என் மலர்tooltip icon

    இந்தியா

    • இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு
    • ஆஸி. கிரிக்கெட் அணி உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்தூருக்கு வந்த ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    கடந்த வியாழக்கிழமை கஃபேவுக்கு செல்ல வெளியே வந்தபோது, இரு ஆஸ்திரேலிய வீராங்கனைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளனர்.

    இதில் ஆஸி. கிரிக்கெட் அணி உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கை மற்றும் காலில் மாவுக்கட்டுடன் குற்றவாளியை போலீசார் அழைத்து வந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    இந்த விவகாரத்திற்கு பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா வருத்தம் தெரிவித்துள்ளார்.

    ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் குறித்து பேசிய மத்தியபிரதேச பாஜக அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா, "ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு இது ஒரு பாடம். கிரிக்கெட் வீரர்களுக்கு இங்கு மிகப்பெரிய மோகம் இருப்பதால், அவர்கள் பொதுவெளியில் வருவதற்கு முன்பு பாதுகாப்புப் பணியாளர்கள் அல்லது உள்ளூர் நிர்வாகத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்பதை இது வீரர்களுக்கு நினைவூட்டும் என்று நான் நினைக்கிறேன். சில நேரங்களில், வீரர்கள் தங்கள் பிரபலத்தை உணர மாட்டார்கள். அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவர்களைக் குறை கூறுகிறார் என பாஜக அமைச்சருக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    சில மாதங்களுக்கு முன்பு இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா, "பெண்கள் மெல்லிய ஆடைகளை அணிவதை தனக்குப் பிடிக்காது என்று கூறி மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கல்லூரி மாணவி ஒருதலைக் காதலை ஏற்க மறுத்தார்.
    • இதனால் அந்த மாணவி மீது திராவகம் வீசப்பட்டது.

    புதுடெல்லி:

    டெல்லி அசோக் விஹார் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரியில் சிறப்பு வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதனால் அவர் நேற்று காலை கல்லூரிக்குப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை நடுரோட்டில் வழிமறித்து நிறுத்தினர்.

    அப்போது அந்த மாணவி மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அங்கிருந்து அவர் விலகி செல்ல முயன்றார்.

    அப்போது நொடிப்பொழுதில் தான் மறைத்து வைத்திருந்த திராவகத்தை மோட்டார் சைக்கிளில் இருந்த வாலிபர் ஒருவர் அந்த இளம்பெண்ணின் முகத்தை நோக்கி வீசினார்.

    அப்போது தனது முகத்தை அந்த இளம்பெண் தனது கைகளால் மறைத்துக் கொண்டார். இதில் அவருடைய கைகள் வெந்து கருகின. இதனால் வலியில் அலறி துடித்த அந்த மாணவி சாலையில் சரிந்தார். அதற்குள் மோட்டார் சைக்கிளில் அந்த வாலிபர்கள் தப்பிச் சென்றனர்.

    படுகாயம் அடைந்த அந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

    முதல் கட்ட விசாரணையில் மாணவியுடன் அதே கல்லூரியில் படித்து வரும் ஜிதேந்தர் என்பவர்தான் திராவகத்தை வீசியது தெரிந்தது. ஜிதேந்தர் அந்த மாணவியை கடந்த 7 மாதமாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்தக் காதலை மாணவி ஏற்க மறுத்துள்ளார். இருப்பினும் அவரை எப்படியாவது காதலில் விழ வைக்க வேண்டும் என்னும் முயற்சி தோல்வியில் முடிய இந்த பயங்கரமான சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

    தலைமறைவான ஜிதேந்தர், அவருடைய நண்பர்கள் அர்மான், இஷான் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • கொரோனா பரவல் எதிரொலியாக இந்தியா-சீனா இடையிலான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது.
    • 5 ஆண்டுக்குப் பின் இந்தியா-சீனா இடையேயான நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கியது.

    கொல்கத்தா:

    கொரோனா பரவல் எதிரொலியாக கடந்த 2020-ம் ஆண்டு இந்தியா-சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின், லடாக் எல்லைப் பிரச்சனை காரணமாக நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவதில் சிக்கல் எழுந்தது.

    இதற்கிடையே, அமெரிக்கா உடனான பனிப்போருக்கு மத்தியில் இந்தியா-சீனா உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசியது இதற்கு அடித்தளமாக அமைந்தது. இதையடுத்து, இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான சேவை விரைவில் தொடங்கும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.

    இந்நிலையில், கொல்கத்தா-குவாங்சூ இடையிலான இண்டிகோ விமான சேவை நேற்று தொடங்கியது.

    ஷாங்காய்-டெல்லி இடையேயான விமான சேவை நவம்பர் 9-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆசியான் மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்றார்.
    • அப்போது பேசிய அவர், 21ம் நூற்றாண்டு நமது நூற்றாண்டு என தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    மலேசியாவில் ஆசியான் மாநாடு நடக்கிறது. அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் தலைமையில் நடக்கும் இம்மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்நிலையில், இந்த மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    ஆசியான் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு வாழ்த்துகள். இந்த அமைப்பில் புதிதாக இணைந்துள்ள திமோர் நாட்டை வரவேற்கிறேன்.

    உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் இந்தியா மற்றும் ஆசியான் அமைப்பு நாடுகளில் தான் வசிக்கின்றனர். நாம் வர்த்தக உறவை மட்டும் பகிரவில்லை. கலாசார உறவுகளையும் பகிர்கிறோம்.

    இந்தியாவின் தெற்கு நோக்கிய கொள்கையில் ஆசியான் அமைப்பு முக்கிய தூணாக திகழ்கிறது. சர்வதேச ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு அடிப்படையாக நமது வலுவான கூட்டாண்மை உருவாகி வருகிறது.

    இந்தியா எப்போதும் ஆசியான் கூட்டாளிகளுடன் துணை நின்று வருகிறது. மனிதநேய உதவி மற்றும் பேரிடர் மீட்புப் பணி, கடலோர பாதுகாப்பு மற்றும் கடல், கடல்சார் வளங்கள் அடிப்படையிலான பொருளாதாரம் ஆகியவற்றில் நமது ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது.

    2026 ம் ஆண்டை ஆசியான் - இந்தியா கடலோர பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான ஆண்டு என அறிவித்துள்ளோம்.

    கல்வி, சுற்றுலா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம், பசுமை எரிசக்தி மற்றும் சைபர் பாதுகாப்பு ஆகியவற்றில் இரு தரப்பு ஒத்துழைப்பை வலுவாக ஊக்குவித்து வருகிறோம்.

    21-ம் நூற்றாண்டு நமது நூற்றாண்டு. இந்தியா, ஆசியான் அமைப்பின் நூற்றாண்டு. ஆசியான் அமைப்பின் சமூக தொலைநோக்கு கொள்கை 2045 மற்றும் வளர்ந்த பாரதம் 2047 ஆகியவற்றின் நோக்கம், முழு மனித குலத்துக்கான பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குமென நம்புகிறேன் என தெரிவித்தார்.

    • குர்னூரில் நடந்த ஆம்னி பேருந்து விபத்தில் 20 பேர் கருகி உயிரிழந்தனர்.
    • குடிபோதையில் இருந்த வாலிபர் இருசக்கர வாகனத்தை ஓட்டியதுதான் விபத்து முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.

    ஐதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற ஆம்னி பஸ், ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்னத்தேகூர் அருகே சென்றபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 20 பேர் உடல் கருகி பலியாகினர். இவர்களில் 19 பேர் அந்த பேருந்தில் பயணம் செய்தவர்கள். ஒருவர் குடிபோதையில் இருசக்ர வாகனத்தை ஓட்டி வந்த வாலிபர் சிவசங்கர்.

    இவர் குடிபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தபோது, திடீரேன பைக் உடன் கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த பைக், டிவைடரில் (சாலை நடுவே உள்ள தடுப்பச்சுவர்) மோதியுள்ளது. அப்போது அந்த பகுதியாக வந்த ஆம்னி பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதி, அதை இழுத்துச் சென்றுள்ளது. அப்போது மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து, அது பேருந்தில் பரவி 19 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இது அனைத்துக்கும் காரணம் சிவசங்கர் மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததுதான். இந்த நிலையில் நகர போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் பயங்கரவாதிகள் என கடுமையாக விமர்சித்துள்ளார். அத்துடன் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கருணை காட்டக்கூடாது என போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக சஜ்ஜனார் கூறியதாவது:-

    குடிபோதையில் வாகனம் ஒட்டுபவர்கள் பயங்கரவாதிகள். அந்த காலக்கட்டத்தில், அவர்களின் செயல்கள் நமது சாலைகளில் பயங்கரவாதச் செயல்களைத் தவிர வேறில்லை. பயங்கரமான குர்னூல் பேருந்து விபத்து, 20 அப்பாவி மக்களில் உயிர்களை பிறந்துள்ளது. உண்மையான அர்த்தத்தில் அது விபத்து அல்ல. இது ஒரு தடுக்கக்கூடிய படுகொலை. குடிபோதையில் பைக் ஓட்டியவரின் கவனக்குறைவான மற்றும் பொறுப்பற்ற நடத்தையால் ஏற்பட்டது.

    இது ஒரு சாலை விபத்து அல்ல, மாறாக ஒரு குற்றச்செயலாகும், இது அலட்சியத்தால் ஏற்பட்ட குற்றமாகும், இது சில நொடிகளில் முழு குடும்பங்களையும் அழித்தது.

    பி. சிவசங்கர் என அடையாளம் காணப்பட்ட பைக் ஓட்டுநர், குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சிசிடிவி காட்சிகளில் அவர் அதிகாலை 2:24 மணிக்கு தனது மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்புவதைக் காட்டுகிறது. அதற்கு சில நிமிடங்களுக்கு பின் அவர் கட்டுப்பாட்டை இழந்து அதிகாலை 2:39 மணிக்கு பேரழிவு தரும் மோதலை ஏற்படுத்தியுள்ளார். குடிபோதையில் வாகனம் ஓட்டும் அவரது முடிவு, ஆணவத்தின் ஒரு தருணத்தை கற்பனை செய்ய முடியாத அளவிலான சோகமாக மாற்றியது.

    குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் எல்லா வகையிலும் பயங்கரவாதிகள் என்ற எனது கூற்றில் நான் உறுதியாக நிற்கிறேன். அவர்கள் வாழ்க்கையையும், குடும்பங்களையும், எதிர்காலத்தையும் அழிக்கிறார்கள். இதுபோன்ற செயல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது.

    குடிபோதையில் வாகனம் ஓட்டுவது பிடிபடும் ஒவ்வொரு நபரும் சட்டத்தின் முழு சக்தியையும் எதிர்கொள்வார்கள். அப்பாவி உயிர்களுக்கு ஆபத்தை விளைவிப்பவர்களுக்கு எந்த கருணையும், விதிவிலக்கும், கருணையும் இருக்காது. ஒரு சமூகமாக, குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவறு என்று அழைப்பதை நிறுத்த வேண்டிய நேரம் இது. இது வாழ்க்கையை சிதைக்கும் ஒரு குற்றம், அதற்கேற்ப தண்டிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • பீகாரில் SIR பணி மேற்கொள்ளப்பட்டு, தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • அடுத்த வருடம் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது.

    பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதன்மூலம் லட்சக்கணக்கான மக்களின் வாக்கு உரிமையை தேர்தல் ஆணையம் பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

    என்றாலும், நடைமுறைப்படுத்தி அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

    வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில், நாடு தழுவிய SIR குறித்து அறிவிக்க, நாளை மாலை செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அப்போது விரிவான விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி மாநிலங்களில் அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலங்களுடன் 10 முதல் 15 மாநிலங்களில் முதற்கட்டமாக SIR பணியை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • புதிய மங்களூரில் இருந்து 100 நாட்டிகல் மைல் தூரத்தில் படகு மாயமானது.
    • விமானம், ரோந்து படகு மூலம் தேடுதல் வேட்டையில் காவல்படை ஈடுபட்டது.

    ஸ்டீரிங் கியர் பழுது காரணமாக 11 நாட்களாக அரபிக் கடலில் சிக்கித் தவித்த 31 மீனர்களை பத்திரமாக மீட்டதாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

    கோவாவைச் சேர்ந்த படகு, புதிய மங்களூரில் இருந்து 100 நாட்டிகல் மைல் தூரத்தில் மாயமானதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கடுமையான கடல் சீற்றம் மற்றும் மோசமான வானிலையை பொருட்படுத்தாமல் கடலோர காவல்படை விமானம் மற்றும் ரோந்து படகுகள் மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று, விமானம் படகு தவித்துக் கொண்டிருந்த இடத்தை கண்டுபிடித்தது.

    பின்னர் வீரர்கள் படகை சென்றடைந்து, முக்கியமான உதவிகளை அளித்து, மற்றொரு படகு உதவியுடன் மீன்படி துறைமுகத்திற்கு பழுதான படகை மீனவர்களுடன் கொண்டு வந்தனர்.

    • 4 பக்க தற்கொலைக் குறிப்பை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
    • தலைமறைவான எஸ்.பி. கோபால் கைது செய்யப்பட்டார்.

    மகாராஷ்டிராவின் சதாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் மருத்துவர் கடந்த வியாழன் இரவு ஹோட்டல் அறையில் தற்கொலை செய்துகொண்டார்.

    அவரது உள்ளங்கையில், "எனது மரணத்திற்கு காவல்துறை ஆய்வாளர் கோபால் பத்னே தான் காரணம். அவர் என்னை நான்கு முறை பாலியல் வன்கொடுமை செய்தார். ஐந்து மாதங்களுக்கும் மேலாக என்னை பாலியல் வன்கொடுமை, மனம் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார்" என்று என்று எழுதப்பட்டிருந்தது.

    தற்கொலைக்கு செய்துகொள்வதற்கு பல மாதங்களுக்கு முன்பே ஜூன் 19 அன்று, இதே குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஃபல்டான் DSPக்கும் அந்த பெண் மருத்துவர் கடிதம் எழுதியுள்ளதும் தெரியவந்தது.

    DSP-க்கு எழுதிய கடிதத்தில், ஃபல்டான் ஊரக காவல் துறையைச் சேர்ந்த கோபால் பத்னே, துணைக் கோட்ட காவல்துறை ஆய்வாளர் பாட்டீல் மற்றும் உதவி காவல்துறை ஆய்வாளர் லாட்புத்ரே ஆகிய மூன்று அதிகாரிகள் தன்னை துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டி, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.

    தான் அதிக மன அழுத்தத்தில் இருப்பதாகவும், இந்த விஷயத்தை தீவிரமாக விசாரித்து, அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர் கோரியிருந்தார். ஆனால் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

     இந்த வழக்கில் போலீசார் நடத்திய விசாரணையில் முக்கிய உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பான மேலும் 4 பக்க தற்கொலைக் குறிப்பை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

    அதில், காவல்துறையில் குற்றவாளிகளுக்கு போலியான உடற்தகுதி சான்றிதழ் கொடுக்க தன்னை கட்டாயப்படுத்தினர். பலரை மருத்துவ பரிசோதனைகளுக்கு கூட அழைத்து வராமல் அவர்களுக்கு சான்றிதழ் வழங்க அழுத்தம் தந்தனர். அதற்கு சம்மதிக்காததால் உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் தன்னை மிரட்டி துன்புறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் ஒரு வழக்கில் ஒரு எம்.பி.யின் இரு உதவியாளர்கள் வந்து தன்னை மிரட்டியதாகவும் கடிதத்தில் கூறியுள்ளார். எம்.பி.க்கு போன் செய்து அவரிடம் பேச வைத்தனர் என்றும் அந்த எம்.பி. மறைமுகமாக தன்னை மிரட்டியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் எம்.பி.யின் பெயரை போலீசார் வெளியிடவில்லை.

    இந்த வழக்கில் குற்றமசாட்டப்பட்டு தலைமறைவான எஸ்.பி. கோபால் நேற்று கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மகாராஷ்டிராவின் சதாராவில் டாக்டர் சம்பதா முண்டே துன்புறுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பிறகு தற்கொலை செய்து கொண்டது, எந்தவொரு நாகரிக சமூகத்தின் மனசாட்சியையும் உலுக்கும் ஒரு சோகம்.

    மற்றவர்களின் துன்பத்தைத் தணிக்க விரும்பிய ஒரு நம்பிக்கைக்குரிய மருத்துவர், ஊழல் அமைப்பிற்குள் குற்றவாளிகளின் சித்திரவதைக்கு பலியானார்.

    குற்றவாளிகளிடமிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் இந்த அப்பாவிப் பெண்ணுக்கு எதிராக மிகக் கொடூரமான குற்றத்தைச் செய்துள்ளனர்.

    அறிக்கைகளின்படி, பாஜகவுடன் தொடர்புடைய சில செல்வாக்கு மிக்க நபர்கள் அவரை ஊழலுக்கு அழுத்தம் கொடுக்க முயன்றனர் என்பது தெரியவந்துள்ளது. அதிகாரத்தால் பாதுகாக்கப்பட்ட குற்றவியல் சித்தாந்தத்தின் மிகவும் இழிவான உதாரணம் இது. இது தற்கொலை அல்ல, அமைப்பு ரீதியான கொலை.

    அதிகாரம் குற்றவாளிகளைக் காப்பாற்றும்போது, யார் நீதியை எதிர்பார்க்க முடியும்? டாக்டர் சம்பதாவின் மரணம் இந்த பாஜக அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற மற்றும் இரக்கமற்ற தன்மையை அம்பலப்படுத்துகிறது.

    நீதிக்கான இந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துடன் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். இந்தியாவின் ஒவ்வொரு மகளுக்கும் இனி பயம் இல்லை, எங்களுக்கு நீதி வேண்டும் என்று கேட்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.  

    • நாட்டின் வகுப்புவாத சக்திகளுடன், லாலு பிரசாரத் யாதவ் ஒருபோதும் சமரசம் செய்து கொண்டது கிடையாது.
    • ஆனால், பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் அதுபோன்ற சக்திகளுக்கு எப்போதும் ஆதரவாக உள்ளார்.

    பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதி இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்காக இவர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் கதிஹார் மற்றும் கிஷான்கஞ்ச் மாவட்டங்களில் பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது தேஜஸ்வி யாதவ் பேசியதாவது:-

    நாட்டின் வகுப்புவாத சக்திகளுடன், லாலு பிரசாரத் யாதவ் ஒருபோதும் சமரசம் செய்து கொண்டது கிடையாது. ஆனால், பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் அதுபோன்ற சக்திகளுக்கு எப்போதும் ஆதரவாக உள்ளார். அவரால்தான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் மாநிலத்திலும் நாட்டிலும் வகுப்புவாத வெறுப்பைப் பரப்புகின்றன. பாஜக Bharat Jalao Party (இந்தியாவை எரிக்கும் கட்சி) என்று அழைக்கப்பட வேண்டும்.

    இந்தியா கூட்டணி பீகார் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால், வக்கு சட்டத்தை கிழித்து குப்பைத் தொட்டியில் நாங்கள் வீசுவோம்.

    இவ்வாறு தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

    வக்பு திருத்த சட்டம் பாராளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் பெண்களுக்கு வெளிப்படைத்தன்மை மற்றும் அதிகாரமளித்தலுக்கு முன்னோக்கிய நடவடிக்கை என பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தெரிவித்தது.

    • 243 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட பீகாருக்கு நவம்பர் 6, 11 தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
    • சட்ட மேலவை உறுப்பினர்கள் சஞ்சய் பிரசாத் மற்றும் ரன் விஜய் சிங் ஆகியோர் அடங்குவர்.

    243 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட பீகாருக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு நவம்பர் 14 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

    ஆளும் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) இடம்பெற்ற பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக கொண்ட மகபந்தன்(இந்தியா) கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் உட்பட 11 தலைவர்கள் முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

    ஜேடியுவிலிருந்து நீக்கப்பட்ட தலைவர்களில் முன்னாள் அமைச்சர் சைலேஷ் குமார், முன்னாள் எம்எல்ஏக்கள் ஷியாம் பகதூர் சிங் மற்றும் சுதர்சன் குமார், முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர்கள் சஞ்சய் பிரசாத் மற்றும் ரன் விஜய் சிங் ஆகியோர் அடங்குவர்.

    கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இந்த தலைவர்கள் அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டு வந்ததாக கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • பீகார் சட்டசபை தேர்தல் இரு கட்டங்களாக நடக்கிறது.
    • பீகாரில் பிரதமர் மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    பீகார் சட்டசபை தேர்தல் வருகிற நவம்பர் 6 மற்றும் 11-ந்தேதிகளில் இரு கட்டங்களாக நடக்கிறது. இதையடுத்து கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பீகாரில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், பீகாரில் உள்ள லோக்கல் கார் ஷெட்டில் பிரதமரின் மோடியின் காருக்கு வாட்டர் சர்வீஸ் செய்யப்பட்டதாக கூறப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ஆனால் இந்த வீடியோ உண்மையா இல்லையா என்று எந்த தகவலும் இதுவரை தெரியவில்லை.

    • சந்தைகளில் உள்நாட்டுப் பொருட்களை வாங்குவது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
    • வந்தே மாதரம் பாடலின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

    பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இன்று 127-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:-

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஒவ்வொரு இந்தியரையும் பெருமையால் நிரப்பியுள்ளது. தற்போது மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தின் இருள் நிலவிய பகுதிகளிலும் கூட மகிழ்ச்சியின் தீபங்கள் ஏற்றப்பட்டு உள்ளன.

    தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்திய மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க மக்கள் விரும்புகிறார்கள்.

    ஜி.எஸ்.டி வரி சலுகை மக்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன்மூலம் சந்தைகளில் உள்நாட்டுப் பொருட்களை வாங்குவது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

    சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாள் முழு நாட்டிற்கும் மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். அவர் நவீன காலத்தில் நாட்டின் மிகச்சிறந்த அறிவாளிகளில் ஒருவராக இருந்து வருகிறார். அவரது பிறந்தநாளான அக்டோபர் 31-ந்தேதி நாடு முழுவதும் ஒற்றுமைக்கான ஓட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கேற்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

    இந்தியாவின் தேசியப் பாடலான வந்தே மாதரம் 150 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டது. வருகிற நவம்பர் 7-ந்தேதி வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவைக் கொண்டாட நாடு தயாராகி வருகிறது. பல நூற்றாண்டுகளாக அடிமைத்தனத்தால் பலவீனமடைந்த இந்தியாவிற்கு புதிய வாழ்க்கையை ஊட்டுவதற்காக பங்கிம் சந்திர சட்டோபாத்யாயால் இயற்றப்பட்டது. அந்த பாடலை 1896-ம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூர் முதல் முறையாக பாடினார்.

    இதன் முதல் வார்த்தையே நம் இதயங்களில் உணர்ச்சிகளின் எழுச்சியைத் தூண்டும். ஒரு சிரமமான தருணம் இருந்தால் வந்தே மாதரம் என்ற கோஷம் 140 கோடி இந்தியர்களையும் ஒற்றுமையின் ஆற்றலால் நிரப்புகிறது. அது நமது பெருமை.

    வந்தே மாதரம் 19-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம். ஆனால் அதன் ஆன்மா ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான இந்தியாவின் அழியாத உணர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது. வந்தே மாதரம் பாடலின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு மோடி பேசினார்.

    ×