்டா, கொச்சி, கொல்லம், வயநாடு உள்பட பல மாவட்ட முகாம்களில் 6½ லட்சம் மக்கள் தஞ்சமடைந்து உள்ளனர்.

    கேரள மக்களின் முக்கிய கொண்டாட்டமான ஓணம் பண்டிகை 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு மழையால் ஏற்பட்ட பேரழிவு காரணமாக மாநில அரசு சார்பில் நடைபெறும் ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதற்கு செலவிடப்படும் பணம் மக்களின் நிவாரண பணிக்கு பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் வருகிற 25-ந்தேதி (சனிக்கிழமை) ஓணம் பண்டிகையாகும். ஓணத்திற்கு முன்னும், பின்னும் 10 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். நாளை முதல் அந்த நிகழ்ச்சிகள் தொடங்க உள்ளன. ஆனால் ஓணத்தை கொண்டாட வேண்டிய மக்கள் தொடர்ந்து முகாம்களிலேயே முடங்கி உள்ளதால் அவர்களால் ஓணத்தை கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

    கேரளாவில் உள்ள பிரசித்திபெற்ற ஆன்மீக தலமான சபரிமலையும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள பம்பை நதியில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறும்போது ரூ.100 கோடி வரை சபரிமலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    ஓணம் பண்டிகையையொட்டி இன்று மாலை சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. ஆனால் பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல முடியாத சூழ்நிலையே தொடர்ந்து நிலவி வருகிறது. #KeralaFloods #Onam

    ×