என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆசிய கோப்பை விவகாரம்: இந்திய அணியை கடுமையாக விமர்சித்த ஏபி டிவில்லியர்ஸ்
    X

    ஆசிய கோப்பை விவகாரம்: இந்திய அணியை கடுமையாக விமர்சித்த ஏபி டிவில்லியர்ஸ்

    • பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி ஆசிய கோப்பை வென்றது.
    • இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் அமைச்சரின் கையால் கோப்பையை வாங்க மறுத்துவிட்டனர்.

    ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

    பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கவுன்சில் தலைவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது. இதனால் கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்திய அணிக்கு கொடுக்கப்படவில்லை.

    இந்த விவகாரம் குறித்து பேசிய நக்வி, "ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக, கோப்பையை இந்தியாவிடம் தர தயாராகவே உள்ளேன். கோப்பையை பெற BCCI ஆர்வமாக இருந்தால் ACC அலுவலகத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளவும்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் கைகுலுக்க மாட்டோம் என்று அறிவித்த இந்திய அணி வீரர்கள், அதன் தொடர்ச்சியாக பாகிஸ்தான் அமைச்சரின் கையால் கோப்பையை வாங்க மறுத்துவிட்டனர்.

    ஆசிய கோப்பையை பாகிஸ்தான் அமைச்சர் கையால் வாங்க மறுத்த, இந்திய வீரர்களின் செயலை சுட்டிக்காட்டி தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் கடுமையாக விமர்சித்தார்.

    இதுகுறித்து பேசி டிவில்லியர்ஸ் தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "கோப்பையை யார் வழங்குகிறார்கள் என்பது இந்திய அணிக்கு நெருடலாக உள்ளது. விளையாட்டை விளையாட்டாக மட்டும் தான் பார்க்கவேண்டும். விளையாட்டு என்பது அனைவருக்குமானது, அத்துடன் அரசியலை இணைப்பது மிகவும் ஆபத்தானது

    இந்திய அணி வீரர்களின் செயல் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால் எதிர்காலத்தில் அவர்கள் விஷயங்களை சரிசெய்வார்கள் என்று நம்புகிறேன். இது விளையாட்டிற்கு , விளையாட்டு வீரர்களுக்கும் மிகவும் கடினமான சூழ்நிலையை உருவாக்குகிறது. அதை நான் பார்க்க விரும்பவில்லை. இறுதியில் அது மிகவும் மோசமாக இருந்தது" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×