search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Independence Day"

    • சுதந்திர தினத்தை ஒட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு தேநீர் விருந்து அளித்தார்.
    • தேநீர் விருந்தில் துணை ஜனாதிபதியுடன் கலந்து கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி.

    நாட்டின் 77-வது சுதந்திர தினம் நாடு முழுக்க கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று இந்திய குடியரசு தலைவர் அளிக்கும் தேநீர் விருந்து பிரபலமான வழக்கம் ஆகும்.

     

    அந்த வகையில், இன்று (ஆகஸ்ட் 15) நாட்டின் 77-வது குடியரசு தினத்தை ஒட்டி குடியரசு தலைவவர் திரவுபதி முர்மு டெல்லி ராஷ்டிரபதி பவனில் (குடியரசு தலைவவர் மாளிகை) தேநீர் விருந்து அளித்தார். இதில் துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் அவரது துணைவர் சுதேஷ் தன்கர் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

    இவர்கள் மட்டுமின்றி அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர். 

    • அடாரி எல்லைப் பகுதியில் இரு நாடுகளின் படைகளும் அவரவர் நாட்டு தேசியக் கொடியை ஏற்றுவது வழக்கம்.
    • கொடியிறக்க நிகழ்வோடு, கலை நிகழ்ச்சிகளுக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இந்தியாவின் அடாரி மற்றும் பாகிஸ்தானின் வாகா பகுதிகள் இதன் எல்லையாக அமைந்துள்ளது. இந்த பகுதியில் இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் சந்திக்கும் பகுதியாக உள்ளது.

     

    இந்த எல்லைப் பகுதியில் இரு நாடுகளின் படைகளும் அவரவர் நாட்டு தேசியக் கொடியை ஏற்றுவது வழக்கம். அந்த தேசியக் கொடியை மாலை இறக்கும் நிகழ்வு மிகவும் பிரபலமானதாகும். இந்நிலையில், 77-வது சுதந்திர தினத்தன்று இந்திய வீரர்கள் மிடுக்குடன் வீறுநடை போட்டு தேசிய கொடியை இறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

     

    வாகா எல்லையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து தேசியக்கொடி இறக்கும் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். வழக்கமான கொடியிறக்க நிகழ்வோடு, கலை நிகழ்ச்சிகளுக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து நாட்டின் முப்படையை சேர்ந்த வீரர்களின் சிறப்பு அணிவகுப்பு நடைபெற்றது. இறுதியில் நாட்டின் தேசிய கொடி தரையிறக்கப்பட்டது. 

    இந்த நிகழ்ச்சியை காண அரசு உயர் அதிகாரிகளுடன், பொதுமக்களும் பெருமளவில் வருகை தந்தனர். இதனை கண்டுகளித்த பொது மக்கள் வீரர்களுக்கு கைதட்டி உற்சாகமூட்டினர். 

    • பழனி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
    • அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

    விழுப்புரம்:

    சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் பழனி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் கலெக்டர் பழனி, போலீஸ் சூப்பிரண்டு சஷாங்சாய் ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று காவல்த்துறை, வனத்துறை, தீயணைப்பு ஆகிய துறையினர் ஊர்காவல், தேசிய மாணவர் படையினர், இளம் செஞ்சிலுவை சங்கத்தினர் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்து பரிசுகளை வழங்கினார்.

    அதன் பிறகு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 200 பேருக்கு நற்சான்றிதழை மாவட்ட கலெக்டர் பழனி வழங்கினார். அதனை தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ஏழை, எளிய மக்கள் 20 பேருக்கு ரூ.25,37,246 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவிகளின் பல்வேறு கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், தமிழக பாரம்பரிய கலையான மல்லர்கம்ப கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இவர்கள் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை கலெக்டர் பழனி வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக், போலீஸ் சூப்பிரண்டு சஷாங்சாய், எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட கூடுதல் கலெக்டர் சித்ராவிஜயன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி, தாசில்தார் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக காந்தி சிலைக்கு கலெக்டர் பழனி, நகராட்சி ஆணையர் ரமேஷ் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர்.

    விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் சர்க்கரை தமிழ்ச்செல்வி பிரபு தலைமையில் தேசிய கொடி ஏற்றி சிறப்புரையாற்றி பின்னர் விழாவிற்கு வந்திருந்த கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார் .துணைத் தலைவர் சித்திக் அலி,விழுப்புரம் நகராட்சி கமிஷனர் ரமேஷ், கவுன்சிலர்கள் மணவாளன், சிவக்குமார்,அமர் ஜி.உஷா மோகன், வசந்தா, மகாலட்சுமி உள்ளிட்ட கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பெசன்ட்நகர் மகாலட்சுமி கோவிலில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பங்கேற்று சமபந்தி விருந்தில் உணவருந்தினார்.
    • வடபழனி முருகன் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார்.

    சென்னை:

    சுதந்திர தினத்தையொட்டி ஆண்டுதோறும் கோவில்களில் சமபந்தி விருந்து வழங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் கோவில்களில் அறுசுவை உணவுடன் கூடிய சமபந்தி விருந்து இன்று நடைபெற்றது.

    இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் இந்த சமபந்தி விருந்து நடந்தது. சென்னையில் 32 கோவில்களில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, கோவில் செயல் அலுவலர் மற்றும் இணை ஆணையர் நித்யா மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    பார்த்தசாரதி கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தின்போது 200 பேருக்கு வேட்டி- சேலையும் வழங்கப்பட்டது. பொதுமக்களோடு அமர்ந்து சமபந்தி விருந்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு ஆகியோர் உணவருந்தினர்.

    பின்னர் வேட்டி-சேலையை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். வடை-பாயாசம், சர்க்கரை பொங்கல் ஆகியவற்றுடன் சுவையான அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இதனை பொதுமக்கள் ருசித்து சாப்பிட்டனர்.

    தேனாம்பேட்டை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு பொதுமக்களோடு அமர்ந்து உணவருந்தினார். அடையாறில் உள்ள ஆனந்த பத்மநாபசுவாமி கோவிலில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றார்.

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அமைச்சர் பெரியசாமி, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டு சமபந்தி விருந்தில் மக்களோடு மக்களாக அமர்ந்து உணவருந்தினார்கள்.

    பெசன்ட்நகர் மகாலட்சுமி கோவிலில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பங்கேற்று சமபந்தி விருந்தில் உணவருந்தினார். வடபழனி முருகன் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். இதில் கோவில் தக்கார் ஆதிமூலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர். அரண்மனைக்கார தெருவில் உள்ள கச்சாலீஸ்வரர் கோவிலில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தம்புசெட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் துணை சபாநாயகர் பிச்சாண்டி, வில்லிவாக்கத்தில் உள்ள சவுமிய தாமோதர பெருமாள் கோவிலில் அரசு தலைமை கொறடா செழியன் ஆகியோரும் பங்கேற்று சமபந்தி விருந்தில் உணவருந்தினார்கள்.

    பார்த்தசாரதி கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் சாதத்துடன் சாம்பார், வத்த குழம்பு, ரசம், உருளை கிழங்கு- பட்டாணி பொறியல், கேரட்- கோஸ் பொறியல், அவியல், சேமியா பாயாசம், மெதுவடை, தயிர் பச்சடி, மோர், ஊறுகாய் ஆகியவற்றுடன் சர்க்கரை பொங்கலும் சேர்த்து வழங்கப்பட்டு உள்ளது.

    இதேபோன்று அனைத்து கோவில்களிலும் 3 வகையான கூட்டு சமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு மணக்க, மணக்க சிறப்பு சைவ உணவு சமபந்தி விருந்தில் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • செங்கல்பட்டு நகராட்சியில் நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் தேசிய கொடி ஏற்றினார்.
    • நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் கலெக்டர் ஆல்பி ஜான்வர்க்கீஸ் வழங்கினார்.

    காஞ்சிபுரம்:

    நாட்டின் 77-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர்கள் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் மற்றும் மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று, போலீசார் மற்றும் ஊர்காவல் படையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    பின்னர் 60 பயனாளிகளுக்கு ரூ. 3 லட்சத்து 55 ஆயிரத்து 40 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    மேலும் நிகழ்ச்சியில் மூவர்ண பலூன், வெண்புறாக்கள் பறக்க விடப்பட்டன. பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

    நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. பொன்னி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, தாசில்தார் புவனேஸ்வரன் கலந்து கொண்டனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தின் சார்பில் சுதந்திர தினவிழா ஆலபாக்கம் ஊராட்சியில் உள்ள வேன்பாக்கம் அரசினர் தொழில் பயிற்சி வளாகத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தேசிய கொடி ஏற்றினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டு ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார். பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுது.

    செங்கல்பட்டு நகராட்சியில் நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் தேசிய கொடி ஏற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளராக வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கினார். நகரமன்ற துணை தலைவர் அன்பு செல்வன், நகராட்சி ஆணையர் இளம்பரிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் கலெக்டர் ஆப்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து வண்ண பலூன் களை பறக்கவிட்டார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    இதைத்தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்து இனிப்புகளை வழங்கினார். மேலும் அரசின் பல்வேறு துறையின் மூலம் 29 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 59 லட்சத்து 58 ஆயிரத்து 191 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆப்பி ஜான் வர்கீஸ் வழங்கினார். விழாவில் தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களை 22 போலீசாருக்கும், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.

    தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் கலெக்டர் ஆல்பி ஜான்வர்க்கீஸ் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஹரிக்குமார், மீனாட்சி, உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா, துணை கலெக்டர் சுகபுத்திரா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் காயத்ரி சுப்பிரமணி, பயிற்சி உதவி போலீஸ் சூப்பிரண்டு சிபின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஊத்துக்கோட்டையில் உள்ள குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி செந்தமிழ்ச்செல்வன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். வக்கீல்கள் சங்கத் தலைவர் சீனிவாசன், செயலாளர் முனுசாமி, பொருளாளர் தினகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத் தேசியக்கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். துணைத் தலைவர் குமரவேல், செயல் அலுவலர் வெங்கடேஷ் மற்றும் பல கலந்து கொண்டனர்.

    போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார் தேசியக்கொடி ஏற்றினார். போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தேசியகொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

    மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் ரவி தேசியகொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். அத்திப்பட்டு ஊராட்சியில் தலைவர் சுகந்தி வடிவேல், பொன்னேரி நகராட்சியில் தலைவர் பரிமளம் விஸ்வநாதன், தட பெரும்பாக்கம் ஊராட்சியில் தலைவர் பாபு, கோட்டைக்குப்பம் ஊராட்சியில் தலைவர் சம்பத், ஜெகநாதபுரம் ஊராட்சியில் தலைவர் மணிகண்டன், மாதவரம் ஊராட்சியில் தலைவர் சுரேஷ், ஆண்டார் குப்பம் ஊராட்சியில் ஆர்த்தி ஹரி பாபு, பஞ்செட்டியில் தலைவர் சீனிவாசன், பெரிய கரும்பூரில் தலைவர் பாக்கியலட்சுமி, வேலூர் ஊராட்சியில் தலைவர் சசிகுமார், காட்டுப்பள்ளியில் தலைவர் சேதுராமன், கொடூரில் தலைவர் கஸ்தூரி மகேந்திரன், நாலூரில் தலைவர் சுஜாதா ரகு, வாயலூரில் தலைவர் கோபி, காட்டாவூரில் தலைவர் மங்கை உமாபதி, பெரும்பேட்டில் தலைவர் ராஜேஷ், பிரளையம் பாக்கத்தில் இலக்கியா கண்ணதாசன், சிறுவாக்கத்தில் தலைவர் சேகர் தலைமையில் தேசிய கொடியை ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டன.

    • விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.
    • மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

    தென்காசி:

    தென்காசியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் கோலாக லமாக நடைபெற்றது.

    கலெக்டர் கொடி ஏற்றினார்

    தென்காசி இ.சி.இ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில் நடைபெற்ற இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் சமாதான புறாக்களை பறக்க விட்டார். தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள், தொண்டு அமைப்பை சேர்ந்தவர்களுக்கு கலெக்டர் ரவிச்சந்திரன் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

    முன்னதாக போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், ஊர்க்காவல் படையினர், என்.சி.சி. மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. இதில் திறந்த ஜீப்பில் நின்றபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார்.

    விழாவில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து வந்த மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்ட னர். சுதந்திர தினத்தையொட்டி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்கள், கோவில்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • மரக்கன்றுகள் நடும் விழா சிவகிரி தாலுகா அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது
    • நிகழ்ச்சியின்போது மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சிவகிரி:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும், சுதந்திர தினத்தை முன்னிட்டும், சிவகிரி பேரூராட்சி சார்பில் 76 மரக்கன்றுகள் நடும் விழா சிவகிரி தாலுகா அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத்தலைவர் லட்சுமிராமன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் வெங்கடகோபு வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினராக சிவகிரி தாசில்தார் ஆனந்த், புளியங்குடி டி.எஸ்.பி. அசோக், சிவகிரி இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி, சிவகிரி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ராம சுகாசினி, சித்த மருத்துவர் ஜெயந்தி, சிவகிரி வனச்சரக அலுவலர் மௌனிகா, வனவர் அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து, மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

    விழாவில் வரிவிதிப்பு மேல்முறையீட்டு உறுப்பினர்கள் செந்தில்வேல், ரத்தினராஜ், முத்துலட்சுமி, ராஜலட்சுமி, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் சுந்தரவடிவேலு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சிவகிரி நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், வேட்டை தடுப்பு காவலர் மாரியப்பன், தலைமை எழுத்தர் தங்கராஜ், வரிவசூலர் முத்துப்பாண்டி, பேரூராட்சி கவுன்சிலர்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், அரசு மருத்துவமனை பணியாளர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் சித்தா மருந்தாளுநர் தனகேஸ்வரி நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

    • காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
    • இதில் வடக்கு மாவட்ட துணை தலைவர் கருப்பாயூரணி வேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

    மதுரை

    காங்கிரஸ் கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட தலைவர் ஆலாத்தூர் ரவி உத்தரவின்பேரில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. ஒத்தக்கடை வட்டார தலைவர் சவுந்தரபாண்டியன் ஏற்பாட்டில் ஒத்தக்கடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேசியகொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் வடக்கு மாவட்ட துணை தலைவர் கருப்பாயூரணி வேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார். கிராம கமிட்டி தலைவர் ஜெயராஜ் பாண்டியன், வெள்ளையன், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலைச்செல்வன், மாயாண்டி முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் நாகேந்திரன், முகமது அலி, சாகுல் அமீது, பாஸ்கரன், யோகேஸ் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
    • அதிகா ரிகள் அலுவலர்கள், துப்புரவு, எலகட்ரிக்கல் அலுவலர்கள் மாணவர்கள் சிறப்பாக விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த கிருஷ்ணன்கோவிலில் அமைந்துள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 77-வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பல்கலைக்கழக துணைத் தலைவா் முனைவர் எஸ்.சசி ஆனந்த் தலைமை தாங்கினார். துணைவேந்தா் முனைவர் எஸ்.நாராயணன், தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், என்.சி.சி. மாண வர்களின் அணிவகுப்பு மரியாதையை எற்றுக்கொண்டார். பதிவாளா்முனைவர் வே.வாசுதேவன் முன்னிலை வகித் தார்.

    விழாவில் சுதந்திரதின உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். என்.சி.சி. மாணவர்களுக்கு உயர் தகுதி பேட்சு களை துணைவேந்தர் அணிவித்து பேசினார். இதில் டீன்கள், துறைத் தலைவா்கள், கலசலிங்கம் குரூப் கல்வி நிறுவன முதல்வா்கள், பேராசிரியா்கள் மற்றும் அலுவ லா்கள் கலந்து கொண்டனா். விளையாட்டுத்துறை அதிகாரிகள் அலுவலர்கள், துப்புரவு, எலகட்ரிக்கல் அலுவலர்கள் மாணவர்கள் சிறப்பாக விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய இடத்திற்கு திரும்பவும், மணிப்பூரில் அமைதி ஏற்படவும் அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது
    • தவறு செய்வது மனித இயல்வு. அதை நாம் மன்னிக்கவும், மறக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்

    மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இரண்டு பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த கொடூர செயல் அனைவரையும் பதைபதைக்கச் செய்தது. இதற்கு நாடு தழுவிய அளவில் கண்டனம் கிளம்பியது. தற்போது மணிப்பூரில் அமைதி திரும்பிய வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில் மூன்று முக்கிய விசயங்கள்தான் மணிப்பூரில் விலைமதிப்பற்ற உயிர்ப்பலிக்கு முக்கிய காரணம் என அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

    77-வது சுதந்திர தினவிழாவையொட்டி தேசியக் கொடி ஏற்றி வைத்து பிரேன் சிங் பேசியதாவது:-

    'குறிப்பிட்ட தவறான புரிதல்கள், சுயநலனுக்கான செயல்கள், நாட்டை சீர்குலைப்பதற்கான வெளிநாட்டு சதி ஆகியவை மணிப்பூரில் விலைமதிப்பற்ற உயிர்களை காவு வாங்கியுள்ளது. ஏராளமானோர் நிவாரண முகாமலில் வசிக்க காரணமாகிவிட்டது.

    பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய இடத்திற்கு திரும்பவும், மணிப்பூரில் அமைதி ஏற்படவும் அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது. சொந்த வீட்டிற்கு உடனடியாக செல்ல முடியாதவர்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள வீட்டிற்கு மாற்றப்படுவார்கள். தவறு செய்வது மனித இயல்வு. அதை நாம் மன்னிக்கவும், மறக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். அரசியலமைப்பு வழங்கியுள்ளதற்கு எதிராக அரசு எதையும் செய்யவில்லை. யாரும் அவ்வாறு செய்ய முடியாது.

    ஒரு குடும்பம் ஒரு வாழ்வாதாரம் என்ற திட்டத்தை வழங்கவும், மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

    • சுதந்திர தினத்தை முன்னிட்டு தேவகோட்டை தியாகிகள் பூங்கா மற்றும் நகராட்சி அலுவலகம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
    • போலீஸ் நிலையமும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பஸ் நிலையம் அருகே, நகராட்சி அலுவலகம் எதிரே 1936-ம் ஆண்டு அப்போதைய மாநில கவர்னரால் பூங்கா திறக்கப்பட்டது. 1942 ஆகஸ்ட் மாதத்தில் நீதிமன்றம் முன்பாக ஆகஸ்ட் புரட்சி நடைபெற்றது. அப்போது ஆங்கிலேயர்கள் 75 பேரை சுட்டுக் கொன்றனர். மேலும் 112 நபர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் 1947-ம் ஆண்டு பூங்காவில் தியாகிகள் நினைவு சின்னம் அமைக்கப்பட்டது.

    ஜாலியன் வாலாபாக் அடுத்து சுதந்திர போராட்டத்திற்காக அதிக நபர்கள் உயிர் நீத்த இடம் தேவகோட்டை தியாகிகள் பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது. தேவகோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் அதிக அளவில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசு குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.சுதந்திர தினத்தை முன்னிட்டு தற்போது தியாகிகள் பூங்கா, நகராட்சி அலுவலகம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் நகர் போலீஸ் நிலையமும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    • கவர்னர் மாளிகையில் தியாகிகள், அரசியல்கட்சி பிரமுகர்கள், முக்கியஸ்தர்களுக்கு கவர்னர் தமிழிசை தேநீர் விருந்து அளித்தார்.
    • கவர்னர் ஜனநாயத்துக்கு எதிராக அரசியல் கட்சி தலைவர் போல செயல்படுவதாக கூறி தி.மு.க, காங்கிரஸ் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர்.

    புதுச்சேரி:

    சுதந்திர தினவிழாவையொட்டி கவர்னர் மாளிகையில் தியாகிகள், அரசியல்கட்சி பிரமுகர்கள், முக்கியஸ்தர்களுக்கு கவர்னர் தமிழிசை தேநீர் விருந்து அளித்தார்.

    இந்த விருந்து நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ. ஜெயக்குமார், செல்வ கணபதி எம்.பி, துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், ஜான்குமார், கல்யாணசுந்தரம், அங்காளன், கே.எஸ்.பி.ரமேஷ், ரிச்சர்டு, லட்சுமி காந்தன், பாஸ்கர், வி.பி.ராமலிங்கம், பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன், கருணாநிதி, தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, போலீஸ் டி.ஜி.பி சீனிவாஸ் மற்றும் அரசு செயலர்கள், உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

    அதேநேரத்தில் கவர்னர் ஜனநாயத்துக்கு எதிராக அரசியல் கட்சி தலைவர் போல செயல்படுவதாக கூறி தி.மு.க, காங்கிரஸ் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர்.

    இதன்படி தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணித்தனர்.

    ×