என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவை மாநகராட்சி கூட்டத்தில் காரசார வாக்குவாதம்
- மிச்சர் சாப்பிடுவதற்காக மன்றத்திற்கு வருகிறீர்களா என கேட்டதால் ஆத்திரம்
- கவுன்சிலர்கள் வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைக்க மேயர் வேண்டுகோள்
கோவை,
கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் விக்டோரியா அரங்கில் மேயர் கல்பனா தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் திருக்குறள் வாசிக்கப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதன் பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாட மறந்தனர். இதனையடுத்து கவுன்சிலர்கள் சுட்டி காட்டிய நிலையில் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. கூட்டம் தொடங்கிய உடன் மாநகர பகுதிகளில் நடைபெறும் பணிகள் மந்த கதியில் நடப்பதாக அ.தி.மு.க கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் குற்றம் சாட்டினர். அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபாகரனுக்கும், மேயர் கல்பனாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மிச்சர் சாப்பிடுவதற்காக மன்றத்திற்கு வருகிறீர்களா என காட்டமாக அ.தி.மு.க கவுன்சிலர் பிரபாகரன் கேள்வி எழுப்பினார். 10 ஆண்டுகளாக நீங்கள் மிச்சர் சாப்பிட்டீர்களா என மேயர் கல்பனா பதிலுக்கு பேசினார். இருவரும் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
தொடர்ந்து கூட்டத்தில்பொறியியல் பிரிவு மேம்பாட்டு பணி, பாதாள சாக்கடை குழாய் சீரமைப்பு பணி, ஆழ்குழாய் கிணறுகளை இயக்கி பராமரிக்கும் பணி, வீடுகளுக்கு புதிய பாதாள சாக்கடை இணைப்பு வழங்கும் பணி, வடவள்ளி, வீரகேரளம், கவுண்டம்பாளையம், துடியலூர் பகுதிகளில் புதிதாக பாதாள சாக்கடை மேற்கொள்ளும் பணி, தார்ச்சாலை, தெருவிளக்கு பராமரிப்பு பணி உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து மொத்தம் 47 தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் பிரதாப், பேசியதாவது:-
மாநகராட்சி சார்பில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவைத்தொ கை படிப்படியாக செலுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில்கூட ரூ.100 கோடி செலுத்தப்பட்டது. இன்னும் ரூ.240 கோடி பாக்கி உள்ளது. அதுவும், விரைவில் செலுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
மேயர் கல்பனா பேசுகையில், மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட்சிட்டி பணி உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகளை விரைவாக செய்து முடிக்க அனைத்து பிரிவு அலுவலர்கள் மற்றும் அந்தந்த பகுதி கவுன்சிலர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.






