search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hraja"

    போலீசாருடன் வாக்குவாதம் செய்த எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் பெண் வக்கீல் சுதா, டி.ஜி.பி.க்கு புகார் மனு அனுப்பியுள்ளார். #hraja #congress

    சென்னை:

    போலீசாருடன் வாக்குவாதம் செய்த எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் பெண் வக்கீல் சுதா, டி.ஜி.பி.க்கு புகார் மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

    நான் சென்னை ஐகோர்ட் டில் 19 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். சென்னை ஐகோர்ட்டு வழக்கறிஞர்கள் சங்கத் துணைத் தலைவராகவும் அகில இந்திய மகளிர் காங்கிரசின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறேன். நேற்று நான் ‘வாட்ஸ்அப்’ல் வைரலாக பரவிய, எச்.ராஜா போலீசாருடன் தகாத வார்த்தைகளால் பேசும் காட்சிகளைப் பார்த்தேன்.

    திருமயம் போலீசார் சென்னை ஐகோர்ட்டு அறி வுறுத்தலின் பேரில்தான் எச்.ராஜாவை தடுத்து நிறுத்தினார்கள். உடனே எச்.ராஜா தனது நிதானத்தை இழந்து விட்டார். அப்போது அவர் போலீஸ் அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசிய தோடு, சென்னை ஐகோர்ட்டு பற்றியும் தகாத மற்றும் அசிங்கமான வார்த்தைகளால் பேசியுள்ளார்.

    அவரது ஆவேச பேச்சு வீடியோ காட்சிகளை இத்துடன் இணைத்துள்ளேன்.

    எச்.ராஜா நடுரோட்டில் மேடை அமைக்க முற்பட்ட சமயத்திலும், ஊர்வலத்தைத் தொடர்ந்து நடத்த முயன்ற போதும், அவரிடம் போலீசார் சென்று ஐகோர்ட்டு விதித்துள்ள கட்டுப்பாடுகள் பற்றி எடுத்துக் கூறினார்கள். உடனே எச்.ராஜா போலீசாரை எச்சரிக்கும் வகையில் சத்தமிட்டு பேசினார். மீண்டும் அவரிடம் போலீசார் ஐகோர்ட்டு உத்தரவை தெரிவித்தனர்.

    உடனே எச்.ராஜா ஐகோர்ட்டை மிக, மிக தரக்குறைவாக ஒரு வார்த்தையைப் பயன்படுத்தி பேசினார். போலீஸ்காரர்கள் இந்துக்களை சித்ரவதை செய்வதாக கூறினார். அதற்கு அங்கிருந்த போலீஸ் அதிகாரி, நாங்கள் அப்படி எதுவும் செய்யவில்லை என்றார்.

    உடனே எச்.ராஜா, “டி.ஜி.பி. வீட்டில் சோதனை நடந்ததற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும்” என்றார். பிறகு “இந்துக்கள் ஒன்றும் ஆதரவற்றவர்கள் அல்ல” என்று சத்தமிட்டார். ஒரு கட்டத்தில் அவர் ஒரு போலீஸ் அதிகாரியை பார்த்து, “நீங்கள் இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறீர்கள். சர்ச் பாதர் சொல்வதை கேட்டு அதன்படி செயல்படுகிறீர்கள்” என்றார்.

    புழல் சிறையில் இருந்து டி.வி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்ற அவர், தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த காவல்துறையிலும் ஊழல் மயமாகி விட்டதாக குற்றம் சாட்டினார்.

    அப்போது போலீசார் அவரிடம், நீங்களே இப்படி பேசலாமா? என்றனர். உடனே எச்.ராஜா மீண்டும் ஆவேசமானார். ஏன் மேடை அமைக்க அனுமதி கொடுக்கவில்லை என்று குரலை உயர்த்தினார்.

    உடனே ஒரு போலீஸ் அதிகாரி அவரிடம், ஐகோர்ட்டு உத்தரவை சுட்டிக் காட்டினார். அதற்கு எச்.ராஜா மீண்டும் சென்னை ஐகோர்ட்டை ஒரு தகாத வார்த்தை கூறி குறிப்பிட்டார்.


    எச்.ராஜாவின் பேச்சு போலீசாரை அச்சுறுத்தும் வகையில் மட்டுமின்றி, ஐகோர்ட்டை அவமதித்தது போன்றதோடு மட்டுமின்றி அந்த பகுதியில் கலவரத்தை தூண்டிவிடும் வகையில் இருந்தது. மேலும் அந்த பகுதியில் மத அடிப்படையில் இரு பிரிவினரிடம் பகையை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவதாக காணப்பட்டது.

    தேச ஒற்றுமைக்கு எதிராக அவரது பேச்சு அமைந்து இருந்தது. அதோடு காவல் துறையினரை அவர் பணியாற்ற விடாமல் தடுத்துள்ளார். ஒட்டு மொத்த போலீசாரையும் விமர்சித்த அவர் ஐகோர்ட்டையும் தரம் தாழ்ந்து பேசியுள்ளார்.

    எனவே எனது இந்த புகாரை பதிவு செய்து எச். ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த மனுவில் வக்கீல் சுதா கூறியுள்ளார். இதன் நகலை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கும் அனுப்பி உள்ளார். #hraja #congress

    பா.ஜனதா தலைவர் எச்.ராஜா பொது இடங்களில் கவனத்துடன் பேச வேண்டும் என்று குமரி அனந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார். #raja #kumarianandan

    ராயபுரம்:

    ரபேல் போர் விமான ஊழலை கண்டித்து சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் குமரி அனந்தன் தலைமை தாங்கினார்.

    முன்னதாக ராஜாஜி சாலையில் இருந்து பேரணி புறப்பட்டது. அதில் மகளிர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. பேரணியில் ரபேல் போர் விமானம் போன்று மாதிரி செய்து கொண்டுவரப்பட்டது.

    பின்னர் குமரி அனந்தன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜனதா தலைவர் எச்.ராஜா பொது இடங்களில் கவனத்துடன் பேச வேண்டும். அரசியலில் உள்ளவர்கள் நாகரீகம் கருதி நாவடக்கத்துடன் பேச வேண்டும். எச்.ராஜாவின் இத்தகைய பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    இனிவரும் காலங்களில் அவர் பொறுப்புணர்ந்து பேச வேண்டும். பெரியார் சிலையின் மீது காலணி வீசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.

    இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவு மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, சிரஞ்சீவி, மாவட்ட தலைவர்கள் சிவராஜ சேகர், எம்.எஸ். திரவியம், கராத்தே தியாகராஜன், வீரபாண்டியன், மகளிர் அணித்தலைவி ஜான்சி ராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தொடர்ந்து ஒரு பயங்கரவாதியைப் போல் பேசி வருவதால் அவரை கைது செய்ய வேண்டும் என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார். #elangovan #hraja

    சென்னை:

    பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா போலீசாருடன் நடத்திய வாக்கு வாதத்தில் வெளியிட்ட கருத்துக்கள் கடும் எதிர்ப்புக்குள்ளாகி உள்ளன. அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தலைவர்கள் வற்புறுத்தி உள்ளனர்.

    இதுதொடர்பாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:-

    எச்.ராஜா தொடர்ந்து ஒரு பயங்கரவாதியைப் போல் பேசி வருகிறார். நீதிமன்றத்தையும், காவல் துறையையும் அருவெறுக்கத்தக்க கொச்சையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். அவரது பேச்சுக்கள் பயங்கரவாதத்தை தூண்டுவது போல் அமைந்துள்ளன. எனவே அவரை உடனே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

    பெரியார் சிலை மீது செருப்பு வீசியதும் அவரது தூண்டுதலின் பேரில்தான் நடந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியதாவது:-


    எச்.ராஜா தரக்குறைவான வார்த்தைகளை பேசுவது இது முதன் முறையல்ல. எல்லோரையும் தரக்குறைவாக பேசுவதற்கு பெயர்தான் எச்.ராஜா என்பது. இது வரையில் பலமுறை அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையும், அரசும் சும்மா இருந்ததன் விளைவு அவர் இன்று நீதிமன்றத்தையும், தரக்குறைவாக பேசியிருக்கிறார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விட்டோம் என்பது மட்டும் பயன் அளிக்காது.

    நீதிமன்றங்கள், காவல்துறை, அரசு எல்லாவற்றையும் தாண்டி மக்கள் மன்றம் அதற்கான தண்டனையை வழங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #elangovan #hraja

    நீதிமன்றம் மற்றும் காவல்துறையை இழிவுபடுத்தும் வகையில் எச்.ராஜா பேசியது அதிகாரத் திமிர் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்தார். #Seeman #hraja
    சென்னை:

    புதுக்கோட்டை மாவட்டம் மெய்யப்புரத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த வாக்குவாதத்தின் போது, சென்னை உயர் நீதிமன்றம் குறித்தும் காவல்துறை குறித்தும் அவர் அவதூறாகவும், மிக மோசமாகவும் பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது. அவர் மீதான புகார் தொடர்பாக சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரித்தது. எச்.ராஜா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    எச்.ராஜாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

    எச்.ராஜா பேசிய வார்த்தைகளை நாங்களோ, பிற இயக்கங்களோ பயன்படுத்தியிருந்தால் என்னவாகியிருக்கும்? சனநாயகப் பேராற்றல்களாக இருக்கிற ஊடகங்கள்தான் அதனை மக்களுக்குச் சொல்ல வேண்டும். பொதுவெளியில் வைரமுத்து பற்றியும், அவரது தாயார் பற்றியும் மிக இழிவாகப் பேசுகிறார். அதற்கு அவரது கட்சியின் தலைமையோ, ஆளுகிற அரசோ ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

    அதனைப் போலத் தற்போது காவல்துறையினரைப் பற்றியும், உயர்நீதிமன்றத்தைப் பற்றியும் மிக இழிவாகப் பேசுகிறார். அதிகாரத்திற்கு வந்துவிட்டால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற மனநிலையினைத்தான் இதுவெல்லாம் காட்டுகிறது. இதனைத்தான் அதிகாரத் திமிர் என்கிறோம். அப்படியானால், சட்டமும், திட்டமும் சாமானியர்களுக்கு மட்டும்தானா? அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் அப்பாவிகளுக்கு மட்டும்தானா? என்கிற கேள்வியைத்தான் இதுவெல்லாம் எழுப்புகிறது. 

    எச்.ராஜா தான் வகிக்கிற பொறுப்பு, தனது வயது போன்றவற்றிற்காகவாவது பொறுப்புடன் நடந்துகொண்டிருக்க வேண்டும். அதனை விடுத்து வாய்க்கு வந்தபடி தான்தோன்றித்தனமாகப் பேசுவது அழகல்ல.

    இவ்வாறு சீமான் கூறினார்.  #Seeman #hraja
    தமிழ்நாட்டில் 2 ஆயிரம் இந்து கோவில்கள் இருந்த இடம் தெரியவில்லை என பாரதீய ஜனதா பிரசார கூட்டத்தில் எச்.ராஜா பேசினார். #hindutemple #hraja #bjp
    வேப்பந்தட்டை 

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூரில் பாரதீய ஜனதா கட்சியின் 4 ஆண்டு சாதனை விளக்க பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் தனபால் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசுகையில், இந்தியாவில் காங்கிரஸ் கட்சி 50 ஆண்டு கால ஆட்சியில் செய்யாத பல சாதனைகளை பா.ஜ.க. 4 ஆண்டுகளில் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் கடைசி 10 ஆண்டு கால ஆட்சியில் மட்டும் 12 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. 

    பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. 5 கோடி குடும்பங்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையில் ஊழல் நடந்துள்ளது. குறிப்பாக 2 ஆயிரம் இந்து கோவில்கள் இருந்த இடத்தை உரு தெரியாமல் அழித்து, ஆக்கிரமிப்பு செய்து பலர் வீடுகள் மற்றும் கடைகள் கட்டியுள்ளனர். இதையெல்லாம் மீட்பதற்காகத்தான் இந்து கோவில்கள் மீட்பு இயக்கம் தற்போது முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 

    இவ்வாறு அவர் பேசினார். 

    அப்போது எச்.ராஜா முன்னிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 30 இளைஞர்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர். திருச்சி கோட்ட பொறுப்பாளர் டாக்டர் சிவசுப்ரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. கலிவரதன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், மாவட்ட பொது செயலாளர்கள் சாமிநாதன், இளங்கோவன் ஆகியோர் பேசினர். இதில் பா.ஜ.க. பொறுப்பாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் மண்டல பொது செயலாளர் சிவராமன் நன்றி கூறினார். #hindutemple #hraja #bjp
    சிலைகள் குறித்து பேசிய ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கருத்து வருத்தமளிக்கிறது என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார். #hraja #gst #tamilnadustatue

    நெல்லை:

    நெல்லையில் பா.ஜ.க.தேசிய செயலாளர் எச். ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டு 1 ஆண்டு ஆகிறது. இதை அமல்படுத்தும் முன்பு பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர். மாநிலத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டால் அதை மத்திய அரசு ஈடுசெய்யும் என்று கூறி தான் ஜி.எஸ்.டி.யை அமுல்படுத்தினோம். ஆனால் இப்போது தமிழக அரசுக்கு மறைமுகமாக 6 ஆயிரம் கோடி அதிக வருவாய் கிடைத்துள்ளது.

    எனவே மாநில அரசுக்கு வருவாய் இழப்பு இல்லை. வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு முடிவு ஏற்பட்டுள்ளது. சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கோர்ட்டில் தங்களது நடவடிக்கைகளுக்கு தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என கூறியுள்ளது வருத்த மளிக்கிறது. சிலைகள் மட்டுமல்ல அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களே மாயமாகியுள்ளன.

    அறநிலையத்துறைக்கு 38 ஆயிரத்து 635 கோவில்களும், 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலமும் இருந்தன. தற்போது 2 ஆயிரம் கோவில்கள் வரை காணவில்லை. மதுரை உயர்நிதிமன்றம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்து கோவில்களின் சொத்துகளை மீட்க வேண்டும் என கூறியுள்ளது. இந்த தீர்ப்பை அமுல்படுத்த வலியுறுத்தி இந்து ஆலய மீட்பு குழு சார்பாக இம்மாத இறுதியில் சென்னையில ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    அடுத்த 3 மாதங்களில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இந்திய பொருளாதாரத்தை பிரதமர் மோடி சரியான பாதையில் கொண்டு செல்கிறார். 

    இவ்வாறு அவர் கூறினார். #hraja #gst #tamilnadustatue

    தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக கோவில் சொத்து பராமரிப்பு கணக்கு தணிக்கை செய்யப்படவில்லை என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் ஆலயம் மீட்பு குழு சார்பில் ஸ்ரீரங்கம் புனிதம் காப்போம் என்ற பொதுக்கூட்டம் நடந்தது. செண்பக மன்னார் செண்டலங்கார ஜீயர் தலைமை தாங்கினார்.

    இதில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசியதாவது:-

    கோவில் ஆகம விதிகளில் அரசு தலையிடக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு 1940 ஆண்டு தீர்ப்பில் உள்ளது. இதனை தமிழக அறநிலையத்துறை கடைபிடிக்கவில்லை. கோவில்களுக்குள் அறநிலையத்துறை நுழையக்கூடாது என்று 1965-ம் ஆண்டு தீர்ப்பு உள்ளது. இதுவரை அதற்கு எந்த தடை ஆணையும் இல்லை. இதனால் அறநிலையத்துறை கோவில்களில் இருக்க கூடாது.

    தமிழகத்தில் 38 ஆயிரத்து 635 கோவில்கள் உள்ளதாக கூறுகின்றனர். ஆனால் 5 சதவீத கோவில்களையே காணவில்லை. 10 சதவீதம் கோவில்கள் சிதிலமடைந்துள்ளன. கோவில் நிலங்களை நிர்வகிக்க 628 அதிகாரிகள் இருந்தும் நாளுக்கு நாள் கோவில்கள் மாயமாகி வருகின்றன.

    கோவில் குருக்கள் அனைவருக்கும் ஒரு ஆண்டுக்கு ரூ.58 ஆயிரம் மட்டுமே சம்பளம் வழங்கப்படுவதாக ஆவணங்களில் உள்ளன. அதிகாரிகள், பணியாளர்கள் கோவில் வருவாயில் 18 சதவீதம் பராமரிப்பு என்ற போர்வையில் சுருட்டப்படுகின்றன.

    கடந்த பல ஆண்டுகளாக கோவில் சொத்துக்கள் பராமரிப்புக்கு கணக்கு தணிக்கை நடக்கவில்லை. ஆனால் இதற்காக கோவில் வருவாயில் 4.5 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்டுள்ளதாக அரசு தெரிவிக்கிறது. ஸ்ரீரங்கம் கோவிலுக்கு 403 ஏக்கர் புஞ்சை, 15 தோப்புகள், 2 வணிக வளாகம் என்று கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ளன.

    இதனை முறையாக பராமரித்து வரி வசூல் செய்வதில் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை. மாறாக கோவில் ஆகம விதிகளில் தொடர்ந்து தலையிட்டு பக்தர்களின் கோபத்தை சம்பாதிக்கின்றனர். இந்து கோவில்களை விட்டு அறநிலையத்துறை வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்.

    தமிழகத்தில் உள்ள கோவில் நிலையங்களில் உள்ள 20 லட்சம் வீடுகளுக்கு குறைந்த பட்சம் வாடகை வசூல் செய்தால் கூட பல லட்சம் கோடிகள் வருமானம் வரும். இதை வைத்து இந்து குழந்தைகளுக்கு இலவச தரமான மருத்துவத்தை அளிக்க முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார். #BJP #Tamilnews
    முன்னேற்றத்திற்கு எதிரான சக்திகளை கடுமையான நடவடிக்கைகள் மூலம் மாநில அரசு ஒடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா தேசிய தலைவர் எச்.ராஜா கூறினார். #BJP #HRaja
    திருச்செங்கோடு:

    பாரதிய ஜனதா கட்சி மோடி தலைமையில் அரசு அமைந்து 4 ஆண்டுகள் நிறைவானதையொட்டி கட்சியின் ஒவ்வொரு நிர்வாகியும், சமுதாய தலைவர்கள், பல துறைகளின் முன்னோடிகள், பிரபலமானர்களை சந்தித்து 4 ஆண்டுகால ஆட்சியின் சாதனை செயல்பாடுகள் குறித்து பேச வேண்டும் என்று தேசிய தலைமையால் முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து திருச்செங்கோட்டில் உள்ள அரசியல் சட்ட நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்தவரும், குழுவின் உறுப்பினருமான காளியண்ண கவுண்டரை சந்திக்க பாரதிய ஜனதாவின் தேசிய தலைவர் எச்.ராஜா திருச்செங்கோடு வந்தார்.

    அப்போது எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசுக்கு எதிராக சட்ட விரோதமாக செயல்பட ஊக்கப்படுத்தபடுகிறார்கள்.பொதுவாக மக்கள் போராட்டம் என்றால் அரசு தீர்வு சொன்னவுடன் அடங்கி விடும்.

    ஆனால் இவர்கள் ஊடுருவலால் முடிவுக்கு வர வேண்டிய ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போராட்டங்கள் பெரிதானது. காவல் துறை தலையிட வேண்டிய நிலை உருவானது.

    நெடுவாசலை பொருத்த வரை உள்ளூர் மக்களும், மாநில அரசும் ஒப்புக் கொள்ளும் வரை திட்டம் அமல்படுத்தப்படாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. வட நாடு பகுதிகளில் இன்னும் இன்றும் பல இயக்கங்களை சேர்ந்த 30 பேர் போராட்டம் செய்கின்றனர்.

    ஏப்ரல்-1 முதல் ஸ்டெர்லைட் செயல்படாத நிலையில் கலவரம் உண்டாகும் வரை பிரிவினைவாத, பயங்கரவாத நக்சலிச செயல்பாடுகள் அதிகரித்து இருக்கிறது. உளவு துறைக்கு தெரியுமா அல்லது தெரியாதா என தெரியவில்லை.

    தமிழக அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 8 வழி சாலை சீமான் கொடுத்த அறிக்கை சாதரணமாக எடுத்துக் கொள்ள கூடியதல்ல. முன்னேற்றத்திற்கு எதிரான சக்திகளை கடுமையான நடவடிக்கைகள் மூலம் மாநில அரசு ஒடுக்க வேண்டும்.


    காவிரி பிரச்சனையில் 50 ஆண்டு கால திராவிட இயக்கங்களில் துரோகம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. கேட்ட மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் ஒரு நன்றி கூட தி.மு.க தெரிவிக்கவில்லை.

    தமிழ்நாட்டில் மணல் கொள்ளை என்பது மிகவும் சீரியசான ஒன்று ஆகும். மணல் அடுத்த மாநிலத்துக்கு அனுமதிக்க கூடாது. இறக்குமதி மணல் கிடைப்பதால் மணல் அள்ள விட மாட்டோம் என்று சட்டம் கொண்டும் வர வேண்டும். 18 அடி வரை மணல் அள்ளினால் தண்ணீர் வந்தாலும் பள்ளத்தில் தேங்கி கடைமடை வரை வராது.

    2004-ல் பெட்ரோல் விலை 34 ரூபாய், 10 ஆண்டு தி.மு.க. காங்கிரஸ் ஆட்சியில் 2014ன் படி லிட்டர் 74 ரூபாய் 10 ஆண்டில் 41 ரூபாய் விலை உயர்வு சராசரியாக ஆண்டுக்கு 4 ரூபாய் 4 பைசா உயர்ந்துள்ளது. அதன் பிறகு 4 ஆண்டுகளுக்கு பிறகு 9 ரூபாய் உயர்ந்துள்ளது. சராசரியாக 2 ரூபாய் 10 பைசாதான் உயர்ந்துள்ளது. விலைவாசி கட்டுப்பாட்டில் உள்ளது என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.

    விலை உயர்வு என்பது பொய் பிரசாரம். பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர மத்திய அரசு தயாராக உள்ளது. அவ்வாறு வந்தால் டீசல் ரூ.45க்கும், பெட்ரோல் ரூ.55 க்கும் கிடைக்கும் ஆனால் அதை அனுமதிக்க மாட்டோம் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் கூறுகிறார்.

    இவ்வாறு எச்.ராஜா கூறினார். #BJP #HRaja
    தமிழகம் முன்னேற ஆட்சி மாற்றம் தேவை என்று வேதாரண்யத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பேசினார். #BJP #HRaja
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள கரியாப்பட்டினம் கடைத்தெரு பகுதியில் பா.ஜனதா சார்பில் ‘‘உழவனின் உரிமை மீட்பு சைக்கிள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்’’ மாநில கல்வியாளர் பிரிவு செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. தஞ்சை கோட்ட பொறுப்பாளர் வரதராஜன், நாகை தெற்கு மாவட்டத் தலைவர் நேதாஜி, மாவட்டச் செயலாளர் தமிழ்நேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-

    காவிரி பிரச்சனைக்கு முக்கிய காரணம் தி.மு.க.வும், அதற்கு துணை நின்ற காங்கிரஸ் கட்சியும்தான். 50 ஆண்டு கால ஒப்பந்தத்தை நீட்டிப்பு செய்யாமல் அதற்கு போடப்பட்ட நீதிமன்ற வழக்கையும் தள்ளுபடி செய்து துரோகம் செய்தது தி.மு.க.தான். மக்களை ஏமாற்றும் கட்சியாகவும், துரோகியாகவும் உள்ள தி.மு.க. தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் கம்யூ. கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றனர். தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தனது செயல்பாடுகள் மற்றும் பேச்சுகள் மூலம் தான் அரசியலில் இருப்பதற்கு தகுதியில்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

    தற்போது தமிழகம் உலகிலேயே ஊழல் மிகுந்த மாநிலமாக உள்ளது. 50 ஆண்டு காலமாக தமிழ்நாடு திராவிட கட்சிகளால் முன்னேறவில்லை. தமிழகம் முன்னேற ஆட்சி மாற்றம் தேவை.

    இவ்வாறு எச்.ராஜா பேசினார்.

    முன்னதாக கோவில் பத்து ஊராட்சியிலிருந்து மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் தொடங்கிய சைக்கிள் பேரணியை மாநில செயலாளர் வேதரத்தினம் தொடங்கி வைத்தார். #BJP #HRaja
    ×