search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மலை கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு- வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
    X

    மலை கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு- வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

    • பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
    • சொனப்பாடி கிராமத்தில் இன்று காலை பல்வேறு இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே பட்டிப்பாடி வேலூர் ஊராட்சி சொனப்பாடி கிராமம் உள்ளது. இங்கு திரளான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தார் சாலை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனால் அவர்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் சொனப்பாடி கிராமத்தில் இன்று காலை பல்வேறு இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் இதுவரை தார் சாலை அமைக்கவில்லை. பள்ளிக்குழந்தைகள் பள்ளிக்கு செல்ல சாலை வசதி இல்லை. எனவே இதை கண்டித்து வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கிறோம் என கூறப்பட்டுள்ளது.

    இது தவிர வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றி வைத்து எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். மேலும் பொதுமக்கள் இன்று காலையில் ஊர் பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    Next Story
    ×