என் மலர்
தலைப்புச்செய்திகள்
- டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 151 ரன்கள் எடுத்தது.
ஷார்ஜா:
ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட் தொடரில் ஷார்ஜாவில் நடைபெறுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி ஷார்ஜாவில் நடந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. குர்பாஸ் 40 ரன்னும், மொகம்மது நபி 38 ரன்னும் எடுத்தனர்.
வங்கதேசம் சார்பில் தன்ஜிம் ஹசன், ரிஷாத் ஹொசைன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. ஆரம்பம் முதல் சிறப்பாக ஆடிய வங்கதேச வீரர்களை ரஷித் கான் சோதனைக்கு ஆளாக்கினார்.
தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரை சதம் கடந்தனர். முதல் விக்கெட்டுக்கு 109 ரன் சேர்த்த நிலையில் பர்வேஸ் ஹொசைன் 54 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து பந்துவீசிய ரஷித் கான் தன்ஜிம் ஹசனை 51 ரன்னில் ஆட்டமிழக்கச் செய்தார். சயீப் ஹசன், ஜேகர் அலி, ஷமிம் ஹொசைன் ஆகியோரையும் விரைவில் அவுட்டாக்கினார்.
118 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் தத்தளித்தது.
அடுத்து இறங்கிய நூருல் ஹசன், ரிஷாத் ஹொசைன் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி பெறச் செய்தது.
இறுதியில், வங்கதேசம் 18.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், டி 20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
- முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- பத்தாம் நாளான இன்று விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடைபெற்றது.
உடன்குடி:
பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து பல்வேறு வேடங்களை அணிந்த பக்தர்கள் ஒவ்வொரு ஊரிலும் தசரா குழுக்கள் அமைத்து, வாகனங்களில் ஊர் ஊராக சென்று, கலைநிகழ்ச்சி நடத்தியும் காணிக்கை வசூலித்து வந்தனர்.
திருவிழாவையொட்டி தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் மாலையில் சமய சொற்பொழிவு, திருமுறை இன்னிசை, பரதநாட்டியம், வில்லிசை, இன்னிசை நிகழ்ச்சி போன்றவை நடந்தது.
இந்நிலையில், பத்தாம் நாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதனையொட்டி காலை முதல் மதியம் வரையிலும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
பெரும்பாலான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், முளைப்பாரி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர்.
இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளினார்.
அப்போது காளி வேடம் அணிந்த பக்தர்களும் அம்மனை பின்தொடர்ந்து வந்தனர். சூரசம்ஹாரத்தை காண்பதற்காக கடற்கரையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.
முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன் 3 முறை அம்மனை வலம் வந்து போரிட தயாரானான். அவனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார். பின்னர் சிங்க முகமாக உருமாறிய மகிஷாசூரன் மீண்டும் உக்கிரத்துடன் போரிடுவதற்காக அம்மனை 3 முறை சுற்றி வந்தான். அவனையும் அம்மன் சூலாயுதம் கொண்டு அழித்தார். தொடர்ந்து எருமை முகமாக உருமாறிய மகிஷாசூரன் மறுபடியும் பெருங்கோபத்துடன் அம்மனுடன் போர்புரிய வந்தான். அவனையும் சூலாயுதத்தால் அம்மன் சம்ஹாரம் செய்தார்.
அதன்பிறகு சேவலாக உருமாறி போரிட்ட மகிஷாசூரனையும் அன்னை சூலாயுதத்தால் வதம் செய்தார். அப்போது கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் 'ஓம் காளி, ஜெய் காளி' என்று விண்ணதிர பக்தி கோஷங்களை முழங்கி அம்மனை வழிபட்டனர்.
- தன்னுடைய வீட்டுக்கு உழைக்கும் தலைவர்கள் கருணாநிதி, ஸ்டாலின்.
- மக்களுக்காக உழைத்த தலைவர்கள் அ.தி.மு.க. தலைவர்கள் என்றார் இ.பி.எஸ்.
பாப்பிரெட்டிப்பட்டி:
தர்மபுரி தொகுதியில், 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணத்தை முடித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்ததாக பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட கடத்தூர்-தர்மபுரி பிரதான சாலையில் திரண்டிருந்த ஏராளமான மக்களிடையே எழுச்சியுரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 53 மாதம் ஆகிவிட்டது. இந்த தொகுதிக்கு ஏதாவது பெரிய திட்டம் கொண்டுவந்தார்களா? சிந்தியுங்கள்.
அ.தி.மு.க. அரசு இருக்கும்போது ஏழை, எளிய மாணவர்கள் படிக்க பொறியியல் கல்லூரி கொண்டுவந்தோம். எல்லோரும் இன்ஜினியராகும் வாய்ப்பு உருவாக்கினோம். பட்டப்படிப்புக்கு கலை அறிவியல் கல்லூரி கொண்டுவந்தோம். கிராமம் முதல் நகரம் வரை அதிகமாக பட்டப்படிப்பு படிக்கும் சூழலை உருவாக்கினோம்.
கே.பி.அன்பழகன் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது அம்மாவிடம் எடுத்துச்சொல்லி 68 கலை அறிவியல் கல்லூரியை 10 ஆண்டுகளில் கொண்டுவந்தோம். ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி என அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியில் 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து சிறப்பான சிகிச்சை அளித்தோம். மருத்துவக் கல்லூரி இடங்களை 3,445-ல் இருந்து 6 ஆயிரம் பேருக்கு உருவாக்கினோம்.
அதுமட்டுமல்ல, 21 பாலிடெக்னிக் கல்லூரி, 4 பொறியியல் கல்லூரி, 7 சட்டக்கல்லூரி உங்கள் மாவட்டத்திலும் ஒரு சட்டக்கல்லூரி கொண்டுவந்தோம், 4 வேளாண்மைக் கல்லூரி, 5 கால்நடை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிலையம் என பல கல்லூரிகளைத் திறந்து இந்தியாவிலேயே உயர்கல்வியில் முதன்மை மாநிலம் என்ற இலக்கை 2019-ம் ஆண்டிலேயே அடைந்துவிட்டோம்.
சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும், மாநிலம் மேன்மையடைய கல்வி சிறக்க வேண்டும் என கல்விக்கு அதிக நிதி ஒதுக்கினோம். ஒரு அரசு எப்படி செயல்பட்டது என்பதற்கு அ.தி.மு.க. ஆட்சியே உதாரணம்.
தி.மு.க. ஆட்சியில் ஒரே ஒரு அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவந்தாரா? மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என ஸ்டாலின் பேசுகிறார். நாங்கள் மத்திய அரசை எதிர்பார்க்கவில்லை, அம்மா இருக்கும்போது 6 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை மாநில அரசின் நிதியில் உருவாக்கினார். அப்படியான தில்லு திராணி ஸ்டாலினுக்கு இருக்கிறதா?
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட, அ.தி.மு.க. ஆட்சியில் அம்மா முதல்வராக இருந்தபோது தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டது, 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அந்த ஒப்பந்தங்கள் எல்லாம் நடைமுறைக்கு வந்து தொழிற்சாலைகள் எல்லாம் இயங்கிவருகின்றன.
அம்மா வழியில் வந்த அரசு 2019 ஜனவரியில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி சுமார் 3 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டு, 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அதன்மூலம் பல தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கு வந்தது, இளைஞர்களுக்கு வேலை கிடைத்தது.
ஸ்டாலினும்தான் முதலீடு ஈர்க்கிறேன் என்று வெளிநாடு போனார். 922 ஒப்பந்தங்கள் போடப்பட்டு, பத்தரை லட்சம் முதலீடு ஈர்க்கப்பட்டு, 32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றார்கள். 77 சதவீத ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டதாகச் சொன்னார். அப்படி என்றால் 25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லையே? எல்லாம் பொய். மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த பிறகும் இப்போதும் அதையே செய்கிறார்.
ஜெர்மனிக்கு தொழில் முதலீடு ஈர்க்கப்போகவில்லை, முதலீடு செய்யப்போனதுதான் உண்மை. வேண்டுமென்றே திட்டமிட்டு பொய் சொல்கிறார். வெள்ளை அறிக்கை விடவேண்டும் என்று கேட்டேன். வெள்ளை பேப்பரை எடுத்து தொழிற்துறை மந்திரி காட்டுகிறார். ஸ்டாலின் அவர்களே… தொழில்துறை மந்திரியும் சரி, நீங்களும் சரி சட்டமன்றத் தேர்தலில் பூஜ்ஜியம்தான் வாங்கப் போறீங்க. எப்படி வெள்ளை பேப்பரை காட்டுறீங்களோ அதேமாதிரி மக்கள் வெள்ளை பேப்பரில் பூஜ்ஜியம் போட்டுக் கொடுப்பார்கள்.
பிரதான எதிர்க்கட்சித் தலைவர் கேட்டால், மக்களுக்காக அதை சொல்ல வேண்டியது உங்கள் கடமை. ஆனால் கிண்டலும் கேலியும் செய்து மக்களை அவமானப்படுத்தும் விதமாக, இளைஞர்களை ஏமாற்றும் விதமாக வெறும் வெள்ளைப் பேப்பரை காட்டுகிறீர்கள். இதற்காகவா உங்களை அமைச்சராக்கினார்கள்? இவர்களுக்கு முடிவுகட்டும் தேர்தல் 2026 தேர்தல்.
இப்போது எங்கு பார்த்தாலும் பள்ளி, கல்லூரிக்கு அருகில் கஞ்சா விற்பனை நடக்கிறது. போதைப் பொருளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று நான் சொன்னபோது கேட்காமல், இப்போது பேசுகிறார். மாணவர்களே, இளைஞர்களே போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று இப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். எல்லோரும் சீரழிந்தபிறகு சொல்லி என்ன பயன்?. மக்களுக்காக உழைத்த தலைவர்கள் அ.தி.மு.க. தலைவர்கள். தன்னுடைய வீட்டுக்கு உழைக்கும் தலைவர்கள் கருணாநிதி, ஸ்டாலின்.
அண்மையில் கரூரில் நடந்த சம்பவம் நெஞ்சைப் பதற வைக்கிறது, ஒரு நபர் கமிஷன் போட்டிருப்பதால் ஆழமாகப் போகாமல் மேலோட்டமாகப் பேசுறேன். துணை முதல்வர் வெளிநாடு சுற்றுப்பயணம் போனார். செப்டம்பர் 27 துயர சம்பவத்தில் 41 பேர் இறந்ததாக தகவல் தெரிவித்தனர், உடனே தனி விமானத்தில் திருச்சி வந்தார். அங்கிருந்து நேரடியாக மருத்துவமனைக்கு சென்று பார்த்து அஞ்சலி செலுத்திவிட்டு மீண்டும் சுற்றுலா போய்விட்டார்.
என்னங்க அநியாயம் இது? 41 பேர் இறந்துள்ளனர். இப்போது மக்கள் துயரத்தில் பங்கெடுப்பவரே உண்மையான துணை முதல்வர். இப்படிப்பட்டவர்கள் ஆட்சி செய்தால் இப்படித்தான் இருக்கும். யார் எக்கேடு கெட்டுப்போனால் என்ன என்றுதான் அவர் நினைக்கிறார். உண்மையிலேயே அக்கறை இருந்தால் இங்கிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் அளவுக்கு திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் அழகு. அதெல்லாம் கருணாநிதி குடும்பத்தினருக்கு வராது. மக்களைப் பற்றி கவலைப்படாத கட்சி அரசு என்பது இப்போது நிரூபணமாகிவிட்டது.
ஒரு பொதுக்கூட்டம் என்றால் மக்கள் எப்படி வருவார்கள், எப்படி பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட வேண்டும். முழு கவனம் எடுத்து செயல்பட்டிருந்தால் இந்த உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம். ஏற்கனவே அவர்கள் 4 கூட்டம் நடத்தினார்கள், அவற்றிலும் பாதுகாப்பில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகிற போது அவர்களைக் காப்பது நம் கடமையாக இருக்க வேண்டும்.
நடுநிலையோடு சொல்கிறேன். அ.தி.மு.க. பொன்விழா கண்ட கட்சி, எம்.ஜி.ஆர். வருகிறார் என்றால் ஒருநாள் முன்பே மக்கள் காத்துக் கிடப்பார்கள். அப்படி இருக்கும் காலத்தில்கூட எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை, அம்மா பல கூட்டம் போட்டார்கள். லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். அப்போதும் எதுவும் நடக்கவில்லை.
53 ஆண்டு காலம் பல மாநாடு, பல கூட்டம், பல ஆர்ப்பாட்டம் நடத்தினோம். எந்த சம்பவமும் நடைபெறவில்லை. அ.தி.மு.க. மட்டுமல்ல தி.மு.க. உட்பட எல்லா கட்சிகளுக்கும் முழமையாக பாதுகாப்பு கொடுத்தது அ.தி.மு.க. அரசு. எந்தக் கட்சி கூட்டம் நடத்தினாலும் முழு பாதுகாப்பு கொடுத்ததால் இதுபோல எந்த சம்பவமும் நடக்கவில்லை.
அ.தி.மு.க. ஆட்சியில், கேட்கப்பட்ட அத்தனை கூட்டங்களுக்கும் அனுமதி கொடுத்தோம், எதையும் நிறுத்தவில்லை. ஏனெனில் எதையும் சந்திக்கும் தெம்பு, திராணி அ.தி.மு.க.வுக்கு இருந்தது. இன்றைய முதல்வருக்கு தெம்பு, திராணி இல்லை பொம்மை முதல்வர். தி.மு.க. ஆட்சியில் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கொடுப்பதில்லை, நீதிமன்றம் போய் அனுமதி வாங்கி கூட்டம் நடத்தும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. அப்படியே நீதிமன்றம் அனுமதி கொடுத்தாலும் இந்த அரசு பாதுகாப்பு கொடுக்க மறுக்கிறது அதனால் 41 உயிர்களை இழந்திருக்கிறோம்.
நான் ஜூலை 7-ம் தேதி எழுச்சி பயணம் தொடங்கினேன் பாப்பிரெட்டிப்பட்டி 165-வது தொகுதி. நான்கைந்து தொகுதிகளில்தான் காவல்துறை பாதுகாப்பு கொடுத்தது, மீதி இடங்களில் எல்லாம் அ.தி.மு.க. தொண்டர்களின் பாதுகாப்பில்தான் நடத்தினோம். இப்போதுதான் காவல்துறை வந்திருக்கிறது. இப்படி ஒரு சம்பவம் நடந்து முடிந்து 41 உயிர்கள் பறிபோன பிறகுதான் பாதுகாப்பு கொடுத்துள்ளனர். மக்களை பாதுகாக்க வேண்டியது தான் முதல்வரின் கடமை. அவரிடம் தான் காவல்துறை உள்ளது. தேர்தல் நேரத்தில் கருத்துகளைச் சொல்லி மோதிக்கொள்ளலாம். ஆனால், ஆட்சி அமைந்தபிறகு மக்களை கண்ணை இமை காப்பதுபோல காக்க வேண்டும். அப்படி அ.தி.மு.க. ஆட்சியில் பார்க்கப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் மாற்றாந்தாய் மக்கள் போல பார்ப்பது சரியல்ல, இனியாவது அரசு உணர்ந்து ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என்றில்லாமல் நடுநிலையோடு பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்காக குடிமராமத்து திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்மூலம் ஏரி, குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர் தேக்கப்பட்டது. அதிலிருந்து கிடைத்த வண்டல் மண் விவசாயத்துக்குப் பயன்பட்டது. ஒருபக்கம் ஏரிகள் ஆழமாகின, இன்னொருபக்கம் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 14 ஆயிரம் ஏரிகள் உள்ளன், அவற்றில் 6 ஆயிரம் கண்மாய்கள் 1240 கோடி செலவில் தூர் வாரினோம். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் பொதுப்பணித் துறையில் எஞ்சிய 8 ஆயிரம் ஏரிகள் தூர் வாரப்படும். விவசாயிகள் எந்நேரமும் மோட்டாரை பயன்படுத்த ஏதுவாக மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் கொடுத்தோம். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ஒரே அ.தி.மு.க. ஆட்சியில் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டது. புயல், வெள்ளம், வறட்சி உள்ளிட்ட பேரிடரின்போது பயிர்க்காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் இணைக்கப்பட்டு அதன்மூலம் அவர்களுக்கு இழப்பீடு பெற்றுக்கொடுத்தோம்.
விவசாய தொழிலாளிகளுக்கு பசுமை வீடுகள், ஆடுகள், கறவை மாடுகள், கோழிகள் கொடுத்தோம். உழவர் பாதுகாப்பு திட்டம் கொடுத்தோம். முதியோர் உதவி திட்டம் மூலம் லட்சக்கணக்கான முதியோருக்கு மாத உதவித்தொகை 1000 ரூபாய் கொடுத்தோம். ஒரே சட்டமன்ற விதி 110ன் கீழ் 5 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பைக் கொடுத்து, 90 சதவீதம் பேருக்குக் கொடுத்தோம்.
கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விஞ்ஞான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மா எண்ணத்தில் உதித்தது அற்புதமான லேப்டாப் வழங்கும் திட்டம். அ.தி.மு.க. ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் 7300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 52 லட்சத்து 35 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் கொடுக்கப்பட்டது. அதையும் திராவிட மாடல் அரசு நிறுத்திவிட்டது. தி.மு.க. அரசால் நிறுத்தப்பட்ட இத்திட்டம் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அமல்படுத்தப்படும்.
பொருளாதாரச் சூழலால் ஏழைப் பெண்களின் திருமணம் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக திருமண உதவித் திட்டம் 25 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். தாலிக்குத் தங்கம் திட்டம் மூலம் ஒரு பவுன் தங்கம் கொடுத்தோம். இன்று 87 ஆயிரம் ரூபாய் ஒரு பவுன். அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகளில் 12 லட்சம் பேருக்குக் கொடுத்தோம். இதனை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் இத்திட்டம் தொடரும். அதோடு மணப்பெண்ணுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டுவேட்டி கொடுக்கப்படும்.
ஏழை, விவசாயத் தொழிலாளி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும்.
இந்தப் பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை ஈச்சம்பாடி அணையில் இருந்து நீரேற்றம் திட்டத்தின் மூலமாக இங்கிருக்கும் 66 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டம் கேட்டு என்னிடத்தில் கே.பி.அன்பழகன் அமைச்சராக இருந்தபோது கோரிக்கை வைத்தார். அதை ஏற்று அதை ஆய்வுசெய்வதற்கு 10 லட்சம் ஒதுக்கி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது, மீண்டும் அ.தி.மு.க. அரசு அமைந்ததும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
நாட்டில் பணம், நகை திருடுவார்கள். ஆனால், தி.மு.க. ஆட்சியில் கிட்னி திருடுகிறார்கள். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட கேவலமான நிலை கிடையாது. தி.மு.க. எம்.எல்.ஏ மருத்துவமனையில் வறுமையில் வாடும் ஏழைகளை தேடிப்பிடித்து அவர்களுடைய கிட்னியை முறைகேடாக எடுத்து பல லட்சத்துக்கு விற்பனை செய்வதாக புகார் தெரிவிக்கப்பட்டது. தி.மு.க. அரசாங்கமே குழு அமைத்து ஆய்வு செய்து உண்மை என்பதை கண்டறிந்து, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அனுமதியை மட்டும் ரத்துசெய்தனர். இதில், யாரையும் கைது செய்யவில்லை.
கொடுமையிலும் கொடுமை வறுமை. அந்த வறுமையைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கும் அரசு தொடர வேண்டுமா? நாமக்கல் பள்ளிப்பாளையத்தில் ஒரு பெண்ணுக்கு ஆசை காட்டி கிட்னிக்குப் பதிலாக கல்லீரல் எடுத்துவிட்டனர். இப்படிப்பட்ட கொடுமையான அரசு தி.மு.க. அரசு. நான் அடிக்கடி சொல்வது போல் பொம்மை முதல்வர் நாட்டை ஆள்வதால் மக்களுக்குத் துன்பமே கிடைக்கிறது.
இந்த அரசால் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்துள்ளது? விலைவாசி உயர்ந்துபோச்சு, சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது, சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. தினந்தோறும் கொலை நிலவரம் வருகிறது.
அ.தி.மு.க. உங்களுடைய அரசு. இது விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. நானும் விவசாயி. எனக்கு வேறு எந்த தொழிலும் இல்லை, அதனால்தான் தி.மு.க. அரசால் என்மீது எந்த வழக்கும் போட முடியவில்லை. என்னென்னமோ தோண்டிப் பார்த்தார், ஒன்றும் நடக்கவில்லை. விவசாயத்தில் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியாது, மண்ணைத்தான் அள்ளிச்செல்ல முடியும்.
உங்களோடு பேசும் வாய்ப்பை இறைவன் கொடுத்த வரமாகக் கருதுறேன்.
இது மண்வெட்டி பிடித்த கை. சிறு வயதில் இருந்தே என்னுடைய அப்பா விவசாயத்தில் என்னை ஈடுபடுத்தினார். விவசாயம் தெரிந்தால்தான் தொழிலாளிக்கு சொல்லிக்கொடுக்க முடியும். நெற்பயிர் எப்படி நடவேண்டும், மஞ்சள், வாழை தென்னை, பாக்கு எல்லாமே என் தோட்டத்தில் இருக்கிறது. நீங்கள் எல்லாம் தண்ணீர் வேண்டும் என்று கேட்கிறீர்கள், அ.தி.மு.க. ஆட்சி வந்த பிறகு நீங்கள் என்ன கேட்டாலும் கிடைக்கும்.
கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கினோம். ஏழை மக்கள் நோய்வாய்ப்பட்டால் அங்கு சென்று சிகிச்சை எடுக்கலாம். அதில் ஒரு எம்பிபிஎஸ் மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் பணியில் அமர்த்தி, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தோம். தி.மு.க. அரசு ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் காழ்ப்புணர்ச்சி பார்த்து கிளினிக்கை மூடிவிட்டது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் 4000 அம்மா மினி கிளினிக் திறக்கப்படும். இப்படி ஏதாவது திட்டம் தி.மு.க. கொண்டுவந்திருக்கிறதா?
இந்தத் தொகுதியில் பத்தல் மலைக்கு தார்ச்சாலை, ஆரம்ப சுகாதர நிலையம் அமைத்தோம், அடுக்குமாடி குடியிருப்பு கட்டினோம், கால்நடை மருத்துவமனை திறந்தோம். அ.தி.மு.க. ஆட்சியில் கடத்தூர் புதிய ஒன்றியம் அமைத்து புதிய கட்டிடம் கட்டினோம். இவற்றுக்கெல்லாம் தி.மு.க. ஆட்சியில் ரிப்பன் வெட்டி திறந்தனர். வேப்பாடு ஆற்றின் குறுக்கே தடுப்பணை கேட்டுள்ளீர்கள், கட்டிக் கொடுக்கப்படும், இத்தொகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்படும், வட்டாட்சியர் அலுவலகம் பரிசீலிக்கப்படும். 2026 தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.
இங்கே கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வீட்டுக்குப் போகும்போது வாகனத்தில் பத்திரமாகப் போய்ச் சேர வேண்டும். மக்களே, உயிர் முக்கியம். இரவு நேரம் வாகன ஓட்டிகள் பத்திரமாக வீடு போய் சேரவேண்டும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பை பை ஸ்டாலின் என தெரிவித்தார்.
- மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 129 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
கொழும்பு:
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 38.3 ஓவரில் 129 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வங்கதேசம் சார்பில் ஷோமா அக்தர் 3 விக்கெட்டும், மரூபா அக்தர், நஹிதா அக்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து 130 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ரூபியா ஹெய்டர் அரை சதம் கடந்து 54 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், வங்கதேசம் அணி 31.3 ஓவரில் 131 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
- தமிழ்நாட்டின் அத்தனை சுயமரியாதைக் குடும்பங்கள் சங்கமமாகும் மாநாடாகட்டும் – மறைமலைநகர் மாநாடு.
- ஒளிரட்டும் – ''பெரியார் உலகமயம் – உலகம் பெரியார் மயம்'' என்பதை நம் எதிரிகளுக்கு– அவர்களுடன் உதிரிகளுக்கும் உணர்த்திட வாருங்கள்! வாருங்கள்!!
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாளை மறுநாள் (4.10.2025) மறைமலைநகரில் (செங்கற்பட்டு) மிகப் பெரும் திரள் மாநாடாக நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு – நமக்கு சுயமரியாதை, பகுத்தறிவு, மனுதர்மம் ஒழித்த சமதர்ம சிந்தனை பரவிடவும், சீர்மிகு பிற மாநிலங்களும், உலகமும் வியந்து பாராட்டும் – சமூகநீதித்துறையில் சரித்திரம் காணா சாதனை புரியும் 'திராவிட மாடல்' ஆட்சி மீண்டும் அரியாசனத்தில் அமர்ந்தால்தான் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வதிந்த ஒடுக்கப்பட்ட மக்களான நமது மக்கள் சரியாசனம் பெற முடியும் என்பதற்குமான விழிப்புணர்வை வற்புறுத்த மாநாடு!
நம் விழி திறந்த வித்தகர், புதிய வழிகாட்டி, மானத்தையும், அறிவையும் நம்முள் விதைத்து, மனுதர்மத் தாழ்ந்த தமிழ்நாட்டை மட்டும் அல்ல; வீழ்ந்த மக்கள் உலகின் எம்மூலையில் இருப்பினும் அவர்களுக்கான எழுச்சியைப் பெற வைக்கும் ஒரு சமூகப் புரட்சியாளர் அறிவாசான் தந்தை பெரியார் – ஒரு நூற்றாண்டுக்கு முன் தொடங்கி, ஒப்பிட முடியாத சாதனை புரிந்து – தொடர்ந்த எதிர் நீச்சல்களிலும் அடித்தளம் எழுப்பிய மகத்தான மாளிகைக் கட்டுமானமே சுயமரியாதை இயக்கம்!
1929இல் முதல் சுயமரியாதை மாகாண மாநாடு நடந்த அதே மண்ணில்.... சுயமரியாதை, பகுத்தறிவு, சமத்துவம், பெண்ணுரிமை மலர்ந்து, ஜாதி ஒழிந்த ஒரு சமுதாயத்தைப் படைத்திட, அதே மண்ணில் (செங்கற்பட்டு) – சென்னை மாகாண சுயமரியாதை இயக்க முதல் மாநாட்டினை 1929இல் நடத்திய தந்தை பெரியார் புதியதோர் புரட்சியுகத்தின் பிரகடனங்களை வெளியிட்டார்.
நீதிக்கட்சித் தொடங்கிய 1920இல் இருந்து – 2025இல் அது 'திராவிட மாடலாக', அய்யா பெரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆட்சியாக, மானமிகு சுயமரி யாதைக்காரரான கலைஞர் தம் ஆட்சியில் நடத்திக் காட்டி வென்ற சமத்துவக் கொள்கைப் பயணத்தோடு தொடர்கின்றது.
திக்கெட்டும் பாராட்டும் திராவிட நாயகன் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 'திராவிட மாடல்' ஆட்சி – அது ஒரு முழு உருபெருக் கொள்வதை மக்கள் மகிழ்ந்து – உலகம் பாராட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாத திராவிடக் கொள்கை எதிரிகள் இவ்வாட்சியை எதிர்க்க, அழிக்க வரும் 2026ஆம் ஆண்டுத் தேர்தலையொட்டி கூலிப்படைகளை, 'குத்தகைப் படைகளையும்', சினிமா கவர்ச்சியாளர்களையும் மட்டுமே நம்பி, பல ஏமாற்று உத்திகளோடு வருகின்றனர். அவர்களை அடையாளம் கண்டு எச்சரித்து, நம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவிருக்கும் மாநாடே – மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு!
ஒப்பற்ற நம் முதலமைச்சர், பழிக் குற்றச்சாட்டுகளை தூசிகள் எனத் தட்டி விட்டு கம்பீர நடையுடன் நம்முடன் வரவிருக்கின்றார்! நன்றியுள்ள அனைவரும் அவரை வரவேற்க வர வேண்டாமா?
நமது முதலமைச்சர் கோடானு கோடி மக்களது, இதயச் சிம்மாசனத்தில் அவர் அன்பு, அறம், ஆளுமைகளில் நிலைத்திருப்பவர். வெற்று விளம்பரச் சரக்கல்ல; மாறாக நாளும் சரித்திரம் படைக்கும் தன்மானப் பெருந் தலைவர்.
''தலைகுனிய விட மாட்டோம் தமிழ்நாட்டை'' என்று சூளுரைத்து – சூடு போட்டு வரும் செயல் வடிவ திராவிடச் சிற்பி அல்லவா?
பழிதூற்றல், தகுதியற்றவர்கள் தலை கொழுத்துக் கூறுகின்ற அவதூறு தூசுகளைத் தட்டி – இடையறாத் தொண்டாற்றும் தொண்டறத்தை வரவேற்க வர வேண்டாமா?
வாருங்கள் தோழர்காள் அனைவரும்! கைகோர்த்து நின்று – போராதரவு தந்து – பெரிய திருப்பத்தை ஏற்படுத்துவோம்!
''அடாது மழை என்றாலும் விடாது நடக்கும் எம் நிகழ்ச்சி'' என்பதற்கேற்ப சரியான ஏற்பாடுகள் தயார்!
பருவம் பார்த்து உழைப்பதற்கு என்றும் தயங்காதவர்களல்லவா நாம்! உலகம் பெரியார் மயம், பெரியார் உலகமயம்!
தமிழ்நாட்டின் அத்தனை சுயமரியாதைக் குடும்பங்கள் சங்கமமாகும் மாநாடாகட்டும் – மறைமலைநகர் மாநாடு.
ஒளிரட்டும் – ''பெரியார் உலகமயம் – உலகம் பெரியார் மயம்'' என்பதை நம் எதிரிகளுக்கு– அவர்களுடன் உதிரிகளுக்கும் உணர்த்திட வாருங்கள்! வாருங்கள்!!" என்று அழைப்பு விடுத்துள்ளார்.
- நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் அப்படி கொடுக்காமல் போனால் அது அமெரிக்காவுக்கே அவமானம் என்றும் டிரம்ப் அண்மையில் தெரிவித்தார்.
- உலக சமூகம் அனுப்பிய உணவுப் பொருட்களை தடுக்கும் இஸ்ரேலின் கொடூரமான செயலுக்கு எதிராக கண்டனம் முழங்குவோம்.
இந்தியா பாகிஸ்தான் போர் உட்பட 7 போர்களை நிறுத்தினேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் செல்லும் இடமெல்லாம் பேசி வருகிறார். எனவே தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் அப்படி கொடுக்காமல் போனால் அது அமெரிக்காவுக்கே அவமானம் என்றும் டிரம்ப் அண்மையில் தெரிவித்தார்.
இதற்கிடையே காசாவிற்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் சென்ற குளோபல் சீ ஃப்ளோட்டிலா (ஜிஎஸ்எஃப்) கப்பல்களை இஸ்ரேலிய கடற்படை தடுத்து நிறுத்தி கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்ட செயல்பாட்டாளர்களை சிறைபிடித்துள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பான இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், "காசாவில் பசி, பட்டினியால் வாடும் மக்களுக்கு உலக சமூகம் அனுப்பிய உணவுப் பொருட்களை தடுக்கும் இஸ்ரேலின் கொடூரமான செயலுக்கு எதிராக கண்டனம் முழங்குவோம்.
உலக சமாதானத்திற்கான நோபல் பரிசு தனக்கு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து பிதற்றி வரும் டிரம்ப் இஸ்ரேல் அரசின் இந்த அநியாயத்தை பார்த்து வாயை மூடிக்கொண்டு இருப்பதேன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி ஆசிய கோப்பை வென்றது.
- இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் அமைச்சரின் கையால் கோப்பையை வாங்க மறுத்துவிட்டனர்.
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கவுன்சில் தலைவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது. இதனால் கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்திய அணிக்கு கொடுக்கப்படவில்லை.
இந்த விவகாரம் குறித்து பேசிய நக்வி, "ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக, கோப்பையை இந்தியாவிடம் தர தயாராகவே உள்ளேன். கோப்பையை பெற BCCI ஆர்வமாக இருந்தால் ACC அலுவலகத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளவும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் கைகுலுக்க மாட்டோம் என்று அறிவித்த இந்திய அணி வீரர்கள், அதன் தொடர்ச்சியாக பாகிஸ்தான் அமைச்சரின் கையால் கோப்பையை வாங்க மறுத்துவிட்டனர்.
ஆசிய கோப்பையை பாகிஸ்தான் அமைச்சர் கையால் வாங்க மறுத்த, இந்திய வீரர்களின் செயலை சுட்டிக்காட்டி தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் கடுமையாக விமர்சித்தார்.
இதுகுறித்து பேசி டிவில்லியர்ஸ் தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "கோப்பையை யார் வழங்குகிறார்கள் என்பது இந்திய அணிக்கு நெருடலாக உள்ளது. விளையாட்டை விளையாட்டாக மட்டும் தான் பார்க்கவேண்டும். விளையாட்டு என்பது அனைவருக்குமானது, அத்துடன் அரசியலை இணைப்பது மிகவும் ஆபத்தானது
இந்திய அணி வீரர்களின் செயல் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால் எதிர்காலத்தில் அவர்கள் விஷயங்களை சரிசெய்வார்கள் என்று நம்புகிறேன். இது விளையாட்டிற்கு , விளையாட்டு வீரர்களுக்கும் மிகவும் கடினமான சூழ்நிலையை உருவாக்குகிறது. அதை நான் பார்க்க விரும்பவில்லை. இறுதியில் அது மிகவும் மோசமாக இருந்தது" என்று தெரிவித்தார்.
- மத்திய அரசு நிதி கொடுத்தால் தான் மாணவர் சேர்க்கை நடத்துவோம் என்று கூறுவதற்கு தமிழக அரசு ஒன்றும் மேஸ்திரி அல்ல...
- மாணவர் சேர்க்கையை தமிழக அரசு நிறுத்தி வைத்திருந்ததால் பள்ளியில் சேர வசதியில்லாத பல்லாயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகள் பள்ளியில் சேரவில்லை.
கல்வி பெறும் உரிமைச் சட்டப்படியான கட்டையாக கல்வி திட்டதில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியதைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கை நடைமுறை வரும் 6-ஆம் தேதி தொடங்கும் என்று தமிழ்நாடு அரசின் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பருவத்தே பயிர் செய்யத் தவறிய தமிழக அரசின் பொறுப்பற்ற செயலால் ஏழைகளிலும் ஏழைகளான மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
2009-ஆம் ஆண்டின் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25% இடங்கள் ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக்கப்படுகின்றன.
இந்தப் பிரிவில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கான கட்டணத்தை மத்திய, மாநில அரசுகளே செலுத்திவிடும் என்பதால் அக்குழந்தைகளுக்கு இலவசக் கல்வி கிடைக்கிறது.
இந்த இடங்களின் மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மே மாதம் மாணவர் சேர்க்கை நடைபெறும். மத்திய அரசு நிதி ஒதுக்காததைக் காரணம் காட்டி நடப்பாண்டில் இந்த மாணவர் சேர்க்கையை தமிழக அரசு நிறுத்தி வைத்திருந்ததால் பள்ளியில் சேர வசதியில்லாத பல்லாயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகள் பள்ளியில் சேரவில்லை.
இந்த நேரத்தில் மத்திய அரசு நிதி ஒதுக்கியதைத் தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அரசு அறிவித்திருக்கிறது. ஆனால், மாணவர் சேர்க்கைக்காக அரசு அறிவித்திருக்கும் விதிமுறைகள் அபத்தமாக உள்ளன. அதன்படி, இதுவரை பள்ளிகளில் சேராத எந்த மாணவரும் புதிதாக விண்ணப்பித்து தனியார் பள்ளிகளில் சேர முடியாது.
மாறாக, ஏற்கனவே சேர்ந்த மாணவர்களில் கல்வி பெறும் உரிமைச் சட்டப்படியான மாணவர் சேர்க்கைக்கு தகுதி பெற்றவர்கள் இருந்தால், அவர்கள் செலுத்தியக் கல்விக் கட்டணம் திருப்பித் தரப்படுமாம்.
அவர்களின் எண்ணிக்கையும் 25%க்கும் கூடுதலாக இருந்தால், முதல் 25 விழுக்காட்டினருக்கு மட்டும் தான் வழங்கப்படுமாம்; மற்றவர்களுக்கு வழங்கப்படாதாம். தமிழக அரசின் விதிகள் அநீதியானவை.
கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி கடந்த ஏப்ரல் மாதம் மாணவர் சேர்க்கைத் தொடங்காத நிலையில், அந்த சட்டத்தின்படி தங்கள் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கை இடங்களில் இலவசமாக சேரலாம் என காத்திருந்த மாணவர்களில் பெரும்பான்மையினர் எந்த பள்ளிகளிலும் சேரவில்லை.
மீதமுள்ள மாணவர்களும் தங்கள் பகுதிகளில் உள்ள சிறந்த பள்ளிகளில் சேர முடியாமல், குறைந்த கட்டணம் வசூலிக்கும் சாதாரண பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
இப்போது மாணவர் சேர்க்கை தொடங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு வகுத்திருக்கும் விதிகளின்படி இதுவரை பள்ளியில் சேராத மாணவர்களால் இனியும் சேர முடியாது; வேறு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களால் தங்களின் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாறவும் முடியாது. அப்படியானால், மாணவர் சேர்க்கையை இப்போது தொடங்கியும் பயனில்லை.
மத்திய அரசு நிதி ஒதுக்காவிட்டாலும், மாநில அரசு அதன் சொந்த நிதியில் கல்வி பெறும் உரிமைச் சட்ட மாணவர் சேர்க்கையை நடத்தி, நீதிமன்றத்தின் வாயிலாகவோ, அரசியல் அழுத்தத்தின் காரணமாகவோ மத்திய அரசிடம் நிதியை பெற்றிருக்க வேண்டும்.
மத்திய அரசு நிதி கொடுத்தால் தான் மாணவர் சேர்க்கை நடத்துவோம் என்று கூறுவதற்கு தமிழக அரசு ஒன்றும் மேஸ்திரி அல்ல... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. மக்களின் நலன்களை காக்கும் பொறுப்பு அதற்கு உள்ளது. அதை செய்யத் தவறியதால் பல்லாயிரம் மாணவர்கள் நடப்பாண்டில் பள்ளிகளில் சேர முடியவில்லை. அவர்களின் கல்விக்கு விளம்பர மாடல் அரசு என்ன செய்யப் போகிறது?
நடப்புக் கல்வியாண்டில் இதுவரை எந்தப் பள்ளிகளிலும் சேராத, கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி பயனடைய தகுதி கொள்ள குழந்தைகளை அவர்கள் விரும்பும் பள்ளிகளில் சேர அனுமதிக்க வேண்டும்.
அதேபோல், ஏற்கனவே பணம் கட்டி சேர்ந்த குழந்தைகளுக்கு கட்டணத்தைத் திருப்பி தருவதுடன், அவர்களின் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள அவர்கள் விரும்பும் பள்ளிகளில் சேர வகை செய்ய வேண்டும். அதற்கேற்ற வகையில் நடப்பாண்டிற்கான விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.
- விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்
- தர்மபுரி நகராட்சி அலுவலகம் அருகில் இபிஎஸ் மக்களிடையே உரையாற்றினார்.
கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இன்று தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதலில் தர்மபுரி நகராட்சி அலுவலகம் அருகில் கூடியிருந்த பெருந்திரளான மக்களிடையே எழுச்சியுரை நிகழ்த்தினார்.
"செப்டம்பர் 27ம் தேதி கரூரில் தவெக கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிர் இழந்திருக்கிறார்கள். அவர்களுக்காக 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்" என்றதும் அனைவரும் அமைதி காத்து மவுன அஞ்சலி செலுத்தினர்.
- நேற்று ஆயுத பூஜை, இன்று விஜயதசமி பண்டிகையை ஒட்டி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- அக்டோபர் 25ஆம் தேதியை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் அனைத்திற்கும் நாளை (அக்டோபர் 03) அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஆயுத பூஜை, இன்று விஜயதசமி பண்டிகையை ஒட்டி விடுமுறை என்பதால் நாளையும் புதுச்சேரியில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக அக்டோபர் 25ஆம் தேதியை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த 2019 இல் லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தி இந்திய வீரர்கள் 20 பேரை கொன்றனர்.
- பிரதமர் மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங்கை நேரில் சென்று சந்தித்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 இல் லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தி இந்திய வீரர்கள் 20 பேரை கொன்றனர். இதனால் இரு நாடுகளிடையே விரிசல் வலுப்பெற்றது.
எல்லை பிரச்சனைகள் மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
சமீபத்தில் சீனாவில் நடந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சேவை அக்டோபர் 26 முதல் தொடங்கும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாகக் கூறி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு 50% கூடுதல் வரி விதித்த பிறகு இந்தியா-சீனா உறவு வலுப்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.
- நடிகர் விஜய் அவர்களைக் காணவந்த பொதுமக்களில் 41பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைந்துள்ளனர்.
- உண்மைக்கு மாறான ஒரு கட்டுக்கதையை விஜய்யின் ஆதரவாளர்கள் சிலர் பரப்பத் தொடங்கினர்.
கரூர் உயிரிழப்புகள் தொடர்பாக கலை இலக்கியவாதிகள், சமூகச்செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு 7.20 மணியளவில் கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய "சாலையில் காட்சிதரும் - ரோடு ஷோ" நிகழ்வில் அதன் தலைவர் நடிகர் விஜய் அவர்களைக் காணவந்த பொதுமக்களில் 41பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைந்துள்ளனர். இதனால் ஆற்றொணா துயரத்திலும் கடும் மனவுளைச்சலிலும் தமிழக மக்கள் தவித்து வரும் இவ்வேளையில், தவறான தகவல்களைப் பரப்பி இந்த மரணங்கள் உதாசீனப்படுத்தப்படுவதைக் காணச்சகியாமல் நாங்கள் இந்தக் கூட்டறிக்கையினை வெளியிடுகின்றாம்.
விஜய் அரசியல் கட்சி துவங்கியதிலோ தனது கட்சியினரை அவர் சந்திப்பதிலோ எவருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. நாட்டின் குடிமக்கள் எவரொருக்குமானது போலவே அது அவருக்குரிய சனநாயக உரிமை. ஆனால் அவர் தனது கட்சியினரையும் ரசிகர்களையும் சந்திக்கத் தெரிவுசெய்துள்ள முறை, இந்த நாட்டின் அரசியல் முதிர்ச்சிக்கும் பொதுவாழ்க்கைக்கும் தனிமனித கண்ணியத்திற்கும் உகந்ததல்ல என்பதுடன், அதுவே இந்தப் பேரழிவுக்கும் இட்டுச்சென்றுள்ளது எனவும் சுட்டிக்காட்டுகிறோம்.
கரூருக்கும் முன்னதாக விக்கிரவாண்டி, மதுரை, திருச்சி, அரியலூர், நாகை ஆகிய இடங்களில் விஜய்யின் கூட்டங்கள் இந்தப் பேரழிவுக்கான முன்னோட்டம் போலவே நடந்திருக்கின்றன. போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்காமலும் பொதுமக்களுக்கு அச்சமூட்டும் வகையிலும் வாகனங்களில் பயணம் செய்தது, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியது மற்றும் மின் கம்பங்கள், மரங்கள், அருகமைக் கட்டிடங்கள் ஆகியவற்றில் ஏறி சேதப்படுத்தியது என அவரது கட்சியினர் பொறுப்புணர்வின்றியும் கட்டுப்பாடற்றும் சுயஒழுங்கின்றியும் நடந்துகொண்டனர். அவர்களில் பெரும்பாலோர் முப்பது வயதுக்குட்பட்டவர்கள், புதிதாக அரசியல் ஆர்வம் கொண்டவர்கள், விஜய்யின் சொல்லுக்கு கட்டுப்படக்கூடியவர்கள். அத்துமீறல்களுக்காக அவர்களைக் கண்டித்து, நல்வழிப்படுத்த அவர் அறிவுறுத்தியிருக்க வேண்டும். ஆனால் விஜய் அப்படியான முயற்சியெதையும் மேற்கொள்ளாமலும் அவர்களது அத்துமீறல்களை ரசிப்பவராகவும், அவர்கள் அவ்வாறு இருப்பதுதான் தனது பலமென்று கருதியும் அவற்றை இயல்பானதாக்க முயற்சித்தன் விளைவே இந்த அநியாய மரணங்கள்.
விஜய், அறிவித்திருந்த நேர அளவுக்குள் கரூருக்கு வராமல் தன்னைக் காண்பதற்காக திரண்டிருந்தவர்களை 7 மணிநேரத்திற்கும் மேலாக காக்கவைத்ததும், அங்கு குடிநீர், உணவு, கழிவறை உள்ளிட்ட அடிப்படைத்தேவைகள் போதுமானதாக இல்லாதிருந்ததும், கூட்டத்திற்குள் வந்த பிறகும் முகம் காட்டாமல் மக்களை தன் வண்டிக்குப் பின்னேயே அலையவிட்டதும்தான் உயிரிழப்புக்குக் காரணம் என்பதை காணொளிச்சான்றுகள் காட்டுகின்றன. ஆனால் இந்த உயிரிழப்புகளுக்குப் பின்னே "திட்டமிட்ட சதி" இருப்பதாகவும் விஜய் மீது எந்தத் தவறுமில்லையெனவும் உண்மைக்கு மாறான ஒரு கட்டுக்கதையை விஜய்யின் ஆதரவாளர்கள் சிலர் பரப்பத் தொடங்கினர். மணிப்பூர் உள்ளிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்கள், மோதல்கள், கலவரங்கள், ஒடுக்குமுறைகள் பற்றி விசாரிக்கப் போயிராத தேசிய ஜனநாயகக் கூட்டணி, கரூர் மரணங்கள் பற்றி ஆராய தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றை அனுப்பியுள்ளதும் அந்தக் குழுவினர் "சதி" கட்டுக்கதையை வலுப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்து வருவதும் ஏற்கத்தக்கதல்ல.
தன் கண்முன்னேயே விபரீதம் நடப்பதைப் பார்த்தப் பிறகும் அதில் கவனம் செலுத்தி நிலைமையைச் சீராக்காமல் அங்கிருந்து வெளியேறிப் போய் இரண்டுநாட்கள் அமைதிகாத்த விஜய், இந்தக் கட்டுக்கதை கொடுத்த தைரியத்தில் 30.9.2025 அன்று ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். தன்னால்தான் இந்தச் சாவுகள் நிகழ்ந்தன என்பது பற்றிய குற்றவுணர்ச்சியோ வருத்தமோ தார்மீகப் பொறுப்பேற்போ இல்லாத அவரது காணொளி விளக்கத்தில் அரசின் மீது பழிசுமத்திவிட்டு தப்பித்துவிடும் உள்நோக்கமே துருத்திக் கொண்டுள்ளது.
கலையும் இலக்கியமும் சமூகத்தை மேம்படுத்துவதாக, விடுதலை உணர்வைத் தருவதாக, அடிமைச்சிந்தனைக்கு எதிராக தன்மதிப்புணர்வைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். ஆனால் விஜய்யின் அணுகுமுறை நேர்மைத்தன்மையற்றதாகவும், தனது ரசிகர்களை வேண்டுமென்றே தவறாக வழிநடத்துவதாகவும் உள்ளது. உழைப்பும், பொது சிந்தனையும், சமூக அக்கறையுமற்ற வழியில் அதிகாரத்தைப் பெறும் முனைப்பு மேலோங்கியுள்ளது. இழைத்துவிட்ட குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக, இதுவரை தனது கொள்கை எதிரி என்று குறிப்பிட்டு வந்த வலதுசாரிகளை அண்டி நிற்கவும் தயாராகிவிட்டார் என்பதை அவரது அடுத்தடுத்த நகர்வுகள் உணர்த்துகின்றன.
எவ்வளவு கொடிய தீங்கினையும் இழைத்துவிட்டு வதந்திகளையும் கட்டுக்கதைகளையும் களமிறக்கி தப்பித்துவிட முடியும் என்கிற விஜய்யின் கெடுநோக்கம் தடுக்கப்பட வேண்டும். ரசிக மனப்பான்மையில் அவரது பின்னே திரண்டுள்ள சிறார்களையும் இளைஞர்களையும் மீட்டெடுத்து சமூகப் பொறுப்புணர்வும் தன்மதிப்பும் உள்ளவர்களாக, தமது உள்ளாற்றல்கள் மூலம் வியத்தகு சாதனை புரிபவர்களாக வளர்த்தெடுப்பதில் கலை இலக்கியவாதிகளுக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளதென உணர்கிறோம்.
விஜய்யின் முந்தைய நிகழ்வுகள், விளைவுகள் குறித்த மதிப்பீட்டின் அடிப்படையில் கரூரில் மேற்கொண்டிருக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் தமிழ்நாடு அரசு கண்டறிய வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற அவலங்கள் உருவாகாமல் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வழிவகைகள் கண்டறியப்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்ய, கரூர் உயிரிழப்புகளுக்கு காரணமான விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நேர்நிறுத்த தமிழ்நாடு அரசு தயங்கக்கூடாதென வலியுறுத்துகிறோம். மேலும், கரூர் நிகழ்வைக் காரணம் காட்டி சமூக, சனநாயக, பண்பாடு மற்றும் அரசியல் இயக்கங்களின் கருத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை, சங்கம் சேரும் உரிமை, போராடும் உரிமை ஆகியவற்றை தீர்மானிக்கும் அதிகாரத்தை காவல்துறையிடம் ஒப்படைத்துவிடக் கூடாது. அரசமைப்பு உரிமைகளான அவற்றைக் காப்பாற்றுவதில் தனக்குள்ள பொறுப்பினை தமிழ்நாடு அரசு உறுதியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.






