search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Salem green expressway"

    எட்டு வழி பசுமை சாலை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, பா.ம.க. சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். #PMK #Ramadoss #ChennaiSalemGreenExpressway
    கம்பைநல்லூர்:

    அரூர் வட்டம், முத்தானூர் (எம்.தாதம்பட்டி) கிராமத்தில் எட்டு வழி பசுமை விரைவுச் சாலை திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.

    இந்த மக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தில் தருமபுரி பா.ம.க. எம்.பி. டாக்டர். அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

    பசுமை வழியால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு தென்னை மரத்துக்கு ரூ.40 முதல் ரூ.80 ஆயிரமும், விவசாய நிலங்களுக்கு ஒரு ஹக்டேருக்கு ரூ. 9 கோடி வரையிலும் இழப்பீடு வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

    சென்னை அருகேயுள்ள நிலங்களுக்கு கூட அதிகபட்சமாக ரூ.3 கோடி வரையிலும் மட்டுமே இழப்பீடு வழங்க முடியும். காய்ந்து போன தென்னை மரங்களுக்கு தற்போது மாநில அரசு ரூ.105யை வழங்கி வருகிறது. ஆனால் பசுமை வழிச்சாலையால் பாதிக்கப்படும் தென்னை மரங்களுக்கு ரூ.40 ஆயிரம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறுவது முற்றிலும் பொய்யானது.

    உளுந்தூர்பேட்டை வழியாக செல்லும் சென்னை சாலைக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் பலருக்கு இன்னும் இழப்பீடு கிடைக்கவில்லை. ஆனால், பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து விவசாயிகளை மூளைச்சலவை செய்து மத்திய, மாநில அரசுகள் ஏமாற்றி வருகிறது.



    பசுமை வழிச்சாலை அமைந்தால் சாலையின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் வகையில் தான் நிலத்தடியில் சிறு பாலங்கள் இருக்கும். சாலையின் குறுக்கே மக்கள் நடந்து கூட செல்ல முடியாது. சாலையின் இருபுறமும் கம்பி வேலிகள் அமைக்கப்படும்.

    அதேபோல், சென்னை முதல் சேலம் வரையிலும் 8 இடங்களில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்படும். இந்த சாலையில் செல்ல வேண்டுமெனில் கட்டணம் செலுத்த வேண்டும். பசுமை வழி விரைவுச் சாலையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது. எட்டு வழி பசுமை விரைவுச் சாலையால் ஓரிரு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே பயணத் தொலைவில் குறையும். பசுமை சாலையில் சென்னைக்கு சென்றால் 5.30 மணி நேரம் ஆகும். ஆனால், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஊத்தங்கரை, அரூர் வழியாக செல்லும் சேலம் முதல் சென்னை வரையிலான சாலையில், சென்னைக்கு சென்றால் 4.30 மணி நேரம் ஆகும். எனவே, எட்டு வழி விரைவுச் சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட்டு, அதற்கு மாற்றாக வாணியம்பாடி வழியாக செல்லும் சென்னை முதல் சேலம் வரையிலான தார் சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்றம் செய்து போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தலாம்.

    பசுமை வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளின் கருத்துக் கேட்புக்கு பிறகு, எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, பாமக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றார்.

    இவ்வாறு அவர் பேசினார். #PMK #Ramadoss  #ChennaiSalemGreenExpressway
    8 வழி சாலை திட்டத்துக்கு ஆதரவு அளித்த ரஜினிக்கு அ.தி.மு.க.வின் நாளேடான புரட்சித் தலைவி நமது அம்மா பாராட்டு தெரிவித்து உள்ளது. #ADMK #Rajinikanth
    சென்னை:

    எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டம் “நாட்டுக்கு நலம் பயக்கும் திட்டம்” என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறார்.

    மேலும் கழக அரசின் கல்விப் புரட்சியையும் அவர் வெகுவாக பாராட்டியும் இருக்கிறார். இதுஅரசியலுக்கு அப்பாற்பட்ட அவரது பெருந்தன்மையை காட்டுகிறது.

    உச்சி வெயில் அடித்தாலும், ஓங்கி மழை கொட்டினாலும், அத்தனைக்கும் காரணம் ஆளுங்கட்சிதான் என்று எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவிக்கிற உள்நோக்கம் கொண்ட சக்திகளுக்கு மத்தியில் அரசியல் சுய லாபங்களை தவிர்த்து, தமிழக அரசின் நன்நோக்கத்தை ரஜினிகாந்த் உரைகல்லாக நின்று உரசிப் பார்த்து வரவேற்று இருப்பது பாராட்டுக்குரியது.


    ஏற்கனவே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவர விவகாரத்திலும், அரசின் மீது அபாண்ட பழிபோட்டு அரசியல் லாபம் தேட தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வெறிகொண்டு அலைந்த நிலையில் அப்போதும் ரஜினிகாந்த் களத்தின் உண்மையை உள்வாங்கி நிஜத்தையே பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    காவிரி உரிமையை வென்றெடுத்தது, ஸ்டெர்லைட் ஆலைக்கு முற்று வைத்தது, ஹைட்ரோ கார்பன், மீத்தேனுக்கு விடை கொடுத்தது, பிளாஸ்டிக் அரக்கனுக்கு தடை போட்டது, நீர் நிலைகளை தூர் வாரியது, நீராபானம் கொண்டு வந்தது, சட்டம்-ஒழுங்கை பேணிக் காப்பதில் சமரசம் கொள்ளாமல், ரவுடிகளை வேட்டையாடி, அமைதியை நிலைநாட்டுவது என்றெல்லாம் திடமாகவும், தீர்க்கமாகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழகத்தை வளர்ச்சிப் பாதை நோக்கி அழைத்து செல்லும் எடப்பாடி பழனிசாமி அரசின் தூய்மையான தொண்டுள்ளத்திற்கு இது போன்ற உச்ச நடிகர்களின் பாராட்டு என்பது மேலும் ஊக்கத்தை தரும் தானே.... வரவேற்போம்... வாழ்த்துவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK #Rajinikanth
    சேலம்-சென்னை 8 வழி பசுமை விரைவு சாலை குறித்து ரஜினிகாந்த் ஆதரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அன்புமணி ராமதாஸ் நடிகர்களுக்கு மக்கள் பிரச்சினை எங்கே தெரியப் போகிறது என்று கூறியுள்ளார். #AnbumaniRamadoss #Rajinikanth
    சென்னை:

    பா.ம.க. 30-வது ஆண்டு தொடக்க விழா இன்று நடந்தது. இதையொட்டி தியாகராயநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சிக் கொடியை டாக்டர் ராமதாஸ் ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    அதைத்தொடர்ந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த 29 ஆண்டுகளில் நாங்கள் நடந்து வந்த பாதை மிகவும் கடினமானது. அதே நேரத்தில் இந்திய அளவிலும், தமிழக அளவிலும் பல நல்ல திட்டங்களை நிறைவேற்ற முடிந்தது. ஆயிரக்கணக்கான போராட்டங்களை நடத்தி உள்ளோம்.

    தமிழ்நாட்டின் 3-வது பெரிய கட்சியாக வளர்ந்திருக்கிறோம். இந்திய அளவில் 2 இட ஒதுக்கீடுகளையும், தமிழகத்தில் ஒரு இட ஒதுக்கீட்டையும் பெற்றிருக்கிறோம்.

    மதுவுக்கும், புகைக்கும் எதிராக தொடர்ந்து போராடி வருகிறோம். இன்று தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகளும் மதுவிலக்கை கொள்கை அளவில் ஏற்று இருப்பது எங்களுக்கு கிடைத்த வெற்றி.

    தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்து 2008-ம் ஆண்டிலேயே நாங்கள் அடிக்கல் நாட்டினோம். மேலும் பல நல்ல திட்டங்களுக்கு நாங்கள் ஒதுக்கீடு செய்த தொகையை இதுவரை செய்து முடிக்கவில்லை.

    3 வருடம் போராடி குட்காவுக்கு தடை கொண்டு வந்தேன். ஆனால் தமிழ்நாட்டில் இப்போதும் குட்கா விற்கப்படுகிறது. அதுவும் அமைச்சர்கள, அதிகாரிகள் ஆதரவோடு நடக்கிறது.

    ஒரே நேரத்தில் பாராளுமன்ற -சட்டமன்ற தேர்தலை நடத்துவது சரியான முடிவு அல்ல. அப்படி நடத்தினால் மாநில பிரச்சினைகள் அடிபட்டு போகும்.

    சேலம் பசுமை வழிச் சாலைக்கு நடிகர் ரஜினி ஆதரவு தெரிவித்திருக்கிறார். ஆனால் நடிகர்களுக்கு மக்கள் பிரச்சினை எங்கே தெரியப் போகிறது.

    அடுத்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும், ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தால்தான் நல்லதை செய்வார்கள். ஆனால் எடப்பாடி அரசு இனி வரப்போவதில்லை என்பது தெரியும். எனவே அடிக்கும் வரை அடிப்போம் என்று அடிக்கிறார்கள். இங்கு நடக்கும் ஊழல் மத்திய அரசுக்கும் தெரியாததல்ல. ஊழல் செய்வதும், ஊழலுக்கு துணை போவதும் ஒன்றுதான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்சசியில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, வக்கீல் பாலு, மு.ஜெயராமன், மாவட்ட செயலாளர்கள் கன்னியப்பன், சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். #PMK #AnbumaniRamadoss #Rajinikanth
    ரஜினி ஆதரவு அளித்துள்ளதால் 8 வழிச்சாலை சூப்பர் வழிச்சாலையாக அமையும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். #Rajinikanth #Udhayakumar #ChennaiSalemGreenExpressway
    மதுரை:

    அ.தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் வகையில் ஜெயலலிதா பேரவை சார்பில் சைக்கிள் பேரணி மதுரையில் தொடங்கி உள்ளது.

    நேற்று மாலை நடைபெற்ற விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்தனர்.

    இன்று காலை கொட்டும் மழையில் நனைந்தபடி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் 1,000 இளைஞர்கள் சைக்கிள் பேரணியில் புறப்பட்டனர்.

    மதுரை மாவட்டம் முழுவதும் 5 நாட்கள் அரசின் சாதனைகளை விளக்கி சைக்கிள் பேரணி நடைபெறுகிறது.

    பேரணியில் சென்ற அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

    மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி அ.தி.மு.க. அரசு தமிழக மக்களுக்கு தொடர்ந்து சிறப்பான திட்டங்களை தந்து வருகிறது.

    மக்கள் உரிமைகளை பெற்றுத்தருவதில் அ.தி.மு.க. அரசு என்றைக்கும் சளைக்காமல் செயல்பட்டு வருகிறது.

    காவிரி நதிநீர் பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை உள்ளிட்ட தமிழகத்தின் ஜீவாதார உரிமைகள் பேணி பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    மத்திய அரசுடன் அ.தி.மு.க. அரசு இணக்கமாக செயல்படுவதால் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது.

    எய்ம்ஸ் மருத்துவமனை, சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் பெரும்பாலான மக்கள் பயன் அடைகின்ற மகத்தான திட்டமாகும்.


    8 வழிச்சாலை திட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து இருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் இந்த திட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளார். இதன் மூலம் சூப்பர் வழிச்சாலையாக இது அமையும்.

    தமிழகம் வந்த பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா ஊழல் தொடர்பாக பேசியது அவரது கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்கு தான். பாரதிய ஜனதா கூட்டத்தில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை அமித் ஷா பேச மாட்டார்.

    பாரதிய ஜனதா தொண்டர்களை ஊக்கப்படுத்துவதற்காக அவர் பேசுவதை பெரிதாக எடுத்துக் கொள்ளத்தேவையில்லை.

    ஜெயலலிதா பேரவை சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த சைக்கிள் பேரணி வருகிற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் தொடக்கம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    அது போல இந்த அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற ஜெயலலிதா பேரவை தொடர்ந்து பாடுபடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சைக்கிள் பேரணியில் சரவணன் எம்.எல்.ஏ., வெற்றிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  #Rajinikanth #TNMinister #Udhayakumar #ChennaiSalemGreenExpressway
    சென்னையிலிருந்து சேலம் வரையிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடும் மக்களை கைது செய்வதற்கு பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னையிலிருந்து சேலம் வரையிலான 8 வழிச்சாலை அமைப்பதற்கான முன்னேற்பாடுகளுக்காக தமிழக ஆட்சியாளர்கள் தொடர்ந்து அடக்குமுறைகளை கட்ட விழ்த்து விட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமைச்சாலைக்காக நிலம் அளவீடு செய்யும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களை மிரட்டியும், அப்புறப்படுத்தியும் காவல் துறையினர் அத்துமீறியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

    பசுமைச்சாலைக்காக நிலம் அளவீடு செய்யும் பணிகளை திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் நிறைவு செய்து விட்ட அதிகாரிகள், இப்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் அந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மற்ற மாவட்டங்களை விட இந்த மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான வீடுகள், நீர்ப்பாசனக் கிணறுகள் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. சில இடங்களில் சாலை செல்லும் வழியும், அகலமும் துல்லியமாக தெரியாத நிலையில் அதிகாரிகள் உத்தேசமாக நிலங்களை அளவீடு செய்து கற்களை நட்டு வருகின்றன. தேவையே இல்லாத இடங்களில் கூட நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கு பொது மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவிக்கும் பொது மக்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாக இழுத்துச் சென்று அப்புறப்படுத்துகின்றனர். நில அளவீட்டுப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று காவல்துறையினர் மிரட்டுகின்றனர். இவை மிகக்கடுமையான மனித உரிமை மீறல் ஆகும்.

    தாயாகவும், தெய்வமாகவும் மதித்துக் காப்பாற்றி வந்த நிலங்களையும், குழந்தையாக கவனித்து வந்த பயிர்களையும் இழக்க மனம் வராமல் விவசாயிகள் தங்களின் நிலங்களில் உருண்டு புரளும் காட்சிகள் காண்போரின் இதயங்களை உலுக்குகின்றன. ஆனால், இதையெல்லாம் உணர்ந்து கொள்ளும் ஈரமோ, இரக்கமோ ஆள்வோரின் இதயங்களில் இல்லை; அவை கற்களாக மாறிவிட்டன.

    எந்த வகையில் பார்த்தாலும் சென்னை-சேலம் இடையிலான பசுமைவழிச் சாலையை நியாயப்படுத்த முடியாது. இந்த சாலை தேவையற்ற ஒன்று என்பதை ஏற்கனவே பலமுறை ஆதாரங்களுடன் பா.ம.க. விளக்கியிருக்கிறது.

    சென்னை சேலம் இடையே இப்போதுள்ள இரு தேசிய நெடுஞ்சாலைகள் அடுத்த 30 ஆண்டுகளில் அதிகரிக்கக் கூடிய போக்குவரத்து நெரிசலை தாங்கும் தன்மை கொண்டவை என்பதை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றையும் தாண்டி புதிய சாலை அமைக்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் விரும்பினால், சென்னையிலிருந்து வாணியம்பாடி வரை இப்போதுள்ள ஆறு வழிச்சாலையை பயன்படுத்திக் கொண்டு, அங்கிருந்து திருப்பத்தூர், ஊத்தங்கரை, அரூர், மஞ்சவாடி, அயோத்தியாப்பட்டினம் வழியாக சேலம் செல்லும் மாநில சாலையை 6 வழிச் சாலையாகவோ, 8 வழிச்சாலையாகவோ விரிவுபடுத்தலாம்; இதற்காக பெரிய அளவில் நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்காது.

    அதுமட்டுமின்றி, பசுமை சாலையை விட குறைந்த நேரத்தில் சென்னையிலிருந்து சேலத்திற்கு செல்ல முடியும் என்பதை விரிவான புள்ளி விவரங்களுடன் பா.ம.க. தெரிவித்துள்ளது. ஆனால், இவ்வளவுக்குப் பிறகும் தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான்; பசுமைச்சாலை திட்டத்தை தான் செயல்படுத்துவோம் என முதல்- அமைச்சர் பிடிவாதம் பிடிப்பதன் பின்னணியில் இருப்பது மக்கள் நலன் அல்ல... சுயநலம் தான்.

    மாநிலத்தின் வளர்ச்சிக்கு நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மிகவும் அவசியம் என்பதில் பா.ம.க.வுக்கு எப்போதுமே இரண்டாவது கருத்து இருந்ததில்லை. 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பா.ம.க.வின் தேர்தல் அறிக்கையைப் பார்த்தாலே சாலைகள் மேம்பாட்டுக்கு பா.ம.க. எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

    ஆனால், தேவையில்லாத சாலைக்காக 15,000 குடும்பங்களின் வாழ்வாதாரமாக திகழும் நிலங்களைப் பறிப்பது வளர்ச்சிக்கான செயலாக இருக்காது; அழிவுக்கான அடித்தளமாகவே அமையும் என்பது உறுதி.

    பசுமைச்சாலை தேவையா? என்பது குறித்த பகுத்தறிவும், அச்சாலை அமைக்கப்படவுள்ள பகுதிகளில் நிலத்தை இழக்கப்போவதை தாங்கிக் கொள்ள முடியாமல் கதறி அழும் விவசாயிகள் சிந்தும் கண்ணீரின் வலிமையை உணரும் சக்தியும் இருந்தால் அழிவுக்கான இந்த சாலைத் திட்டத்தை ஆட்சியாளர்கள் கைவிட்டிருப்பார்கள். ஆனால், அதிகார போதை கொடுக்கும் மயக்கமும், பசுமைச்சாலைத் திட்டத்தால் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கிடைக்கும் பயன்களின் காரணமாகவும் எப்படியாவது பசுமைச் சாலைத் திட்டத்தை செயல்படுத்தி விட வேண்டும் என்று முதல்-அமைச்சர் துடித்துக் கொண்டிருக்கிறார்.

    தமிழக ஆட்சியாளர்கள் காட்டும் இந்த அகங்காரத்தின் உச்சம் அவர்களின் அழிவுக்கு தொடக்கம் என்பதை சம்பந்தப்பட்டவர் உணர வேண்டும். மக்களின் உணர்வுகளை மதித்து சென்னையிலிருந்து சேலம் இடையிலான பசுமைச் சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனே கைவிட வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #PMK #Ramadoss
    சேலம் சென்னை பசுமை வழி சாலைக்காக காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியது. இன்று 3-வது நாளாக நிலம் கையகப்படுத்தப்பட்டது.
    காஞ்சீபுரம்:

    சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை சுமார் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலை காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாக சேலம் வரை 274 கி.மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படுகிறது.

    காஞ்சீபுரம் தவிர மற்ற மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்து விட்டது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியது. இன்று 3-வது நாளாக நிலம் கையகப்படுத்தப்பட்டது.

    உத்திரமேரூர் அருகே உள்ள குருமஞ்சேரி, அரும்புலியூர், சீத்தாவரம், படூர், மலையான்குள், மணல்மேடு ஆகிய பகுதிகளில் வருவாய் கோட்டாட்சியர் ராஜூ, தாசில்தார் அகிலாதேவி ஆகியோர் தலைமையில் வருவாய் துறையினர் நிலங்களை அளந்து கல் நட்டினர்.

    இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
    8 வழிச்சாலைக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு கருத்து தெரிவிக்க கூட உரிமை இல்லாதது நெருக்கடி நிலையை காட்டுகிறது என்று வைகோ கூறினார். #MDMK #Vaiko
    திருச்சி:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்தை தி.மு.க. ஏற்றுக்கொள்ளவில்லை. எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. ம.தி.மு.க.வின் நிலைப்பாடும் அதுதான். பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தக் கூடாது. பாராளுமன்றத்துக்கு ஒரு அணிக்கு வாக்களித்த மக்கள் மாநில தேர்தல் வரும் போது மாற்றி அளிக்க வாய்ப்பு உள்ளது.

    பல தேசிய இனங்களை கொண்ட இந்திய உப கண்டத்தில் பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சாத்தியமே கிடையாது. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே இனம், ஒரு கலாசாரம் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடி ஜனநாயகத்தை புல்டோசர் கொண்டு தகர்க்க பார்க்கிறார். சர்வாதிகார போக்குடன் கூடிய அவருடைய மனோபாவம் ஜனநாயகம், கூட்டாட்சி தத்துவம், மதச்சார்பின்மைக்கு எதிராக உள்ளது.


    சேலம்-சென்னை எட்டு வழி பசுமை சாலைக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரை கைது செய்து இருப்பது கண்டனத்துக்குரியது. தங்களது தாய் மண்ணை விட்டு கொடுக்க முடியாத சேலம் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க கூட உரிமை இல்லை என்பது நெருக்கடி கால நிலையை தான் காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #MDMK #Vaiko
    சேலம்- சென்னை பசுமை வழிச்சாலை குறித்து சிலர் மக்களிடம் பொய் பிரசாரம் செய்வதாக திருவண்ணாமலையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். #ChennaiSalemgreenexpressway
    திருவண்ணாமலை:

    சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்தின் நன்மைகள் குறித்த விளக்க பொதுக்கூட்டம் திருவண்ணாமலையில் நடந்தது. இதில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துக் கொண்டு பேசியதாவது:-

    இந்தியாவிலேயே 2-வது பசுமை சாலை தமிழகத்தில் தான் அமைக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கான ஆதரவு இல்லை என்று வதந்தி பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. பொதுக்கூட்டத்தில் திரண்டு இருக்கும் கூட்டத்தை பார்க்கும் போது 8 வழிச்சாலைக்கு ஆதரவு அதிகம் இருப்பதை உணர முடிகிறது.

    ஜெயலலிதா வழியில் தொடரும் அ.தி.மு.க. ஆட்சி எவ்வளவு சீக்கிரம் கவிழும் என சிலர் ஜாதகம் பார்க்கின்றனர். அ.தி.மு.க. ஆட்சி ஆயுள் காலம் சில ஆண்டுகள் மட்டுமே எனவும் எதிர்ப்பார்க்கின்றனர். எத்தனை ஆண்டுகளானாலும் அ.தி.மு.க ஆட்சியை அசைக்க முடியாது.

    110-விதியின் கீழ் பல்வேறு திட்டங்களை அறிவித்தவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அதன் பிறகே, 110 விதியில் திட்டங்களை அறிவிப்பது பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்பட எதிர்கட்சியினருக்கே விவரம் தெரியும்.

    8 வழி சாலை அமைவதால் 5 மாவட்டங்களிலும் தொழில் வளம், தனிநபர் வருமானம் மற்றும் கட்டுமான வளர்ச்சி பெருகும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பசுமை சாலை அமைக்கப்படும்.

    இதற்கு முன் உதாரணமாகவே ரூ.10 ஆயிரத்து 250 கோடியில் சென்னை- சேலம் பசுமை வழி சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை திட்டத்திற்கு மக்கள், விவசாயிகள் பெரும்பாலும் ஆதரவளித்துள்ளனர்.

    சிலர் பொய் பிரசாரம் செய்து விவசாயிகளையும், மக்களையும் குழப்பி வருகின்றனர். சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் தீயசக்திகள் ஊடுருவியுள்ளனர்.


    பசுமை சாலை திட்டத்தால் கிடைக்கும் நன்மை என்னென்ன என்று தெரியாமல் மக்களை ஏமாற்றி குழப்பத்தை விளைவிக்கின்றனர். கையகப்படுத்தும் நிலத்திற்கு 2014 புதிய நில எடுப்பு சட்டத்தின் படி உரிய நிவாரணம் வழங்கப்படும்.

    மேலும் 2½ மடங்கு முதல் 4½ மடங்கு வரை நிலத்திற்கு நிவாரணம் போர்க்கால அடிப்படையில் வழங்கப்படும். நிலத்தை கையகப்படுத்திய பிறகு உடனடியாக விவசாயிகளிடம் காசோலை வழங்கப்படும்.

    தற்போது அளவீடு மற்றும் மதிப்பீடு பணிகள் மட்டுமே நடந்து வருகிறது. நிலத்தை கொடுக்கவும், கொடுக்க மறுக்கவும் விவசாயிகளுக்கு உரிமை இருக்கிறது. சென்னை ஐகோர்ட்டு நீதிபதியும், பசுமை சாலை திட்டத்திற்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ததுடன், அதன் பலன்களை முதலில் அறிந்து கொண்டு பிறகு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.

    தமிழகம் சாலை விபத்தில் முதல் மாநிலமாக உள்ளது. பசுமை சாலை திட்டத்தால் விபத்துகள் குறையும். குறுகிய, விபத்துகள் ஏற்படும் மேலும் பல சாலைகள் அகலப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் தூசி மோகன், பன்னீர்செல்வம் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். #ChennaiSalemgreenexpressway
    திருவண்ணாமலையில் பசுமை சாலைக்கு ஆர்டர் போட்ட ஆட்சியாளர்களை கடித்து தின்று விடுவேன் என்று தலைவிரி கோலத்துடன் சாமியாடிய பெண்ணால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    திருவண்ணாமலை:

    சென்னை-சேலம் பசுமை சாலை போடுவதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    பெரணமல்லூர் அருகே அரியப்பாடியில் நிலத்தினை அளவிடும்போது ஜி.பி.எஸ். கருவியுடன் வந்த அதிகாரிகளை இளைஞர்கள் சூழ்ந்து கொண்டு பணியை தடுத்தனர். டி.எஸ்.பி. குணசேகரன் தலைமையிலான போலீசார், இளைஞர்களை விரட்டியடித்தனர்.

    மேலும், அதே கிராமத்தை சேர்ந்த மோகன் என்பவரின் மனைவி சரஸ்வதி ஜி.பி.எஸ். கருவியை பிடுங்கி அதிகாரிகளுடன் சண்டை போட்டார். அப்போது, விவசாயி அப்பு என்பவரின் மனைவி செந்தாமரை தனது நிலத்தில் அளவீடு கற்களை நட்டதும் ஆக்ரோ‌ஷமடைந்தார்.

    செந்தாமரை திடீரென தலைவிரி கோலத்துடன் அதிகாரிகள் மற்றும் போலீஸ் முன்பு சாமியாடினார். 8 வழி பசுமை சாலைக்கு ‘ஆர்டர்’ போட்டது யார்? அந்த ஆட்சியாளர்கள் இங்கு வந்தால்... அவர்களை கடித்து தின்று விடுவேன் என்று பற்களை நரநரவென கடித்து தனது நிலத்திலேயே படுத்து உருண்டு புரண்டார்.

    இதனால், பதறிபோன அதிகாரிகள் நிலம் அளவீடு பணியை கொஞ்ச நேரம் நிறுத்திவிட்டு திகைப்புடன் சாமியாடிய அந்த பெண்ணை வேடிக்கை பார்த்து நின்றனர். அப்போது அங்கு வந்த சில வாலிபர்கள், தங்கள் நிலத்தில் பதிக்கப்பட்டிருந்த அளவீடு கற்களை பிடுங்கி வீசினர்.

    போலீசார் அவர்களை தடுத்து எச்சரித்தனர். அதற்கு வாலிபர்கள், எங்களுக்கு சோறு போடும் நிலம் தான் வேண்டும். கை பிடி அளவு என்றாலும்... எங்கள் உயிர். அதனை பறிக்க அரசியல் சாசனப்படி உங்களுக்கு அதிகாரம் இல்லை.

    விவசாயிகளை மிரட்டி அடி பணிய வைப்பது கண்டிக்கத்தக்கது. விவசாயமே நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லி விட்டு. ஆட்சியாளர்களே விவசாயத்தை அழித்து, 8 வழிச்சாலை போடுவது? விவசாயத்தை பாதுக்கும் நடவடிக்கையா?

    பசுமை சாலை எங்களுக்கு வேண்டாம். இருக்கும் சாலையே குண்டும் குழியுமாக இருக்கிறது. அதனை சரி செய்தாலே போதும். யாரே ஒரு சதவீத பணக்காரர்களுக்காக பசுமை சாலை போடப்படுகிறது என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

    பதில் சொல்ல முடியாமல் திணறிய அதிகாரிகளும், போலீசார், கலெக்டரை சந்தித்து முறையிடுங்கள் என்று ஒற்றை வார்த்தையில் சொல்லி விட்டு நிலத்தை கையகப்படுத்தும் பணியை தொடர்ந்தனர்.

    வந்தவாசி தாலுகா நம்பேடு ஊராட்சிக்குட்பட்ட நம்பேடு, ராமநாதபுரத்தில் மட்டும் சுமார் 60 பாசன கிணறுகள், ஏரி அழிக்கப்படுகிறது. இதனால் அந்த ஊரே பாலை வனமாக மாற கூடிய அபாய கட்டத்தை எட்டும் என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

    மேலும், அதே பகுதியை சேர்ந்த சுமதி என்ற பெண் விவசாயியின் 2 ஏக்கர் நிலம், பம்புசெட்டு கிணறு பறி போகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுமதி, தன்னை கொன்று புதைத்து விட்டு அதன் மீது ரோடு போட்டு கொள்ளுங்கள் என்று கதறி அழுதார்.

    செய்யாறு கோட்டகரம் கிராமத்தில் ஏரியை அளவீடு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், ஏரியை அழித்தால் சுமார் 200 ஏக்கர் விளை நிலம் எங்கள் பகுதியில் அழிந்து விடும் என்று கண்ணீர், கதறலுடன் மன்றாடினர்.

    இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. #Tamilnews
    “பசுமை வழிச்சாலை எங்களுக்கு வேண்டாம், வாழ்வாதாரத்தை பிச்சையாக போட வேண்டும்’’ என்று விவசாயிகள் கோ‌ஷங்களை எழுப்பினர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தாசில்தார் மனோகரன் தலைமையில் நடந்தது. திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் விவசாயிகள் விவாதம் நடைபெற்று கொண்டிருந்தபோது, 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கையில் திருவோடு ஏந்தியபடி, பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பியபடி கூட்டம் நடைபெற்ற அரங்கத்திற்குள் வந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் ‘‘பசுமை வழிச்சாலை எங்களுக்கு வேண்டாம், வாழ்வாதாரத்தை பிச்சையாக போட வேண்டும்’’ என்று கோ‌ஷங்களை எழுப்பினர்.

    அந்த சமயத்தில் அங்கிருந்த மற்றொரு தரப்பு விவசாயிகள், ‘‘பசுமை வழிச்சாலை எங்களுக்கு வேண்டும் என்று ஆதரவு கோ‌ஷங்கள்’’ எழுப்பினர். இதனால் குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது விவசாயிகளாக இல்லாதவர்களை கூட்டத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று சிலர் கோ‌ஷமிட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 2 தரப்பு விவசாயிகளையும் இருக்கையில் போலீசார் அமர வைத்தனர்.

    இதையடுத்து மீண்டும் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் தொடங்கி தொடந்து நடைபெற்றது. அப்போது விவசாயி ஒருவர், பசுமை வழிச்சாலை தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தீவிரவாதிகள் மீது தான் போலீசாரின் அடக்குமுறை இருந்தது. ஆனால் தற்போது விவசாயிகள் மீது போலீசாரை ஏவுகின்றனர்’’ என்றார்.

    அப்போது அங்கிருந்த சில விவசாயிகள் கூட்டத்தில் ‘‘அரசியல் பேசக்கூடாது. பசுமை வழிச்சாலைக்கு எதிராக யாரும் பேசக் கூடாது’’ என்றனர். மற்றொரு தரப்பு விவசாயிகள் தனிப்பட்ட கருத்தை தெரிவிக்க எங்களுக்கு உரிமை உள்ளது என்று கூறி கோ‌ஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து திருவோடு ஏந்தி வந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து அவர்கள் வெளியே வந்து பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் கையில் வைத்து இருந்து திருவோடுகளை கீழே போட்டு உடைத்தனர். அப்போது போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    8 வழி பசுமை சாலைக்காக செய்யாறு அடுத்த பெரும்பாளை கிராமத்தில் நிலம் கையகப்படுத்துவதற்காக அதிகாரிகள் அளவிடும் பணியை தொடர்ந்தனர்.

    அதேபகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 73) என்பவரின் நிலத்தை அளவீடு செய்யும் பணியில் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    அப்போது அவருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலமும், ஒரு கிணறும் கையகப்படுத்தப்பட்டதாக அளவீடு செய்து கல் நடப்பட்டது. இதைப்பார்த்த கிருஷ்ணன் தனது நிலத்தில் விழுந்து, புரண்டு கதறி அழுதார்.

    எனினும் ஒருபுறம் அதிகாரிகள் அளவீடு பணியை தொடர்ந்தனர். ஒரு கட்டத்தில் கிருஷ்ணன் ஓடிச் சென்று அருகில் உள்ள தனது கிணற்றில் திடீரென குதித்து தற்கொலைக்கு முயன்றார்.



    இதைப்பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர், உடனடியாக ஓடிச் சென்று, கிராம மக்கள் உதவியுடன் கிருஷ்ணனை கயிறு கட்டி கிணற்றில் இருந்து மீட்டனர். இது குறித்து கிருஷ்ணன் கூறுகையில், எனக்கு விவசாயத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. எனது நிலம் பறிபோவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சாலை அமைக்கும்போது மூடப்படும் எனது கிணற்றிற்குள்ளே என்னையும் சேர்த்து புதைத்து விடுங்கள்’’ என்று கதறினார்.

    தொடர்ந்து இன்று காலை சேத்துப்பட்டு தாலுகாவில் நாச்சியாபுரம் கோரமங்கலம் பகுதியில் நிலம் அளவீடு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    அப்போது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் போராட்டம் ஒருபுறம் நடந்தாலும் மறுபுறம் நில கையகப்படுத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    சென்னை-சேலம் பசுமை சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் முறையீடு செய்துள்ளார்.
    சென்னை:

    ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா ஆகியோர் இன்று காலையில் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினார்கள்.

    அப்போது வக்கீல் பாலு ஆஜராகி, ‘சென்னை- சேலம் 8 வழி பசுமை சாலை அமைப்பதற்கு மத்திய அரசின் கீழ் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்த பின்னரே, திட்டத்துக்கான நிலத்தை அரசு கையப்படுத்த வேண்டும். ஆனால், இந்த முறையை பின்பற்றாமல், நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, நிலத்தை கையகப்படுத்த தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக நான் தொடரப் போகும் வழக்கை அவசர வழக்காக இன்றே விசாரிக்க வேண்டும்’ என்ற கூறினார்.

    இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், ஏற்கனவே இந்த திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட இரண்டு வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே, நீங்கள் வழக்கு தொடர்ந்தால், அந்த வழக்கை அடுத்த வாரம் விசாரிக்கின்றோம் என்று கூறினர்.

    சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்தில் மக்களின் கருத்துகளை கேட்டு நிபுணர் குழு அமைத்து மாற்றுபாதையில் அமைக்க வேண்டும் என்று தஞ்சையில் நடைபெற்ற திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
    தஞ்சாவூர்:

    திருச்சி திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்ல திருமண விழா தஞ்சையில் இன்று நடந்தது.

    திருமண விழாவில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சேலத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அவர் செயல்படாத தலைவராக மு.க.ஸ்டாலின் உள்ளார் என்று பேசியுள்ளார். இதை பற்றி நான் கவலைப்படவில்லை.

    அதாவது செயல்படாத தலைவராகவே நான் இருந்து விட்டு போகிறேன். ஆனால் உங்களை போல் எடுபிடி முதல்வராக இருக்க மாட்டேன். மத்திய அரசுக்கு அடிமையாகி தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

    எடப்பாடி பழனிசாமி பேசும் போது, தமிழகத்தில் தான் அதிக போராட்டங்கள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இவ்வளவு போராட்டங்கள் நடந்துள்ளதே? என்று சிந்தித்து பார்த்துண்டா?

    சேலம்- சென்னை 8 வழிச்சாலை பற்றி சட்டமன்றத்தில் நான் ஏற்கனவே பேசியுள்ளேன். அப்போது இந்த திட்டம் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை.

    அதாவது மக்களின் கருத்தை கேட்டு விட்டு கலந்தாய்வு கூட்டம் நடத்த வேண்டும். விவசாயிகள் தற்கொலை முயற்சி சம்பவம் நடக்கிறது. இதை இந்த அரசு சிந்தித்து பார்க்க வேண்டும்.


    சேலம் விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, 8 வழிச்சாலை திட்டத்துக்கு விவசாயிகள், பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறினார். தைரியம் இருந்தால் அவர் பாதிக்கப்பட்ட இடத்தில் போய் இதுபோல் பேசவேண்டும்.

    சேது சமுத்திர திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. இது ராமர் பாலம் வழியாக வந்து விடும் என்பதால் நிறுத்தப்பட்டது. நீதிமன்றத்தில் ராமர் பாலத்தை தவிர்த்து செயல்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது. நாங்களும் ராமர் சமுத்திர திட்டம் என்ற பெயரை வைக்கலாம் என்று தெரிவித்தோம்.

    இதேபோல் 8 வழிச்சாலைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் நிபுணர் குழு அமைத்து மாற்றுப்பாதையை அமைக்கவேண்டும்.

    டி.ஆர்.பாலு தரைவழி போக்குவரத்து மந்திரியாக இருந்த போது லஞ்சம் வாங்கியதாக முதல்வர் எடப்பாடி குற்றம் சாட்டியுள்ளார். தைரியம் இருந்தால் அவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடரட்டும். இதை வரவேற்கிறோம்.

    ஜெயலலிதா இறந்த பிறகு நீங்கள் எவ்வளவு ஊழல், லஞ்சம் வாங்கினீர்கள் என்பதை விஜிலென்சிடம் புகார் தெரிவித்துள்ளோம்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். #DMK #MKStalin #ChennaiSalemGreenExpressWay
    ×