search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "argument"

    • ஆம்னி பஸ் நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டப்படுகிறது.
    • கடைகளுக்கு மறு ஏலம் விடலாம் என கூறி எதிர்ப்பு தெரிவித்து மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சியில் இன்று அவசர கூட்டம் நடைபெற்றது. மேயர் சண். ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநகராட்சி அலுவலர்கள் ,கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் முதலாவதாக புதிதாக ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட மகேஸ்வரி பேசும்போது, நான் டி.என்.பி.எஸ்.சி குரூப் -2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து அரசு பணியில் சேர்ந்தேன். பெரியகுளம் நகராட்சி, தர்மபுரி நகராட்சிகளில் பணிபுரிந்த போது சிறப்பாக பணியாற்றியதற்காக பல்வேறு விருதுகளை பெற்றேன். திடக்கழிவு மேலாண்மை திட்டத்திலும் தேசிய, மாநில அளவில் விருதுகள் பெற்றுள்ளேன். அதேபோல் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக கடந்த சில நாட்களுக்கு முன்பு பொறுப்பேற்று பணிபுரிந்து வருகிறேன். தஞ்சாவூர் மாநகராட்சியிலும் சிறப்பாக பணிபுரிந்து பல்வேறு விருதுகளை பெற கடுமையாக உழைப்பேன் என்றார்.

    இதனை தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மேயர் சண். ராமநாதன் பேசியதாவது:-

    தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஆம்னி பஸ் நிலையத்தை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த பஸ் நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டப்படுகிறது.

    தஞ்சை மாவட்டம் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு பசுமைப் புரட்சியை ஏற்படுத்திய எம். எஸ். சுவாமிநாதன் பெயர் வைத்ததற்கும், தஞ்சை மேரிஸ் கார்னர் உயர்மட்ட மேம்பாலத்தை ராமநாதன் மருத்துவமனை வரை நீட்டிக்க உத்தரவிட்டதற்கும் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துறை அமைச்சர் ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

    தஞ்சாவூர் சரபோஜி மார்க்கெட், பழைய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் வாடகை அதிகம் இருப்பதாக ஏலம் எடுத்தவர்கள் கூறியிருந்தனர். எனவே அவர்களின் வேண்டுகோளை ஏற்று மறு ஏலம் விட்டு குறைந்த வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

    பெரிய கோவிலில் மாமன்னர் ராஜராஜ சோழன் சதயவிழா வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மாமன்னர் சோழன் சிலைக்கு மின்அலங்காரம், மரப்படிகள், தடுப்புகள் ஆகியவற்றை தற்காலிகமாக அமைத்து தரும் பணிகள் மேற்கொள்ள ரூ.14 லட்சம் அங்கீகரிக்கவும் ஒப்பந்த புள்ளிகள் கோரி தொடர் நடவடிக்கை மேற்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது கவுன்சிலர்கள் நீலகண்டன் ,உஷா, காந்திமதி, கண்ணுக்கினியாள் உள்ளிட்ட சிலர் மாமன்ற கூட்டத்தில் விவாதிக்காமல் எப்படி கடைகளுக்கு மறு ஏலம் விடலாம் என கூறி எதிர்ப்பு தெரிவித்து மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து மாநகராட்சியில் மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், முறைப்படி தான் ஏலம் நடந்ததாகவும் , கூட்டம் முடிவடைந்து விட்டதாகவும் கூறி மேயர் சண்.ராமநாதன் வெளியேறினார்.

    அப்போது கவுன்சிலர்கள் பேசும் மைக் திடீரென அணைக்கப்பட்டது. எங்களது உரிமைகள் பற்றி பேச முன்னறிவிப்பு இன்றி எப்படி மைக் அணைக்கலாம் என கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தஞ்சை மாநகராட்சி அவசரக் கூட்டத்தில் நடந்த இந்த அமளி சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    • ரிஷிவந்தியம் அருகே முன்விரோத தகராறில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • சம்பவத்தன்று இருவருக்கும் பொதுவான வயலில் உள்ள தென்னை மரத்தில் தண்டபாணி தேங்காய் பறித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    ரிஷிவந்தியம் அருகே பாசார் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி(வயது38). இவருக்கும், இவரது அண்ணன் கந்தசாமி(40) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் பொதுவான வயலில் உள்ள தென்னை மரத்தில் தண்டபாணி தேங்காய் பறித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கந்தசாமி, மற்றும் அவர் மனைவி முனியம்மாள், மகன் ஏழுமலை(21) ஆகியோர் தண்டபாணியின் வீட்டு மின் இணைப்பை துண்டித்து அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் தண்டபாணி கொடுத்த புகாரின் பேரில் கந்தசாமி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பா.ம.க. செயலாளர் ஜெயராமன் தலைமையிலான நிர்வாகிகள் போலீசாருடன் வாக்குவாதத்ததில் ஈடுபட்டனர்.
    • திண்டிவனம் - மரக்காணம் சாலையில் மோட்டார் சைக்கிளுடன் ஒன்று திரண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பா.ம.க.வின் சாதனைகளை விளக்கி மோட்டார் சைக்கிள் பிரச்சாரம் நடத்த இன்று திட்டமிடப்பட்டது. இதற்கு விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க.வினர் 100-க்கும் மேற்பட்டோர் திண்டிவனம் - மரக்காணம் சாலையில் மோட்டார் சைக்கிளுடன் ஒன்று திரண்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் மற்றும் போலீசார், மோட்டார் சைக்கிள் பிரச்சாரம் நடத்த அனுமதி கிடையாது. அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்று கூறினார். இதையடுத்து விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ஜெயராமன் தலைமையிலான நிர்வாகிகள் போலீசாருடன் வாக்குவாதத்ததில் ஈடுபட்டனர். இருந்தபோதும் போலீசார் அனுமதி மறுத்து அனைவரையும் கலைந்து செல்ல வலியுறுத்தினர்.

    இதேபோல வானூர் மேற்கு ஒன்றிய பா.ம.க. சார்பில் மோட்டார் சைக்கிள் பிரச்சாரம் நடத்த அக்கட்சியினர் கரசானூரில் ஒன்று திரண்டனர். அங்கு வந்த வானூர் போலீசார் அனுமதி மறுத்து அனைவரையும் கலைந்து செல்ல வலியுறுத்தினர். பா.ம.க. வானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கோபால் தலைமையிலான நிர்வாகிகள், எங்கள் கட்சியின் சாதனைகளை விளக்கி மோட்டார் சைக்கிள் பிரச்சாரம் செய்ய உள்ளோம். இதற்கு திடீரென அனுமதி மறுப்பது சரியான நடைமுறையல்ல என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பா.ம.க.வினரின் மோட்டார் சைக்கிள் பிரச்சாரத்திற்கு திண்டிவனம் மற்றும் வானூரில் போலீசார் அனுமதி மறுத்தனர். மேலும், 2 இடங்களிலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மோட்டார் சைக்கிள் பேரணிக்கு அனுமதி வழங்க கோரி போலீசாரிடம் பா.ம.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் திண்டிவனம், வானூர் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

    • அசாதாரண சூழ்நிலையால் பொதுமக்கள், வணிகர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
    • . அப்போது ஒரு கட்டத்தில் பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

    புதுச்சேரி:

    கோட்டக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2012 -ம் ஆண்டு முதல் சீரான மின்சாரம் வழங்கப்படாததால் ஏற்படும் அசாதாரண சூழ்நிலையால் பொதுமக்கள், வணிகர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் நேற்று வருவாய்த்துறை, மின்துறை, நகராட்சி, காவல்துறை அதிகாரிகள் மற்றும் வணிகர்கள் பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நகராட்சி அருகே உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் நடந்த கூட்டத்தில், கோட்டக்குப்பம் நகர் மன்ற தலைவர் ஜெயமூர்த்தி, ஆணையர் புகேந்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அப்போது பேசிய பொதுமக்கள் கோட்டகுப்பத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஏற்படும் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்ப ட்டுள்ளனர் என்றனர்.

    இதையடுத்து நகர் மன்ற தலைவர் ஜெயமூர்த்தி பேசும் போது, கோட்டக்குப்பம் பகுதியில் ஏற்படும் தொடர் மின்வெட்டிற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் துணை மின் நிலையம் அமைக்க சின்னக்கோ ட்டக்குப்பம் பகுதியில் உள்ள ஆரோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான 1 3/4 ஏக்கர் நிலம் ஆரோவில் நிர்வாகம் அனுமதியோடு கையகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். விரைவில் வருவாய் துறையினர் துணையோடு இடம் கையகப்படுத்தப்பட்டு அங்கு துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது என்று கூறினார். அப்போது ஒரு கட்டத்தில் பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதைத்தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் பாதியி லேயே எழுந்து சென்றனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  

    • 3 இடங்களில் மட்டுமே எரிவாயு பங்குகள் அமைக்கப்பட்டன.
    • ஆட்டோ டிரைவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பங்கை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தரங்கம்பாடி:

    பெட்ரோல், டீசல் எரிபொருளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தடுக்க அதற்கு மாற்றாக இயற்கை எரிவாயுவை உபயோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி, தனியார் ஆட்டோ நிறுவனங்கள் சி.என்.ஜி. எனப்படும் இயற்கை எரிவாயுவால் இயங்கும் ஆட்டோக்களை விற்பனை செய்து வருகிறது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 400 ஆட்டோக்கள் சி.என்.ஜி எரிவாயு(அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) மூலம் இயங்கி வருகிறது.

    மயிலாடுதுறை லட்சுமிபுரம், சேத்திரபாலபுரம் மற்றும் சீர்காழி ஆகிய 3 இடங்களில் மட்டுமே எரிவாயு பங்குகள் அமைக்கப்பட்டன.

    இங்கும் கடந்த 6 மாதங்களாக சரிவர எரிவாயு விநியோகம் செய்யப்படாததால், நகரில் கூடுதல் சி.என்.ஜி எரிவாயு பெட்ரோல் பங்குகளை அமைக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட சி.என்.ஜி. எரிவாயு ஆட்டோ டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில், மயிலாடுதுறை அருகில் ஒரு பங்கில் சி.என்.ஜி. இயற்கை எரிவாயு இல்லாததைக் கண்டித்து, ஆட்டோ டிரைவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பங்கை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் மாவட்ட பாட்டாளி தொழிற்சங்க சிறப்புத் தலைவர் தங்க.அய்யாசாமி தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பெரம்பூர் ராம்மோகன், மயிலாடுதுறை சின்னகடைவீதி ராஜகோபால், மணிக்கூண்டு முருகன், மார்கெட் பகுதி சாமிநாதன் உள்ளிட்ட ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், ஆட்டோ டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    இதைத்தொடா்ந்து ஆட்டோ டிரைவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • ஜீவா மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.
    • இதில் ஜீவாவின் வயிறு, மார்பு உள்ளிட்ட 11 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல் புளியங்குடி பழைய காலனியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் ஜீவா (17). இவர் விருத்தாசலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஆனந்த் (22) என்பவரும் நண்பர்கள். ஆனந்த் பி.இ. படித்து விட்டு மின் துறையில் தற்கா லிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் ஜீவாவை ஓரின சேர்க்கைக்கு ஆனந்த் அழைத்துள்ளார். இதற்கு ஜீவா மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

    இதற்கிடையே ஜீவா ஒரு பெண்ணுடன் பேசியதை ஆனந்த் ஸ்கிரின் ஷாட் எடுத்து வைத்து மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜீவா, ஆனந்தின் செல்போனை பிடுங்கி உடைத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே விரோதம் தீவிரமடைந்தது. நேற்று காலை ஜீவா பள்ளிக்கு செல்ல மேல்புளியங்குடி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள பெலாந்துறை வாய்க்காலுக்கு சென்றார். அவரை பின் தொடர்ந்து சென்ற ஆனந்த, ஜீவாவிடம் தகராறு செய்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார்.

    இதில் ஜீவாவின் வயிறு, மார்பு உள்ளிட்ட 11 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. அவர் அலறினார் . இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். இதனை பார்த்து ஆனந்த் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். கத்திக்குத்தில் பலத்த காயம் அடைந்த ஜீவா பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் சேத்தியா தோப்பு டி.எஸ்.பி. ரூபன் குமார், இன்ஸ்பெக்டர் வீரமணி, சப்-இன்ஸ்பெக்டர் மதுபாலன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்ட ஜீவா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவரை கொன்று விட்டு தலைமறைவான ஆனந்தை பிடிக்க 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    • பலமுறை அந்த வடிகால் வாய்க்காலை சரிசெய்யுமாறு விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்தனர்.
    • அங்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் வடலூர் அருகே மேல கொளக்குடி பகுதியில் ஈஷா ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் அந்த பகுதியில் உள்ள விவ சாய நிலங்களுக்கு தண்ணீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. இந்த ஏரிக்கு நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் உபரி நீர் வருகிறது. இதனையடுத்து இந்த ஏரியில் உள்ள வடிகால் வாய்க்காலை என்.எல்.சி நிறுவனம் அடைத்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் இந்த ஏரியின் வடிகால் வாய்க் காலை அடைத்ததால் ஏரியில் தண்ணீர் நிரம்பி வடிவதற்கு வழி இல்லை. இதனால் ஊருக்குள் ஏரியின் தண்ணீர் புகும் அபாயம் ஏற்படும் என பலமுறை அந்த வடிகால் வாய்க்காலை சரிசெய்யுமாறு விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதற்கு எந்த வித நடவடிக்கையும் என்.எல்.சி. அதிகாரிகள் மூலம் எடுக்கவில்லை.

    இதனால் இன்று காலை ஏரியின் அருகே கோட்டகம் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்து பொக்லைன் எந்திரத்தின் மூலம் அந்த வடிகால் வாய்காலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த தகவல் குறித்து அறிந்த என்.எல்.சி. நிர்வாகத்தின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயிகளிடம் நீங்கள் இதுபோன்று செய்யக்கூடாது. இத னால் எங்களுக்கு தண்ணீர் வருவதில் பிரச்சனை ஏற்படும் என்று அவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த மந்தாரக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விவசாயிகளிடமும், என்.எல்.சி அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக உள்ளது.

    • இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்து 3 வயது மகன் உள்ளான்.
    • படுகாயம் அடைந்த சுப்ரமணியனை மீட்டு சிகிச்சைக்காக ராமநத்தம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வி.சித்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜோதிமணி மகன் சுப்ரமணியன் (வயது 32) விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்தார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்து 3 வயது மகன் உள்ளான். இந்நிலையில் நேற்று இரவு சுப்ரமணியன் தனது மோட்டார் சைக்கிளில் வி.சித்தூர் பகுதியில் இருந்து ராமநத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு பின்னால் ஜே.சி.பி வாகனம் ஒன்று வந்தது. ராமநத்தம் போலீஸ் நிலையம் முன்பு வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஜே.சி.பி வாகனம் முன்னால் சென்ற மோட்டார் சைக்கி ளில் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி சுப்ரமணியன் கீழே விழுந்தார். இதில் எதிர்பாராத விதமாக ஜே.சி.பி வாகனத்தின் சக்கரங்களில் சிக்கி பலத்த படுகாயம் அடைந்தார்.

    விபத்து போலீஸ் நிலையம் முன்பு நடந்ததால் உடனே விரைந்த ராமநத்தம் போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்த சுப்ரமணியனை மீட்டு சிகிச்சைக்காக ராமநத்தம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சை க்காக 108 ஆம்புலன் மூலம் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலே சுப்ரமணியன் உயிரி ழந்தார். இதனையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய ஜேசிபி வாகன டிரை வரான தச்சூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (22)என்பவரை கைது செய்தனர். அப்போது கார்த்திக் மதுபோதையில் இருந்ததால் போலீசாரு டன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். ஜே.சி.பி எந்திர டிரைவர் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளாக்கியது போ லீசாரின் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் ஜே.சி.பி எந்திரத்தை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் கார்த்திகிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது என தெரிவித்தனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகளை கைது செய்தனர்.

    கடலூர்:

    இந்து முன்னணி சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதை கண்டித்து கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் ராஜன் வரவேற்றார். வெங்கடேசன், பெருமாள், மணிகண்டன், கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் சனில் குமார் கலந்து கொண்டு கண்ட உரை ஆற்றினார். அப்போது கடலூர் புதுநகர் போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை. தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது என தெரிவித்தனர். அப்போது இந்து முன்னணியிருக்கும், போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் புதுநகர் போலீசார் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகளை கைது செய்தனர்.

    • 8 நிமிடம் மட்டுமே இடைவெளி இருப்பதால் தினந்தோறும் போட்டி
    • கைது செய்யவும் அவர்கள் பஸ்சை பறிமுதல் செய்யவும் அதிரடியாக உத்தரவிட்டார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி பஸ் நிறுத்தத்தில் விருத்தாச லத்தில் இருந்து திட்டக்குடி நோக்கி தனியார் பஸ் புறப்பட்டு வந்துள்ளது. அதன் பின்னால் சிதம்பரத்தி லிருந்து-பெரம்பலூர் நோக்கி மற்றொரு தனியார் பஸ்சும் வந்துள்ளது. 2 பஸ்களுக்கும் 8 நிமிடம் மட்டுமே இடைவெளி இருப்பதால் தினந்தோறும் இவர்கள் போட்டி போட்டுக் கொண்டு பயணிகளை ஏற்றி வருவதாகவும், இதில் அடிக்கடி இந்த 2 தனியார் பஸ் டிரைவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வருந்துள்ளது.

    இந்நிலையில் ஆவி னங்குடி பஸ் நிறுத்தத்தில் 2 பஸ்களையும் டிரைவர்கள் சாலையின் நடுவே நிறுத்திக் கொண்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்ட தால் அரை மணி நேரம் விருத்தா சலம்-திட்டக்குடி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவினங்குடி போலீசார் 2 தனியார் பஸ் டிரைவரையும் சமாதானப்படுத்தி உள்ளனர். 

    ஆனால் 2 பேரும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் 2 பஸ் டிரைவர்கள், கண்டக்டரை கைது செய்யவும் அவர்கள் பஸ்சை பறிமுதல் செய்யவும் அதிரடியாக உத்தரவிட்டார். அதன்படி ஆவினங்குடி போலீசார் தனியார் பஸ் டிரைவரான சோழராஜன், கல்யாண சுந்தரம், கண்டெக்டர்கள் கோபி, தேவராஜ், சக்திவேல் ஆகிய 5 பேர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும் போலீசார் 2 தனியார் பஸ்களையும் பறிமுதல் செய்தனர்.

    • மிச்சர் சாப்பிடுவதற்காக மன்றத்திற்கு வருகிறீர்களா என கேட்டதால் ஆத்திரம்
    • கவுன்சிலர்கள் வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைக்க மேயர் வேண்டுகோள்

    கோவை,

    கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் விக்டோரியா அரங்கில் மேயர் கல்பனா தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் திருக்குறள் வாசிக்கப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதன் பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாட மறந்தனர். இதனையடுத்து கவுன்சிலர்கள் சுட்டி காட்டிய நிலையில் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. கூட்டம் தொடங்கிய உடன் மாநகர பகுதிகளில் நடைபெறும் பணிகள் மந்த கதியில் நடப்பதாக அ.தி.மு.க கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் குற்றம் சாட்டினர். அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபாகரனுக்கும், மேயர் கல்பனாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    மிச்சர் சாப்பிடுவதற்காக மன்றத்திற்கு வருகிறீர்களா என காட்டமாக அ.தி.மு.க கவுன்சிலர் பிரபாகரன் கேள்வி எழுப்பினார். 10 ஆண்டுகளாக நீங்கள் மிச்சர் சாப்பிட்டீர்களா என மேயர் கல்பனா பதிலுக்கு பேசினார். இருவரும் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

    தொடர்ந்து கூட்டத்தில்பொறியியல் பிரிவு மேம்பாட்டு பணி, பாதாள சாக்கடை குழாய் சீரமைப்பு பணி, ஆழ்குழாய் கிணறுகளை இயக்கி பராமரிக்கும் பணி, வீடுகளுக்கு புதிய பாதாள சாக்கடை இணைப்பு வழங்கும் பணி, வடவள்ளி, வீரகேரளம், கவுண்டம்பாளையம், துடியலூர் பகுதிகளில் புதிதாக பாதாள சாக்கடை மேற்கொள்ளும் பணி, தார்ச்சாலை, தெருவிளக்கு பராமரிப்பு பணி உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து மொத்தம் 47 தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் பிரதாப், பேசியதாவது:-

    மாநகராட்சி சார்பில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவைத்தொ கை படிப்படியாக செலுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில்கூட ரூ.100 கோடி செலுத்தப்பட்டது. இன்னும் ரூ.240 கோடி பாக்கி உள்ளது. அதுவும், விரைவில் செலுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    மேயர் கல்பனா பேசுகையில், மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட்சிட்டி பணி உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகளை விரைவாக செய்து முடிக்க அனைத்து பிரிவு அலுவலர்கள் மற்றும் அந்தந்த பகுதி கவுன்சிலர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • போலீசாருடன் வாக்குவாதம்
    • போலீசார் அங்கு நிற்கக்கூடாது பாரதிபூங்கா உள்ளே சென்று காத்திருக்கும்படி தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை திருபுவனை தொகுதி மதகடிப்பட்டில் தனியார் சோப்பு நிறுவனத்தின் பின்புறம் உள்ள திடலில் நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர்.

    சுமார் 30 ஆண்டுக்கும் மேலாக வசித்து வரும் இவர்களுக்கு மனைப்பட்டா வழங்குவதாக அரசு அறிவித்திருந்தது. தேர்தலின்போதும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் மனைப்பட்டா வழங்கவில்லை. இன்று காலை 12 மணியளவில் நரிக்குறவர்கள் தங்கள் குழந்தைகளோடும், கைகளில் வெற்று கேண்களுடனும் சட்டசபை வளாகத்தின் முன்பு வந்தனர்.

    இதைக்கண்ட சட்டசபை காவலர்கள், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் நரிக்குறவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 30 ஆண்டுக்கும்மேல் வசித்து வரும் தங்களுக்கு வாக்குறுதி அளித்தபடி மனைப்பட்டா வழங்கவில்லை. வெயிலிலும், மழையிலும் அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகிறோம்.

    முதல்-அமைச்சரை சந்திக்க எங்களை அனுமதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். முதல்-அமைச்சர் சட்டசபையில் இல்லை. அவர் வந்தவுடன் அனுமதிபெற்று உள்ளே அனுமதிப்பதாக தெரிவித்தனர். நரிக்குறவர்கள் முதல்- அமைச்சர் வரும் வரை நிற்பதாகக்கூறி பாரதிபூங்கா நுழைவுவாயிலில் காத்திருந்தனர். போலீசார் அங்கு நிற்கக்கூடாது பாரதிபூங்கா உள்ளே சென்று காத்திருக்கும்படி தெரிவித்தனர்.

    அவர்கள் மறுப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததால் 10 நிமிடம் பரபரப்பு நிலவியது. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி பூங்காவிற்குள் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் முதல்-அமைச்சர் வருகைக்காக காத்திருந்தனர். 

    ×