search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அலை வீசி வருகிறது- எடப்பாடி பழனிசாமி பேச்சு
    X

    தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அலை வீசி வருகிறது- எடப்பாடி பழனிசாமி பேச்சு

    • மக்களை வாட்டி வதைத்து அதிகாரத்தை பயன்படுத்தி தி.மு.க.வினர் சின்னம் வரைகின்றனர்.
    • குடும்ப தலைவிகளை மிரட்டி வாக்குகள் கேட்டால் எங்களிடம் சொல்லுங்கள். நாங்கள் அதிகாரிகளிடம் சொல்லி நடவடிக்கை எடுக்கப்படும்.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரப்பம்பாளையத்தில் அ.தி.மு.க. தேர்தல் செயல்வீரர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சேலம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேசை ஆதரித்து பேசியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க.வின் மெத்தன போக்கால் நெசவு தொழில் முழுவதும் முடங்கி தறிகள் பழைய இரும்பு கடைக்கு செல்லும் சூழ்நிலை உருவாகி விட்டது. தமிழகத்தில் விவசாயிகளை வஞ்சிக்கும் நோக்கில் அ.தி.மு.க. காலத்தில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது. அதன் ஒரு பகுதியாக மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்தை கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் போட்டதால் சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட விவசாயிகள் வெகுவாக பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியின் மேல் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வின் அலை வீசுகிறது. இதனால் தி.மு.க.வில் போதிய வேட்பாளர்கள் கூட இல்லாமல் அ.தி.மு.க.வில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்களே சேலம், கோவை போன்ற நகரங்களில் தி.மு.க. வேட்பாளர்களாக களம் காண்கிறார்கள். அதேபோல் அ.தி.மு.க.வில் இருந்து சென்ற 8 பேர் அமைச்சர்களாக உள்ளனர். அ.தி.மு.க. தொண்டர்களின் வியர்வையால் அடையாளம் காணப்பட்டு தற்போது சேலம், கோவை, தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். எடப்பாடி அ.தி.மு.க.வின் கோட்டை, இங்கு யாராலும் வெற்றி பெற முடியாது. கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராகிய என்னை 94 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற வைத்து தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது போல் தற்போது அதைவிட கூட கூடுதலான வாக்குகளை சேலம் பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேசுக்கு அளிக்க வேண்டும்.

    இன்றைய தினம் தமிழ்நாட்டில் வேண்டும் என்று திட்டமிட்டு தவறான செய்தியை பரப்பி விட்டு வருகிறாங்க. 1000 ரூபாய் தி.மு.க. ஆட்சியில் குடும்ப தலைவிக்கு கொடுத்திருக்காங்க. இந்த பணத்தை எப்படி கொடுத்தாங்கணு பார்க்கணும். நான் பல முறை சட்டமன்றத்தில் பேசி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபையில் பேசி அழுத்தம் கொடுத்த காரணத்தினால் தான் 27 மாதங்கள் கழித்து தான் இந்த திட்டத்தை நிறைவேற்றினாங்க. இந்த திட்டம் வருவதற்கு காரணம் அ.தி.மு.க. கட்சி. அ.தி.மு.க. மட்டும் இல்லாவிட்டால் குடும்ப தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1000 கிடைத்திருக்காது.

    இன்றைய தினமும் தி.மு.க.வினர் ஊர் ஊராக சென்று சுவர்களில் விளம்பரம் செய்கிறார்கள். இதை தடுத்தால் அந்த குடும்ப தலைவி பெறுகின்ற 1000 ரூபாய் வழங்குவதை நிறுத்துவதாக மிரட்டுகிறார்கள். குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் கொடுப்பதை நிறுத்தினால் இதை நான் சட்டமன்றத்தில் விடமாட்டேன். இதற்கு துணை போகும் அதிகாரிகள் சஸ்பெண்டு, பணி நீக்கத்துக்கு ஆளாக நேரிடும்.

    இப்படி மக்களை வாட்டி வதைத்து அதிகாரத்தை பயன்படுத்தி தி.மு.க.வினர் சின்னம் வரைகின்றனர். மக்கள் விருப்பப்பட்டால்தால் சுவர்களில் எங்களுடைய சின்னம் வரைவோம். இல்லையென்றால் வரைய மாட்டோம். இதுதான் அ.தி.மு.க.வின் நோக்கம். தி.மு.க. அப்படி அல்ல. அராஜக ஆட்சி. அதிகாரத்தினுடைய பலத்தை காட்டுகின்றார்கள்.

    குடும்ப தலைவிகளை மிரட்டி வாக்குகள் கேட்டால் எங்களிடம் சொல்லுங்கள். நாங்கள் அதிகாரிகளிடம் சொல்லி நடவடிக்கை எடுக்கப்படும்.

    அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தவுடன் எல்லா குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 மாதந்தோறும் ஊக்கத் தொகை கொடுக்கப்படும் என சொன்னோம். ஆனால் பல பகுதிகளில் நமக்கு வாக்கு சரியாக விழவில்லை.

    ஆனால் தி.முக. கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு ஆட்சிக்கு அமர்ந்த கட்சி தி.மு.க., இதுவரை 10 சதவீதம் திட்டம் கூட நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்ததும் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும் என சொன்னாங்க. அதுவும் இல்லை. விலையில்லா கறவை மாடு, ஆடுகள், கோழிகள் கொடுத்தோம். அதையும் நிறுத்திட்டாங்க. நம்முடைய பள்ளி மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் கொடுத்தோம். அதையும் நிறுத்திட்டாங்க. அம்மா இருசக்கர வாகனம் நிறுத்திவிட்டாங்க. ஆகவே கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நாங்கள் கொடுத்த திட்டத்தையும் நிறுத்தி விட்டாங்க.

    தாலிக்கு தங்கம் ஒருபவுன், 50 ஆயிரம் ரூபாய் மற்றும் ரொக்கம் ரூ.25 ஆயிரம் வழங்கினோம். அதையும் நிறுத்திட்டாங்க.

    தி.மு.க. ஆட்சி வந்த பிறகு நிறுத்தப்பட்டதில் தான் சாதனை படைத்திருக்காங்க. இது தான் தி.மு.க. ஆட்சியினுடைய 3 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியினுடைய சாதனை. ஆகவே அ.தி.மு.க. அப்படி அல்ல. ஒரு நல்ல திட்டம் என்று சொன்னால் அதை தொடர்ந்து நாங்கள் செயல்படுத்துவோம். தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் அம்மா மினி கிளினீக் தொடங்கினோம். அதையும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிறுத்திட்டாங்க. இப்படி பல திட்டங்களை ரத்து செய்த அரசாங்கம் தி.மு.க.

    நம்முடைய அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவ செல்வங்கள் டாக்டர்கள் ஆக வேண்டும் என 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டு வந்து சட்டம் இயற்றி அமுல்படுத்தப்பட்டு இன்றைக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படிக்கிறாங்க. நம்ம தொகுதியில் மட்டும் சுமார் 35 முதல் 40 பேர் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்து எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம் படிக்கிறாங்க.

    எனவே பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×