search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Congress president election"

    • தமிழக வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 4 ஓட்டு பெட்டிகள் நாளை வருகின்றன.
    • நாளை மறுநாள் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் நாளை மறுநாள் (17-ந்தேதி) நடக்கிறது.

    தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் ஆகியோர் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    நாடு முழுவதும் சுமார் 10 ஆயிரம் காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்களிக்க உள்ளார்கள். இதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான ஓட்டு பெட்டிகளும், ஓட்டு சீட்டுகளும் டெல்லியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

    காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட தலைவர்கள், முன்னாள் மாநில தலைவர்கள் ஆகியோர் வாக்குரிமை பெற்றவர்கள் ஆவார்கள்.

    அந்த வகையில் தமிழ்நாட்டில் 710 வாக்காளர்கள் உள்ளனர்.

    இவர்கள் வாக்களிப்பதற்காக சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஓட்டுப்பதிவு மையங்கள் அமைக்கப்படுகிறது.

    தமிழக வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 4 ஓட்டு பெட்டிகள் நாளை வருகின்றன. நாளை மறுநாள் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    சத்தியமூர்த்தி பவனில் 4 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு பூத்திலும் சராசரியாக 180 வாக்குகள் வீதம் பிரிக்கப்படுகிறது.

    தேர்தல் அதிகாரிகளாக வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் செயல்படுவார்கள். வாக்களிக்க வருபவர்கள் சத்தியமூர்த்தி பவன் அரங்கில் அமர வைக்கப்படுவார்கள்.

    ஒவ்வொருவருக்கும் 'கியூ ஆர்' கோடுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது.

    வாக்காளர் அடையாள அட்டையுடன் வாக்களிக்க செல்ல வேண்டும். முதலில் அவரது பெயர், ஊர், பொறுப்பு உள்ளிட்ட பெயர் விபரம் சரிபார்க்கப்படும்.

    பின்னர் ஒரு ஓட்டுச் சீட்டு வழங்கப்படும். ஓட்டு சீட்டில் முதல் பெயராக மல்லிகார்ஜூன கார்கே பெயர் ஆங்கிலத்திலும் இந்தியிலும் அச்சிடப்பட்டு உள்ளது. 2-வது பெயராக சசிதரூர் பெயர் உள்ளது.

    வாக்குச்சீட்டின் அடியில் எந்த மாநிலம், வாக்காளர் பெயர், வரிசை எண், இடம் ஆகிய விபரங்கள் கேட்கப்பட்டு பூர்த்தி செய்யப்படும். பின்னர் அந்த கவுண்டர் பாயிலை வாக்காளரிடமே கிழித்து கொடுத்து விடுவார்கள்.

    வாக்குச் சீட்டுடன் வாக்களிக்க மறைவான இடத்துக்கு செல்ல வேண்டும். அங்கு வைக்கப்பட்டிருக்கும் முத்திரை மூலம் யாருக்கு ஓட்டுப்போட விருப்பமோ, அந்த பெயருக்கு எதிரே உள்ள இடத்தில் முத்திரை வைத்து ஓட்டுப்பெட்டியில் போட வேண்டும்.

    பின்னர் அந்த பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பப்படும். டெல்லியில் வாக்கு எண்ணிக்கையின் போது அனைத்து மாநிலங்களிலும் இருந்து கொண்டு செல்லப்படும் வாக்குச் சீட்டுகளை ஒன்றாக கொட்டி கலந்து அதன்பிறகு எண்ண தொடங்குவார்கள். 20-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    • தேர்தலில் நான் போட்டியிடுவதை மூத்த நிர்வாகிகள் பலர் விரும்பவில்லை.
    • சிலர் ராகுல் காந்தியை சந்தித்து எனது வேட்பு மனுவை வாபஸ் பெறக்கூறுமாறு தெரிவித்து உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வருகிற 17-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    இந்த தேர்தலில் கர்நாடகாவை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கேவும், கேரளாவை சேர்ந்த சசிதரூரும் போட்டியிடுகிறார்கள். மல்லிகார்ஜூன கார்கேவுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தியின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.

    இதுபோல பல்வேறு மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் சசிதரூருக்கு அவரது சொந்த மாநிலமான கேரளாவில் கூட ஆதரவு இல்லை. கேரள மாநில காங்கிரஸ் தலைவரும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். இதுபற்றி சசிதரூர் கூறியதாவது:-

    தேர்தலில் நான் போட்டியிடுவதை மூத்த நிர்வாகிகள் பலர் விரும்பவில்லை. அவர்களில் சிலர் ராகுல் காந்தியை சந்தித்து எனது வேட்பு மனுவை வாபஸ் பெறக்கூறுமாறு தெரிவித்து உள்ளனர்.

    அதற்கு அவர் மறுத்து விட்டார். தலைவரை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கட்சித் தலைவர் உறுதியளித்துள்ளதால் எந்த சந்தேகமும் இல்லை.
    • தேர்தலை நேர்மையாக நடத்த சோனியா காந்தி குடும்பத்தினர் விருப்பம்.

    நாக்பூர்:

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் மாதம் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் சோனியா காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடவில்லை. மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதால் அவர்கள் போட்டியிடுவது மட்டும் உறுதியாகி உள்ளது.

    இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள தீக்சாபூமி நினைவு சின்னத்தை இன்று பார்வையிட்ட சசிதரூர், காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கினார். செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது இந்த தேர்தலில் சோனியாகாந்தி குடும்பத்தினருக்கு பிடித்த வேட்பாளர் மல்லிகார்ஜூன் கார்க்கேவா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த சசிதரூர் தெரிவித்துள்ளதாவது:

    காந்தி குடும்பத்தைச் சேர்ந்த மூவரையும் (சோனியா, ராகுல், பிரியங்கா) சந்தித்துப் பேசினேன். கட்சித் தலைவர் தேர்தலில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் யாரும் இல்லை என்றும், அப்படிப்பட்ட வேட்பாளர் யாரும் இருக்க மாட்டார் என்றும் அவர்கள் என்னிடம் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். அவர்கள் நல்ல நேர்மையான தேர்தலை நடத்த விரும்புகிறார்கள்.

    காந்தி குடும்பம் நடுநிலையாகவும், கட்சி பாரபட்சமற்றதாகவும் இருக்கும். சிறந்த முறையில் இந்த தேர்தலை நடத்தி கட்சியை பலப்படுத்த அவர்கள் விரும்புகிறார்கள். கட்சித் தலைவர் (சோனியாகாந்தி) என்னிடம் உறுதியளித்துள்ளதால் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இன்று வேட்புமனுக்கள் குறித்து ஆய்வு நடைபெற்றது.
    • மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் இடையே நேரடிப் போட்டி.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் மாதம் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், ஜார்கண்ட் மாநில முன்னாள் அமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான கேஎன் திரிபாதி ஆகியோர் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர். 


    இந்த நிலையில், வேட்புமனுக்கள் குறித்து ஆய்வு இன்று நடைபெற்றதாக கட்சியின் தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி தெரிவித்துள்ளார். இதில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

    வேட்புமனுவை விதிமுறைகளின் படி பூர்த்தி செய்யாததால் கே.என் திரிபாதியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக மதுசூதன் மிஸ்த்ரி கூறினார். அவரது வேட்புமனுத் தாக்கலின் போது மொத்தம் 20 படிவங்கள் பெறப்பட்டன. அவற்றில் நான்கு கையொப்பங்கள் மீண்டும் மீண்டும் போடப்பட்டிருந்ததால் நிராகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

    வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான அக்டோபர் 8ந் தேதி கடைசி நாள். அன்று மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் இடையே நேரடிப் போட்டி உறுதியாகி உள்ள நிலையில், 8ந் தேதிக்குள் யாரும் வாபஸ் பெறா விட்டால், 17ந் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் என்றும் மதுசூதன் மிஸ்த்ரி கூறியுள்ளார். 

    • இந்த தேர்தலில் போட்டியிட சசிதரூர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
    • மல்லிகார்ஜுன கார்கேவும் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட முன்னாள் மத்திய மந்திரியும், அக்கட்சியின் எம்.பி.யுமான சசிதரூர் வேட்புமனுவை இன்று காலை தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து பிற்பகல் அக்கட்சியின் மூத்த தலைவரும், பாராளுமன்ற மாநிலங்களைவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் வேட்புமனுவை தாக்கல் செய்தார். 


    டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரியிடம் வேட்புமனுவை அவர் வழங்கினார். அசோக் கெலாட் உள்பட காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் அப்போது உடன் இருந்தனர். இந்த நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட ஜார்க்கண்ட் மாநில முன்னாள் அமைச்சர் கே.என். திரிபாதியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.


    இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (திரிபாதி பிரிவு) தேசியத் தலைவராக அவர் பணியாற்றி உள்ளார். திரிபாதி போட்டியிடுவதன் மூலம் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மும்முனை போட்டி உறுதியாகி உள்ளது.

    • இது நட்பு ரீதியான போட்டியாக இருக்கும்.
    • கட்சி வலுவாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு 22 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் 17-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் சோனியாகாந்தி குடும்பத்தை சேர்ந்த யாரும் போட்டியிடவில்லை. ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், அக்கட்சியின் கேரளா எம்.பி. சசி தரூரும் போட்டியிடுவார்கள் என முதலில் தகவல் வெளியானது.

    இந்நிலையில் ராஜஸ்தான் முதலமைச்சர் பதவியை விட்டு தர அசோக்கெலாட் மறுத்து விட்டதால் அவர் மீது சோனியா கடும் அதிருப்தி அடைந்தார். இதனால் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கெலாட் அறிவித்தார். இதனிடையே திடீர் திருப்பமாக காங்கிரஸ் மூத்த தலைவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு கட்சி தலைமையும் ஆதரவு அளித்துள்ளது. இதையடுத்து இந்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், அதை கைவிட்டதுடன், மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ஆதரவு அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட சசிதரூர் இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று அவர் அஞ்சலி செலுத்தினார். இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளதாவது: 21-ம் நூற்றாண்டுக்கு இந்தியாவின் பாலத்தை கட்டியவருக்கு இன்று காலை அஞ்சலி செலுத்துகிறேன். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கூறியதுபோல் இந்தியா ஒரு பழைமையான நாடு. ஆனால் ஒரு இளம் தேசம். இந்தியா வலிமையான சுதந்திரமான தன்னம்பிக்கை மற்றும் உலக நாடுகளின் சேவையில் முன்னிலையில் இருக்க வேண்டும் என்று கனவு காண்கிறேன்.

    ஒரு பந்தயத்தில் நுழையும் போது முடிவு நிச்சயமற்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் நீங்கள் நல்ல பலன்களை கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் செல்வீர்கள்.அதேபோல் நான் செல்கிறேன்,  இது நட்பு ரீதியான போட்டியாக இருக்கும். கட்சி வலுவாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அதிருப்தி தலைவர்களில் யாரும் (ஜி-23) வேட்பாளர் கிடையாது என்று கூறுவது கட்டுக்கதை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில் மல்லிகார்ஜூன கார்கே மதியத்துக்கு மேல் மனு தாக்கல் செய்வார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இதை அடுத்து காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜூன கார்கே-சசி தரூர் இடையே போட்டி உறுதியாகி உள்ளது.

    • ராஜஸ்தான் காங்கிரஸ் உட்கட்சி மோதலால் அசோக் கெலாட் போட்டியிடுவதில் சிக்கல்.
    • காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசிதரூர் நாளை வேட்புமனு தாக்கல்.

    காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 24ந் தேதி தொடங்கியது. நாளை மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுத்து விட்ட நிலையில், இந்த தேர்தலில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டும், அவரை எதிர்த்து கேரள எம்பி சசிதரூரும் களம் இறங்கி உள்ளதாக கூறப்பட்டது.

    இந்நிலையில் ராஜஸ்தான் காங்கிரசிக்குள் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக சோனியா காந்தி, கெலாட் மீது அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. இதனால் இந்த தேர்தலில் கெலாட் போட்டியிடுவதில் சிக்கல் நீடிக்கிறது.  நாளை காலை 11 மணிக்கு சசிதரூர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

    இந்த நிலையில் திடீர் திருப்பமாக மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய்சிங் இந்த தேர்தல் களத்தில் குதித்துள்ளார். இன்று காலை அவர் வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    முன்னதாக அவர் கேரள மாநிலத்தில் ராகுல்காந்தியுடன் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வந்தார். வேட்புமனு தாக்குதலுக்காக நேற்று கேரளாவில் இருந்து அவர் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அவருடன் ஒரே விமானத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலும் டெல்லி சென்றுள்ளார்.

    • காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
    • வேட்பு மனு தாக்கல் செய்ய 30-ந் தேதி கடைசி நாளாகும்.

    காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்புமனு படிவங்கள், டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கிடைக்கும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.

    30-ந் தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். அக்டோபர் 1-ந் தேதி, வேட்புமனு பரிசீலனை நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 8-ந் தேதி கடைசிநாள். அன்று மாலை 5 மணிக்கு வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். அக்டோபர் 17-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். 19-ந் தேதி, ஓட்டுகள் எண்ணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்தலில் போட்டியிட ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுத்து விட்டதால், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் மூத்த எம்.பி. சசிதரூர் ஆகியோர் போட்டியிடுவார்கள் என தெரிகிறது. இந்த நிலையில், ராகுல் காந்தி இயல்பான தலைவர் என்றும், அவருக்கு எந்த பதவியும் தேவையில்லை என்றும் மேற்கு வங்க காங்கிரஸ் எம்.பி., ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

    ராகுல்காந்தி போட்டியிட மறுத்து விட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறுவதாகவும், இனிமேல் ராகுல்காந்தி குடும்பத்தை சிறுமைப்படுத்தும் முயற்சியை பாஜக நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    காங்கிரஸில் ஜனநாயகம் உள்ளது, அதனால் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது என்றும், ஆனால் பாஜகவில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்ததா என கேள்வி எழுப்பிய சவுத்ரி, அந்த கட்சியின் தலைவர் நாக்பூரில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டார் என குறிப்பிட்டார்.

    • எந்த அரசியல் கட்சியிலும் தலைவரை தேர்வு செய்ய தேர்தல் நடைபெறுவதில்லை.
    • கட்சி விதிகளின்படியே காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறும்.

    ஜெய்ப்பூர்:

    காங்கிரஸ் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திற்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் அஜய் மக்கன் ஜெய்ப்பூரில் நேற்று கட்சி நிர்வாகிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினா.

    அப்போது பேசிய அவர், கட்சியின் பாரம்பரிய விதிகளின்படியே காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறும் என்றார். எந்த அரசியல் கட்சியிலும் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். பாஜகவில் தேர்தல் மூலம் தலைவராக ஜே.பி.நட்டாவோ, அமித் ஷாவோ தேர்வு செய்யப்பட்டதாக யாராவது கேள்வி பட்டிருக்கிறீர்களா என அவர் கேள்வி எழுப்பினார். 


    இந்த கூட்டத்தில் பேசிய ராஜஸ்தான் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட், ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாகவும், பாஜக பிரித்தாளும் அரசியலில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டினார். அரசியல் ஆதாயத்திற்காக காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி மீது பாஜக தாக்குதல் நடத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    • காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் அக்டோபர் 17-ந்தேதி நடக்கிறது.
    • வாக்காளர் பட்டியலை ஒளிவுமறைவின்றி வெளியிட வேண்டும்.

    புதுடெல்லி :

    கடந்த 2019-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகியதை தொடர்ந்து, சோனியாகாந்தி இடைக்கால தலைவராக நீடித்து வருகிறார். தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    23 அதிருப்தி தலைவர்கள் அடங்கிய ஜி-23 குழுவை சேர்ந்த சசிதரூர், இத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலித்து வருகிறார். தேர்தலில் வாக்களிப்பவர்கள் பட்டியலை வெளியிடுமாறு அதிருப்தி குழுவை சேர்ந்த ஆனந்த் சர்மா ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்தநிலையில், இக்குழுவில் உள்ள மற்றொரு எம்.பி.யான மணீஷ் திவாரி, இதே கோரிக்கையை விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிப்பவர்கள் பட்டியல் வெளியிடப்படாது என்று காங்கிரசின் தேர்தல் பிரிவு தலைவர் மதுசூதன் மிஸ்திரி கூறியுள்ளார். யாராவது வாக்காளர் பட்டியலை சரிபார்க்க விரும்பினால், மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்துக்கு சென்று பார்த்துக்கொள்ளலாம் என்றும், யாராவது போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தால் அவர்களுக்கு பட்டியல் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

    வாக்காளர் பட்டியலை வெளிப்படையாக வெளியிடாமல் எப்படி நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடத்த முடியும்? ஒருவேளை யாராவது போட்டியிட விரும்பினால், வேட்புமனுவை 10 வாக்காளர்கள் முன்மொழிய வேண்டும். கடைசியில், அவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று கூறி, வேட்புமனுவை நிராகரிக்க வாய்ப்புள்ளது.

    எனவே, வாக்களிப்பவர்கள் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிட வேண்டும். பட்டியலை பார்ப்பதற்காக மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்துக்கு ஏன் செல்ல வேண்டும்?

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அவரது கருத்துக்கு சசிதரூர் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    யார் யார் வாக்களிப்பார்கள் என்பது ஒவ்வொருவருக்கும் தெரிய வேண்டும். இதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். இதில் எந்த தவறும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரமும் இந்த கருத்தை ஆதரித்துள்ளார். அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொரு தேர்தலுக்கும் நன்கு வரையறுக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் உள்ளது. அந்த பட்டியலை ஒளிவுமறைவின்றி வெளியிட வேண்டும்.

    சீர்திருத்தவாதிகளை கிளர்ச்சி செய்பவர்களாக பார்க்கக்கூடாது. கட்சியை சீர்திருத்த விரும்பும் ஒவ்வொருவரும் ராஜினாமா செய்ய வேண்டுமா? அப்படியானால் கண்மூடித்தனமான ஆதரவாளர்கள்தான் கட்சியில் இருக்க வேண்டுமா?

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஆனால், ஆட்சேபனை தெரிவிப்பவர்களை விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    நான் திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுபவரின் வேட்புமனுவை ஏதேனும் 10 மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் முன்மொழிந்தால் போதும்.

    தேர்தல் நடைமுறை குறித்து என் சகாக்கள் ஏன் குழப்பம் விளைவிக்கிறார்கள்? வெளிப்படையான முறையை கொண்டுள்ள நாம் பெருமைப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காணொலி மூலம் சோனியா காந்தி தலைமை தாங்குகிறார்.
    • கட்சித் தலைவர் தேர்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை.

    காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ராஜினாமா செய்த பரபரப்பான சூழலில் நாளை மாலை காங்கிரஸ் தேசிய காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. மாலை 3.30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்திற்கு சோனியா காந்தி தலைமை தாங்குகிறார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் இடைக்கால தலைவராக உள்ள சோனியாகாந்தி தற்போது மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ளார். அவர் எந்த நாட்டிற்கு சென்றுள்ளார் என்ற விபரம் வெளியாகாத நிலையில், அங்கிருந்தபடி காணொலி மூலம் கூட்டத்திற்கு அவர் தலைமை வகிப்பார் என கூறப்படுகிறது. சோனியாகாந்தியுடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியும் சென்றுள்ள நிலையில் அவர்களும் நாளைய கூட்டத்தில் காணொலி மூலம் கலந்து கொள்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அட்டவணைக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகள் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி மீது நம்பிக்கையை வெளிப்படுத்துவார்கள் என தெரிகிறது.

    காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20 ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று அந்த கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க மாட்டேன் என்ற நிலைப்பாட்டில் ராகுல் காந்தி உறுதியாக உள்ள நிலையில், நாளை நடைபெறும் தேசிய காரிய கமிட்டி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

    • காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பதவி வகித்து வருகிறார்.
    • செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர்வரை பாத யாத்திரை தொடங்குகிறது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவி வகித்து வருகிறார். புதிய தலைவரை தேர்வு செய்ய செப்டம்பர் 20-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, செப்டம்பர் 7-ம் தேதி, பாரத் பாதயாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர்வரை பாத யாத்திரை தொடங்குகிறது.

    இந்நிலையில், பாதயாத்திரை பணிகளில் கவனம் செலுத்த வேண்டி இருப்பதாலும், சில மாநிலங்கள் தலைவர் தேர்தலுக்கான நடைமுறைகளை முடிக்காததாலும் தலைவர் தேர்தல் ஒரு மாதம் தள்ளி போகும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    அதன்படி, அக்டோபர் மாதம் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடக்கிறது. வரும் 28-ம் தேதி காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி, தேர்தல் தேதியை முடிவு செய்கிறது.

    ×