search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suffering of the people"

    • இளநீர், நுங்கு, கம்மங்கூழ் தர்பூசணி கடைகளில் குவிந்த பொது மக்கள் அதனை வாங்கி பருகி உஷ்ணத்தில் இருந்து தப்பித்தனர்.
    • வயல்களில் விவசாயிகள் பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவ மழை வழக்கத்தை விட குறைந்த அளவே பெய்தது. இதனால் ஏரிகள், குளங்கள் வறண்டது. இதனால் கடந்த ஜனவரி மாதம் முதலே சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருவதால் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டில் முடங்கி உள்ளனர். சாலைகளில் செல்பவர்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குடைகள் பிடித்தபடியும், துணிகளால் முகத்தை மூடிய படியும் செல்கின்றனர். இதனால் மதிய நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்நிலையில் நடப்பாண்டில் அதிக பட்சமாக நேற்று சேலத்தில் 105.1 டிகிரி வெயில் பதிவானது. இதனால் நேற்று மதியம் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் இளநீர், நுங்கு, கம்மங்கூழ் தர்பூசணி கடைகளில் குவிந்த பொது மக்கள் அதனை வாங்கி பருகி உஷ்ணத்தில் இருந்து தப்பித்தனர். மேலும் நேற்றிரவும் கடும் புழுக்கம் நீடித்ததால் வியர்வையால் நனைந்த மக்கள் தூங்க முடியாமல் கடும் அவதி அடைந்தனர்.

    மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் கிணறுகள் மற்றும் ஆழ் துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்துவிட்டது. இதனால் பாசனத்திற்கு குறைந்த அளவே தண்ணீர் கிடைக்கிறது. இதனால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சினாலும் வறண்டே காட்சி அளிப்பதால் விவசாய வருமானமும் குறைந்துள்ளது. மேலும் வயல்களில் விவசாயிகள் பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் அக்னி நட்சத்திர காலத்தில் மேலும் வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள், தொழிலாளிகள் உள்பட அனைத்து தரப்பினரும் அச்சம் அடைந்துள்ளனர்.

    ×