என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கரூர் சம்பவத்தில் விசாரணை நடக்கும் போது உயர் அதிகாரிகளை தி.மு.க. அரசு தவறாக வழி நடத்துவது ஏன்?- ஆர்.பி.உதயகுமார் கேள்வி
- முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவசர, அவசரமாக கருத்துக்களை தெரிவித்தார்.
- இன்றைக்கு ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டனர் என்பதற்கு அடையாளமாக தற்போது கள நிலவரம் உள்ளது.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-
கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு பின் உண்மை நிலையை மக்களிடத்தில் விளக்க வேண்டிய தார்மீக பொறுப்பில் இருந்து அரசு விலகிச் செல்கிறது என்கின்ற சந்தேகம், கவலையும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படும் வகையில் அரசின் கருத்துக்கள், அதிகாரிகளின் கருத்துக்கள் அமைந்துள்ளதை நாம் கவனமாக பார்க்க வேண்டிய நிலையில் உள்ளது.
கரூர் துயர சம்பவத்திற்கு ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து உள்ளோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆணையத்தின் அறிக்கையை அடிப்படையாக வைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறினார்.
அதன்பிறகு மின்வாரிய உயர் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர், கூடுதல் டிஜிபி ஆகியோர் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்து அரசு நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் கருத்துக்களை தெரிவித்தார்கள்.
இதற்கெல்லாம் மேலாக வருவாய் துறை செயலாளர், மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர், டி.ஜி.பி. அரசின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.
அதனை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு வீடியோ வெளியிட்டு இது தொடர்பாக கருத்துக்கள் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கும் தொனியில் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதோடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவசர, அவசரமாக கருத்துக்களை தெரிவித்தார்.
இதனை பார்க்கும் போது விசாரணை ஆணையத்தை அரசுக்கு வேண்டிய திசையிலே, அவர்கள் கருத்துக்கள் அடிப்படையில் வழி நடத்துகிறார்களோ என்ற நிலை தான் இன்றைக்கு வெட்ட வெளிச்சமாக அமைந்து வருகிறது.
பொதுவாக விசாரணை ஆணையம் அமைந்த பிறகு அது தொடர்பான வாதங்கள், வீடியோக்கள் அரசு அதிகாரிகள் வெளியிடுவது ஆணையத்தின் விசாரணையை கேள்விக்குறியாக்கும் வகையில், அமையும். விசாரணை நடக்கும் போது அது தொடர்பான அறிக்கை தொடர்ந்து வெளியாகி வருவது விசாரணை நடுநிலையோடு, நம்பகத் தன்மையோடு நடைபெறுமா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
திறமைமிக்க சேவையால் மக்களின் நம்பிக்கைத் தன்மையை பெற்றுள்ள அரசு உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகளை, திமுக அரசு தவறாக வழி நடத்துகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
இன்றைக்கு ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டனர் என்பதற்கு அடையாளமாக தற்போது கள நிலவரம் உள்ளது. ஆகவே அம்மா பேரவையின் சார்பில் நடைபெறும் 34 வது திண்ணைப் பிரசாரத்தில் மக்களிடத்தில் எடுத்து கூற வேண்டும். மீண்டும் 2026-ல் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி ஆகியோரின் ஆட்சி எடப்பாடியாரின் தலைமையில் மலரும்.
இவ்வாறு அவர் கூறினார்.






