search icon
என் மலர்tooltip icon

    சேலம்

    • 21 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த போதிலும் சங்கர் ஜப்பான் குடியுரிமை பெறாமலேயே இருந்து வந்தார்.
    • ஒரு ஓட்டு போடுவதற்காக லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையை செலவு செய்து ஜனநாயக கடமையாற்ற சேலம் வந்துள்ளார்.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் சங்கர்(வயது 45). டிசைனிங் என்ஜினீயராக பணிபுரியும் இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக ஜப்பான் நாட்டுக்கு சென்று உள்ளார். அங்கே தற்போது வரை 21 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த போதிலும் அவர் ஜப்பான் குடியுரிமை பெறாமலேயே இருந்து வந்தார்.

    நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சேலம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரபாண்டி சட்டசபை தொகுதி வாக்காளரான அவர் தனது ஒரு ஓட்டை பதிவு செய்வதற்காக, ஜப்பானில் இருந்து கடந்த 11-ந்தேதி சேலத்திற்கு புறப்பட்டு வந்துள்ளார். இதற்காக அவர் விமானத்தில் வந்தவகையில், ஒரு ஓட்டு போடுவதற்காக லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையை செலவு செய்து ஜனநாயக கடமையாற்ற சேலம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து என்ஜினீயர் சங்கர் கூறியதாவது, 'ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரில், நகரேயமா என்ற பகுதியில் வசித்து வரும் என்னிடம், நடிகர் விஜய் நடித்த சர்க்கார் திரைப்படத்தை பார்த்து விட்டு கதாநாயகன் ஒரு ஓட்டு போடுவதற்காக இந்தியாவுக்கு வருவது போன்று அந்த பாணியில் தான் இங்கு வருகிறீர்களா? என்று கேட்டதற்கு அந்த படத்தை நான் பார்த்தது இல்லை என்றார். இதற்கு மோடி அரசு தான் காரணம். பிரதமர் மோடியால் ஈர்க்கப்பட்டு வாக்கு அளிக்க வந்தேன். அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும்' என்றார்.

    • தீ மளமளவென பரவி சுமார் 2 ஏக்கர் பரப்பளவுக்கு பிடித்து எரிந்தது.
    • சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் லேடீஸ் சீட் பகுதியில் தீ ஏற்பட்டதால் உடனடியாக சுற்றுலா பயணிகள் அங்கிருந்து அனுப்பப்பட்டனர்.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த 3 மாதங்களாக மழை பொய்த்துபோய் காடு, மலைகள் பசுமை இழந்து வறண்டு காணப்படுகிறது. இதனால் அவ்வப்போது வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன் ஏற்காடு மலை பாதையில் உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி அந்த தீயை அணைத்தனர்.

    இந்த நிலையில் ஏற்காடு லேடீஸ் சீட் பகுதியில் உள்ள வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. தீ மளமளவென பரவி சுமார் 2 ஏக்கர் பரப்பளவுக்கு பிடித்து எரிந்தது. சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் லேடீஸ் சீட் பகுதியில் தீ ஏற்பட்டதால் உடனடியாக சுற்றுலா பயணிகள் அங்கிருந்து அனுப்பப்பட்டனர்.

    சம்பவ இடத்துக்கு வந்த ஏற்காடு தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைக்க முற்பட்டும் தீ கட்டுக்குள் வரவில்லை. குடியிருப்பு பகுதிக்கு தீ பரவாமல் தடுக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி அணைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகையும், சாம்பலுமாக காணப்பட்டது.

    • பாம்பை பிடித்துக் கொண்டும், பிரசாரம் நடந்த பகுதியில் சுற்றி திரிந்தார்.
    • வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சேலம்:

    சேலம் கருப்பூர் அருகே கோட்டகவுண்டம்பட்டி கிராமத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். அவர் பொதுமக்கள் மத்தியில் திறந்த வேனில் நின்று வாக்கு சேகரித்தார்.

    அப்போது அந்த கூட்டத்திற்கு வாலிபர் ஒருவர் வயல் வெளியில் சுற்றித்திரிந்த பாம்பு ஒன்றை பிடித்து கழுத்தில் போட்டுக்கொண்டு வந்தார். 2 கைகளிலும் பாம்பை பிடித்துக் கொண்டும், பிரசாரம் நடந்த பகுதியில் சுற்றி திரிந்தார். இதைக்கண்ட அங்கு கூடியிருந்த பொதுமக்கள் பீதி அடைந்தனர். உடனே அங்கு பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த போலீசார் அந்த வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.


    ஆனால் அந்த வாலிபர் பிரசாரம் முடியும் வரை, அந்த பகுதியை சுற்றிச்சுற்றி வந்தார். டி.எம்.செல்வகணபதி தனது பிரசாரத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்ற பிறகு தான் அந்த வாலிபரும் அந்த இடத்தில் இருந்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதை அறிந்த மாவட்ட வன அலுவலர் காஸ்யப் ஷஷாங் ரவி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பாம்புடன் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு வந்த அந்த வாலிபரை கண்டுபிடித்து கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் சேலம் தெற்கு வனச்சரகர் துரை முருகன் அந்த வாலிபர் யார்? என விசாரணை நடத்தியபோது பாம்புடன் பிரசார கூட்டத்திற்கு வந்தவர் கருப்பூர் பகுதியை சேர்ந்த அரவிந்த்குமார் (வயது 26) என்பது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • மின் கட்டணத்தை குறைக்க கோரி போராடி விவசாயிகளை திமுக அரசு சுட்டு வீழ்த்தியது.
    • ஏழை மாணவர்களை மருத்துவராக்கி பார்க்கும் கட்சி அதிமுக.

    சேலம் ஆத்தூர் ராணிப்பேட்டை திடலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    முதல்வருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. தெய்வ சக்தி படைத்த கட்சி அதிமுக. அதிமுகவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. பிரசார கூட்டம், அதிமுக மாநில மாநாடு போல் காட்சியளிக்கிறது.

    பிரசார கூட்டம், அதிமுக மாநில மாநாடு போல் காட்சியளிக்கிறது. அதிமுகவை விமர்சிக்கிறார்கள், இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவார்கள்.

    அதிமுகவை அழிக்க இந்த பூமியில் யாரும் இன்னும் பிறக்கவில்லை. அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்.

    அதிமுகவை விமர்சிக்கிறார்கள், இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவார்கள். மக்கள் செல்வாக்கு மிக்க கட்சி அதிமுக.

    பொய் வழக்குகள் போட்டு கட்சி பணியை முடக்க பார்க்கிறார்கள். திமுக ஆட்சியில் தான் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு நிலம் ஒதுக்கப்பட்டது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சராக இருந்தபோது ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. மின் கட்டணத்தை குறைக்க கோரி போராடி விவசாயிகளை திமுக அரசு சுட்டு வீழ்த்தியது.

    திமுக ஆட்சியில் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றன. நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் பொய் பிரசாரம் செய்கிறார்.

    காங்கிரசும், திமுகவும் நீட் தேர்வை கொண்டு வந்தது. முதலமைச்சர் திரும்ப திரும்ப பொய்யை பேசி, உண்மையாக மாற்ற முயற்சிக்கிறார்.

    அரசு பள்ளி மாணவர்களுக்காக 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு கொண்டு வந்தேன். முதலமைச்சர் திரும்ப திரும்ப பொய்யை பேசி, உண்மையாக மாற்ற முயற்சிக்கிறார்.

    தமிழகத்தில் 4 முதல்வர்கள் ஆட்சி செய்கின்றனர். ஏழை மாணவர்களை மருத்துவராக்கி பார்க்கும் கட்சி அதிமுக. ஏழை மாணவர்களை மருத்துவராக்கி பார்க்கும் கட்சி அதிமுக. மதுரை எய்ம்ஸ் குறித்து திமுக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் அழுத்தம் தரவில்லை.

    அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கால்நடை பூங்கா திறக்கப்படாமல் உள்ளது. ஒற்றை செங்கல்லை தூக்கி கொண்டு அமைச்சர் உதயநிதி விளம்பரம் செய்கிறார். விவசாயிகளுக்கான திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது.

    விவசாயிகளுக்கான திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், முடக்கப்பட்ட திட்டங்கள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆரணி, திருவண்ணாமலையில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி இரவு சேலம் வந்தார்.
    • பரமத்திவேலூர் ரோடு புறநகர் போலீஸ் நிலையம் எதிரில் திறந்த வேனில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.

    சேலம்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

    ஆரணி, திருவண்ணாமலையில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி இரவு சேலம் வந்தார். பின்னர் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டில் தங்கினார். தொடர்ந்து இன்று மாலை நாமக்கல் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்மணியை ஆதரித்து திருச்செங்கோட்டில் பரமத்திவேலூர் ரோடு புறநகர் போலீஸ் நிலையம் எதிரில் திறந்த வேனில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.

    தொடர்ந்து இரவு 7 மணியளவில் சேலம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேசை ஆதரித்து கோட்டை மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

    எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி திருச்செங்கோடு மற்றும் சேலம் கோட்டை பகுதியில் அ.தி.மு.க.கட்சி கொடிகள் கட்டப்பட்டுள்ளது.

    • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 74 கன அடியிலிருந்து 85 கன அடியாக அதிகரித்துள்ளது.
    • அணைக்கு வரும் நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 57.30 அடியாக சரிந்தது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணை நீர்தேக்கம் 60 சதுர மைல் பரப்பளவு கொண்டது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை, கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது. தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யவில்லை. தற்போது கோடை காலத்தை முன்னிட்டு மலைகளில் கோடை வறட்சி நிலவுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து 100 அடிக்கு கீழ் குறைந்து விட்டது.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 74 கன அடியிலிருந்து 85 கன அடியாக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக அனணயில் இருந்து வினாடிக்கு 2,200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு வரும் நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 57.30 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 22.71 டி.எம்.சி.யாக உள்ளது

    • சேலம் குரங்குச்சாவடி பகுதியில் சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து வேனில் நின்ற படியே பிரசாரம் செய்கிறார்.
    • தி.மு.க. வேட்பாளர் மலையரசனை ஆதரித்து ஆத்தூர் ராணிப்பேட்டையிலும், கெங்கவல்லியில் 6 மணிக்கும் வேனில் நின்றபடி பிரசாரம் செய்கிறார்.

    சேலம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று ஓமலூர் அண்ணாசிலை சந்திப்பில் சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

    அதனை தொடர்ந்து நாளை (9-ந்தேதி) காலை 9 மணிக்கு சேலம் குரங்குச்சாவடி பகுதியில் சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து வேனில் நின்ற படியே பிரசாரம் செய்கிறார்.

    தொடர்ந்து 10 மணிக்கு எடப்பாடி பஸ் நிலையம் அருகில் செல்லும் அவர் அங்கு வேனில் நின்ற படி சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து பேசுகிறார்.

    தொடர்ந்து மாலை 5 மணிக்கு கள்ளக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் மலையரசனை ஆதரித்து ஆத்தூர் ராணிப்பேட்டையிலும், கெங்கவல்லியில் 6 மணிக்கும் வேனில் நின்ற படி பிரசாரம் செய்கிறார். இதற்கான ஏற்பாடுகளில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • இளநீர், நுங்கு, கம்மங்கூழ் தர்பூசணி கடைகளில் குவிந்த பொது மக்கள் அதனை வாங்கி பருகி உஷ்ணத்தில் இருந்து தப்பித்தனர்.
    • வயல்களில் விவசாயிகள் பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவ மழை வழக்கத்தை விட குறைந்த அளவே பெய்தது. இதனால் ஏரிகள், குளங்கள் வறண்டது. இதனால் கடந்த ஜனவரி மாதம் முதலே சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருவதால் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டில் முடங்கி உள்ளனர். சாலைகளில் செல்பவர்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குடைகள் பிடித்தபடியும், துணிகளால் முகத்தை மூடிய படியும் செல்கின்றனர். இதனால் மதிய நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்நிலையில் நடப்பாண்டில் அதிக பட்சமாக நேற்று சேலத்தில் 105.1 டிகிரி வெயில் பதிவானது. இதனால் நேற்று மதியம் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் இளநீர், நுங்கு, கம்மங்கூழ் தர்பூசணி கடைகளில் குவிந்த பொது மக்கள் அதனை வாங்கி பருகி உஷ்ணத்தில் இருந்து தப்பித்தனர். மேலும் நேற்றிரவும் கடும் புழுக்கம் நீடித்ததால் வியர்வையால் நனைந்த மக்கள் தூங்க முடியாமல் கடும் அவதி அடைந்தனர்.

    மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் கிணறுகள் மற்றும் ஆழ் துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்துவிட்டது. இதனால் பாசனத்திற்கு குறைந்த அளவே தண்ணீர் கிடைக்கிறது. இதனால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சினாலும் வறண்டே காட்சி அளிப்பதால் விவசாய வருமானமும் குறைந்துள்ளது. மேலும் வயல்களில் விவசாயிகள் பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் அக்னி நட்சத்திர காலத்தில் மேலும் வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள், தொழிலாளிகள் உள்பட அனைத்து தரப்பினரும் அச்சம் அடைந்துள்ளனர்.

    • கோவையில் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்து தங்கினார்.
    • அகில இந்திய மீனவர் சங்கம் தலைவர் சுப்பிரமணியமும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு கடிதம் வழங்கினார்.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்கனவே பல்வேறு கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கோவையில் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி இரவு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்து தங்கினார்.

    இன்று காலை எடப்பாடி பழனிசாமியை தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ்.ஏ. சின்னுசாமி, மாநில பொதுச் செயலாளர் சுந்தரம் மற்றும் நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் சந்தித்து நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழக விவசாயிகள் சங்கம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் வழங்கினர். தொடர்ந்து அவர்கள் கூறும்போது:-

    விவசாயிகளுக்கான திட்டங்களை நிறைவேற்றி தந்ததுடன் நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு முன்னெடுப்பு மேற்கொண்டவர் எடப்பாடி பழனிசாமி என்பதால் அவருக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.

    அதேபோல் அகில இந்திய மீனவர் சங்கம் தலைவர் சுப்பிரமணியமும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு கடிதம் வழங்கினார்.

    • பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
    • சொனப்பாடி கிராமத்தில் இன்று காலை பல்வேறு இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே பட்டிப்பாடி வேலூர் ஊராட்சி சொனப்பாடி கிராமம் உள்ளது. இங்கு திரளான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தார் சாலை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனால் அவர்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் சொனப்பாடி கிராமத்தில் இன்று காலை பல்வேறு இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் இதுவரை தார் சாலை அமைக்கவில்லை. பள்ளிக்குழந்தைகள் பள்ளிக்கு செல்ல சாலை வசதி இல்லை. எனவே இதை கண்டித்து வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கிறோம் என கூறப்பட்டுள்ளது.

    இது தவிர வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றி வைத்து எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். மேலும் பொதுமக்கள் இன்று காலையில் ஊர் பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    • சாலையோர பூ வியாபாரிகள், மற்றும் காய்கறி, பழக்கடை வியாபாரிகள் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர்.
    • அனைவரையும் பார்த்து சிரித்த முகத்துடன் எடப்பாடி பழனிசாமி வணக்கம் தெரிவித்தார்.

    சேலம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் பெரியசோரகை சென்றாய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்து தனது பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து திருச்சியில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி நேற்று கிருஷ்ணகிரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்து தங்கினார்

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 7 மணியளவில் சேலம் சின்னக்கடை வீதி பகுதியில் தனது பிரசாரத்தை தொடங்கினார். அப்போது சாலையோர பூ வியாபாரிகள் மற்றும் காய்கறி, பழக்கடை வியாபாரிகள் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து சாலையில் நடந்து சென்ற எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு வியாபாரிகளிடமும் துண்டு பிரசுரங்களை வழங்கி அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேசுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது எடப்பாடி பழனிசாமியை பார்த்த பெண்கள், பொதுமக்கள் உற்சாகம் அடைந்தனர். மகிழ்ச்சி அடைந்த சாலையோர பெண் வியாபாரிகள் எடப்பாடி பழனிசாமிக்கு மாலை அணிவித்தனர். பின்னர் அவருக்கு காய்கறிகள் மற்றும் ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை பழங்களை வழங்கினர். அவற்றை எடப்பாடி பழனிசாமி அன்புடன் பெற்றுக் கொண்டார். பின்னர் பெண் வியாபாரிகள் எடப்பாடி பழனிசாமி கன்னத்தை வாஞ்சையுடன் பிடித்து கொஞ்சினர். தொடர்ந்து அவருடன் போட்டோவும் எடுத்து கொண்டனர். அப்போது சில வியாபாரிகள் தங்களது பிரச்சனைகளை எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தனர். அதற்கு அவர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    காலை நேரத்திலேயே எடப்பாடி பழனிசாமி கடைவீதியில் நடந்து வரும் தகவல் தெரிந்து ஏராளமான பொதுமக்கள் கூட்டமும் அவரை பார்க்க திரண்டனர். அனைவரையும் பார்த்து சிரித்த முகத்துடன் எடப்பாடி பழனிசாமி வணக்கம் தெரிவித்தார். சுமார் 30 நிமிடம் கடைவீதியில் நடந்து சென்று வாக்கு சேகரித்த எடப்பாடி பழனிசாமி பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு தனது வீட்டிற்கு சென்றார். எடப்பாடி பழனிசாமியுடன் மாவட்ட செயலாளர் வெங்கடா ஜலம், பாலசுப்பிரமணியன் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் எம்.கே. செல்வராஜ், ரவிச்சந்திரன், சக்திவேல், முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம், பொருளாளர் பங்க் வெங்கடாசலம், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், செல்வகுமார், அம்பேத்கார் மக்கள் கட்சி தலைவர் அண்ணாதுரை மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரப்பம் பாளையம் பகுதியில் இன்று அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். பின்னர் மாலையில் நாமக்கல்லில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ் மணிக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    • மக்களை வாட்டி வதைத்து அதிகாரத்தை பயன்படுத்தி தி.மு.க.வினர் சின்னம் வரைகின்றனர்.
    • குடும்ப தலைவிகளை மிரட்டி வாக்குகள் கேட்டால் எங்களிடம் சொல்லுங்கள். நாங்கள் அதிகாரிகளிடம் சொல்லி நடவடிக்கை எடுக்கப்படும்.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரப்பம்பாளையத்தில் அ.தி.மு.க. தேர்தல் செயல்வீரர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சேலம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேசை ஆதரித்து பேசியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க.வின் மெத்தன போக்கால் நெசவு தொழில் முழுவதும் முடங்கி தறிகள் பழைய இரும்பு கடைக்கு செல்லும் சூழ்நிலை உருவாகி விட்டது. தமிழகத்தில் விவசாயிகளை வஞ்சிக்கும் நோக்கில் அ.தி.மு.க. காலத்தில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது. அதன் ஒரு பகுதியாக மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்தை கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் போட்டதால் சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட விவசாயிகள் வெகுவாக பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியின் மேல் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வின் அலை வீசுகிறது. இதனால் தி.மு.க.வில் போதிய வேட்பாளர்கள் கூட இல்லாமல் அ.தி.மு.க.வில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்களே சேலம், கோவை போன்ற நகரங்களில் தி.மு.க. வேட்பாளர்களாக களம் காண்கிறார்கள். அதேபோல் அ.தி.மு.க.வில் இருந்து சென்ற 8 பேர் அமைச்சர்களாக உள்ளனர். அ.தி.மு.க. தொண்டர்களின் வியர்வையால் அடையாளம் காணப்பட்டு தற்போது சேலம், கோவை, தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். எடப்பாடி அ.தி.மு.க.வின் கோட்டை, இங்கு யாராலும் வெற்றி பெற முடியாது. கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராகிய என்னை 94 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற வைத்து தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது போல் தற்போது அதைவிட கூட கூடுதலான வாக்குகளை சேலம் பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேசுக்கு அளிக்க வேண்டும்.

    இன்றைய தினம் தமிழ்நாட்டில் வேண்டும் என்று திட்டமிட்டு தவறான செய்தியை பரப்பி விட்டு வருகிறாங்க. 1000 ரூபாய் தி.மு.க. ஆட்சியில் குடும்ப தலைவிக்கு கொடுத்திருக்காங்க. இந்த பணத்தை எப்படி கொடுத்தாங்கணு பார்க்கணும். நான் பல முறை சட்டமன்றத்தில் பேசி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபையில் பேசி அழுத்தம் கொடுத்த காரணத்தினால் தான் 27 மாதங்கள் கழித்து தான் இந்த திட்டத்தை நிறைவேற்றினாங்க. இந்த திட்டம் வருவதற்கு காரணம் அ.தி.மு.க. கட்சி. அ.தி.மு.க. மட்டும் இல்லாவிட்டால் குடும்ப தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1000 கிடைத்திருக்காது.

    இன்றைய தினமும் தி.மு.க.வினர் ஊர் ஊராக சென்று சுவர்களில் விளம்பரம் செய்கிறார்கள். இதை தடுத்தால் அந்த குடும்ப தலைவி பெறுகின்ற 1000 ரூபாய் வழங்குவதை நிறுத்துவதாக மிரட்டுகிறார்கள். குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் கொடுப்பதை நிறுத்தினால் இதை நான் சட்டமன்றத்தில் விடமாட்டேன். இதற்கு துணை போகும் அதிகாரிகள் சஸ்பெண்டு, பணி நீக்கத்துக்கு ஆளாக நேரிடும்.

    இப்படி மக்களை வாட்டி வதைத்து அதிகாரத்தை பயன்படுத்தி தி.மு.க.வினர் சின்னம் வரைகின்றனர். மக்கள் விருப்பப்பட்டால்தால் சுவர்களில் எங்களுடைய சின்னம் வரைவோம். இல்லையென்றால் வரைய மாட்டோம். இதுதான் அ.தி.மு.க.வின் நோக்கம். தி.மு.க. அப்படி அல்ல. அராஜக ஆட்சி. அதிகாரத்தினுடைய பலத்தை காட்டுகின்றார்கள்.

    குடும்ப தலைவிகளை மிரட்டி வாக்குகள் கேட்டால் எங்களிடம் சொல்லுங்கள். நாங்கள் அதிகாரிகளிடம் சொல்லி நடவடிக்கை எடுக்கப்படும்.

    அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தவுடன் எல்லா குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 மாதந்தோறும் ஊக்கத் தொகை கொடுக்கப்படும் என சொன்னோம். ஆனால் பல பகுதிகளில் நமக்கு வாக்கு சரியாக விழவில்லை.

    ஆனால் தி.முக. கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு ஆட்சிக்கு அமர்ந்த கட்சி தி.மு.க., இதுவரை 10 சதவீதம் திட்டம் கூட நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்ததும் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும் என சொன்னாங்க. அதுவும் இல்லை. விலையில்லா கறவை மாடு, ஆடுகள், கோழிகள் கொடுத்தோம். அதையும் நிறுத்திட்டாங்க. நம்முடைய பள்ளி மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் கொடுத்தோம். அதையும் நிறுத்திட்டாங்க. அம்மா இருசக்கர வாகனம் நிறுத்திவிட்டாங்க. ஆகவே கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நாங்கள் கொடுத்த திட்டத்தையும் நிறுத்தி விட்டாங்க.

    தாலிக்கு தங்கம் ஒருபவுன், 50 ஆயிரம் ரூபாய் மற்றும் ரொக்கம் ரூ.25 ஆயிரம் வழங்கினோம். அதையும் நிறுத்திட்டாங்க.

    தி.மு.க. ஆட்சி வந்த பிறகு நிறுத்தப்பட்டதில் தான் சாதனை படைத்திருக்காங்க. இது தான் தி.மு.க. ஆட்சியினுடைய 3 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியினுடைய சாதனை. ஆகவே அ.தி.மு.க. அப்படி அல்ல. ஒரு நல்ல திட்டம் என்று சொன்னால் அதை தொடர்ந்து நாங்கள் செயல்படுத்துவோம். தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் அம்மா மினி கிளினீக் தொடங்கினோம். அதையும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிறுத்திட்டாங்க. இப்படி பல திட்டங்களை ரத்து செய்த அரசாங்கம் தி.மு.க.

    நம்முடைய அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவ செல்வங்கள் டாக்டர்கள் ஆக வேண்டும் என 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டு வந்து சட்டம் இயற்றி அமுல்படுத்தப்பட்டு இன்றைக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படிக்கிறாங்க. நம்ம தொகுதியில் மட்டும் சுமார் 35 முதல் 40 பேர் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்து எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம் படிக்கிறாங்க.

    எனவே பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×