search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jacto Geo protest"

    போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் மீது டெஸ்மா சட்டம் பாயுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். #JactoGeo #Sengottaiyan
    சென்னை:

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர் களிடம் கூறியதாவது:-

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு பணிக்கு திரும்ப வேண்டும். பொதுத் தேர்வு நடைபெற உள்ள இந்த நேரத்தில் வேலை நிறுத்தம் என்பது மாணவர் சமுதாயத்துக்கு பெரும் சங்கடத்தை உருவாக்கும். எனவே போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என அரசின் சார்பில் வேண்டுகோள் வைக்கிறேன்.

    இன்றுதான் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக போகத்தான் இதை கண்காணித்து முதல்- அமைச்சருடன் கலந்து பேசி என்ன முடிவு எடுக்கலாம் என்பதை முடிவு செய்ய இயலும்.

    ஆசிரியர்களுக்கும் துறை சார்பில் தேவையான அறிவுரையும் வழங்கப்பட்டு உள்ளது.


    போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் மீது டெஸ்மா, எஸ்மா சட்டம் பாயுமா? என்ற சிக்கலான கேள்விகளை கேட்கக் கூடாது.

    இந்த போராட்டம் தொடருமா? தொடராதா? என்பது நாளைதான் தெரிய வரும். அதன் பிறகு இதில் என்ன முடிவு எடுப்பது என்பதை அமைச்சர்கள் முடிவு செய்வார்கள்.

    எனவே மனித நேயத்தோடு ஆசிரியர்களும் போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #JactoGeo #Sengottaiyan
    ஜாக்டோ- ஜியோ போராட்டத்துக்கு எதிராக மாணவன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. #JactoGeo #HighCourt
    சென்னை:

    தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அரும்பாக்கத்தை சேர்ந்த கோகுல் என்ற மாணவன், தன் தந்தை மூலம் வழக்கு தொடர்ந்தார்.

    அதில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத்திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

    மார்ச் மாதம் 10, 11 மற்றும் 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. முன்னதாக பிப்ரவரி மாதம் செய்முறை தேர்வும் நடைபெற உள்ளது.

    ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘ஏற்கனவே இந்த போராட்டத்தை எதிர்த்து ஐகோர்ட்டு மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதா?’ என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு மனுதாரர் வக்கீல் நவீன், மதுரை கிளையில், இரு நீதிபதிகள் கொண்ட டிவிசன் பெஞ்ச் வழக்கை விசாரித்து வருகிறது என்றார். ‘டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள் விசாரிக்கும்போது, தனி நீதிபதியான நான் எப்படி விசாரிக்க முடியும்?’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்யப் போவதாக கூறினார்.

    இதையடுத்து மனுதாரர் தரப்பு வக்கீல், வழக்கை திரும்பப்பெறுவதாக கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை திரும்பப் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். #JactoGeo #HighCourt
    ஐகோர்ட்டு உத்தரவை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். #JactoGeo
    திருச்சி:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய முறையையே அமல்படுத்த வேண்டும், ஊதியக்குழுவில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஊதிய விகித முரண்பாடுகளை களைய வேண்டும், 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், தொகுப்பூதிய முறையை கைவிட வேண்டும்.

    இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற ஐகோர்ட்டு கிளை போராட்டத்தை 10-ந் தேதி வரை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஜாக்டோ ஜியோவை அறிவுறுத்தியது. அதன்பேரில் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்தநிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஜாக்டோ ஜியோவின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்ட தலைவர்களின் கூட்டம் திருச்சியில் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தாஸ், வெங்கடேசன், பொன் செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    கூட்டத்தில் ஐகோர்ட்டு வழக்கு விபரம் , அரசு நிலைப்பாடு, அடுத்தக் கட்ட முடிவு ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்துக்கு பின்னர் மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 4-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

    ஆனால் இது தொடர்பான பொதுநல வழக்கு ஐகோர்ட்டு கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி முன்பு எங்கள் கோரிக்கைகளை எடுத்து வைத்தோம். ஓராண்டாக அவர்களது கோரிக்கை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தமிழக அரசிடம் நீதிபதி கேட்டார்.

    இதற்கு பதிலளிக்க அரசு தரப்பில் 10-ந்தேதி வரை கால அவகாசம் கோரப்பட்டது. அதனால் 10-ந்தேதி வரை போராட்டத்தை ஒத்திவைக்க ஜாக்டோ ஜியோவுக்கு நீதிபதி அறிவுறுத்தினார். நீதிபதியின் மீது நம்பிக்கை வைத்து போராட்டத்தை ஒத்திவைத்தோம்.

    தொடர்ந்து 10-ந்தேதி கோர்ட்டின் நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு ஜாக்டோ ஜியோவின் உயர்மட்டக்குழு மீண்டும் அன்றே மதுரையில் கூடி நீதிபதி கருத்துக்கு பின்னர் ஆய்வு செய்து அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.

    தமிழக அரசு 7 அம்ச கோரிக்கையின் நிலைப்பாட்டை 10-ந்தேதி கோர்ட்டில் வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #JactoGeo
    புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்யாமல் அரசை மிரட்டி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதா? என்று அரசு ஊழியர்களுக்கு எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். #JactoGeo #HRaja
    நாமக்கல்:

    நாமக்கல்லில் பா.ஜ.க. தேசிய தலைவர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடிகர் ரஜினிகாந்த் பிரதமருக்கு ஆளுமை இருக்கிறதாக சொல்லி இருக்கிறார், இது அவருடைய கருத்து.

    தமிழகத்தில் கஜா புயலை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயல்வது ஏற்புடைய வி‌ஷயம் அல்ல. இதற்கு முன்பாக எந்த ஒரு இயற்கை பேரிடராக இருந்தாலும் 20 நாட்கள், ஒரு மாதத்திற்கு முன்பு மத்திய ஆய்வுக்குழு வந்ததில்லை.

    இந்த தடவை 3-வது நாளிலேயே வந்து இங்கு ஒரு வாரம் இருந்து எல்லா இடமும் பார்த்துள்ளனர். அதுமட்டுமல்ல, தலைமை செயலாளருக்கு மத்திய அரசு கஜா புயலில் சிக்கிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வறுமை கோட்டிக்கு கீழ் உள்ளவர்களுக்கு பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்ட உடனடியாக பணியை தொடங்கச் சொல்லி உத்தரவு வந்திருக்கிறது.

    இதைத்தவிர வறுமை கோட்டிற்கு மேலே இருக்கிறவர்கள் வீடு இழந்தவர்களுக்கு தனி ஆர்டர் போட வேண்டும். ஓரிரு நாட்களில் மத்திய அரசாங்கம் அதற்கான உத்தரவை பிறப்பிக்கும்.

    6 லட்சம் வீடுகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள். முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகள் 3 லட்சம் இருக்குமானால் கூட ரூ.6 ஆயிரத்து 300 கோடி ரூபாய்.

    இப்போது கொடுத்திருக்கிற 350 கோடி ரூபாய் என்பது தமிழக அரசின் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன்பாக ஒதுக்கப்பட்ட தொகை. மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தென்னை மரக்கன்றுகளை நான் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வந்து விவசாயிகளுக்கு தருகிறேன் என்று கூறியுள்ளார்.

    இப்படி மத்திய அரசு தொடர்ந்து நல்லது செய்து வருகின்றன.

    புயலில் 1 லட்சத்து 20 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்தது. மின்வாரிய ஊழியர்கள் கொட்டுகிற மழையிலும் துரிதமாக மின்கம்பங்களை கொண்டு வந்து நட்டு வருகின்றனர். மின் வாரிய ஊழியர்களை நான் பாராட்டுகிறேன்.

    ஆனால் வாழ்நாள் முழுக்க 67 ஆண்டுகள் காசு சம்பாதிக்கிறதிலும், சொகுசு வாழ்க்கை அனுபவிப்பதிலும் செலவு செய்த கமல்ஹாசன் ஏதோ சினிமா சூட்டிங் எடுக்கிற மாதிரி கீழே விழுந்து கிடக்கின்ற மரத்தின் மீது காலை வைத்துக் கொண்டு மத்திய அரசாங்கம் தமிழகத்தை வஞ்சிக்கிறது என்று பேசினால் என்ன அர்த்தம்?


    வாழ் நாள் முழுவதும் மக்களை வஞ்சித்து மோகத்தை காட்டி சுரண்டி வாழ்க்கை நடத்திய ஒரு நடிகர் மத்திய அரசை பற்றி பேசுகிறார். ஆகவே இந்த மாதிரியாக எரிகிற வீட்டில் பிடுங்கினவரை லாபம் என்று இருக்கக் கூடாது.

    ஜாக்டோ -ஜியோ அமைப்பினருக்கு எனது வேண்டுகோள், 6, 7 மாவட்டங்கள் பெரிய அளவில் பாதித்திருக்கும் போது மக்களுக்கு சேவை செய்யாமல் வேலை நிறுத்தம் என்று அரசாங்கத்தை மிரட்டினால் இது மனிதாபிமானமுள்ள செயலா? என்று யோசிக்க வேண்டி இருக்கிறது.

    உங்களது கோரிக்கைகள் நியாயமாக இருந்தால் கூட வேலை நிறுத்தம் செய்வதற்கு இது நேரமில்லை.

    மின் இலகாவை சேர்ந்த ஊழியர்கள் மேற்கு வங்காளம், ஆந்திராவில் இருந்து வந்து புயல் பாதித்த பகுதிகளில் இரவு, பகலாக வேலை பார்க்கிறார்கள். ஆகவே இங்கிருக்கும் அரசு ஊழியர்கள் கூடுதலாக வேலை பார்க்க வேண்டும்.

    ஆனால் இங்கிருக்கின்ற தமிழக ஊழியர்களை தி.மு.க., தி.மு.க.வோடு இருக்கின்ற சில கட்சிகளும் தூண்டி விட்டதற்கு இவர்கள் ஆளாகி போய் வேலை நிறுத்தம் அறிவித்து இருப்பது சரியில்லை.

    எந்த கோரிக்கையாக இருந்தாலும் சீரமைப்பு பணிகள் முடிந்த பிறகு பேசிக் கொள்ளலாம். அரசாங்கம் எங்கேயேயும் ஓடி போறதில்லை. ஆகவே வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

    ஜாக்டோ- ஜியோ தீர்மானத்தில் சபரிமலை அய்யப்பன் கோவிலை பற்றி எதற்கு தீர்மானத்தில் போடுகிறீர்கள். உங்களது சம்பளமோ, கிராஜூட்டியோ, பென்சனோ அதில் சம்பந்தப்பட்டிருக்கிறதா?. இதற்கு என்ன அர்த்தம்?

    ஜாக்டோ-ஜியோ அமைப்பில் இவாலிஞ்சஸ் லிஸ்ட்டும், அர்பன் நக்சல்களும் நிர்வாகிகளாக இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. அதனால் அய்யப்பன் கோவிலுக்கு மாலை போடுகின்ற அனைத்து அரசு ஊழியர்களும் வெளியே வாருங்கள். இந்து விரோத தீய சக்திகளின் தலைமையில் இருக்கமாட்டோம் என்று வாருங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #JactoGeo #HRaja
    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர், ஆசிரியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதில் சுமார் 7 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #JactoGeo
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டது.

    புதிய ஓய்வூதிய திட்டத்தால் ஏராளமான சலுகைகள் பறி போய் விட்டதாக அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்தனர். எனவே பாதிப்பை ஏற்படுத்தும் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

    அதுபோல இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல், ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வலியுறுத்திய படி உள்ளனர்.

    இதை நிறைவேற்றக் கோரி ஏற்கனவே ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பல தடவை வேலைநிறுத்தம் செய்துள்ளனர். இந்த நிலையில் டிசம்பர் 4-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.

    கடந்த 30-ந்தேதி ஜாக்டோ-ஜியோ அமைப்பினருடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் போராட்ட அறிவிப்பை கைவிட கேட்டுக்கொண்டார்.

    ஆனால் அரசின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் நாளை முதல் ஜாக்டோ- ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்க உள்ளது.


    நாளை முதல் ஒவ்வொரு நாளும் பல்வேறு போராட்டங்களில் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மு.அன்பரசு ‘மாலைமலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நாங்கள் பலமுறை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டோம். ஆனால் காலம்தான் கடந்ததே தவிர எங்கள் கோரிக்கைகள் நிறைவேறவில்லை.

    இதனால்தான் வேலைநிறுத்த போராட்டத்தில் நாளை முதல் இறங்குகிறோம்.

    ஜாக்டோ - ஜியோ அமைப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை ஊழியர்கள் உள்ளனர். மொத்தம் 178 அமைப்புகள் இதில் உள்ளன. எங்களது போராட்டத்துக்கு மேலும் பல சங்கங்களின் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

    ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்ந்து புயல் நிவாரண பணிகளில் ஈடுபடுவார்கள்.

    அதுமட்டுமல்ல, வெளி மாவட்டங்களில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு சென்று நிவாரண பணியில் ஈடுபடும் ஊழியர்களும் தொடர்ந்து சென்று மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபடுவார்கள்.

    ஸ்டிரைக்கில் ஈடுபடும் மற்ற அரசு ஊழியர்கள் வட்டார- ஒன்றிய அளவில் நாளை மதியம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள். நாளை மறுநாள் (5-ந்தேதி) தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    6-ந்தேதி மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு கமிட்டி கூட்டங்கள் கூட்டி முடிவு எடுக்கிறார்கள்.

    7-ந்தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெறுகிறது. 8-ந்தேதி போராட்டத்தை தீவிரப்படுத்த எழுச்சி கூட்டங்கள் நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க உள்ளனர்.

    எங்களது போராட்டத்தில் 7 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பல்வேறு அரசு துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளதால் நாளை முதல் தொடக்கப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் பணிகள் பெருமளவு பாதிக்கும் நிலை ஏற்படும். #JactoGeo
    நாளை நடைபெற உள்ள ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் முறையீடு செய்துள்ளார். #JactoGeo #HCMadurai
    மதுரை:

    அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு குழுவான ஜாக்டோ-ஜியோ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் மதுரையை சேர்ந்த வக்கீல் லோகநாதன் என்பவர் இன்று மதுரை ஐகோர்ட் டில் நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் முன்பு ஆஜ ரானார்.

    அப்போது அவர், நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக ஜாக்டோ -ஜியோ அறிவித்துள்ளது.



    அடுத்த வாரம் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளது. ஜாக்டோ-ஜியோ ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் தேர்வு பெரிதும் பாதிக்கும். மேலும் கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த பணிகளிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.

    அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், உங்கள் கோரிக்கைகளை மனுவாக தாக்கல் செய்யுங்கள். பிற்பகல் 1 மணிக்கு அதனை விசாரணைக்கு ஏற்றுக்கொள்கிறோம் என்றனர். #JactoGeo #HCMadurai
    அரசு ஊழியர், ஆசிரியர்களை அலட்சியப்படுத்தியுள்ள அமைச்சர் ஜெயக்குமாரின் செயல் கண்டனத்துக்குரியது என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். #JactoGeo #TTVDhinakaran #Jayakumar
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளதாவது:-

    பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் அறிவித்திருக்கிறார்கள்.

    அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற நடந்த பேச்சுவார்த்தையின்போது அமைச்சர் ஜெயக்குமார் அலட்சியமாக நடந்துகொண்டதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அமைச்சரின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.



    திட்டமிட்டபடி போராட்டம் நடந்தால், புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து உடனடியாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அழைத்து முதல்வர் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #JactoGeo #TTVDhinakaran #Jayakumar

    காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ள ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைத்து பேச வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். #JactoGeo #Ramadoss #EdappadiPalaniswai
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஊதிய உயர்வு நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகித முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 கோரிக்கைகளை ஜாக்டோ- ஜியோ அமைப்பு நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த காலங்களில் நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு அரசு மதிப்பளிக்காததால் தான் வேலை நிறுத்தப் போராட்டத்தை அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர். 4-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்போவதாக அரசு ஊழியர் அமைப்புகள் அறிவித்துள்ளன. இப்பிரச்சினைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

    அரசு ஊழியர்களின் கோரிக்கைகளில் மிகவும் முக்கியமானது பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பது தான். அந்த கோரிக்கை உடனடியாக ஏற்கப்பட வேண்டியதும் கூட.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பும் வரை அரசு எந்திரம் முழுமையாக செயல்பட வேண்டும். அதற்கு அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட வேண்டும். எனவே, பழைய ஓய்வூதியத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வல்லுனர் குழு அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.


    ஓய்வூதியம் என்பது பணியாளர்களின் உரிமை என்பதால், ஸ்ரீதர் குழுவின் பரிந்துரை என்னவாக இருந்தாலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். இதுகுறித்து ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக அழைத்து பேச வேண்டும். ஒரு குறிப்பிட்ட தேதி நிர்ணயித்து, அதற்குள் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து, அவர்களின் போராட்டத்தைக் கைவிட செய்ய வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். #JactoGeo #Ramadoss #EdappadiPalaniswai
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 4-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். #JactoGeo
    சென்னை:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்களின் ஒரு பிரிவான ஜாக்டோ-ஜியோ அமைப்பு புதிய ஓய்வு ஊதியம் முறையை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வுக்கு பிறகு வழங்கபடாமல் இருக்கும் 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும், ஊதிய முன்பாடுகளை களைய வேண்டும், அரசு பள்ளிகளை மூடக்கூடாது என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள்.

    இதை நிறைவேற்ற கோரி வருகிற 4-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து இருந்தனர்.

    இது தொடர்பாக சென்னையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் போராட்ட விளக்கம் கூட்டம் நடத்தி அதில் நிர்வாகிகள் கோரிக்கை தொடர்பாக பேசினார்.


    இந்த நிலையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளுடன் தமிழக அரசு நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் அரசு தரப்பில் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து ஜாக்டோ-ஜியோவின் உயர் மட்டக்குழு கூட்டம் இன்று திருவல்லிக்கேணியில் நடந்தது. மாயவன், மீனாட்சி சுந்தரம், தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதில் கோரிக்கைகளை அரசு ஏற்காததால் ஏற்கெனவே அறிவித்தப்படி வருகிற 4-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. பிற்பகல் வரை கூட்டம் நடைபெற்றது.

    பின்னர் ஜாக்டோ-ஜியோ அமைப்பு நிர்வாகி ஒருவர் கூறுகையில், எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்க முன்வராததால் நாங்கள் வருகிற 4-ந்தேதி முதல் திட்டமிட்டப்படி காலவரையற்ற போராட்டத்தை தொடங்குவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

    இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். #JactoGeo
    பழைய பென்சன் திட்டத்தை கொண்டுவரக்கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் விடிய விடிய உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்று வருகிறது. #JactoGeoProtest

    சென்னை:

    அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கடந்த 7 ஆண்டுகளாக 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள்.

    புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், 7-வது ஊதியக்குழுவில் மறுக்கப்பட்ட 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும். இடைநிலை, முதுநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை களைதல், சிறப்புகால ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் போன்றவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும் ஆகியவை முக்கிய கோரிக்கைகள் ஆகும்.

    இதை வலியுறுத்தி பல கட்ட போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    கடந்த மாதம் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தம்- மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தொடர்பாக ஐகோர்ட்டு தலையிட்டு ஊதிய முரண்பாடு தொடர்பாக குழு அமைத்து புதிய சமரச திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டது.

     


    ஆனால் குழுவின் பரிந்துரையை இதுவரை அரசு வெளியிடவில்லை. இதைத் தொடர்ந்து கடந்த வாரம் தலைமை செயலகத்தில் போராட்டக்குழுவினர் நேரில் ஆஜராகி தங்கள் கருத்தை தெரிவித்தனர். அப்போது 11-ந்தேதி முதல் உண்ணாவிரதம் மேற் கொள்ள இருப்பதாக கூறினார்கள்.

    இதைத் தொடர்ந்து திட்டமிட்டப்படி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று உண்ணாவிரதம் போராட்டத்தை தொடங்கினார்கள்.

    ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக்குழு நிர்வாகிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

    ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், மாயவன், மீனாட்சிசுந்தரம், தாஸ், வெங்கடேசன், அன்பரசு, முத்துசாமி, சுரேஷ், தாமோதரன், தியாகராஜன், மோசஸ் ஆகியோர் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் விடிய விடிய நடந்தது.

    இரவு முழுவதும் உண்ணா பந்தலிலேயே படுத்து உறங்கினார்கள். ஒருசில பெண் நிர்வாகிகளும், உண்ணாவிரத மேடையில் தூங்கினார்கள். தண்ணீரை மட்டுமே அவர்கள் பருகி வருகிறார்கள்.

    இன்று காலை 2-வது நாளாக உண்ணாவிரதம் போராட்டம் நீடித்தது.

    இதில் பங்கேற்ற அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் இன்று சோர்வடைந்தனர். ஆனாலும் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று உறுதியாக உள்ளனர். 50 பெண்கள் உள்பட 250 நிர்வாகிகள் உண்ணா விரதம் இருக்கிறார்கள்.

     


    உண்ணாவிரதம் இருந்து வரும் அரசு ஊழியர்களை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் நேரில் சந்தித்து பேசினார்.

    அப்போது அவர், ஒருங்கிணைப்பாளர்களிடம், “உடலை வருத்தி ஏன் உண்ணாவிரதம் இருக்கிறீர்கள்? இந்த அரசு எதையும் செய்யாது. அதனால் போராட்டத்தை கைவிடுங்கள். விரைவில் மலரும் தி.மு.க. ஆட்சியில் உங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

    இன்று சட்டசபையில் இதுபற்றி குரல் கொடுப்பேன் என்றும் அரசு ஊழியர்களிடம் உறுதி அளித்தார். #JactoGeoProtest

    ×