என் மலர்
தலைப்புச்செய்திகள்
- காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோரால் இளம்பெண் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
- இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலையில் இளம்பெண்ணை 2 காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப்பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோரால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான காவலர்கள் இருவரும் சஸ்பெண்ட் ஆன நிலையில் தற்போது நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையில் மத்திய அரசால் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய RTE நிதி விடுவிக்கப்பட்டது.
- 2025-25 கல்வியாண்டிற்கான RTE மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்வி உரிமைக் கட்ட 2009 (RTE Act)-இன் கீழ் 2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை அறிவித்துள்ளது.
மத்திய அரசால் நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2025-26 கல்வியாண்டிற்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009-இன்படி (RTE) மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையில் மத்திய அரசால் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய RTE நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம், RTE நிதி ஒதுக்கிட்டை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (Samagra Shiksha} திட்டத்திலிருந்து பிரித்து வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
மேலும் தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP), PM SHRI பள்ளித் திட்ட ஒப்பந்தம் (MoU) என்பனவற்றுடன் நிதி வழங்கல் இணைக்கப்படக் கூடாது என்றும் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மேல்முறையீடு மனு தாங்கள் செய்தது.
உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவிப்பு வழங்கியதைத் தொடர்ந்து, மத்திய அரசு தன்னுடைய நிதிப் பங்களிப்பை விடுவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக 2025-25 கல்வியாண்டிற்கான RTE மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளது.
- மாத தொடக்க நாளான நேற்று ஒரு சவரன் ரூ.87,600-க்கு விற்பனையானது.
- இன்று காலை தங்கம் விலை சற்று குறைந்தது.
சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
மாத இறுதி நாளான நேற்றுமுன்தினம் தங்கம் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.86,880-க்கும் கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,860-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் தொடக்க நாளான நேற்று காலை, மாலை என இருவேளையிலும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,950-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.87,600-க்கும் விற்பனையானது.
இதனை தொடர்ந்து இன்றும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காலையில் தங்கம் சற்று விலை குறைந்தது. கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 10,880 ரூபாய்க்கும் சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 87,040 ரூபாய்க்கும் விற்பனையானது.
காலையில் தங்கம் சவரனுக்கு ரூ.560 குறைந்த நிலையில், மாலையில் ரூ.560 உயர்ந்துள்ளது. இதனால் கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 10,950 ரூபாய்க்கும் சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 87,600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
01-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.87,600
30-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.86,880
29-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.86,160
28-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.85,120
27-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.85,120
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
01-10-2025- ஒரு கிராம் ரூ.161
30-09-2025- ஒரு கிராம் ரூ.161
29-09-2025- ஒரு கிராம் ரூ.160
28-09-2025- ஒரு கிராம் ரூ.159
27-09-2025- ஒரு கிராம் ரூ.159
- மற்றொரு டெல்டா விமானமும் அதே பாதையை நெருங்கிக்கொண்டிருந்தது.
- இதில் விமானத்தின் இறக்கை உடைந்து கீழே விழுந்தது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் 2 டெல்டா ஏர்லைன்ஸ் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.
நேற்று இரவு லாகார்டியா விமான நிலையத்தில் ஒரு டெல்டா விமானம் நிறுத்தப்பட்டிருந்தது. அதே நேரத்தில், தரையிறங்கிய மற்றொரு டெல்டா விமானமும் அதே பாதையை நெருங்கிக்கொண்டிருந்தது.
இந்த செயல்பாட்டில், இரண்டாவது விமானத்தின் இறக்கை முதல் விமானத்தின் மூக்கில் பலமாக மோதியது. இதில் விமானத்தின் இறக்கை உடைந்து கீழே விழுந்தது.
விமானம் மிக மெதுவாக நகர்ந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்தில் ஒரு விமான பணியாளர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- படத்தின் நாயகனாக வரும் ரிஷப் ஷெட்டி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்
- நாயகியாக நடித்திருக்கும் ருக்மிணி வசந்த், தனது அழகால் மட்டுமில்லாமல் நடிப்பாலும் நம்மை கவர்கிறார்.
காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா சாப்டர் 1.
காந்தாரா படத்தில் ரிஷப் ஷெட்டி மற்றும் அவரது தந்தை ஒரே இடத்திலேயே ஏன் மறைந்து போகிறார்கள் என்கிற கேள்விகளுக்கு ஒரு புராணக் கதை சொல்லப்படுகிறது.
அதில், பாங்ரா என்ற நாட்டை ஒரு ராஜா ஆட்சி செய்து வருகிறார். காந்தாரா மலைப்பகுதிகளில் உள்ள ஈஸ்வர பூந்தோட்டம் என்று அழைக்கப்படும் பகுதியில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஈஸ்வர பூந்தோட்டத்தை கைப்பற்ற நினைக்கும் மன்னன் படையுடன் சென்று காந்தார மக்களை அழிக்க பார்க்கிறார். ஆனால் தெய்வத்தின் உதவியுடன் மக்கள் மன்னரின் படைகளை எதிர்த்து சண்டையிட்டு வெற்றி பெறுகிறார்கள்.
இந்த போரில் உயிர்பிழைத்த ராஜாவின் வாரிசுகள் பல ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் காந்தராவை கைப்பற்ற நினைக்கிறார்கள். ராஜா வாரிசுகளின் ஆசை நிறைவேறியதா? இல்லை அதை கதாநாயகன் ரிஷப் செட்டி தடுத்து நிறுத்தினாரா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்:
படத்தின் நாயகனாக வரும் ரிஷப் ஷெட்டி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இயக்குனராக மட்டுமில்லாமல் நல்ல நடிகராகவும் இப்படத்தில் அவர் மிளிர்கிறார். தெய்வ சக்தி வந்தவுடன் ரிஷப் ஷெட்டி ஆடும் ஆட்டம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் ருக்மிணி வசந்த், தனது அழகால் மட்டுமில்லாமல் நடிப்பாலும் நம்மை கவர்கிறார். வழக்கமான 'கதாநாயகி' பாத்திரம் போல் அல்லாமல் அழுத்தமான பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். மன்னரின் அப்பாவாக வரும் ஜெயராம் உட்பட படத்தில் நடித்துள்ள பிற நடிகர்களும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
இயக்கம்:
காந்தாரா படத்திலேயே தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்த ரிஷப் ஷெட்டி, வரலாற்று கதை அம்சம் கொண்ட காந்தாரா சாப்டர் 1 படத்தில் மேலும் மெனெக்கெட்டு உழைத்துள்ளது திரையில் தெரிகிறது. குறிப்பாக அருமையான VFX காட்சிகள், சிறப்பான மேக்கிங் படத்திற்கு வலுசேர்க்கின்றன. அதே சமயம் காந்தாரா படத்தில் இருந்த சுவாரசியம் காந்தாரா சாப்டர் 1 படத்தில் இல்லை. கதை மிகவும் மெதுவாக நகர்வது ரசிகர்களை சோர்வடைய செய்கிறது. மேக்கிங்கில் கவன செலுத்திய ரிஷப் ஷெட்டி திரைக்கதையில் சற்று சறுக்கி விட்டார்.
இசை:
அஜனீஷ் லோக்நாத் இசையில் பாடல்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. அதைவிட அவரின் பின்னணி இசை படத்தின் காட்சிகளுக்கு பக்க பலமாக அமைந்துள்ளது.
ஒளிப்பதிவு:
அரவிந்த் கஷ்யப்பின் ஒளிப்பதிவு நம்மை படத்தின் வரலாற்று காலகட்டத்திற்கே கொண்டு செல்கிறது.
தயாரிப்பு:
ஹோம்பாலே பிலிம்ஸ்
ரேட்டிங்:
3/5
- அவருக்கு மறைவான இடம் கூட தரப்படவில்லை.
- இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
உத்தரகாண்ட் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மறுக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் மருத்துவமனை தரையிலேயே குழந்தையை பிரசவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பெண் செவ்வாய்க்கிழமை இரவு ஹரித்வாரில் உள்ள அரசு பெண்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருடன் உறவினப் பெண் ஒருவர் மட்டுமே இருந்துள்ளார்.
பணம் தர முடியாத ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், பணியில் இருந்த மருத்துவர், பிரசவம் பார்க்க முடியாது என்று தெரிவித்தாக கூறப்படுகிறது.
சிகிச்சை மறுக்கப்பட்ட அந்தப் பெண் பிரசவ வலியில் நகர முடியாமல் மருத்துவமனையின் தரையிலேயே அதிகாலை 1:30 மணியளவில் குழந்தையைப் பிரசவித்துள்ளார். அவருக்கு மறைவான இடம் கூட தரப்படவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அது மட்டுமின்றி, குழந்தை பிறந்த பிறகு கர்ப்பிணி பெண்ணிடம் அங்கிருந்த நர்சுகள், "என்ன சுகமாக இருக்கிறதா? இன்னும் நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டுமா?" என்று நக்கலாக பேசி கேலி செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து புகார் எழுந்த நிலையில், முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இரவுப் பணியில் இருந்த ஒப்பந்த மருத்துவர் சோனாலி உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இரண்டு செவிலியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கர்ப்பிணிப் பெண்ணுக்கு அவசர நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என்று விரிவான விசாரணை நடந்து வருவதாகவும், அலட்சியம் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர். ஆர்.கே. சிங் தெரிவித்துள்ளார். மேலும் பிரசவித்த தாயும் சேயும் நலமாக உள்ளாதாகவும் அவர் தெரிவித்தார்.
- இரவு முழுவதும் எறும்புக்கடி, கடுங்குளிரில் இருந்ததது.
- புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் கைவிடும் சம்பவங்களில் மத்தியப் பிரதேசம் நாட்டிலேயே முன்னிலையில் உள்ளது.
மத்திய பிரதேசத்தில் அரசு வேலை பறிபோய்விடும் என்ற அச்சத்தில், மூன்று நாட்களே ஆன சிசுவை பெற்றோரே காட்டில் வீசிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் நந்தன்வாடி பகுதியை சேர்ந்தவர் பப்லு தண்டோலியா. அரசுப் பள்ளி ஆசிரியரான இவருக்கும் மனைவி ராஜ்குமாரி தண்டோலியாவுக்கும் 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த அண்மையில் ராஜ்குமாரிக்கு 4ஆவதாக ஆண்குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை பிறந்து 3 நாட்களுக்கு பிறகு காட்டுக்குள் கொண்டு சென்று ஒரு கல்லின் ஓரத்தில் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
மத்தியப் பிரதேச அரசு ஜனவரி 26, 2001 அன்று மத்தியப் பிரதேச அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் 'இரண்டு குழந்தைகள்' மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படும் என்று ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.
இதை மீறி மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்தால், அவர் அரசுப் பணியிலிருந்து பணிநீக்கம் செய்யப்படுவார் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கொள்கைப்படி வேலை இழந்துவிடுவோம் என்ற பயத்தாலேயே இந்தக் கொடூரச் செயலைச் செய்ததாகப் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
காலையில் நடைபயிற்சிக்குச் சென்ற கிராம மக்கள் குழந்தையின் அழுகுரலைக் கேட்டு, கல்லிடுக்கில் கிடந்த குழந்தையைக் கண்டுபிடித்து, காவல்துறைக்குத் தகவல் அளித்தனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தைக்கு, இரவு முழுவதும் எறும்புக்கடி, கடுங்குளிரில் இருந்ததால் ஏற்பட்ட பாதிப்புக்கு சிகிச்சை அளித்தனர். இதைதொடர்ந்து குழந்தை பத்திரமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் கைவிடும் சம்பவங்களில் மத்தியப் பிரதேசம் நாட்டிலேயே முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்
- கரூர் துயரம் குறித்து விளக்கம் அளித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டார்.
கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கரூர் துயரம் குறித்து விளக்கம் அளித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் 5 நிமிட வீடியோ வெளியிட்டார்.
இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம் நடைபெற்றது.
விஜயின் பிரச்சாரப் பேருந்து, பிரச்சார வேன் உள்ளிட்டவற்றிற்கு ஆயுத பூஜை நடத்தி வழிபாடு செய்யப்பட்டுள்ளது. விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- காசாவில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.
- இஸ்ரேலியப் படைகள் கப்பல்களில் ஏறும் வீடியோ காட்சிகளையும் சுமுட் புளோட்டிலா வெளியிட்டுள்ளது.
பாலஸ்தீன நகரமான காசா மீது தொடர் தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல், அங்குள்ள மக்களுக்கு உணவு மற்றும் உதவிப்பொருட்கள் கிடைப்பதையும் கட்டுப்படுத்தி வருகிறது.
இதனால் ஒரு புறம் இஸ்ரேலின் வெடிகுண்டு, பீரங்கி, துப்பாக்கிகளுக்கு இரையாகும் மக்கள் மறுபுறம் பட்டினியாலும் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில் காசாவிற்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் சென்ற குளோபல் சீ ஃப்ளோட்டிலா (ஜிஎஸ்எஃப்) கப்பல்களை இஸ்ரேலிய கடற்படை தடுத்து நிறுத்தியுள்ளது.
மனிதாபிமான உதவிகளை வழங்கும் நோக்கில், ஸ்பெயினின் பார்சிலோனாவிலிருந்து குளோபல் சீ ஃப்ளோட்டிலா புறப்பட்டது. இந்த ஃப்ளோட்டிலா 44 நாடுகளைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறிய கப்பல்களைக் கொண்ட குழுவாகும்.
இவை இன்று (வியாழக்கிழமை) காலை உதவிகளுடன் காசாவை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் காசாவில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. அதில் வருகை தந்த ஸ்வீடிஷ் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் மற்றும் பிறரை இஸ்ரேல் இராணுவம் தடுத்து நிறுத்தி சிறைபிடித்துள்ளது.
குளோபல் சுமுட் கப்பல்கள் பாதுகாப்பாக தடுத்து நிறுத்தப்பட்டு, அதில் இருந்த மக்கள் இஸ்ரேலிய துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மோதல் பகுதிக்குள் நுழைய வேண்டாம் என்று இஸ்ரேலிய கடற்படை எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், அவர்களின் பாதையை மாற்றுமாறு கேட்டுக் கொண்டதாகவும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சுமுட் புளோட்டிலா தனது அறிக்கையில், இஸ்ரேலிய கடற்படை, அல்மா, சிரியஸ் மற்றும் அதாரா ஆகிய கப்பல்களை இடைமறித்து, கப்பல்களில் ஏறி நேரடி தகவல்தொடர்புகளைத் துண்டித்ததாக தெரிவித்துள்ளது. இஸ்ரேலியப் படைகள் கப்பல்களில் ஏறும் வீடியோ காட்சிகளையும் சுமுட் புளோட்டிலா வெளியிட்டுள்ளது.
- முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவசர, அவசரமாக கருத்துக்களை தெரிவித்தார்.
- இன்றைக்கு ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டனர் என்பதற்கு அடையாளமாக தற்போது கள நிலவரம் உள்ளது.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-
கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு பின் உண்மை நிலையை மக்களிடத்தில் விளக்க வேண்டிய தார்மீக பொறுப்பில் இருந்து அரசு விலகிச் செல்கிறது என்கின்ற சந்தேகம், கவலையும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படும் வகையில் அரசின் கருத்துக்கள், அதிகாரிகளின் கருத்துக்கள் அமைந்துள்ளதை நாம் கவனமாக பார்க்க வேண்டிய நிலையில் உள்ளது.
கரூர் துயர சம்பவத்திற்கு ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து உள்ளோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆணையத்தின் அறிக்கையை அடிப்படையாக வைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறினார்.
அதன்பிறகு மின்வாரிய உயர் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர், கூடுதல் டிஜிபி ஆகியோர் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்து அரசு நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் கருத்துக்களை தெரிவித்தார்கள்.
இதற்கெல்லாம் மேலாக வருவாய் துறை செயலாளர், மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர், டி.ஜி.பி. அரசின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.
அதனை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு வீடியோ வெளியிட்டு இது தொடர்பாக கருத்துக்கள் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கும் தொனியில் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதோடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவசர, அவசரமாக கருத்துக்களை தெரிவித்தார்.
இதனை பார்க்கும் போது விசாரணை ஆணையத்தை அரசுக்கு வேண்டிய திசையிலே, அவர்கள் கருத்துக்கள் அடிப்படையில் வழி நடத்துகிறார்களோ என்ற நிலை தான் இன்றைக்கு வெட்ட வெளிச்சமாக அமைந்து வருகிறது.
பொதுவாக விசாரணை ஆணையம் அமைந்த பிறகு அது தொடர்பான வாதங்கள், வீடியோக்கள் அரசு அதிகாரிகள் வெளியிடுவது ஆணையத்தின் விசாரணையை கேள்விக்குறியாக்கும் வகையில், அமையும். விசாரணை நடக்கும் போது அது தொடர்பான அறிக்கை தொடர்ந்து வெளியாகி வருவது விசாரணை நடுநிலையோடு, நம்பகத் தன்மையோடு நடைபெறுமா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
திறமைமிக்க சேவையால் மக்களின் நம்பிக்கைத் தன்மையை பெற்றுள்ள அரசு உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகளை, திமுக அரசு தவறாக வழி நடத்துகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
இன்றைக்கு ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டனர் என்பதற்கு அடையாளமாக தற்போது கள நிலவரம் உள்ளது. ஆகவே அம்மா பேரவையின் சார்பில் நடைபெறும் 34 வது திண்ணைப் பிரசாரத்தில் மக்களிடத்தில் எடுத்து கூற வேண்டும். மீண்டும் 2026-ல் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி ஆகியோரின் ஆட்சி எடப்பாடியாரின் தலைமையில் மலரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள்.
- குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறும்.
கோவில் தோற்றம்
தமிழகத்தின் தசரா என்றாலே குலசை தான். மைசூர் தசராவை மிஞ்சும் வகையில், தமிழ்நாட்டின் தென்கோடி கடற்கரையில் மகிஷாசுரனை சக்தியின் அம்சமான முத்தாரம்மன் சம்ஹாரம் செய்கிறாள். சங்க காலத்தில் குலசேகரப்பட்டினம் 'தென்மறைநாடு' என்று அழைக்கப்பட்டது.
பாண்டிய மன்னன் சடையவர்ம சுந்தரபாண்டியனின் மகன் குலசேகரப்பாண்டியன், இப்பகுதியை சுமார் 50 ஆண்டுகள் ஆட்சி செய்தான். கேரள மன்னனை வெல்ல குலசேகரப்பாண்டியன் படையெடுத்தபோது, அவன் கனவில் முத்தாரம்மன் தோன்றி அருளாசி வழங்கினாள். வெற்றி பெற்ற குலசேகரப்பாண்டியன் முத்தாரம்மனின் உத்தரவுபடி துறைமுகத்தைச் சீர்படுத்தி ஊரையும் பெரிதாக்கினான்.
பாண்டிய மன்னர்கள் முத்துக்களை ஆரமாகத் தொடுத்து அன்னைக்குச் சூட்டி மகிழ்ந்தனர். எனவே அன்னை, 'முத்தாரம்மன்' என வழங்கலானாள். அம்மை நோயினை முத்துப் போட்டதாகக் கூறுவது மரபு. முத்துக் கண்டவர்கள் அம்பாள் பீடத்தைச் சுற்றி நீர் கட்டச் செய்வர். இதன்மூலம் அம்மை நோய் (முத்து நோய்) குணமாகும். முத்துக்களை ஆற்றிக் குணப்படுத்தியதால் அன்னை, 'முத்து ஆற்று அம்மன்' என்றழைத்து, அதுவே மருவி 'முத்தாரம்மன்' என அழைக்கப்படுகிறாள் என்றும் கூறப்படுகிறது.
ஆரம்ப காலங்களில் சுயம்பு வடிவிலேயே முத்தாரம்மனைப் பக்தர்கள் வழிபட்டு வந்தனர். அன்னையின் திருமேனியினைக் கண்குளிரக் கண்டு, தரிசனம் செய்ய வேண்டும் என்று பக்தர்கள் அம்பாளிடம் வேண்டினர். ஒரு நாள் கனவில், தம்மோடு, ஞானமூர்த்தீஸ்வரர் திருமேனியுடன் ஆசாரிக்குக் காட்சி அளித்து, ''இதேபோல் எமக்கு ஒரு சிலை செய்து வையுங்கள்'' என ஆணையிட்டார்.
அதன்படி அந்தச் சிலை, மயிலாடியில் இருந்து வரவழைக்கப்பட்டு சுயம்புவாக முளைத்துள்ள அம்பாளின் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டது. முத்தாரம்மன் அருகே சுவாமி ஞானமூர்த்தீஸ்வரர் வீற்றிருப்பதும், இருவருமே வடக்கு நோக்கி காட்சி தருவதும் இத்தலத்திற்கு மட்டுமே உள்ள பெருமையாகும்.
முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள். ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது வரம். அதனால் தேவர்களும், மூவர்களும் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர். மக்களின் துன்பம் கண்டு சகிக்க முடியாத அன்னையும், மிக அழகான மங்கையின் வடிவம் கொண்டு முத்தாரம்மனாகப் பூமிக்கு வந்தாள்.
பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்துவிட்டு, சிலை போல ஆனார்கள். அதேபோல இந்திரனும், திக்குப் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்துவிட்டு சிலையாக மாறினார்கள். அப்படி அவர்கள் நின்றதால்தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் வழக்கம் வந்தது. அன்னை அவர்கள் கொடுத்த ஆயுதங்களைப் பத்துக் கரங்களில் தாங்கி, போர்க்கோலம் பூண்டு சும்ப, நிசும்பர்களையும், அவர்களது படைத்தளபதிகளான மது, கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள்.
தவவலிமை மிக்க வரமுனி, ஆணவம் மிகுதியால் அவரது இருப்பிடம் வழியாக வந்த அகத்திய முனிவரை மதிக்கத் தவறியதோடு அவமரியாதையும் செய்தார். மனம் நொந்த அகத்தியர், வரமுனியை எருமைத்தலையும், மனித உடலும் பெற்று குலசேகரப்பட்டினம் இறைவியால் அழிவாயாக எனச் சாபமிட்டார். அகத்திய முனிவரின் சாபத்தால் வரமுனி எருமைத்தலையும் மனித உடலும் பெற்று மகிஷாசுரனாக மாறினார். ஆனாலும் தனது தவவலிமையால் பல வரங்களைப் பெற்றார். முனிவராக வாழ்வைத் துவங்கிய வரமுனி, தனது வாழ்வின் பிற்பகுதியில் அசுரனாகவே வாழ்வை நடத்தினார்.
அவரின் இடையூறுகளைத் தாங்க இயலாத முனிவர்கள் அன்னையை நோக்கி கடும் வேள்வி நடத்தினர். மகிஷாசுரனின் கொடூர செயல்களுக்கு முடிவுகட்டும் விதமாக அவனை அழித்தாள் லலிதாம்பிகை. இந்தப் புனித நாள்தான் தசரா பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னை பராசக்தி, வேள்வியில் வளர்ந்த ஒன்பது நாட்களும் `நவராத்திரி' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
நவராத்திரி தினங்களில் குலசேகரப்பட்டினம் கடற்கரையில் சுமார் 4 கிலோமீட்டர் பரப்பளவுக்கு எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். சுமார் 800-க்கும் மேற்பட்ட தசரா குழுவினர் விதம், விதமான வேடத்தில் வந்து குலசையைக் குதூகலப் படுத்துவார்கள். ஒவ்வொரு குழுவும் தனித் தனியாக மேளம் முழங்க வட்டம், வட்டமாக நின்று ஆடுவதைக் காண்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக விளங்கும்.
குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறும். 10-வது நாள் விஜய தசமி தினத்தன்று மகிஷாசுரனை முத்தாரம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி கடலோரத்தில் நடைபெறும். புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் கொடியேற்றத்துடன் தசரா பண்டிகை தொடங்கும். கொடியேற்ற நாளுக்கு முந்தைய இரவில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவாரத் தேவதைகளுக்குக் காப்பு கட்டப்படும். முதல் நாளில் அம்பாள் துர்க்கை கோலத்தில் காட்சி தருவாள். இரண்டாம் நாள் விசுவகர்மேஸ்வரர் கோலத்திலும், மூன்றாம் நாள் பார்வதி கோலத்திலும், நான்காம் நாள் பாலசுப்பிரமணியர் கோலத்திலும், ஐந்தாம் நாள் நவநீத கிருஷ்ணர் கோலத்திலும், ஆறாம் நாள் மகிஷாசுரமர்த்தினியாகவும், ஏழாம் நாள் ஆனந்த நடராசராகவும், எட்டாம் நாள் அலைமகள் கோலத்திலும், ஒன்பதாம் நாள் கலைமகள் கோலத்திலும் காட்சியளித்து வீதிஉலா வருகிறாள்.
பத்தாம் நாள் பிற்பகலில் தசமி திதியில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், மகிஷாசுர சம்ஹாரத்திற்காகக் கொண்டு செல்லப்படும் சூலத்திற்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்ற பிறகு, மகிஷாசுரமர்த்தினி கோலம் கொண்டு, கடற்கரையில் அமைந்திருக்கும் சிதம்பரேசுவரர் கோவிலை நோக்கி அம்பாள் புறப்பாடு நடைபெறும். காளிவேடம் போட்டு இருக்கும் அனைவரும் தேர்மண்டபத்துக்கு வந்து, அம்மனைச் சூழ்ந்து நிற்பார்கள். அம்மன் அசுரனைத் தம் சூலாயுதத்தால் குத்தும்போது இவர்களும் தம் கைகளில் உள்ள சூலாயுதத்தால் மகிஷனைக் குத்துவார்கள். உலகத்தில் தர்மத்தைக் காத்து அதர்மத்தை அடியோடு வீழ்த்த இந்த வதத்தை அம்பாள் செய்வதாக ஐதீகம். இது தமிழ்நாட்டில் எந்த ஊர் விழாவிலும் காண முடியாத, காண கிடைக்காத அற்புத காட்சியாகும்.
இதனையடுத்து, சிதம்பரேஸ்வரர் ஆலயத்தை வந்தடையும் அன்னைக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பதினோராவது நாள் காலை பூஞ்சப்பரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அன்னை அருள்புரிவாள். அம்பாள் மாலை கோவிலை வந்தடைந்த பின்னரே, கொடி இறக்கப்படும். அதன்பிறகு சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளின் காப்புகள் களையப்படும். காப்பு கட்டிய பக்தர்கள் அனைவரும் தங்கள் காப்புகளைக் களைந்து விடுவார்கள். இரவில் அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெறும். 12-வது நாள் முற்பகலில் முத்தாரம்மனைக் குளிர்விப்பதாகக் குடம், குடமாகப் பாலாபிஷேகம் நடத்தப்படும். அத்துடன் தசரா விழா சிறப்பாக நிறைவடையும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர்- கன்னியாகுமரி சாலையில் திருச்செந்தூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் கோவில் உள்ளது.
- நடிகர் மம்மூட்டி மீண்டும் படப்பிடிப்பிற்காகத் திரும்பி உள்ளார்.
- இப்படத்தில் ஃபகத் ஃபாசில், நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
நடிகர் மம்மூட்டி உடல்நிலைக் காரணமாக 7 மாதங்கள் ஓய்வில் இருந்தார். இதனால் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், நடிகர் மம்மூட்டி மீண்டும் படப்பிடிப்பிற்காகத் திரும்பி உள்ளார்.
இந்த நிலையில், மலையாள திரையுலகின் 2 பெரும் சூப்பர்ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் ஒன்றாக இணைந்து நடிக்கும் PATRIOT படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
இப்படத்தில் ஃபகத் ஃபாசில், ரேவதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மம்மூட்டியும் மோகன்லாலும் ஒன்றாக இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.






