search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகளிடம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கருத்து கேட்ட காட்சி.
    X
    விவசாயிகளிடம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கருத்து கேட்ட காட்சி.

    8 வழி பசுமை சாலை அமைப்பதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடருவோம்- அன்புமணி

    எட்டு வழி பசுமை சாலை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, பா.ம.க. சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். #PMK #Ramadoss #ChennaiSalemGreenExpressway
    கம்பைநல்லூர்:

    அரூர் வட்டம், முத்தானூர் (எம்.தாதம்பட்டி) கிராமத்தில் எட்டு வழி பசுமை விரைவுச் சாலை திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.

    இந்த மக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தில் தருமபுரி பா.ம.க. எம்.பி. டாக்டர். அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

    பசுமை வழியால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு தென்னை மரத்துக்கு ரூ.40 முதல் ரூ.80 ஆயிரமும், விவசாய நிலங்களுக்கு ஒரு ஹக்டேருக்கு ரூ. 9 கோடி வரையிலும் இழப்பீடு வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

    சென்னை அருகேயுள்ள நிலங்களுக்கு கூட அதிகபட்சமாக ரூ.3 கோடி வரையிலும் மட்டுமே இழப்பீடு வழங்க முடியும். காய்ந்து போன தென்னை மரங்களுக்கு தற்போது மாநில அரசு ரூ.105யை வழங்கி வருகிறது. ஆனால் பசுமை வழிச்சாலையால் பாதிக்கப்படும் தென்னை மரங்களுக்கு ரூ.40 ஆயிரம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறுவது முற்றிலும் பொய்யானது.

    உளுந்தூர்பேட்டை வழியாக செல்லும் சென்னை சாலைக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் பலருக்கு இன்னும் இழப்பீடு கிடைக்கவில்லை. ஆனால், பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து விவசாயிகளை மூளைச்சலவை செய்து மத்திய, மாநில அரசுகள் ஏமாற்றி வருகிறது.



    பசுமை வழிச்சாலை அமைந்தால் சாலையின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் வகையில் தான் நிலத்தடியில் சிறு பாலங்கள் இருக்கும். சாலையின் குறுக்கே மக்கள் நடந்து கூட செல்ல முடியாது. சாலையின் இருபுறமும் கம்பி வேலிகள் அமைக்கப்படும்.

    அதேபோல், சென்னை முதல் சேலம் வரையிலும் 8 இடங்களில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்படும். இந்த சாலையில் செல்ல வேண்டுமெனில் கட்டணம் செலுத்த வேண்டும். பசுமை வழி விரைவுச் சாலையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது. எட்டு வழி பசுமை விரைவுச் சாலையால் ஓரிரு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே பயணத் தொலைவில் குறையும். பசுமை சாலையில் சென்னைக்கு சென்றால் 5.30 மணி நேரம் ஆகும். ஆனால், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஊத்தங்கரை, அரூர் வழியாக செல்லும் சேலம் முதல் சென்னை வரையிலான சாலையில், சென்னைக்கு சென்றால் 4.30 மணி நேரம் ஆகும். எனவே, எட்டு வழி விரைவுச் சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட்டு, அதற்கு மாற்றாக வாணியம்பாடி வழியாக செல்லும் சென்னை முதல் சேலம் வரையிலான தார் சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்றம் செய்து போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தலாம்.

    பசுமை வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளின் கருத்துக் கேட்புக்கு பிறகு, எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, பாமக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றார்.

    இவ்வாறு அவர் பேசினார். #PMK #Ramadoss  #ChennaiSalemGreenExpressway
    Next Story
    ×