search icon
என் மலர்tooltip icon

    சேலம்

    • பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
    • சொனப்பாடி கிராமத்தில் இன்று காலை பல்வேறு இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே பட்டிப்பாடி வேலூர் ஊராட்சி சொனப்பாடி கிராமம் உள்ளது. இங்கு திரளான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தார் சாலை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனால் அவர்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் சொனப்பாடி கிராமத்தில் இன்று காலை பல்வேறு இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் இதுவரை தார் சாலை அமைக்கவில்லை. பள்ளிக்குழந்தைகள் பள்ளிக்கு செல்ல சாலை வசதி இல்லை. எனவே இதை கண்டித்து வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கிறோம் என கூறப்பட்டுள்ளது.

    இது தவிர வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றி வைத்து எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். மேலும் பொதுமக்கள் இன்று காலையில் ஊர் பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    • சாலையோர பூ வியாபாரிகள், மற்றும் காய்கறி, பழக்கடை வியாபாரிகள் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர்.
    • அனைவரையும் பார்த்து சிரித்த முகத்துடன் எடப்பாடி பழனிசாமி வணக்கம் தெரிவித்தார்.

    சேலம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் பெரியசோரகை சென்றாய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்து தனது பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து திருச்சியில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி நேற்று கிருஷ்ணகிரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்து தங்கினார்

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 7 மணியளவில் சேலம் சின்னக்கடை வீதி பகுதியில் தனது பிரசாரத்தை தொடங்கினார். அப்போது சாலையோர பூ வியாபாரிகள் மற்றும் காய்கறி, பழக்கடை வியாபாரிகள் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து சாலையில் நடந்து சென்ற எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு வியாபாரிகளிடமும் துண்டு பிரசுரங்களை வழங்கி அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேசுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது எடப்பாடி பழனிசாமியை பார்த்த பெண்கள், பொதுமக்கள் உற்சாகம் அடைந்தனர். மகிழ்ச்சி அடைந்த சாலையோர பெண் வியாபாரிகள் எடப்பாடி பழனிசாமிக்கு மாலை அணிவித்தனர். பின்னர் அவருக்கு காய்கறிகள் மற்றும் ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை பழங்களை வழங்கினர். அவற்றை எடப்பாடி பழனிசாமி அன்புடன் பெற்றுக் கொண்டார். பின்னர் பெண் வியாபாரிகள் எடப்பாடி பழனிசாமி கன்னத்தை வாஞ்சையுடன் பிடித்து கொஞ்சினர். தொடர்ந்து அவருடன் போட்டோவும் எடுத்து கொண்டனர். அப்போது சில வியாபாரிகள் தங்களது பிரச்சனைகளை எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தனர். அதற்கு அவர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    காலை நேரத்திலேயே எடப்பாடி பழனிசாமி கடைவீதியில் நடந்து வரும் தகவல் தெரிந்து ஏராளமான பொதுமக்கள் கூட்டமும் அவரை பார்க்க திரண்டனர். அனைவரையும் பார்த்து சிரித்த முகத்துடன் எடப்பாடி பழனிசாமி வணக்கம் தெரிவித்தார். சுமார் 30 நிமிடம் கடைவீதியில் நடந்து சென்று வாக்கு சேகரித்த எடப்பாடி பழனிசாமி பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு தனது வீட்டிற்கு சென்றார். எடப்பாடி பழனிசாமியுடன் மாவட்ட செயலாளர் வெங்கடா ஜலம், பாலசுப்பிரமணியன் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் எம்.கே. செல்வராஜ், ரவிச்சந்திரன், சக்திவேல், முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம், பொருளாளர் பங்க் வெங்கடாசலம், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், செல்வகுமார், அம்பேத்கார் மக்கள் கட்சி தலைவர் அண்ணாதுரை மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரப்பம் பாளையம் பகுதியில் இன்று அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். பின்னர் மாலையில் நாமக்கல்லில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ் மணிக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    • மக்களை வாட்டி வதைத்து அதிகாரத்தை பயன்படுத்தி தி.மு.க.வினர் சின்னம் வரைகின்றனர்.
    • குடும்ப தலைவிகளை மிரட்டி வாக்குகள் கேட்டால் எங்களிடம் சொல்லுங்கள். நாங்கள் அதிகாரிகளிடம் சொல்லி நடவடிக்கை எடுக்கப்படும்.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரப்பம்பாளையத்தில் அ.தி.மு.க. தேர்தல் செயல்வீரர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சேலம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேசை ஆதரித்து பேசியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க.வின் மெத்தன போக்கால் நெசவு தொழில் முழுவதும் முடங்கி தறிகள் பழைய இரும்பு கடைக்கு செல்லும் சூழ்நிலை உருவாகி விட்டது. தமிழகத்தில் விவசாயிகளை வஞ்சிக்கும் நோக்கில் அ.தி.மு.க. காலத்தில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது. அதன் ஒரு பகுதியாக மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்தை கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் போட்டதால் சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட விவசாயிகள் வெகுவாக பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியின் மேல் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வின் அலை வீசுகிறது. இதனால் தி.மு.க.வில் போதிய வேட்பாளர்கள் கூட இல்லாமல் அ.தி.மு.க.வில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்களே சேலம், கோவை போன்ற நகரங்களில் தி.மு.க. வேட்பாளர்களாக களம் காண்கிறார்கள். அதேபோல் அ.தி.மு.க.வில் இருந்து சென்ற 8 பேர் அமைச்சர்களாக உள்ளனர். அ.தி.மு.க. தொண்டர்களின் வியர்வையால் அடையாளம் காணப்பட்டு தற்போது சேலம், கோவை, தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். எடப்பாடி அ.தி.மு.க.வின் கோட்டை, இங்கு யாராலும் வெற்றி பெற முடியாது. கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராகிய என்னை 94 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற வைத்து தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது போல் தற்போது அதைவிட கூட கூடுதலான வாக்குகளை சேலம் பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேசுக்கு அளிக்க வேண்டும்.

    இன்றைய தினம் தமிழ்நாட்டில் வேண்டும் என்று திட்டமிட்டு தவறான செய்தியை பரப்பி விட்டு வருகிறாங்க. 1000 ரூபாய் தி.மு.க. ஆட்சியில் குடும்ப தலைவிக்கு கொடுத்திருக்காங்க. இந்த பணத்தை எப்படி கொடுத்தாங்கணு பார்க்கணும். நான் பல முறை சட்டமன்றத்தில் பேசி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபையில் பேசி அழுத்தம் கொடுத்த காரணத்தினால் தான் 27 மாதங்கள் கழித்து தான் இந்த திட்டத்தை நிறைவேற்றினாங்க. இந்த திட்டம் வருவதற்கு காரணம் அ.தி.மு.க. கட்சி. அ.தி.மு.க. மட்டும் இல்லாவிட்டால் குடும்ப தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1000 கிடைத்திருக்காது.

    இன்றைய தினமும் தி.மு.க.வினர் ஊர் ஊராக சென்று சுவர்களில் விளம்பரம் செய்கிறார்கள். இதை தடுத்தால் அந்த குடும்ப தலைவி பெறுகின்ற 1000 ரூபாய் வழங்குவதை நிறுத்துவதாக மிரட்டுகிறார்கள். குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் கொடுப்பதை நிறுத்தினால் இதை நான் சட்டமன்றத்தில் விடமாட்டேன். இதற்கு துணை போகும் அதிகாரிகள் சஸ்பெண்டு, பணி நீக்கத்துக்கு ஆளாக நேரிடும்.

    இப்படி மக்களை வாட்டி வதைத்து அதிகாரத்தை பயன்படுத்தி தி.மு.க.வினர் சின்னம் வரைகின்றனர். மக்கள் விருப்பப்பட்டால்தால் சுவர்களில் எங்களுடைய சின்னம் வரைவோம். இல்லையென்றால் வரைய மாட்டோம். இதுதான் அ.தி.மு.க.வின் நோக்கம். தி.மு.க. அப்படி அல்ல. அராஜக ஆட்சி. அதிகாரத்தினுடைய பலத்தை காட்டுகின்றார்கள்.

    குடும்ப தலைவிகளை மிரட்டி வாக்குகள் கேட்டால் எங்களிடம் சொல்லுங்கள். நாங்கள் அதிகாரிகளிடம் சொல்லி நடவடிக்கை எடுக்கப்படும்.

    அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தவுடன் எல்லா குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 மாதந்தோறும் ஊக்கத் தொகை கொடுக்கப்படும் என சொன்னோம். ஆனால் பல பகுதிகளில் நமக்கு வாக்கு சரியாக விழவில்லை.

    ஆனால் தி.முக. கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு ஆட்சிக்கு அமர்ந்த கட்சி தி.மு.க., இதுவரை 10 சதவீதம் திட்டம் கூட நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்ததும் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும் என சொன்னாங்க. அதுவும் இல்லை. விலையில்லா கறவை மாடு, ஆடுகள், கோழிகள் கொடுத்தோம். அதையும் நிறுத்திட்டாங்க. நம்முடைய பள்ளி மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் கொடுத்தோம். அதையும் நிறுத்திட்டாங்க. அம்மா இருசக்கர வாகனம் நிறுத்திவிட்டாங்க. ஆகவே கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நாங்கள் கொடுத்த திட்டத்தையும் நிறுத்தி விட்டாங்க.

    தாலிக்கு தங்கம் ஒருபவுன், 50 ஆயிரம் ரூபாய் மற்றும் ரொக்கம் ரூ.25 ஆயிரம் வழங்கினோம். அதையும் நிறுத்திட்டாங்க.

    தி.மு.க. ஆட்சி வந்த பிறகு நிறுத்தப்பட்டதில் தான் சாதனை படைத்திருக்காங்க. இது தான் தி.மு.க. ஆட்சியினுடைய 3 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியினுடைய சாதனை. ஆகவே அ.தி.மு.க. அப்படி அல்ல. ஒரு நல்ல திட்டம் என்று சொன்னால் அதை தொடர்ந்து நாங்கள் செயல்படுத்துவோம். தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் அம்மா மினி கிளினீக் தொடங்கினோம். அதையும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிறுத்திட்டாங்க. இப்படி பல திட்டங்களை ரத்து செய்த அரசாங்கம் தி.மு.க.

    நம்முடைய அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவ செல்வங்கள் டாக்டர்கள் ஆக வேண்டும் என 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டு வந்து சட்டம் இயற்றி அமுல்படுத்தப்பட்டு இன்றைக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படிக்கிறாங்க. நம்ம தொகுதியில் மட்டும் சுமார் 35 முதல் 40 பேர் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்து எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம் படிக்கிறாங்க.

    எனவே பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • திராவிட மாடலின் குரல் தெற்கில் மட்டும் ஒலிக்கவில்லை. வடக்கிலும் ஒலிக்கிறது. வடக்கிற்கும் சேர்த்தே ஒலிக்கிறது.
    • ஒரு மாநில அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு நான்தான் எடுத்துக்காட்டு.

    தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சேலம், கள்ளக்குறிச்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். இருவரையும் ஆதரித்து பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அப்போது மு.க. ஸ்டாலின் கூறியதாவது:-

    * திராவிட மாடலின் குரல் தெற்கில் மட்டும் ஒலிக்கவில்லை. வடக்கிலும் ஒலிக்கிறது. வடக்கிற்கும் சேர்த்தே ஒலிக்கிறது.

    * ஒரு மாநில அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு நான்தான் எடுத்துக்காட்டு.

    * ஒரு மத்திய அரசு எப்படி செயல்படக் கூடாது என்பதற்கு பா.ஜனதா அரசுதான் எடுத்துக்காட்டு.

    * சேலத்திற்கு வந்த பிரதமர் மோடி, பா.ஜனதாவுக்கு கிடைத்திருக்கும் ஆதரவால் திமுக-வின் தூக்கம் தொலைந்துவிட்டதாக பேசிவிட்டு சென்றார்.

    * உண்மையிலேயே தூக்கத்தை தொலைத்தவர்கள், இவர்கள்தான் (10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம் பாதிக்கப்பட்ட சாமானிய மக்கள். சிலிண்டர் விலை உயர்வு மூலம் தாய்மார்கள், ஏழைகள். வேலையில்லா திண்டாட்டம் மூலம் இளைஞர்கள். ஜிஎஸ்டி மூலம் சிறுகுறு தொழில் நடத்துபவர்கள். 3 சட்டங்கள் மூலம் உழவர்கள். சிஏஏ மூலம் சிறுபான்மையினர் மக்கள்.)

    * இப்படி 10 ஆண்டு கால ஆட்சியில் ஒட்டுமொத்த நாடே தூக்கத்தை தொலைத்துவிட்டு தவிக்கிறது.

    * தற்போது உச்சநீதிமன்ற உத்தரவால் வெளிவந்துள்ள தேர்தல் பத்திரம் ஊழலால் பிரதமர் மோடி தூக்கத்தை தொலைச்சிட்டார்.

    * இன்னொரு முக்கிய காரணம் மத்திய உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை தென்மாநிலங்களில் பா.ஜனதாவால் வெற்றி பெற முடியாத நிலை இருந்தது. தேர்தல் பத்திரம் ஊழல் வந்த பிறகு வட மாநிலங்களிலும் வெற்றி பெற முடியாது என உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது. இதனால்தான் தூக்கத்தை தொலைத்துவிட்டு பதட்டப்படுகிறார்.

    பதட்டத்தில் ஹேமந்த் சோரன், டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையால் கைது செய்கிறார். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கு வருமான வரித்துறையை ஏவிவிட்டு நோட்டீஸ் விடுகிறார்.

    எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்த்து பேசினால் சிபிஐ ரெய்டு விடுகிறார். கூட்டணி கட்சிகளை போன்று அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறையை பயன்படுத்துகிறார் என்றால் உச்சக்கட்ட தோல்வி பயத்தில் இருக்கிறார் என்று அர்த்தம். ஆட்சி வரவேண்டும் என்ற வெறியில் இந்திய ஜனநாயகத்தை சீரழித்துக் கொண்டு இருக்கிறார்.

    இவ்வாறு முக ஸ்டாலின் குறிப்பிட்டார்.

    • ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று மாலை பிரசாரம் செய்தார்.
    • சேலம் மாமாங்கம் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கியுள்ள அதே ஓட்டலுக்கு வந்து கமல்ஹாசன் தங்கினார்.

    சேலம்:

    சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் இன்று மாலை நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியுள்ளார்.

    இதே போல் ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று மாலை பிரசாரம் செய்தார். பின்னர் அவரும் சேலம் மாமாங்கம் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கியுள்ள அதே ஓட்டலுக்கு வந்து தங்கினார்.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கமல்ஹாசன் இன்று காலை சந்தித்து பேசினார். பின்னர் கமல்ஹாசன் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

    • முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், நரசிம்மராவ் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட புகழ்பெற்றவர்களை எதிர்த்து போட்டியிட்டு உள்ளேன்.
    • தேர்தல் மன்னன் பத்மராஜனுக்கு தற்போது 65 வயதாகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் கே. பத்மராஜன். தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் இவர் இதுவரை 238 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். தற்போது 239-வது முறையாக தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நான் டயர் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறேன். முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், நரசிம்மராவ் மற்றும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி, உள்ளிட்ட புகழ்பெற்றவர்களை எதிர்த்து போட்டியிட்டு உள்ளேன். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்களிலும் 6 முறை போட்டியிட்டுள்ளேன். நான் வெற்றி பெற விரும்பவில்லை. தோல்வியை மட்டுமே அடைய வேண்டும். ஏனெனில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வெற்றியை ருசிக்க முடியும். ஆனால் நீங்கள் என்றென்றும் இழப்பை அனுபவிக்க முடியும். மேலும் இதுவரை தேர்தலுக்காக சுமார் ரூ. 1 கோடி செலவழித்து உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேர்தல் மன்னன் பத்மராஜனுக்கு தற்போது 65 வயதாகிறது. இவர் லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் டெல்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் தேர்தல் வரலாற்றில் மிகவும் தோல்வி அடைந்த வேட்பாளர் என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.

    • பறக்கும் படை அதிகாரிகளை கண்டதும் காரில் வந்தவர்கள் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
    • குட்கா மூட்டைகள் மற்றும் காரை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி சேலம் மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கெங்கவல்லி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பறக்கும் படை அதிகாரிகளை கண்டதும் காரில் வந்தவர்கள் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இதையடுத்து அந்த காரை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது அந்த காரில் இருந்தது மூட்டைகளை பிரிந்து பார்த்த போது அதில் 50 மூட்டைகளில் குட்கா இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து குட்கா மூட்டைகள் மற்றும் காரை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் வீரகனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதை தொடர்ந்து கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து காரின் எண்ணை வைத்து யாருடையது என்பது குறித்தும், குட்கா எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரமேலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
    • தே.மு.தி.க. சார்பில் பிரேமலதா பிரசாரம் செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதையடுத்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரமேலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

    இந்தநிலையில் நேற்று ஈரோட்டில் பிரசாரம் செய்த அவர் இன்று சேலம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து ஈரோட்டில் இருந்து அவர் தருமபுரிக்கு புறப்பட்டு சென்றார். தே.மு.தி.க. சார்பில் அவர் பிரசாரம் செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    • மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார்.
    • அதிகாலை நடைபயிற்சிக்கு பின்னர் மார்க்கெட் பகுதிக்கு சென்ற முதலமைச்சர், அங்குள்ள பொதுமக்களை சந்தித்து பேசினார்.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார்.

    அதன்படி, சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு இந்தியா கூட்டணி சார்பில் பிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் மலையரசன் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    இந்நிலையில் இன்று காலை சேலம் அக்ரஹாரம் பகுதியில் நடைபயணமாக சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிகாலை நடைபயிற்சிக்கு பின்னர் மார்க்கெட் பகுதிக்கு சென்ற முதலமைச்சர், அங்குள்ள பொதுமக்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து வாக்கு சேகரித்தார். பின்பு அங்கிருந்த கடையில் தேநீர் அருந்தினார்.


    • பெற்றோர் தினமும் மகனுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி பள்ளிக்கு அனுப்பி வைத்து வந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை காமராஜர் காலனியை சேர்ந்தவர் சிவசண்முகம். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகின்றார். இவருடைய மனைவி கெஜலட்சுமி. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஹரிகரசுதன் (14) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    ஹரிகரசுதன் அயோத்தி யாப்பட்டணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இதற்கிடையே ஹரிகரசுதனுக்கு பள்ளிக்கு போக விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் தினமும் மகனுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி பள்ளிக்கு அனுப்பி வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் வழக்கம்போல் நேற்றும் ஹரிகரசுதன் தனது பெற்றோரிடம் பள்ளிக்கு போகமாட்டேன் என கூறி அடம்பிடித்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் அவருக்கு அறிவுரை கூறி காலையில் பள்ளி வாகனத்தில் அனுப்பி வைத்தனர். இதனால் மனமுடைந்த ஹரிகரசுதன் மாலையில் வகுப்பு முடிந்து வீட்டிற்கு வந்ததும் வீட்டிற்குள் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில் கல்லூரியில் பயிலும் அவரது சகோதரி மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது தம்பி தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி உடனே தனது பெற்றோருக்கு தெரிவித்தார். அவர்கள் வீட்டிற்கு விரைந்து வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாடல்கள் பாடியும் மாணவிகள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • புதிய வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயக கடமையை செய்ய வலியுறுத்தினர்.

    ஓமலூர்:

    சேலம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவை அதிகரிக்க செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், விழிப்புணர்வையும் செய்து வருகின்றனர்.

    கிராமங்களில் விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டும், நகரங்கள், கல்லூரிகளில் கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் 100 சதவீதம் வாக்குபதிவை வலியுறுத்தி, ஓமலூர் அருகே உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், பரத நாட்டியம், பாடல்கள், இசை கருவிகள் இசைத்தல், வீணை வாசித்தல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அலுவலர் லட்சுமி, மாணவிகள் முன்னிலையில் வீணை வாசித்து 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    மேலும், தேர்தல் அலுவலர் லட்சுமீ சுமார் ½ மணி நேரம் வீணை வாசித்து அசத்தினார். இவரை தொடர்ந்து சேலம் இசை பள்ளி மாணவிகள் வீணை வாசித்தும், பாடல்கள் பாடியும் மாணவிகள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். புதிய வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயக கடமையை செய்ய வலியுறுத்தினர்.

    • முதலமைச்சர் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் இன்றும், நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    சேலம்:

    தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் முடிவடைந்து மனுக்கள் மீதான பரிசீலனையும் முடிவடைந்து விட்டது. இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது. இதனால் தலைவர்கள் தொகுதியில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். திருச்சியில் தனது பிரசாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை ஆகிய இடங்களில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    இந்த நிலையில் தருமபுரி தி.மு.க. வேட்பாளர் மணி, கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து தருமபுரியில் இன்று மாலை நடைபெறும் பிரசாரக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஆதரவு திரட்டுகிறார்.

    இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் சேலம் காமலாபுரத்திற்கு மு.க.ஸ்டாலின் வருகிறார். பின்னர் தருமபுரி தடங்கம் பகுதிக்கு செல்லும் அவர் அங்கு நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். தொடர்ந்து இரவில் சேலம் வரும் மு.க.ஸ்டாலின் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார்.

    நாளை (30-ந்தேதி) காலையில் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டுகிறார். தொடர்ந்து மாலை 6 மணியளவில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். அங்கு சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் மலையரசன் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார். இதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.சிவலிங்கம், டி.எம்.செல்வகணபதி ஆகியோர் செய்துள்ளனர்.

    சேலம் பிரசார பொதுக்கூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் ஈரோட்டிற்கு புறப்பட்டு செல்கிறார். இதையொட்டி சேலம் விமான நிலையம், பெத்தநாயக்கன்பாளையத்தில் கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் சேலத்தில் அவர் தங்கும் மாமாங்கம் பகுதிகளிலும் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் ஆகியோர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். முதலமைச்சர் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் இன்றும், நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    ×