என் மலர்tooltip icon

    இந்தியா

    பீகார் பெண்கள் ரூ.20,000-க்கு கிடைப்பார்கள்.. உத்தரகாண்ட் பெண்கள் நலத்துறை அமைச்சரின் கணவர் கொச்சைப் பேச்சு
    X

    பீகார் பெண்கள் ரூ.20,000-க்கு கிடைப்பார்கள்.. உத்தரகாண்ட் பெண்கள் நலத்துறை அமைச்சரின் கணவர் கொச்சைப் பேச்சு

    • பீகார் பெண்கள் ஒன்றும் சந்தையில் விற்கும் பொருட்கள் அல்ல. இது பீகார் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம்.
    • அவர் இவ்வளவு கீழ்த்தரமாகப் பேசியிருப்பது அவரது புத்தியின் வறுமையைக் காட்டுகிறது

    பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக ரேகா ஆர்யா உள்ளார்.

    ரேகா ஆர்யாவின் கணவர் கிரிதாரி லால் சாஹுவும் பாஜகவில் முக்கிய தலைவர் ஆவார். அவர் பீகார் பெண்கள் குறித்து கீழ்த்தரமாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரகாண்டின் அல்மோராவில் சமீபத்தில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் கிரிதாரி லால் சாஹு கலந்து கொண்டார்.

    அப்போது அங்கிருந்த இளைஞர்களிடம் திருமணத்தைப் பற்றிப் பேசிய அவர், "உங்களுக்குத் திருமணம் ஆகவில்லையா? வயதான காலத்திலா திருமணம் செய்யப் போகிறீர்கள்? கவலைப்படாதீர்கள், உங்களால் திருமணம் செய்ய முடியாவிட்டால் நாங்கள் பீகாரிலிருந்து உங்களுக்குப் பெண் அழைத்து வருவோம். அங்கே ரூ.20,000 முதல் ரூ.25,000 கொடுத்தால் பெண் கிடைக்கும்" என்று பேசியுள்ளார்.

    பீகாரின் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சிகள், பாஜகவின் பெண்களுக்கு எதிரான மனநிலையை இது காட்டுவதாகக் குற்றம் சாட்டியுள்ளன.

    கிரிதாரி லால் கருத்துக்கு பீகார் மாநில பாஜகவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    "பீகார் பெண்கள் ஒன்றும் சந்தையில் விற்கும் பொருட்கள் அல்ல. இது பீகார் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம்" என்று பீகார் மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    "அவரது மனைவி பெண்கள் நலத்துறை அமைச்சராக இருக்கும்போதே, அவர் இவ்வளவு கீழ்த்தரமாகப் பேசியிருப்பது அவரது புத்தியின் வறுமையைக் காட்டுகிறது" என்று கூறி பீகார் மாநில மகளிர் ஆணையத் தலைவி அஸ்பரா தெரிவித்தார்.

    இதுதொடர்பாக மகளிர் ஆணையம் கிரிதாரி லாலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இதற்கிடையே தனது வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், தான் பெண்களை மிகவும் மதிப்பவன் என்றும் கிரிதாரி லால் மன்னிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    Next Story
    ×