search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8 வழி பசுமை சாலைக்கு எதிராக திருவோடு ஏந்தி விவசாயிகள் பிச்சையெடுக்கும் போராட்டம்
    X

    8 வழி பசுமை சாலைக்கு எதிராக திருவோடு ஏந்தி விவசாயிகள் பிச்சையெடுக்கும் போராட்டம்

    “பசுமை வழிச்சாலை எங்களுக்கு வேண்டாம், வாழ்வாதாரத்தை பிச்சையாக போட வேண்டும்’’ என்று விவசாயிகள் கோ‌ஷங்களை எழுப்பினர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தாசில்தார் மனோகரன் தலைமையில் நடந்தது. திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் விவசாயிகள் விவாதம் நடைபெற்று கொண்டிருந்தபோது, 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கையில் திருவோடு ஏந்தியபடி, பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பியபடி கூட்டம் நடைபெற்ற அரங்கத்திற்குள் வந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் ‘‘பசுமை வழிச்சாலை எங்களுக்கு வேண்டாம், வாழ்வாதாரத்தை பிச்சையாக போட வேண்டும்’’ என்று கோ‌ஷங்களை எழுப்பினர்.

    அந்த சமயத்தில் அங்கிருந்த மற்றொரு தரப்பு விவசாயிகள், ‘‘பசுமை வழிச்சாலை எங்களுக்கு வேண்டும் என்று ஆதரவு கோ‌ஷங்கள்’’ எழுப்பினர். இதனால் குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது விவசாயிகளாக இல்லாதவர்களை கூட்டத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று சிலர் கோ‌ஷமிட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 2 தரப்பு விவசாயிகளையும் இருக்கையில் போலீசார் அமர வைத்தனர்.

    இதையடுத்து மீண்டும் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் தொடங்கி தொடந்து நடைபெற்றது. அப்போது விவசாயி ஒருவர், பசுமை வழிச்சாலை தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தீவிரவாதிகள் மீது தான் போலீசாரின் அடக்குமுறை இருந்தது. ஆனால் தற்போது விவசாயிகள் மீது போலீசாரை ஏவுகின்றனர்’’ என்றார்.

    அப்போது அங்கிருந்த சில விவசாயிகள் கூட்டத்தில் ‘‘அரசியல் பேசக்கூடாது. பசுமை வழிச்சாலைக்கு எதிராக யாரும் பேசக் கூடாது’’ என்றனர். மற்றொரு தரப்பு விவசாயிகள் தனிப்பட்ட கருத்தை தெரிவிக்க எங்களுக்கு உரிமை உள்ளது என்று கூறி கோ‌ஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து திருவோடு ஏந்தி வந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து அவர்கள் வெளியே வந்து பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் கையில் வைத்து இருந்து திருவோடுகளை கீழே போட்டு உடைத்தனர். அப்போது போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    8 வழி பசுமை சாலைக்காக செய்யாறு அடுத்த பெரும்பாளை கிராமத்தில் நிலம் கையகப்படுத்துவதற்காக அதிகாரிகள் அளவிடும் பணியை தொடர்ந்தனர்.

    அதேபகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 73) என்பவரின் நிலத்தை அளவீடு செய்யும் பணியில் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    அப்போது அவருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலமும், ஒரு கிணறும் கையகப்படுத்தப்பட்டதாக அளவீடு செய்து கல் நடப்பட்டது. இதைப்பார்த்த கிருஷ்ணன் தனது நிலத்தில் விழுந்து, புரண்டு கதறி அழுதார்.

    எனினும் ஒருபுறம் அதிகாரிகள் அளவீடு பணியை தொடர்ந்தனர். ஒரு கட்டத்தில் கிருஷ்ணன் ஓடிச் சென்று அருகில் உள்ள தனது கிணற்றில் திடீரென குதித்து தற்கொலைக்கு முயன்றார்.



    இதைப்பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர், உடனடியாக ஓடிச் சென்று, கிராம மக்கள் உதவியுடன் கிருஷ்ணனை கயிறு கட்டி கிணற்றில் இருந்து மீட்டனர். இது குறித்து கிருஷ்ணன் கூறுகையில், எனக்கு விவசாயத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. எனது நிலம் பறிபோவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சாலை அமைக்கும்போது மூடப்படும் எனது கிணற்றிற்குள்ளே என்னையும் சேர்த்து புதைத்து விடுங்கள்’’ என்று கதறினார்.

    தொடர்ந்து இன்று காலை சேத்துப்பட்டு தாலுகாவில் நாச்சியாபுரம் கோரமங்கலம் பகுதியில் நிலம் அளவீடு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    அப்போது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் போராட்டம் ஒருபுறம் நடந்தாலும் மறுபுறம் நில கையகப்படுத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    Next Story
    ×