என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சேலம் கடைவீதியில் வாக்குசேகரித்த எடப்பாடி பழனிசாமி
    X

    சேலம் கடைவீதியில் வாக்குசேகரித்த எடப்பாடி பழனிசாமி

    • சாலையோர பூ வியாபாரிகள், மற்றும் காய்கறி, பழக்கடை வியாபாரிகள் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர்.
    • அனைவரையும் பார்த்து சிரித்த முகத்துடன் எடப்பாடி பழனிசாமி வணக்கம் தெரிவித்தார்.

    சேலம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் பெரியசோரகை சென்றாய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்து தனது பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து திருச்சியில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி நேற்று கிருஷ்ணகிரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்து தங்கினார்

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 7 மணியளவில் சேலம் சின்னக்கடை வீதி பகுதியில் தனது பிரசாரத்தை தொடங்கினார். அப்போது சாலையோர பூ வியாபாரிகள் மற்றும் காய்கறி, பழக்கடை வியாபாரிகள் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து சாலையில் நடந்து சென்ற எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு வியாபாரிகளிடமும் துண்டு பிரசுரங்களை வழங்கி அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேசுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது எடப்பாடி பழனிசாமியை பார்த்த பெண்கள், பொதுமக்கள் உற்சாகம் அடைந்தனர். மகிழ்ச்சி அடைந்த சாலையோர பெண் வியாபாரிகள் எடப்பாடி பழனிசாமிக்கு மாலை அணிவித்தனர். பின்னர் அவருக்கு காய்கறிகள் மற்றும் ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை பழங்களை வழங்கினர். அவற்றை எடப்பாடி பழனிசாமி அன்புடன் பெற்றுக் கொண்டார். பின்னர் பெண் வியாபாரிகள் எடப்பாடி பழனிசாமி கன்னத்தை வாஞ்சையுடன் பிடித்து கொஞ்சினர். தொடர்ந்து அவருடன் போட்டோவும் எடுத்து கொண்டனர். அப்போது சில வியாபாரிகள் தங்களது பிரச்சனைகளை எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தனர். அதற்கு அவர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    காலை நேரத்திலேயே எடப்பாடி பழனிசாமி கடைவீதியில் நடந்து வரும் தகவல் தெரிந்து ஏராளமான பொதுமக்கள் கூட்டமும் அவரை பார்க்க திரண்டனர். அனைவரையும் பார்த்து சிரித்த முகத்துடன் எடப்பாடி பழனிசாமி வணக்கம் தெரிவித்தார். சுமார் 30 நிமிடம் கடைவீதியில் நடந்து சென்று வாக்கு சேகரித்த எடப்பாடி பழனிசாமி பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு தனது வீட்டிற்கு சென்றார். எடப்பாடி பழனிசாமியுடன் மாவட்ட செயலாளர் வெங்கடா ஜலம், பாலசுப்பிரமணியன் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் எம்.கே. செல்வராஜ், ரவிச்சந்திரன், சக்திவேல், முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம், பொருளாளர் பங்க் வெங்கடாசலம், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், செல்வகுமார், அம்பேத்கார் மக்கள் கட்சி தலைவர் அண்ணாதுரை மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரப்பம் பாளையம் பகுதியில் இன்று அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். பின்னர் மாலையில் நாமக்கல்லில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ் மணிக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    Next Story
    ×