search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை மறுநாள் காங்கிரஸ் தலைவர் தேர்தல்- சத்தியமூர்த்தி பவனில் 4 வாக்குப்பதிவு மையங்கள்
    X

    நாளை மறுநாள் காங்கிரஸ் தலைவர் தேர்தல்- சத்தியமூர்த்தி பவனில் 4 வாக்குப்பதிவு மையங்கள்

    • தமிழக வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 4 ஓட்டு பெட்டிகள் நாளை வருகின்றன.
    • நாளை மறுநாள் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் நாளை மறுநாள் (17-ந்தேதி) நடக்கிறது.

    தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் ஆகியோர் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    நாடு முழுவதும் சுமார் 10 ஆயிரம் காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்களிக்க உள்ளார்கள். இதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான ஓட்டு பெட்டிகளும், ஓட்டு சீட்டுகளும் டெல்லியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

    காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட தலைவர்கள், முன்னாள் மாநில தலைவர்கள் ஆகியோர் வாக்குரிமை பெற்றவர்கள் ஆவார்கள்.

    அந்த வகையில் தமிழ்நாட்டில் 710 வாக்காளர்கள் உள்ளனர்.

    இவர்கள் வாக்களிப்பதற்காக சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஓட்டுப்பதிவு மையங்கள் அமைக்கப்படுகிறது.

    தமிழக வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 4 ஓட்டு பெட்டிகள் நாளை வருகின்றன. நாளை மறுநாள் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    சத்தியமூர்த்தி பவனில் 4 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு பூத்திலும் சராசரியாக 180 வாக்குகள் வீதம் பிரிக்கப்படுகிறது.

    தேர்தல் அதிகாரிகளாக வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் செயல்படுவார்கள். வாக்களிக்க வருபவர்கள் சத்தியமூர்த்தி பவன் அரங்கில் அமர வைக்கப்படுவார்கள்.

    ஒவ்வொருவருக்கும் 'கியூ ஆர்' கோடுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது.

    வாக்காளர் அடையாள அட்டையுடன் வாக்களிக்க செல்ல வேண்டும். முதலில் அவரது பெயர், ஊர், பொறுப்பு உள்ளிட்ட பெயர் விபரம் சரிபார்க்கப்படும்.

    பின்னர் ஒரு ஓட்டுச் சீட்டு வழங்கப்படும். ஓட்டு சீட்டில் முதல் பெயராக மல்லிகார்ஜூன கார்கே பெயர் ஆங்கிலத்திலும் இந்தியிலும் அச்சிடப்பட்டு உள்ளது. 2-வது பெயராக சசிதரூர் பெயர் உள்ளது.

    வாக்குச்சீட்டின் அடியில் எந்த மாநிலம், வாக்காளர் பெயர், வரிசை எண், இடம் ஆகிய விபரங்கள் கேட்கப்பட்டு பூர்த்தி செய்யப்படும். பின்னர் அந்த கவுண்டர் பாயிலை வாக்காளரிடமே கிழித்து கொடுத்து விடுவார்கள்.

    வாக்குச் சீட்டுடன் வாக்களிக்க மறைவான இடத்துக்கு செல்ல வேண்டும். அங்கு வைக்கப்பட்டிருக்கும் முத்திரை மூலம் யாருக்கு ஓட்டுப்போட விருப்பமோ, அந்த பெயருக்கு எதிரே உள்ள இடத்தில் முத்திரை வைத்து ஓட்டுப்பெட்டியில் போட வேண்டும்.

    பின்னர் அந்த பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பப்படும். டெல்லியில் வாக்கு எண்ணிக்கையின் போது அனைத்து மாநிலங்களிலும் இருந்து கொண்டு செல்லப்படும் வாக்குச் சீட்டுகளை ஒன்றாக கொட்டி கலந்து அதன்பிறகு எண்ண தொடங்குவார்கள். 20-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    Next Story
    ×