என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • நேற்று ஆயுத பூஜை, இன்று விஜயதசமி பண்டிகையை ஒட்டி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • அக்டோபர் 25ஆம் தேதியை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் அனைத்திற்கும் நாளை (அக்டோபர் 03) அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    நேற்று ஆயுத பூஜை, இன்று விஜயதசமி பண்டிகையை ஒட்டி விடுமுறை என்பதால் நாளையும் புதுச்சேரியில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக அக்டோபர் 25ஆம் தேதியை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த 2019 இல் லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தி இந்திய வீரர்கள் 20 பேரை கொன்றனர்.
    • பிரதமர் மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங்கை நேரில் சென்று சந்தித்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2019 இல் லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தி இந்திய வீரர்கள் 20 பேரை கொன்றனர். இதனால் இரு நாடுகளிடையே விரிசல் வலுப்பெற்றது.

    எல்லை பிரச்சனைகள் மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட  கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

     இந்நிலையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

    சமீபத்தில் சீனாவில் நடந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு  உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி  சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை  நடத்தியதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இந்தச் சேவை அக்டோபர் 26 முதல் தொடங்கும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

     ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாகக் கூறி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு 50% கூடுதல் வரி விதித்த பிறகு இந்தியா-சீனா உறவு வலுப்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. 

    • நடிகர் விஜய் அவர்களைக் காணவந்த பொதுமக்களில் 41பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைந்துள்ளனர்.
    • உண்மைக்கு மாறான ஒரு கட்டுக்கதையை விஜய்யின் ஆதரவாளர்கள் சிலர் பரப்பத் தொடங்கினர்.

    கரூர் உயிரிழப்புகள் தொடர்பாக கலை இலக்கியவாதிகள், சமூகச்செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு 7.20 மணியளவில் கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய "சாலையில் காட்சிதரும் - ரோடு ஷோ" நிகழ்வில் அதன் தலைவர் நடிகர் விஜய் அவர்களைக் காணவந்த பொதுமக்களில் 41பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைந்துள்ளனர். இதனால் ஆற்றொணா துயரத்திலும் கடும் மனவுளைச்சலிலும் தமிழக மக்கள் தவித்து வரும் இவ்வேளையில், தவறான தகவல்களைப் பரப்பி இந்த மரணங்கள் உதாசீனப்படுத்தப்படுவதைக் காணச்சகியாமல் நாங்கள் இந்தக் கூட்டறிக்கையினை வெளியிடுகின்றாம்.

    விஜய் அரசியல் கட்சி துவங்கியதிலோ தனது கட்சியினரை அவர் சந்திப்பதிலோ எவருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. நாட்டின் குடிமக்கள் எவரொருக்குமானது போலவே அது அவருக்குரிய சனநாயக உரிமை. ஆனால் அவர் தனது கட்சியினரையும் ரசிகர்களையும் சந்திக்கத் தெரிவுசெய்துள்ள முறை, இந்த நாட்டின் அரசியல் முதிர்ச்சிக்கும் பொதுவாழ்க்கைக்கும் தனிமனித கண்ணியத்திற்கும் உகந்ததல்ல என்பதுடன், அதுவே இந்தப் பேரழிவுக்கும் இட்டுச்சென்றுள்ளது எனவும் சுட்டிக்காட்டுகிறோம்.

    கரூருக்கும் முன்னதாக விக்கிரவாண்டி, மதுரை, திருச்சி, அரியலூர், நாகை ஆகிய இடங்களில் விஜய்யின் கூட்டங்கள் இந்தப் பேரழிவுக்கான முன்னோட்டம் போலவே நடந்திருக்கின்றன. போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்காமலும் பொதுமக்களுக்கு அச்சமூட்டும் வகையிலும் வாகனங்களில் பயணம் செய்தது, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியது மற்றும் மின் கம்பங்கள், மரங்கள், அருகமைக் கட்டிடங்கள் ஆகியவற்றில் ஏறி சேதப்படுத்தியது என அவரது கட்சியினர் பொறுப்புணர்வின்றியும் கட்டுப்பாடற்றும் சுயஒழுங்கின்றியும் நடந்துகொண்டனர். அவர்களில் பெரும்பாலோர் முப்பது வயதுக்குட்பட்டவர்கள், புதிதாக அரசியல் ஆர்வம் கொண்டவர்கள், விஜய்யின் சொல்லுக்கு கட்டுப்படக்கூடியவர்கள். அத்துமீறல்களுக்காக அவர்களைக் கண்டித்து, நல்வழிப்படுத்த அவர் அறிவுறுத்தியிருக்க வேண்டும். ஆனால் விஜய் அப்படியான முயற்சியெதையும் மேற்கொள்ளாமலும் அவர்களது அத்துமீறல்களை ரசிப்பவராகவும், அவர்கள் அவ்வாறு இருப்பதுதான் தனது பலமென்று கருதியும் அவற்றை இயல்பானதாக்க முயற்சித்தன் விளைவே இந்த அநியாய மரணங்கள்.

    விஜய், அறிவித்திருந்த நேர அளவுக்குள் கரூருக்கு வராமல் தன்னைக் காண்பதற்காக திரண்டிருந்தவர்களை 7 மணிநேரத்திற்கும் மேலாக காக்கவைத்ததும், அங்கு குடிநீர், உணவு, கழிவறை உள்ளிட்ட அடிப்படைத்தேவைகள் போதுமானதாக இல்லாதிருந்ததும், கூட்டத்திற்குள் வந்த பிறகும் முகம் காட்டாமல் மக்களை தன் வண்டிக்குப் பின்னேயே அலையவிட்டதும்தான் உயிரிழப்புக்குக் காரணம் என்பதை காணொளிச்சான்றுகள் காட்டுகின்றன. ஆனால் இந்த உயிரிழப்புகளுக்குப் பின்னே "திட்டமிட்ட சதி" இருப்பதாகவும் விஜய் மீது எந்தத் தவறுமில்லையெனவும் உண்மைக்கு மாறான ஒரு கட்டுக்கதையை விஜய்யின் ஆதரவாளர்கள் சிலர் பரப்பத் தொடங்கினர். மணிப்பூர் உள்ளிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்கள், மோதல்கள், கலவரங்கள், ஒடுக்குமுறைகள் பற்றி விசாரிக்கப் போயிராத தேசிய ஜனநாயகக் கூட்டணி, கரூர் மரணங்கள் பற்றி ஆராய தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றை அனுப்பியுள்ளதும் அந்தக் குழுவினர் "சதி" கட்டுக்கதையை வலுப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்து வருவதும் ஏற்கத்தக்கதல்ல.

    தன் கண்முன்னேயே விபரீதம் நடப்பதைப் பார்த்தப் பிறகும் அதில் கவனம் செலுத்தி நிலைமையைச் சீராக்காமல் அங்கிருந்து வெளியேறிப் போய் இரண்டுநாட்கள் அமைதிகாத்த விஜய், இந்தக் கட்டுக்கதை கொடுத்த தைரியத்தில் 30.9.2025 அன்று ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். தன்னால்தான் இந்தச் சாவுகள் நிகழ்ந்தன என்பது பற்றிய குற்றவுணர்ச்சியோ வருத்தமோ தார்மீகப் பொறுப்பேற்போ இல்லாத அவரது காணொளி விளக்கத்தில் அரசின் மீது பழிசுமத்திவிட்டு தப்பித்துவிடும் உள்நோக்கமே துருத்திக் கொண்டுள்ளது.

    கலையும் இலக்கியமும் சமூகத்தை மேம்படுத்துவதாக, விடுதலை உணர்வைத் தருவதாக, அடிமைச்சிந்தனைக்கு எதிராக தன்மதிப்புணர்வைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். ஆனால் விஜய்யின் அணுகுமுறை நேர்மைத்தன்மையற்றதாகவும், தனது ரசிகர்களை வேண்டுமென்றே தவறாக வழிநடத்துவதாகவும் உள்ளது. உழைப்பும், பொது சிந்தனையும், சமூக அக்கறையுமற்ற வழியில் அதிகாரத்தைப் பெறும் முனைப்பு மேலோங்கியுள்ளது. இழைத்துவிட்ட குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக, இதுவரை தனது கொள்கை எதிரி என்று குறிப்பிட்டு வந்த வலதுசாரிகளை அண்டி நிற்கவும் தயாராகிவிட்டார் என்பதை அவரது அடுத்தடுத்த நகர்வுகள் உணர்த்துகின்றன.

    எவ்வளவு கொடிய தீங்கினையும் இழைத்துவிட்டு வதந்திகளையும் கட்டுக்கதைகளையும் களமிறக்கி தப்பித்துவிட முடியும் என்கிற விஜய்யின் கெடுநோக்கம் தடுக்கப்பட வேண்டும். ரசிக மனப்பான்மையில் அவரது பின்னே திரண்டுள்ள சிறார்களையும் இளைஞர்களையும் மீட்டெடுத்து சமூகப் பொறுப்புணர்வும் தன்மதிப்பும் உள்ளவர்களாக, தமது உள்ளாற்றல்கள் மூலம் வியத்தகு சாதனை புரிபவர்களாக வளர்த்தெடுப்பதில் கலை இலக்கியவாதிகளுக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளதென உணர்கிறோம்.

    விஜய்யின் முந்தைய நிகழ்வுகள், விளைவுகள் குறித்த மதிப்பீட்டின் அடிப்படையில் கரூரில் மேற்கொண்டிருக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் தமிழ்நாடு அரசு கண்டறிய வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற அவலங்கள் உருவாகாமல் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வழிவகைகள் கண்டறியப்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்ய, கரூர் உயிரிழப்புகளுக்கு காரணமான விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நேர்நிறுத்த தமிழ்நாடு அரசு தயங்கக்கூடாதென வலியுறுத்துகிறோம். மேலும், கரூர் நிகழ்வைக் காரணம் காட்டி சமூக, சனநாயக, பண்பாடு மற்றும் அரசியல் இயக்கங்களின் கருத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை, சங்கம் சேரும் உரிமை, போராடும் உரிமை ஆகியவற்றை தீர்மானிக்கும் அதிகாரத்தை காவல்துறையிடம் ஒப்படைத்துவிடக் கூடாது. அரசமைப்பு உரிமைகளான அவற்றைக் காப்பாற்றுவதில் தனக்குள்ள பொறுப்பினை தமிழ்நாடு அரசு உறுதியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

    • தற்போது நாடு முழுவதும் உள்ள சுமார் 3,700 பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களின் பராமரிப்பை ASI மட்டுமே கையாண்டு வருகிறது.
    • தாஜ்மஹால் உள்ளிட்ட முக்கியச் சின்னங்களைப் பராமரிக்கும் பொறுப்பில் ASI-ன் ஏகபோக உரிமை இந்தத் திட்டத்தின் மூலம் மாறும்.

    இந்தியத் தொல்லியல் துறையின் (ASI) கட்டுப்பாட்டில் உள்ள வரலாற்றுச் சின்னங்கள், கோட்டைகள் மற்றும் பாரம்பரிய இடங்களைப் பராமரிக்கும் பணிகளில் தனியார், கார்ப்பரேட் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை அனுமதிக்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளாதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தற்போது நாடு முழுவதும் உள்ள சுமார் 3,700 பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களின் பராமரிப்பை ASI மட்டுமே கையாண்டு வருகிறது. இதனால் பல திட்டங்கள் தாமதமாவதால் பொது-தனியார் பங்கேற்பு மூலம் திட்டங்களை விரைவாக செயல்படுத்த முடியும் என்று அரசு நம்புகிறது.

    எனவே இந்த திட்டத்தின்படி பதிவு செய்த தனியார் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட்டுகள் இனி நேரடியாகப் பபாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளலாம்.

    தனியார் பங்களிப்பு இருந்தாலும், அனைத்துப் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளும் ASI-ன் முழுமையான மேற்பார்வையின்கீழ் மட்டுமே நடக்கும்.

    இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த, தொல்லியல் துறையில் அனுபவம் வாய்ந்த கட்டிடக் கலைஞர்களைக் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டு அவர்களின் வழிகாட்டுதலின்படி, தனியார் நிறுவனங்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ளலாம்.

    தாஜ்மஹால் உள்ளிட்ட முக்கியச் சின்னங்களைப் பராமரிக்கும் பொறுப்பில் ASI-ன் ஏகபோக உரிமை இந்தத் திட்டத்தின் மூலம் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • பைசன் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
    • மாரி செல்வராஜ் வரிகளை எழுத சத்யன் இப்பாடலை பாடியுள்ளார்

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் பைசன். இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.

    இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

    பைசன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி வெளியாக இருக்கிறது.

    இப்படத்தின் முதல் சிங்கிளான தீக்கொளுத்தி 2-வது பாடலான றெக்க றெக்க மற்றும் 3 ஆவது பாடலான சீனிக்கல்லு ஆகியவை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.

    இந்நிலையில், 'பைசன்' படத்தின் 'தென்நாடு' பாடல் வெளியானது. நிவாஸ் கே பிரசன்னா இசையில் மாரி செல்வராஜ் வரிகளை எழுத சத்யன் இப்பாடலை பாடியுள்ளார்.

    • குஜராத்தின் ரான் ஆஃப் கட்சுக்கும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கும் இடையில் உள்ள 96 கி.மீ. நீளமுள்ள சதுப்பு நிலப் பகுதி சர் க்ரீக்.
    • இது மீன்பிடி மற்றும் எண்ணெய், இயற்கை எரிவாயு வளங்கள் நிறைந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.

    குஜராத்தின் ரான் ஆஃப் கட்சுக்கும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கும் இடையில் உள்ள 96 கி.மீ. நீளமுள்ள சதுப்பு நிலப் பகுதி சர் க்ரீக் (Sir Creek) ஆகும்.

    இது மீன்பிடி மற்றும் எண்ணெய், இயற்கை எரிவாயு வளங்கள் நிறைந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். அணமைக் காலமாக பாகிஸ்தான் இந்தப் பகுதியில் ராணுவக் கட்டமைப்புகளை அதிகப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

    இந்நிலையில் சர் க்ரீக்பகுதியில் பாகிஸ்தான் எந்த வகையிலும் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றால், சக்திவாய்ந்த பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.

    குஜராத்தின் பூஜ் விமானப்படை தளத்தில் வீரர்களுடன் தசரா கொண்டாட்டத்தில் பங்கேற்ற ராஜ்நாத் சிங், "சர் க்ரீக் பகுதியில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஏதேனும் தவறான முயற்சி மேற்கொள்ளப்பட்டால், அதற்கு வரலாறு மற்றும் புவியியலை மாற்றும் அளவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்.

    இந்தப் பிரச்சினை குறித்துப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியா பலமுறை முயன்றபோதும், பாகிஸ்தானின் ஒத்துழைக்கவில்லை.

    1965 போரில் இந்திய இராணுவம் லாகூர் வரை சென்றது. இப்போது 2025-ல், கராச்சிக்கு செல்லும் ஒரு வழி இந்த க்ரீக் வழியாகவும் செல்கிறது என்பதை பாகிஸ்தான் நினைவில் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூரின் அனைத்து இலக்குகளையும் இந்தியா வெற்றிகரமாக அடைந்ததாகவும், பாகிஸ்தானுடன் போரைத் தொடங்குவது இந்தியாவின் நோக்கம் அல்ல என்றும் அவர் கூறினார்.  

    • அஜித்குமார் ரேஸிங் அணி ஆசிய லீ மான்ஸ் தொடரில் கலந்து கொள்ளவுள்ளது.
    • இந்த தொடரில் அஜித்குமாருடன் இணைந்து நரேன் கார்த்திகேயன் கலந்துகொள்கிறார்

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .

    கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.

    அஜித்குமார் ரேஸிங் அணி ஆசிய லீ மான்ஸ் தொடரில் கலந்து கொள்ளவுள்ளது. இந்த தொடரில் அஜித்குமாருடன் இணைந்து நரேன் கார்த்திகேயன் கலந்துகொள்கிறார்

    இந்திய சினிமாவை பிரபலப்படுத்தும் வகையில் அதன் லோகோவை அஜித்குமார் தனது கார் மற்றும் ரேஸிங் உடையில் பொறித்ததுள்ளார்.

    முன்னதாக தனது ரேஸ் கார் மற்றும் ரேஸ் உடைகளில் Indian Film Industry என்ற லோகோவை அச்சிடவுள்ளதாக அஜித்குமார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜாவா சுந்தரேசன் கதாபாத்திரம் பிற்காலத்தில் சமூக வலைத்தளங்களில் மீம் டெம்ப்லேட்டாக மாறியது.
    • இயக்குநர் சிம்புதேவனைச் சந்தித்த நடிகர் சாம்ஸ் தன் பெயரை ஜாவா சுந்தரேசன் என மாற்றிக்கொள்ள ஒப்புதல் கேட்ட விடியோ வெளியாகியுள்ளது.

    சிம்புதேவன் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு திரைப்படம் அறை எண் 305-ல் கடவுள். நடிகர்கள் பிரகாஷ் ராஜ், எம். எஸ்.பாஸ்கர், சந்தானம், சாம்ஸ் உள்ளிட்டோர் நடித்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

    இதில் நகைச்சுவை நடிகர் சாம்ஸ் ஏற்று நடித்த ஜாவா சுந்தரேசன் கதாபாத்திரம் பிற்காலத்தில் சமூக வலைத்தளங்களில் மீம் டெம்ப்லேட்டாக மாறியது.

    படத்தின் தொடக்கத்தில் சிறு போர்ஷனில் வந்திருந்தாலும் ஜாவா படித்து குறுகிய காலத்தில் மிகப்பெரிய மென்பொருள் வல்லுநராக மாறியிருப்பார். 'கலக்குப்பா கலக்கு' என்று சந்தானம் கூறும் டயலாக்கும் பேமஸானது. இதனால் நடிகர் சாம்ஸ் ரசிகர்கள் மனதில் ஜாவா சுந்தரேசன் என்றே பதிந்து விட்டார்.

    இந்த நிலையில், இயக்குநர் சிம்புதேவனைச் சந்தித்த நடிகர் சாம்ஸ் தன் பெயரை ஜாவா சுந்தரேசன் என மாற்றிக்கொள்ள ஒப்புதல் கேட்ட விடியோ வெளியாகியுள்ளது.

    அவரும் அதற்கு ஒப்புதல் கொடுத்து வாழ்த்தியுள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்து வரும் சாம்ஸ் அவர் திரைவாழ்வில் முக்கியமான கதாபாத்திரமாக அமைந்த ஜாவா சுந்தரேசன் என்ற பெயரையே தனக்கு சூட்டிக் கொண்டது கவனம் பெற்றுள்ளது. செல்லும் இடமெல்லாம் தன்னை ஜாவா சுந்தரேசன் என்றே அழைப்பதால் அவர் இந்த முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.   

    • கரூர் துயரம் குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்ட வீடியோவில் எனக்கு உடன்பாடில்லை.
    • அவரது பேச்சு அந்த இறப்புகளை விட அதிக வலியை தருகிறது.

    கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

    கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கரூர் துயரம் குறித்து விளக்கம் அளித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் 5 நிமிட வீடியோ வெளியிட்டார்.

    இந்நிலையில், 'விஜய் வெளியிட்ட வீடியோவில் உடன்பாடில்லை' என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "கரூர் துயரம் குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்ட வீடியோவில் எனக்கு உடன்பாடில்லை. விஜய் பேசியது திரைப்பட வசனம் போல் உள்ளது. இது நல்ல அணுகுமுறை இல்லை. வீடியோவில் பேசிய விஜய்க்கு இதயத்தில் காயமோ வலியோ இல்லை. அதை கேட்கும்போது கஷ்டமாக இருக்கிறது. வீடியோவில் பேசும்போது விஜய் வலியை கடத்தவில்லை. அவரது பேச்சு அந்த இறப்புகளை விட அதிக வலியை தருகிறது.

    கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு காரணமானவர், கள்ளக்குறிச்சிக்கு போகவில்லை. கரூர் சம்பவத்துக்கு காரணமானவர், கரூருக்கு போகவில்லை.

    இன்று இந்த இடங்களுக்கு வரும் பாஜகவும், காங்கிரஸும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு ஏன் வரவில்லை? கொடநாடு கொலை, ஆந்திரா காட்டிற்குள் தமிழர்கள் சுட்டுக்கொன்றதை பற்றியெல்லாம் இவர்களெல்லாம் பேசாதது ஏன்? இந்த அரசியலை எப்படி பார்ப்பது?

    ஏன் கரூரில் மட்டும் என கேட்போர், பிற இடங்களிலும் இத்துயரம் நடக்க வேண்டும் என நினைக்கிறார்களா? விஜய் சென்றதால்தானே அங்கே கூட்டம் கூடியது? எனில் யார் காரணம் அதற்கு?" என்று தெரிவித்தார்.

    • டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது
    • 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வெஸ்ட் இண்டீஸ்

    ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.

    இதன்படி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 44.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன்கள் அடித்தார்.

    இந்திய அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டுகளும் பும்ரா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.

    இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை சேர்த்துள்ளது. ஜெய்ஸ்வால் 36 ரன்கள் மற்றும் சாய் சுதர்சன் 7 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர்.

    கே.எல்.ராகுல் (53), கில் (18) ஆகியோர் களத்தில் உள்ள நிலையில் இந்திய அணி 41 ரன்கள் பின் தங்கியுள்ளது.

    • காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோரால் இளம்பெண் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
    • இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    திருவண்ணாமலையில் இளம்பெண்ணை 2 காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப்பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோரால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

    திருவண்ணாமலை அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான காவலர்கள் இருவரும் சஸ்பெண்ட் ஆன நிலையில் தற்போது நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

    • சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையில் மத்திய அரசால் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய RTE நிதி விடுவிக்கப்பட்டது.
    • 2025-25 கல்வியாண்டிற்கான RTE மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்வி உரிமைக் கட்ட 2009 (RTE Act)-இன் கீழ் 2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை அறிவித்துள்ளது.

    மத்திய அரசால் நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2025-26 கல்வியாண்டிற்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009-இன்படி (RTE) மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது.

    சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையில் மத்திய அரசால் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய RTE நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    சென்னை உயர்நீதிமன்றம், RTE நிதி ஒதுக்கிட்டை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (Samagra Shiksha} திட்டத்திலிருந்து பிரித்து வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

    மேலும் தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP), PM SHRI பள்ளித் திட்ட ஒப்பந்தம் (MoU) என்பனவற்றுடன் நிதி வழங்கல் இணைக்கப்படக் கூடாது என்றும் தெரிவித்தது.

    இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மேல்முறையீடு மனு தாங்கள் செய்தது.

    உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவிப்பு வழங்கியதைத் தொடர்ந்து, மத்திய அரசு தன்னுடைய நிதிப் பங்களிப்பை விடுவித்துள்ளது.

    இதன் தொடர்ச்சியாக 2025-25 கல்வியாண்டிற்கான RTE மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளது. 

    ×