search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகாம்களில் மக்கள் தஞ்சமடைந்துள்ளதால் களை இழந்த ஓணம் கொண்டாட்டம்
    X

    முகாம்களில் மக்கள் தஞ்சமடைந்துள்ளதால் களை இழந்த ஓணம் கொண்டாட்டம்

    கேரளாவில் ஓணத்தை கொண்டாட வேண்டிய மக்கள் தொடர்ந்து முகாம்களிலேயே முடங்கி உள்ளதால் அவர்களால் ஓணத்தை கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. #KeralaFloods #Onam
    திருவனந்தபுரம்:

    கேரளா இதுவரை சந்தித்திராத பேரழிவை தற்போது எதிர்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதுமே மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கேளாவில் மழை நின்று வெள்ளம் வடியத் தொடங்கி உள்ளது.

    ஆனாலும் பாதிப்பு அதிகம் என்பதால் பொது மக்களால் உடனடியாக இயல்பு நிலைக்கு திரும்ப முடியாத சூழ்நிலையே உள்ளது. பல ஆயிரம் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன, ஏராளமான வீடுகள் பொது மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்து உள்ளது. தப்பி பிழைத்த வீடுகளும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதை சீரமைப்பது என்பது உடனடியாக நடைபெற முடியாத செயல் என்பதால் மக்கள் முகாம்களில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தபடி உள்ளனர்.

    அதிக பாதிப்பை சந்தித்த எர்ணாகுளம், ஆலப்புழா மாவட்டங்களை சேர்ந்த 6 லட்சம் பொதுமக்கள் அங்கு உள்ள நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். திருவனந்தபுரம், கோட்டயம், பத்தனம்திட்டா, கொச்சி, கொல்லம், வயநாடு உள்பட பல மாவட்ட முகாம்களில் 6½ லட்சம் மக்கள் தஞ்சமடைந்து உள்ளனர்.

    கேரள மக்களின் முக்கிய கொண்டாட்டமான ஓணம் பண்டிகை 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு மழையால் ஏற்பட்ட பேரழிவு காரணமாக மாநில அரசு சார்பில் நடைபெறும் ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதற்கு செலவிடப்படும் பணம் மக்களின் நிவாரண பணிக்கு பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் வருகிற 25-ந்தேதி (சனிக்கிழமை) ஓணம் பண்டிகையாகும். ஓணத்திற்கு முன்னும், பின்னும் 10 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். நாளை முதல் அந்த நிகழ்ச்சிகள் தொடங்க உள்ளன. ஆனால் ஓணத்தை கொண்டாட வேண்டிய மக்கள் தொடர்ந்து முகாம்களிலேயே முடங்கி உள்ளதால் அவர்களால் ஓணத்தை கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

    கேரளாவில் உள்ள பிரசித்திபெற்ற ஆன்மீக தலமான சபரிமலையும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள பம்பை நதியில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறும்போது ரூ.100 கோடி வரை சபரிமலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    ஓணம் பண்டிகையையொட்டி இன்று மாலை சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. ஆனால் பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல முடியாத சூழ்நிலையே தொடர்ந்து நிலவி வருகிறது. #KeralaFloods #Onam

    Next Story
    ×