search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "taluk office"

    • தாலுகா அலுவலகம் முன்பு புளியமரம் சாய்ந்தது.
    • தற்போது அந்த புளியமரம் அருகில் அகற்றி வைக்கப்பட்டதால் வாகன போக்குவரத்து சீரானது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு மதுரை -திண்டுக்கல் நகர்புற சாலையில் புளியமரம் இன்று காலை 6 மணிக்கு திடீரென்று சாலையின் நடுவே சாய்ந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அதிகாரி சதக்கத்துல்லா மற்றும் தீயணைப்பு வீரர்கள் மரத்தினை அகற்ற வந்தனர். அப்போது அங்கிருந்த சாலை பணியாளர் ஜே.சி.பி. மூலம் மரத்தினை அகற்றுவதாக கூறியதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் திரும்பி சென்றனர். ஆனால் 10 மணியாகியும் மரம் அகற்றப்படாமல் அப்படியே கிடந்தது.

    இதனால் போக்குவரத்து பாதித்தது. அந்த வழியாக வந்த வாகனங்கள் மதுரை செல்லும் நகர் புறவழிச்சாலை வழியாக எதிரும் புதிருமாக வந்தது செயற்கையான விபத்து ஏற்படுத்தும் விதமாக இருந்தது. தற்போது அந்த புளியமரம் அருகில் அகற்றி வைக்கப்பட்டதால் வாகன போக்குவரத்து சீரானது.

    • திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் 23, 24, 25, 26 ஆகிய தேதிகளில் 4 நாட்கள் நடைபெறவுள்ளது.
    • பொதுமக்கள் அரசு இ- சேவை மையத்தின் இணையதளம் மூலம் மனுக்களை பதிவு செய்து கொண்டு பயன் பெறலாம்.

    பல்லடம் :

    பல்லடம் தாலுகா அலுவலகத்தில் வருகிற 23-ந் தேதி ஜமாபந்தி தொடங்குகிறது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் 23, 24, 25, 26 ஆகிய தேதிகளில் 4 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் பல்லடம் உள் வட்டம், கரடிவாவி உள் வட்டம், சாமளாபுரம் உள் வட்டம், பொங்கலூர் உள் வட்டம் ஆகிய கிராம பகுதிகளுக்கு ஜமாபந்தி நடைபெறவுள்ளது. ஜமாபந்தி தொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் அரசு இ- சேவை மையத்தின் இணையதளம் மூலம் மனுக்களை பதிவு செய்து கொண்டு பயன் பெறலாம்.

    மனுக்கள் மீது ஜமாபந்தி நடைபெறும் நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என்று பல்லடம் வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அல்லாளபுரத்தில் ஒரு தரப்பினர் அரசு வழங்கிய இடத்தில் வசித்து வருகின்றனர்.
    • 30-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் பல்லடம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சிக்கு ட்பட்ட அல்லாளபுரத்தில் ஒரு தரப்பினர் அரசு வழங்கிய இடத்தில் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில், இவர்களது குடியிருப்பின் அருகில் வசித்து வரும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அத்து மீறி இடத்தை ஆக்கிரமித்து முள் கம்பி வேலி அமைக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வர்களிடம் மிரட்டல் விடு த்ததாகவும் கூறப்படு கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் நேற்று பல்லடம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், இடம் சம்பந்தமான பிரச்சனையை வருவாய்த்துறையில் புகார் அளியுங்கள் என தெரிவித்ததை அடுத்து, அவர்கள் பல்லடம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இதையடுத்து அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • தாலுகா அலுவலக வளாகத்துக்குள் கிளைச்சிறை, நீதிமன்றம், பொது சேவை மையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது.
    • பொதுமக்கள் செல்வதற்கு கூட போதிய இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை கச்சேரி வீதியில் அமைந்துள்ள தாலுகா அலுவலக வளாகத்துக்குள் கிளைச்சிறை,நீதிமன்றம்,பொது சேவை மையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது.இந்தநிலையில் பல்வேறு சேவைகளை பெறுவதற்காக இங்கு வருபவர்கள் மட்டுமல்லாமல், வீதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லாதவர்கள் கூட தாலுகா அலுவலக வளாகத்துக்குள் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திச் செல்கின்றனர்.இதனால் இங்கு வரும் பொதுமக்கள் செல்வதற்கு கூட போதிய இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுதவிர தாசில்தார்,நீதிபதிகள் மற்றும் முக்கிய அதிகாரிகளின் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.அத்துடன் கிளைச்சிறைக்கு அருகில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் சிறை வளாகத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

    எனவே தாலுகா அலுவலகத்துக்கு எதிரில் வாகனங்களை நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர்வு முகாம் நடத்தப்படுகிறது.
    • முகாமில் புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொது விநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு ஒவ்வொறு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று நெல்லை மாவட்டத்தின் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர்வு முகாம் நடத்தப்படுகிறது.

    அதன்படி நாளை (சனிக்கிழமை) நடைபெறும். இக்குறைதீர் முகாமில் புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரி விண்ணப்பித்தல், குடும்ப அட்டையில் செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து புகார் அளித்தல், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார் அளித்தல் ஆகிய சேவைகளை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

    பயனாளர் உரிய ஆவணங்களுக்குரிய ஆதார் அட்டை, பிறப்பு, இறப்பு சான்று மற்றும் குடியிருப்பு முகவரிக்கு ஆதாரமான ஆவணங்கள் ஆகியவற்றினை எடுத்து செல்ல வேண்டும். மேலும் செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்வதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணை கொண்டு செல்ல வேண்டும்.

    முகாம் மற்றும் பொது விநியோகத்திட்ட செயல்பாடுகள் குறித்த புகார்களுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக பொது விநியோகத்திட்ட கட்டுப்பாட்டு அறை எண்: 9342471314 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாரிமுத்து குடும்பத்தினருடன் தாலுகா அலுவலகம் எதிர்புறம் தர்ணாவில் ஈடுபட்டார்.
    • கூட்டுப்பட்டாவிற்கு தனிப்பட்டா கேட்டு மாரிமுத்து குடும்பத்தினர் விண்ணப்பம் செய்துள்ளார்கள்.

    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள சுத்தமல்லியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 40). இவரது அண்ணன் மாரிவேல்.

    தர்ணா போராட்டம்

    விவசாயிகளான இவர்கள் இன்று தங்களது குடும்பத்தினருடன் வந்து நெல்லை தாலுகா அலுவலகம் நுழைவு வாயில் எதிர்புறம் திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் சந்திப்பு போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது மாரிமுத்து கூறியதாவது:-

    எங்களது பூர்வீக சொத்து சுத்தமல்லியில் உள்ளது. இதனை எங்களது குடும்பத்தினரும், பெரி யப்பா குடும்பத்தினரும் சரிபாதியாக பங்கிட்டு கொண்டோம். இதற்காக அந்த சொத்திற்கான கூட்டுப்பட்டாவிற்கு தனிப்பட்டா கேட்டு விண்ணப்பம் செய்தோம். பெரியப்பா குடும்பத்தினருக்கு விரைவிலேயே தனிப்பட்டா வழங்கப்பட்டது. ஆனால் மாதக்கணக்காகியும் எங்களுக்கு தனிப்பட்டா வழங்க வில்லை. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் கேட்ட போதும், அவர்கள் ஆவணங்கள் சரியில்லை என்று அலைக்கழிப்பு செய்தனர்.

    ஒரே பட்டாவை கொண்ட பெரியப்பா குடும்பத்தினருக்கு தனிப்பட்டா வழங்கிய போது எங்களுக்கு மட்டும் ஏன் வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக எங்களுக்கு தனிப்பட்டா வழங்க வேண்டும் என கூறினார்.

    சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் ஆய்வாளர் லட்சுமண பாண்டியன், டவுன் உதவி கமிஷனர் விஜயகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆர்.டி.ஓ.அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். அதன்பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • அரசு இழப்பீடு தொகை வழங்குவதில் கால தாமதம் ஆனதையொட்டி பாதிக்கப்பட்ட விவசாயிகள் ராசிபுரம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
    • கோர்ட் ஊழியர்கள் மற்றும் விவசாயிகள், ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்திற்கு ஜப்தி செய்ய சென்றனர்.

    ராசிபும்:

    சேலம்-கரூர் அகல ரெயில் பாதை திட்டத்திற்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ராசிபுரம் தாலுகாவை சேர்ந்த கீரனூர், நெ.3 குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்களை அரசு கையகப்படுத்தியது. இதற்காக விவசாயிகளுக்கு ரூ.10 கோடி அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

    அரசு இழப்பீடு தொகை வழங்குவதில் கால தாமதம் ஆனதையொட்டி பாதிக்கப்பட்ட விவசாயிகள் ராசிபுரம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுவரையில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கப்படாத நிலையில், ரெயில்வே துறைக்கு நிலம் எடுத்துக் கொடுத்த தாசில்தார் அலுவலக வாகனங்கள், தளவாடப் பொருட்களை ஜப்தி செய்ய ராசிபுரம் சார்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

    இதையடுத்து நேற்று கோர்ட் ஊழியர்கள் மற்றும் விவசாயிகள், ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்திற்கு ஜப்தி செய்ய சென்றனர். அங்கிருந்த துணை தாசில்தாரிடம் கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்ய வந்திருப்பதை தெரிவித்தனர். ஆனால் தாசில்தார் அங்கு இல்லாததால் கோர்ட் ஊழியர்கள் திரும்பி சென்றனர்.

    இதேபோல் ராசிபுரம் ரெயில் நிலையத்திற்கும் சென்ற கோர்ட் ஊழியர்கள், அங்கிருந்த மேற்பார்வையாளரிடம் ஜப்தி செய்ய வந்திருப்பது குறித்து எடுத்து கூறினர். அப்போது அங்கிருந்த ரெயில்வே ஊழியர்கள், சேலத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் தெரிவிக்குமாறு கூறினர். இதையடுத்து கோர்ட்டு ஊழியர்கள் திரும்பி சென்றனர்.

    விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காததால் கோர்ட் ஊழியர்கள் தாலுகா ஆபீஸ் மற்றும் ரெயில்வே நிலையத்தை ஜப்தி செய்ய சென்ற சம்பவம் ராசிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தாசில்தார் கிருஷ்ணகுமாரி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    எட்டயபுரம்:

    எட்டயபுரம் அருகே முத்துலாபுரம் குறுவட்டத்துக்கு உட்பட்ட மாசார்பட்டி மேலக்கரந்தை, அயன்ராஜாபட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மானாவாரி விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 2020-21-ம் ஆண்டு பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிர் சேதமடைந்தது. இதற்குரிய பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் அய்யாதுரை தலைமையில் விவசாயிகள் எட்டயபுரம் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் தாசில்தார் கிருஷ்ணகுமாரி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், 2020-21-ம் ஆண்டு பயிர் காப்பீடு செய்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். பேச்சுவார்த்தையில், புதூர் வட்டார வேளாண்மை துணை அலுவலர் ராமன், உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள் மகேஷ், நாகராஜ், சுப்புராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கல்குவாரியை தற்காலிகமாக மூடக்கோரி திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவிட்டார்.
    • மேல்முறையீடு செய்து தடையை நீக்கி கடந்த சில நாட்களாக மீண்டும் அந்த குவாரி இயக்கப்பட்டு வருகிறது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் செயல்பட்டுவரும் தனியார் கல்குவாரி நிறுவனம் உரிய விதிமுறைகளை பின்பற்றவில்லை என கூறி விவசாயி ஒருவர் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினார். இதையடுத்து கல்குவாரியை தற்காலிகமாக மூடக்கோரி கடந்த செப்.8ந்தேதி திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவிட்டார். இந்நிலையில் மேல்முறையீடு செய்து தடையை நீக்கி கடந்த சில நாட்களாக மீண்டும் அந்த குவாரி இயக்கப்பட்டு வருகிறது எனவும், அபராதம் விதிக்கப்பட்டதாகவும், விசாரணையின்முழுவிபர நகலை கேட்டு பல்லடம் தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தாசில்தார் நந்தகோபால், கலெக்டர் அலுவலக கூட்டத்திற்கு சென்றுவிட்டதால், துணை தாசில்தார் பானுமதி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன்ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். உத்தரவு நகலை எங்களிடம் தரும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என தெரிவித்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு, தர்ணா போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • காலவரையற்ற உண்ணாவிரதத்தில் தொடர்ந்து 11 வது நாளாக ஈடுபட்டுள்ளார்.
    • தாசில்தாரிடம் பேச்சுவார்த்தைக்காக வந்தவர்கள்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் செயல்படும் கல்குவாரி நிர்வாகத்தை கண்டித்து செந்தில்குமார் என்பவர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் தொடர்ந்து 11 வது நாளாக ஈடுபட்டுள்ளார்.

    இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் அவரது உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு 8 மணி அளவில் பல்லடம் தாலுக்கா அலுவலகத்தில், தாசில்தாரிடம் பேச்சுவார்த்தைக்காக வந்தவர்கள், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து அங்கேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் பல்லடம் தாசில்தார் நந்தகோபால், பல்லடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லாமல் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இன்றுகாலையும் போராட்டம் நீடித்தது. அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

    • கண்ட்ரோல் யூனிட், 1,698 மற்றும் விவிபேட் 1,836 எந்திரங்கள் ஆகியவை கொண்டு வரப்பட்டுள்ளன.
    • துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவலும் போடப்பட்டுள்ளது.

    பல்லடம்:

    தமிழகத்தில் கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதற்காக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன. இதனை மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன், பல்லடம் தாசில்தார் நந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். முன்னதாக அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை திறக்கப்பட்டது.

    இது குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன் கூறியதாவது: -

    உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் உள்ளிட்ட திருப்பூர் மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பேலட் யூனிட் 3,280, கண்ட்ரோல் யூனிட், 1,698 மற்றும் விவிபேட் 1,836 எந்திரங்கள் ஆகியவை கொண்டு வரப்பட்டுள்ளன. இவைகளில் பழுதான வாக்குப்பதிவு எந்திரங்கள் தனியாக பிரிக்கப்பட்டு வருகின்றன. பழுது பார்த்து அவைகளை சரிசெய்ய பெங்களூர் பெல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.மற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவலும் போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கடந்த 2000 ம் ஆண்டு வசித்து வந்த 2 செண்ட் இடத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
    • வசிக்க வீடு இல்லாமல் தவித்து வருவதாகவும், உடனடியாக தங்கள் இடத்தை அளவீடு செய்து தரவேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சேகாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நல்லமுத்து. அவரது மனைவி ராஜம்மாள். இவர்கள் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நல்லமுத்து உயிரிழந்த நிலையில் ராஜம்மாள் தனது மகன் சக்திவேல் குடும்பத்தினருடன் இருந்து வருகிறார். கடந்த 2000 ம் ஆண்டு அவர்கள் வசித்து வந்த 2 செண்ட் இடத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் வசித்து வந்த வீடு மழையால் சிதிலமடைந்ததால் அதனை அகற்றி விட்டு புதிய வீடு கட்டும் பணிகளை துவங்கியுள்ளனர். அதற்கு அருகில் வசிப்பவர்கள் வழித்தடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டுவதாக வருவாய் துறையினருக்கு புகார் அளித்த நிலையில் வீடு கட்டும் பணிக்கு தடை விதித்து வருவாய் துறை நோட்டீஸ் வழங்கியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து ராஜம்மாளின் மகன் சக்திவேல் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அவர்களது இடத்தை முறையாக அளவீடு செய்து தருமாறு மனு கொடுத்துள்ளார். ஆனால் அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்யாமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜம்மாள் தனது மகன் சக்திவேல் குடும்பத்தினருடன் பல்லடம் தாலுகா அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். வசிக்க வீடு இல்லாமல் தவித்து வருவதாகவும், உடனடியாக தங்கள் இடத்தை அளவீடு செய்து தரவேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில், நிலத்தை அளவீடு செய்ய வருவாய்த்துறை அதிகாரிகள் சென்றபோது ராஜம்மாள் குடும்பத்தினருக்கும் அருகே வசிப்பவர்களுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது. இதனால் காயமடைந்த இரண்டு தரப்பினரும் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்லடம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    ×