search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "final"

    உலக குத்துச்சண்டையில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் சாதனைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி, மேற்கு வங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். #MaryKom #WorldBoxing #RamnathKovind #PMModi #MamataBanerjee
    புதுடெல்லி:

    உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியாவின் மேரிகோம், உக்ரைனின் ஹன்னா ஒகோட்டோவை எதிர் கொண்டார். இதில் அபாரமாக ஆடிய மேரி கோம் 5-0 என்ற கணக்கில் உக்ரைன் வீரர் ஹன்னா ஒகோட்டோவை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

    இந்நிலையில், உலக குத்துச்சண்டை போட்டியில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் சாதனைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் மேரி கோம் ஆறாவது முறையாக தங்கம் வென்று சாதனை புரிந்ததற்கு பாராட்டுக்கள். இந்த சாதனை மூலம் இந்திய சிறுமிகளுக்கு நீங்கள் முன்மாதிரியாக விளங்குகிறீர்கள் என பதிவிட்டுள்ளார்.



    இதேபோல், பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 6-வது முறையாக தங்கம் வென்ற மேரி கோமுக்கு வாழ்த்துக்கள். அவர் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளார். உலக அரங்கில் அவர் ஆற்றியுள்ள சாதனைக்கு பாராட்டுக்கள் என பதிவிட்டுள்ளார்.
     
    மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 6 வது முறையாக பட்டம் வென்ற உங்களால் நாங்கள் பெருமை அடைகிறோம் என பதிவிட்டுள்ளார். #MaryKom #WorldBoxing #RamnathKovind #PMModi #MamataBanerjee
    பெண்கள் உலக சாம்பியன்ஷிப்ஸ் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை மேரி கோம் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று 6வது தங்கப் பதக்கத்தை வென்றார். #MaryKom #WorldBoxing
    புதுடெல்லி:

    டெல்லியில் நடைபெற்று வரும் உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் பல்வேறு பிரிவுகளில் இன்று இறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
     
    அதில் 48 கிலோ எடைப்பிரிவுக்காக நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவின் மேரிகோம், உக்ரைனின் ஹன்னா ஒகோட்டோவை எதிர் கொண்டார்.

    இந்த போட்டியில் அபாரமாக ஆடிய மேரி கோம் 5-0 என்ற கணக்கில் உக்ரைன் வீரர் ஹன்னா ஒகோட்டோவை வீழ்த்தினார். இதன்மூலம் உலக குத்துச்சண்டை போட்டியில் 6-வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார்.  #MaryKom #WorldBoxing
    உலக பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சோனியா சாஹல் இறுதிப்போட்டியை எட்டினார். #WorldBoxing #Sonia
    10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் 57 கிலோ உடல் எடைப்பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதியில் இந்திய வீராங்கனை சோனியா சாஹல், வடகொரியாவின் ஜோ சன் வாவை எதிர்கொண்டார். மூன்று ரவுண்ட் கொண்ட இந்த ஆட்டத்தில் இருவரும் களத்தில் ஆக்ரோஷத்தை வெளிக்காட்டினர். முதல் இரண்டு ரவுண்டில் இருவரும் சரிசம ஆதிக்கம் செலுத்தியது போன்றே தெரிந்தது. 3-வது ரவுண்டில் தொடக்கத்தில் தற்காப்பு பாணியை கையாண்ட சோனியா கடைசி கட்டத்தில் எதிராளிக்கு சில குத்துகளை விட்டு, நடுவர்களின் கவனத்தை ஈர்த்தார்.

    முடிவில் 5-0 என்ற கணக்கில் (30-27, 30-27, 30-27, 29-28, 30-27) சோனியா சாஹல் வெற்றி பெற்று முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் அவருக்கு குறைந்தது வெள்ளிப்பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

    அரியானாவைச் சேர்ந்த 21 வயது சோனியா சாஹல் கூறுகையில், ‘இறுதிசுற்றுக்கு வருவேன் என்று கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. அதுவும் குறைந்த வயதிலேயே இந்த நிலையை எட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அரைஇறுதியை பொறுத்தவரை கடைசி ரவுண்டில் ஆதிக்கத்தை நிலைநாட்டினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று பயிற்சியாளர்கள் அறிவுறுத்தினர். அதனால் எனது ஆட்ட பாணியை உடனடியாக மாற்றிக்கொண்டு, வேகத்தை மேலும் தீவிரப்படுத்தி, வெற்றியை வசப்படுத்தினேன். எனது இறுதிப்போட்டிக்குரிய எதிராளி, கடுமையான குத்துகளை விடக்கூடியவர். அதற்கு ஏற்ப நான் தயாராக வேண்டியது அவசியம். உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் தங்கப்பதக்கம் வெல்ல விரும்புகிறேன்’ என்றார்.

    மற்றொரு அரைஇறுதியில் இந்தியாவின் சிம்ரன்ஜித் கவுர் (64 கிலோ பிரிவு), சீனாவின் டான் டோவுடன் கோதாவில் இறங்கினார். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் புகுந்த சிம்ரன்ஜித் கவுர், எதிராளியை பின்நோக்கி ஓடும் வகையில் விடாமல் தாக்குதல் தொடுத்தார். ஆனாலும் ஏதுவான இடைவெளியில் சிம்ரன்ஜித் கவுரின் முகத்தில் டான் டோ சில குத்துகளை விட்டு, ஆட்டத்தை தனக்கு சாதகமாக மாற்றினார். பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் சிம்ரன்ஜித் கவுர் 1-4 என்ற கணக்கில் (27-30, 30-27, 27-30, 27-30, 28-29) தோற்று வெண்கலப்பதக்கத்தை பெற்றார். உலக போட்டியில் சிம்ரன்ஜித் கவுர் பதக்கம் வென்றது இதுவே முதல் முறையாகும்.

    இன்று (சனிக்கிழமை) மாலை இறுதிப்போட்டிகள் நடக்கின்றன. 6-வது தங்கப்பதக்கத்துக்கு குறி வைத்துள்ள இந்தியாவின் மேரிகோம், உக்ரைனின் ஹன்னா ஒகோட்டோவை (48 கிலோ) எதிர்கொள்கிறார். சோனியா சாஹல் தனது இறுதி சுற்றில் ஜெர்மனியின் வானெர் கேப்ரியலியுடன் மல்லுகட்டுகிறார். போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. #WorldBoxing #Sonia
    பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிப்போட்டியில் ஸ்டீபன்ஸ்- ஸ்விடோலினா இன்று மோதுகிறார்கள். #WTAFinal #SloaneStephen #ElinaSvitolina
    சிங்கப்பூர்:

    பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதியில் உக்ரைனின் ஸ்விடோலினா 7-5, 6-7 (5), 6-4 என்ற செட் கணக்கில் கிகி பெர்டென்சை (நெதர்லாந்து) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு அரைஇறுதியில் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), கரோலினா பிளிஸ்கோவாவுடன் (செக்குடியரசு) மல்லுகட்டினார். இதில் முதல் 8 கேம்களை வரிசையாக கைப்பற்றிய பிளிஸ்கோவா எளிதில் வெற்றி காணுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் பிறகு ஸ்டீபன்ஸ் எழுச்சி பெற்று மிரள வைத்தார். 1 மணி 55 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் ஸ்டீபன்ஸ் 0-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் பிளிஸ்கோவாவை வெளியேற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் ஸ்டீபன்ஸ்- ஸ்விடோலினா இன்று மோதுகிறார்கள். 
    தியோதர் டிராபி இறுதிப் போட்டியில் கேப்டன் ரகானேவின் அபாரமான சதத்தால் இந்தியா ‘சி’ அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியது. #DeodharTrophy #Rahane #shreyasIyer
    தியோதர் டிராபி இறுதிப் போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா ‘சி’ - இந்தியா ‘பி’ அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா ‘பி’ அணிக்கு எதிராக ரகானே தலைமையிலான இந்தியா ‘சி’ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    ரகானே மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இஷான் கிஷன் 87 பந்தில் 11 பவுண்டரி, 6 சிக்சருடன் 114 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த ஷுப்மான் கில் 33 பந்தில் 26 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 18 பந்தில் 39 ரன்கள் சேர்த்தனர். தொடக்க வீரர் ரகானே கடைசி வரை ஆட்டமிழக்காமல் 156 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 144 ரன்கள் விளாச இந்தியா ‘சி’ 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது.

    அதன்பின்னர் 353 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்தியா ‘பி’ களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் கெய்க்வாட், மயங்க் அகர்வால் இறங்கினர்.



    மயங்க் அகர்வால் 14 ரன்களில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் நிதானமாக ஆடினார். கெய்க்வாட், அய்யர் ஆகியோர் சேர்ந்து 116 ரன்கள் ஜோடி சேர்த்தனர். கெய்க்வாட்60 ரன்னில் வெளியேறினார். 

    ஒருபுறம் ஷ்ரேயாஸ் அய்யர் சிக்சர்கள், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 114 பந்துகளில் 8 சிக்சர்கள், 11 பவுண்டரிகளுடன் 148 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் இந்தியா பி அணி 46.1 ஓவரில் 323 ரன்களுக்கு ஆல் அவுட்டானாது.

    இந்தியா சி சார்பில் பப்பு ராய் 3 விக்கெட்டும், நவ்தீப் சைனி, ரஜ்னீஷ் குருபானி,விஜய் சங்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். சதமடித்த ரகானே ஆட்ட நாயகன் விருது பெற்றார். 

    இதையடுத்து, 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா சி அணி வெற்றி பெற்றதுடன், தியோதர் கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது.
    #DeodharTrophy #Rahane #shreyasIyer
    உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய முன்னணி வீரர் பஜ்ரங் பூனியா வெள்ளிப் பதக்கம் வென்றார். #WorldWrestlingChampionship #BajrangPunia #Final
    புடாபெஸ்ட்:

    உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்றது. இதில் 65 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய முன்னணி வீரர் பஜ்ரங் பூனியாவும், ஜப்பான் வீரர் டகுடோ ஒடோகுரோவுடம் மோதினர்.

    இதில் பஜ்ரங் புனியா சிறப்பாக விளையாடினாலும், ஜப்பான் வீரர் ஒடோகுரோ அவரை சமாளித்தார். இதையடுத்து, இறுதிப் போட்டியில் 16-9 என்ற கணக்கில் ஒடோகுரோ பஜ்ரங் புனியாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    உலக மல்யுத்தத்தில் இரண்டாவது முறையாக இந்திய வீரர் பஜ்ரங் புனியா பதக்கம் வென்றுள்ளார். இவர் ஏற்கனவே 2013-ம் ஆண்டில் வெண்கலப் பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. #WorldWrestlingChampionship #BajrangPunia #Final
    டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தாய் ஜூ யிங், சாய்னாவை வீழ்த்தி மகுடம் சூடினார். #DenmarkOpen #SainaNehwal #TaiTzuYing
    ஒடென்சி:

    டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஒடென்சி நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 10-வது இடம் வகிக்கும் சாய்னா நேவால் (இந்தியா), ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் தாய் ஜூ யிங்குடன் (சீனதைபே) மல்லுகட்டினார். முதல் செட்டை தாய் ஜூ யிங் வசப்படுத்த, 2-வது செட்டில் சாய்னாவின் கை ஓங்கியது.



    இந்த செட்டில் ஒரு கேம் 41 ஷாட்டுகள் வரை நீடித்தது. 2-வது செட்டை சாய்னா கைப்பற்றியதால், கடைசி செட்டில் விறுவிறுப்பு மேலும் எகிறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி செட்டில் தாய் ஜூ யிங் சாதுர்யமான ஷாட்டுகளால் சாய்னாவை மிரள வைத்தார். இந்த செட்டில் சாய்னாவினால் கொஞ்சம் கூட ஈடுகொடுத்து ஆட முடியவில்லை. 52 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் தாய் ஜூ யிங் 21-13, 13-21, 21-6 என்ற செட் கணக்கில் சாய்னாவை வீழ்த்தி மகுடம் சூடினார். 83 ஆண்டு கால டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் வரலாற்றில் சீனதைபே நாட்டை சேர்ந்த ஒருவர் பட்டம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.

    தாய் ஜூ யிங்குக்கு எதிராக இதுவரை 18 முறை மோதியுள்ள சாய்னா அதில் சந்தித்த 13-வது தோல்வி இதுவாகும். 2014-ம் ஆண்டில் இருந்து ஜூ யிங்குக்கு எதிராக மோதிய 11 ஆட்டங்களிலும் சாய்னாவுக்கு தோல்வியே மிஞ்சியிருக்கிறது. வாகை சூடிய ஜூ யிங்குக்கு ரூ.40 லட்சமும், சாய்னாவுக்கு ரூ.20 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. 
    விஜய் ஹசாரே டிராபியின் இறுதிப்போட்டியில் டெல்லி அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி கோப்பையை கைப்பற்றியது. #VijayHazareTrophy
    பெங்களூரு:

    விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. 37 அணிகள் பங்கேற்ற இதில் லீக், கால் இறுதி மற்றும் அரை இறுதி போட்டிகள் முடிந்துள்ளன.
     
    இந்நிலையில் பெங்களூருவில் நடந்த இறுதி ஆட்டத்தில் மும்பை, டெல்லி அணிகள் மோதின.
     
    டாஸ் ஜெயித்த மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, டெல்லி அணி களமிறங்கியது.

    அந்த அணியின் ஹிம்மத் சிங் 41 ரன்களும், துருவ் ஷோரே 31 ரன்களும், சுபோத் பாதி 25 ரன்களும், பவன் நெகி 21 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர். இறுதியில், டெல்லி அணி 45.4 ஓவரில் 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.



    மும்பை அணி சார்பில் தவால் குல்கர்னி, ஷிவம் துபே 3 விக்கெட்டும், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.

    டெல்லி அணியின் சிறப்பான பந்து வீச்சில் சிக்கி 40 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தத்தளித்தது.
    அதன்பின் ஜோடி சேர்ந்த சித்தேஷ் லால் மற்றும் ஆதித்யா தரே ஆகியோர் 100 ரன்கள் ஜோடி சேர்த்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.

    ஆதித்யா தரே 71 ரன்களும், சித்தேஷ் லால் 48 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இறுதியில், மும்பை அணி 35 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், விஜய் ஹசரே கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகனாக ஆதித்ய தரே தேர்வு செய்யப்பட்டார். #VijayHazareTrophy
    டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் கிரிகோரியாவை வீழ்த்தி சாய்னா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். #DenmarkOpen #SainaNehwal
    ஓடென்ஸ்:

    டென்மார்க் நாட்டின் ஓடென்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சாய்னா நேவால் உலக தரவரிசையில் 19வது இடம் வகிக்கும் கிரிகோரியா மரீஸ்கா துன்ஜங்க் உடன் அரை இறுதியில் விளையாடினார்.

    இந்த போட்டியில் 21-11, 21-12 என்ற செட் கணக்கில் கிரிகோரியாவை வீழ்த்தி சாய்னா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இப்போட்டி 30 நிமிடங்கள் நீடித்தது.

    அவர் இறுதி போட்டியில் உலக தரவரிசையில் முதல் இடம் வகிக்கும் தாய் சூ யிங் உடன் விளையாட இருக்கிறார். #DenmarkOpen #SainaNehwal 
    ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த பரபரப்பான அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #U19AsiaCup #India #Bangladesh
    டாக்கா:

    8 அணிகள் இடையிலான 5-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் டாக்காவில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, வங்காளதேச வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 49.3 ஓவர்களில் 172 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 37 ரன்னும், சமீர் சவுத்ரி 36 ரன்னும், அனுஜ் ரவாத் 35 ரன்னும் எடுத்தனர்.



    பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன. 6-வது விக்கெட் இணையான ஷமிம் ஹூசைன் (59 ரன்கள்), அக்பர் அலி (45 ரன்கள்) ஆகியோர் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து ரன் சேர்த்தனர். மற்ற வீரர்கள் விரைவில் ஆட்டம் இழந்தனர்.

    கடைசி 4 ஓவர்களில் வங்காளதேச அணியின் வெற்றிக்கு 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கடைசி விக்கெட்டாக மின்ஹாஜூர் ரகுமான் (6 ரன்) ரன்-அவுட் ஆனார். முடிவில் வங்காளதேச அணி 46.2 ஓவர்களில் 170 ரன்னில் ஆட்டம் இழந்து. இதனால் இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி தரப்பில் மொகித் ஜங்ரா, சித்தார்த் தேசாய் தலா 3 விக்கெட்டும், ஹர்ஷ் தியாகி 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    டாக்காவில் இன்று நடைபெறும் 2-வது அரைஇறுதியில் இலங்கை அணி, ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது.  #U19AsiaCup #India #Bangladesh

    ஆசிய கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் நாளை நடக்கிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா-மொர்தாசா தலைமையிலான வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன. #AsiaCupfinal #AsiaCup2018 #INDvBAN
    துபாய்:

    6 நாடுகள் பங்கேற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. கடந்த 15-ந் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 6 நாடுகள் பங்கேற்றன. அவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. 20-ந் தேதியுடன் ‘லீக்’ ஆட்டம் முடிந்தது. இதன் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

    5 முறை சாம்பியனான இலங்கை, ஹாங்காங் தொடக்க சுற்றிலேயே வெளியேறின. ‘சூப்பர்4’ சுற்று 21-ந் தேதி தொடங்கியது.

    இந்திய அணி வங்காள தேசம், பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. ஆப்கானிஸ்தானுடன் ‘டை’ செய்தது. ஆப்கானிஸ்தான் அணி 2 தோல்வியை தழுவியதால் வாயப்பை இழந்து வெளியேறியது. இறுதிப்போட்டிக்கு நுழையும் இன்னொரு அணியை முடிவு செய்வதற்கான ஆட்டம் அபுதாபியில் நேற்று நடந்தது.


    இதில் பாகிஸ்தான் அணி வங்காளதேசத்திடம் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறியது. முதலில் விளையாடிய வங்காளதேசம் 48.5 ஓவரில் 239 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணியால் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 202 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் வங்காள தேசம் 37 ரன்னில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    ஆசிய கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா-மொர்தாசா தலைமையிலான வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன.

    பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் இருக்கும் இந்திய அணி ஆசிய கோப்பையை 7-வது முறையாக வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. 1984, 1988, 1990-91, 1995, 2010, 2016 (20 ஓவர்) ஆகிய ஆண்டுகளில் ஆசிய கோப்பையை வென்று இருந்தது.

    இந்த போட்டித்தொடரில் ஏற்கனவே வங்காள தேசத்தை ‘சூப்பர் 4’ சுற்றில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. அதே நேரத்தில் வங்காள தேசம் அணியை சாதாரணமாக எடை போட இயலாது. பாகிஸ்தானை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்து இருந்தது. இதனால் இந்திய வீரர்கள் மிகுந்த கவனத்துடன் விளையாடவேண்டும்.

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா, தவான், புவனேஷ்வர் குமார், பும்ரா, சாஹல் ஆகிய முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. நாளைய இறுதிப் போட்டிக்கு அவர்கள் திரும்புவார்கள்.


    தொடக்க வீரர்களான தவான் (327 ரன்), ரோகித் சர்மா (269 ரன்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இதில் தவான் இரண்டு சதமும், ரோகித் சர்மா ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதமும் அடித்துள்ளனர். இருவரது ஆட்டத்தை பொறுத்தே அணியின் ரன் குவிப்பு இருக்கும் இதே போல் அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், டோனி, கேதர் ஜாதவ் ஆகியோரும் அணிக்கு பலம் சேர்க்க கூடியவர்கள்.

    பந்து வீச்சில் பும்ரா, குல்தீப் யாதவ் (இருவரும் தலா 7 விக்கெட்), புவனேஷ்வர் குமார் (6 விக்கெட்), யசுவேந்திர சாஹல் (5 விக்கெட்), ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    வங்காள தேசம் அணி 3-வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. 2012-ல் பாகிஸ்தானிடமும், 2016-ல் இந்தியாவிடமும் தோற்று கோப்பையை இழந்தது. இதனால் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து முதல் முறையாக ஆசிய கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது.

    அந்த அணியில் முஷ்பிகுர் ரகிம் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளார். அவர் ஒரு சதம், ஒரு அரை சதத்துடன் 297 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக இருப்பார்.

    பந்துவீச்சில் முஷ்டாபிசுர் ரகுமான் 8 விக்கெட் கைப்பற்றி உள்ளார். இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை கொடுக்க கூடியவர். முன்னாள் கேப்டனும், ஆல் ரவுண்டருமான ஹகீப்-அல்-ஹசன் காயத்தால் விலகியது வங்காளதேச அணிக்கு பாதிப்பே.

    இரு அணிகளும் ஆசிய கோப்பையை வெல்ல கடுமையாக போராடும் என்பதால் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #AsiaCupfinal #AsiaCup2018 #INDvBAN
    18-வது அகில இந்திய பிஎஸ்என்எல் கைப்பந்து போட்டியின் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு- கர்நாடகா அணிகள் மோதுகின்றனர்.
    சென்னை:

    18-வது அகில இந்திய பிஎஸ்என்எல் கைப்பந்து போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த அரை இறுதி ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு 25-20, 19-25, 25-20, 25-15 என்ற கணக்கில் இமாச்சலபிரதேசத்தை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் கர்நாடகா 25-7, 25-14, 25-12 என்ற கணக்கில் உத்தரகாண்டை வீழ்த்தியது.

    இறுதிப் போட்டியில் தமிழ்நாடு- கர்நாடகா அணிகள் மோதுகின்றன. #tamilnews
    ×