என் மலர்tooltip icon

    இந்தியா

    • சந்தைகளில் உள்நாட்டுப் பொருட்களை வாங்குவது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
    • வந்தே மாதரம் பாடலின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

    பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இன்று 127-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:-

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஒவ்வொரு இந்தியரையும் பெருமையால் நிரப்பியுள்ளது. தற்போது மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தின் இருள் நிலவிய பகுதிகளிலும் கூட மகிழ்ச்சியின் தீபங்கள் ஏற்றப்பட்டு உள்ளன.

    தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்திய மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க மக்கள் விரும்புகிறார்கள்.

    ஜி.எஸ்.டி வரி சலுகை மக்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன்மூலம் சந்தைகளில் உள்நாட்டுப் பொருட்களை வாங்குவது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

    சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாள் முழு நாட்டிற்கும் மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். அவர் நவீன காலத்தில் நாட்டின் மிகச்சிறந்த அறிவாளிகளில் ஒருவராக இருந்து வருகிறார். அவரது பிறந்தநாளான அக்டோபர் 31-ந்தேதி நாடு முழுவதும் ஒற்றுமைக்கான ஓட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கேற்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

    இந்தியாவின் தேசியப் பாடலான வந்தே மாதரம் 150 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டது. வருகிற நவம்பர் 7-ந்தேதி வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவைக் கொண்டாட நாடு தயாராகி வருகிறது. பல நூற்றாண்டுகளாக அடிமைத்தனத்தால் பலவீனமடைந்த இந்தியாவிற்கு புதிய வாழ்க்கையை ஊட்டுவதற்காக பங்கிம் சந்திர சட்டோபாத்யாயால் இயற்றப்பட்டது. அந்த பாடலை 1896-ம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூர் முதல் முறையாக பாடினார்.

    இதன் முதல் வார்த்தையே நம் இதயங்களில் உணர்ச்சிகளின் எழுச்சியைத் தூண்டும். ஒரு சிரமமான தருணம் இருந்தால் வந்தே மாதரம் என்ற கோஷம் 140 கோடி இந்தியர்களையும் ஒற்றுமையின் ஆற்றலால் நிரப்புகிறது. அது நமது பெருமை.

    வந்தே மாதரம் 19-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம். ஆனால் அதன் ஆன்மா ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான இந்தியாவின் அழியாத உணர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது. வந்தே மாதரம் பாடலின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு மோடி பேசினார்.

    • பாலக்வா பஞ்சாயத்தில் கமர்பூர் என்ற கிராமம் அமைத்துள்ளது.
    • கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு வயலில் சிறுத்தை ஒன்று புகுந்தது.

    இமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் பாலக்வா பஞ்சாயத்தில் கமர்பூர் என்ற கிராமம் அமைத்துள்ளது.

    அண்மையில் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு வயலில் சிறுத்தை ஒன்று புகுந்தது.

    அப்போது கிராம வாசிகள் சிறுத்தையைச் சுற்றி வளைத்து குச்சிகள் மற்றும் பிற ஆயுதங்களால் தாக்கினர்.

    சிறுத்தை திரும்பி தாக்கியதில் 4 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவரின் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதன்பின் சிறுத்தை அங்கிருந்து தப்பிச் சென்றது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 

    • நான்கு வயது மகன் சிவான்ஷ் மற்றும் 14 மாத குழந்தை ஆகியோரின் வாயில் துணியை திணித்து கழுத்தை நெரித்து கொன்றார்.
    • கணவர் வீட்டுக்கு திரும்பிய நிலையில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட தாய் தனது 2 குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    நேற்று மாலை, 35 வயதான சங்கீதா தனது  நான்கு வயது மகன் சிவான்ஷ் மற்றும் 14 மாத குழந்தை ஆகியோரின் வாயில் துணியை திணித்து கழுத்தை நெரித்து கொன்றார்.

    பின்னர் வீட்டின் கூரையில் தூக்குப்போட்டு சங்கீதா தற்கொலை செய்து கொண்டார்.

    சம்பவம் நடந்தபோது அவரது கணவர் ஹரிச்சந்திரா வீட்டில் இல்லை. தனது பெற்றோர் வீட்டுக்கு சென்ற சங்கீதா நேற்று காலை கணவர் வீட்டுக்கு திரும்பிய நிலையில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

    உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

    • இடுக்கி அடிமாலியில் நேற்றிரவு கனமழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
    • இந்த நிலச்சரிவில் 2 வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்தன

    மழைக்காலங்களில் கேரளாவில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவது வழக்கம். கடந்தாண்டு வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    அவ்வகையில் இடுக்கி அடிமாலியில் நேற்றிரவு கனமழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.

    இந்த மண்சரிவில் சிக்கிய தம்பதியரை மீட்க ஆறு மணி நேரம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கணவர் பிஜு சடலமாக மீட்கப்பட்ட நிலையில், காயங்களுடன் மனைவி சந்தியா மீட்கப்பட்டு கொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலச்சரிவில் 2 வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்தன. மேலும் 6 வீடுகள் பகுதியளவு சேதமடைந்தன. மொத்தம் 22 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டன.

    கேரளத்தில் அடுத்த 3 நாட்களுக்கு 'கனமழை முதல் மிக கனமழை; பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • மேலும் நான்கு குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
    • இந்தக் குழந்தைகள் அனைவரும் அதே மருத்துவமனையில் தொடர்ந்து ரத்த மாற்றுச் சிகிச்சை பெற்று வந்தனர்.

    ஜார்கண்ட் அரசு மருத்துவமனையில் ரத்த மாற்றுச் சிகிச்சை பெற்ற 5 குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டுள்ளது.

    ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் சைபாசா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் தலசீமியா பாதித்த 5 குழந்தைகளுக்கும் ரத்தம் மாற்று சிகிச்சைகாக மருத்துவமனையின் ரத்த வங்கியிலிருந்து ரத்தம் ஏற்றப்பட்டது .

    இந்நிலையில் அதில் ஒரு குழந்தையின் பெற்றோர், ரத்த வங்கியில் தங்கள் குழந்தைக்கு எச்ஐவி தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டதால் எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டதாக நேற்று முன் தினம் குற்றம்சாட்டினர். புகாரைத் தொடர்ந்து, சுகாதார சேவைகள் இயக்குநர் டாக்டர் தினேஷ் குமார் தலைமையிலான ஐந்து பேர் குழு அந்த மருத்துவமனைக்கு விரைந்தனர்.

    நேற்று அவர்கள் நடத்திய ஆய்வில், தலசீமியாவால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம் மொத்தம் 5 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு உறுதியானது.

    தலசீமியா பாதித்த குழந்தைகளுக்கு மோசமான ரத்தம் செலுத்தப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் விசாரணையின்போது ரத்த வங்கியில் குறைபாடுகள் கண்டறியப்பட்டன என்றும் டாக்டர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

    தலசீமியா நோய்க்காக இந்தக் குழந்தைகள் அனைவரும் அதே மருத்துவமனையில் தொடர்ந்து ரத்த மாற்றுச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அலட்சியத்தால் அவர்களுக்கு எச்ஐவி பாதித்துள்ளது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ரத்த வங்கியின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • கோவாவில் தனது 2-வது மகன் நிச்சயதார்த்தத்தை தனது கிராம மக்களுடன் கொண்டாட முடிவு செய்தார்.
    • சுமார் ரூ.2 கோடி செலவழித்து 2 விமானங்களை முன்பதிவு செய்தார்.

    கிராமத்தில் யாராவது விமானத்தில் பயணம் செய்தால், முழு கிராமமும் அதைப் பற்றி விவாதிக்கும். தெலுங்கானாவில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 500 பேர் ஒரே நேரத்தில் விமானத்தில் பயணம் செய்து அசத்தி உள்ளனர்.

    நாகர்கர்னூல் மாவட்டம், பிஜினேபள்ளி மண்டலம், குட்லனர்வா கிராமத்தைச் சேர்ந்த 500 பேர் நேற்று இரவு ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் இருந்து கோவாவுக்கு விமானத்தில் குதூகலமாக பயணம் செய்தனர்.

    மேட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தில் உள்ள ஜவஹர்நகர் நகராட்சியின் முன்னாள் மேயரான மேகலா காவ்யாவின் தந்தை மேகலா அய்யப்பா, இவர் தனது சொந்த கிராம மக்களுக்கு மறக்கமுடியாத ஒன்றைச் செய்ய விரும்பினார்.

    கோவாவில் தனது 2-வது மகன் நிச்சயதார்த்தத்தை தனது கிராம மக்களுடன் கொண்டாட முடிவு செய்தார். இதற்காக, அவர் சுமார் ரூ.2 கோடி செலவழித்து 2 விமானங்களை முன்பதிவு செய்தார்.

    தனது சொந்த கிராம மக்கள் 500 பேரை 2 விமானங்களில் கோவாவுக்கு அழைத்துச் சென்றார்.

    இந்த நிகழ்வில் பேசிய காவ்யா, தனது தந்தை ஒரு எளிய விவசாயியாக தனது வாழ்க்கையைத் தொடங்கி ஒரு சிறந்த தொழிலதிபராக வளர்ந்தார்.

    அவருடைய கிராம மக்களின் கண்களில் மகிழ்ச்சியைக் காண கோவாவில் மகன் நிச்சயதார்த்தத்தை ஏற்பாடு செய்தார். அனைத்து கிராம மக்களையும் விமானத்தில் அழைத்து வந்தார். கிராம மக்கள் 500 பேரின் ஆசையை நிறைவேற்றியுள்ளார். அவர்களின் மகிழ்ச்சியை தங்கள் மகிழ்ச்சியாகக் கருதி இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.

    தெலுங்கானாவில் நடந்த இந்த ருசிகர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்துக்கு கேரள அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது.
    • இந்நிலையில் திடீர் மனமாற்றமாக கேரள அரசு மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்றது.

    திருவனந்தபுரம்:

    மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு முதல் பி.எம்.ஸ்ரீ கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தது. இதில் தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள் இணைய தொடர்ந்து மறுத்தது. இதனால் மத்திய அரசு அந்த மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் எஸ்.எஸ்.ஏ. திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை நிறுத்தி வைத்தது.

    இந்தத் திட்டத்தை ஏற்றால்தான் நிதி என்றால், அந்த நிதியே வேண்டாம் என தமிழக அரசு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளது. இதே நடைமுறையை கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் பின்பற்றியது.

    இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு கேரளாவில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை கொண்டு வர சம்மதித்துள்ளது. பி.எம்.ஸ்ரீ. திட்டத்துக்கான மத்திய அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கேரள கல்வித்துறை செயலாளர் கையெழுத்திட்டுள்ளார்.

    இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டு கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ், பா.ஜ.க.வுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மறைமுக கூட்டணி வைத்துள்ளது, பி.எம்.ஸ்ரீ திட்டம் மூலம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது என குற்றம்சாட்டியது.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பினோய் விஸ்வம் கூறுகையில், மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ பள்ளி கல்வி வளர்ச்சி திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கேரள அரசு கையெழுத்திட்டதாக வெளிவரும் செய்தி உண்மையானால், அது கூட்டணி தர்மத்திற்கு எதிரானது. இது தொடர்பாக, இடது முன்னணியில் அனைத்து கட்சிகளுடன் ஆலோசிக்கப்பட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் தேசிய பொது செயலாளர் எம்.ஏ.பேபியின் கருத்தை கூட கேரள அரசு மதிக்கவில்லை. இதுதொடர்பாக, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொது செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் எனதெரிவித்துள்ளார்.

    இதனால் தற்போது கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் விரிசல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    கேரளாவில் ஆளும் கட்சியின் ஆதரவு மாணவர் அமைப்பான இந்திய மாணவர் பெருமன்றமும் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    • மனைவி கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
    • குழந்தைகளை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று கொடூரமாக கொலை செய்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் வசித்து வருபவர் ராகுல் சவான். இவருக்கு திருமணம் முடிந்து இரட்டை பெண் குழந்தைகள் உள்ளன. அவர்களுக்கு இரண்டு வயது ஆகிறது.

    சம்பவத்தன்று தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் இருந்து மற்றொரு இடத்திற்கு டிராவல் மேற்கொண்டுள்ளார் ராகுல் சவான். அப்போது ராகுல் சவானுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    தகராறு அதிகமான மனைவி கோபத்தில் வாகனத்தில் இருந்து இறங்கி, தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் ராகுல் சவானுக்கு கடுங்கோபம் ஏற்பட்டுள்ளது. மனைவி மீதான கோபம் தன்னுடைய குழந்தைகள் மீது திரும்பியுள்ளது. இரட்டை பெண் குழந்தைகளையும் ஈவு இரக்கமின்றி கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

    இதனால் இரண்டு குழந்தைகளையும் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளான். அங்கு வைத்து பெற்ற குழந்தைகள் என்று கூட பார்க்காமல் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

    பின்னர் நேராக வாஷிம் காவல் நிலையம் வந்து, தன்னுடைய இரட்டை பெண் குழந்தைகளை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இதை கேட்டு போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று இரண்டு குழந்தைகள் உடலை மீட்டனர்.

    உடலின் சில பகுதிகள் எரிந்த நிலையில் உள்ளது. சாட்சிகளை அழிக்க உடலுக்கு தீவைத்திருக்கலாம் என சந்தேகப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உடற்கூறு ஆய்விற்குப் பிறகுதான் இரண்டு குழந்தைகளும் எப்படி கொல்லப்பட்டனர் என்பது தெரியவரும்.

    தந்தையே இரட்டை குழந்தைகளை கொலை செய்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • பள்ளி மாணவிகள் மாணவிகள் மதுபானம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது.
    • விற்பனையாளர் கேள்வியின்றி அவர்களுக்கு மதுபானம் வழங்கியது கேள்விகளை எழுப்பியுள்ளது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் பள்ளி சீருடையில் மாணவிகள் தங்கு தடையின்றி அரசு கடையில் மதுவாங்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் வழி தவறி செல்லும் அதிர்ச்சி சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதை பார்க்க முடிகிறது. சில மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாவது, சிலர் மற்ற பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சம்பவங்களும் நடந்துள்ளன.

    பள்ளி மாணவர்கள் தவறான வழிக்கு செல்லக்கூடாது என அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வழிப்புணர்களை ஏற்படுத்தி வருகிறது. வயது நிரம்பாதவர்கள் போதைப்பொருட்கள் வழங்கினால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. விற்பனையாளர்களை தண்டிக்க சட்டமும் வழிவகை செய்கிறது.

    இந்த நிலையில்தான், மத்திய பிரதேச மாநிலத்தில் பள்ளி சீருடையில் மாணவிகள் மதுபானம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் மாநிலத்தின் சட்டம் மற்றும் சமூக வழிப்புணர்வு குறித்து கேள்வியை எழுப்பியுள்ளது.

    மண்ட்லா மாவட்டத்தில் உள்ள நைன்பூரில் மாணவிகள் அரசு மதுபானக்கடையில் மதுபானம் வாங்குகின்றனர். இதில் என்ன அவலம் என்றால், கடைக்காரர் எந்தவித கேள்வியின்றி அவர்களுக்கு மதுபானம் வழங்கியதுதான்.

    சமூக வலைத்தளங்களில் பரவியதால், உள்ளூர் அதிகாரிகள் தர்ம சங்கடத்திற்கு ஆளாகியுள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், துணை கலெக்டர், தாசில்தான், உள்ளூர் போலீசார் அந்த மதுபான கடைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அதிகாரிகள் வீடியோவை பரிசோதனை செய்ததில், விற்பனையாளர் மதுபானம் வழங்கியது உறுதிப்படுத்தப்பட்டது. இது பொது உரிமம் நிபந்தனைகள் மீறுவதாகும். மதுபான சட்டத்தின்கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

    இதுதொடர்பாக கலால்துறை விரிவான விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யும்படி துணை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    அந்த மாணவிகள் மது அருந்தினரா? அல்லது யாருக்காவது வாங்கி சென்றார்களா? என்ற கோணத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    • மத்திய பிரதேசத்தில் பெரும்பாலான இடங்களில் உரம் தட்டுப்பாடு.
    • அதிகாலையில் இருந்து விவசாயிகள் காத்திருந்தும் உரங்கள் கிடைப்பத்தில்லை எனக் குற்றச்சாட்டு.

    தென்மேற்கு பருவமழை நிறைவடைந்து, விவசாயிகள் விவசாயப் பணிகளை தொடங்கியுள்ளனர். பயிர்களுக்கு உரம் தேவை என்பதால், உரம் வழங்கும் மையங்களில் உரத்திற்காக செல்லுகின்றனர். ஆனால், உரம் தட்டுப்பாடு காரணமாக விவசாயிகளுக்கு உரிய உரங்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மத்திய பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் உள்ள மையத்தில் உரம் கிடைக்காததால், முண்டியடித்து உரங்கள் வாங்க சென்ற விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்ட தடியடி நடந்துள்ளது.

    பிந்த், மொரேனா, ஷியோபூர், ரெவா, சாட்னா போன்ற இடங்களில் விவசாயிகள் நீண்ட வரிசையில் நின்றும் உரங்கள் பெற முடியாமல் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட, உரம் வழங்கும் மையம் போராட்ட பூமியாக மாறியுள்ளது.

    சில தினங்களுக்கு முன்னதாக ரெவாவில் உரங்கள் வாங்குவதற்கான நீண்ட வரிசையில் காத்திருந்த விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். சாட்னாவில் விவசாயிகள் கோபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பாஜக எம்.எல்.ஏ. பிரதிமா பக்ரி, தனது வழியை மாற்றிக் கொண்டு தப்பி சென்றார்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ. வரிசையில் நின்ற படம்தான் சமூக வலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைலாஷ் குஷ்வாகா ஷிவ்பூரியில் ஹெல்மெட் அணிந்து கொண்டு சாதாரண விவசாயி போன்று வரிசையில் நின்றார்.

    இது தொடர்பாக கைலாஷ் குஷ்வாகா கூறியதாவது:-

    போஹ்ரி வேளாண் விளைபொருள் சந்தையில் விவசாயிகளுடன் தோளோடு தோள் நின்று விவசாயிகள் என்ன செய்கிறார்கள் என்பதையும், அவர் என்ன கண்டார் என்பதையும் நேரில் காண விரும்பினேன்.

    விவசாயிகள் அதிகாலை 4 அணியில் இருந்து வரிசையில் நின்று கொண்டிருந்தனர். ஆனால் அதிகாரிகள், SDM அல்லது தாசில்தார் அங்கு இல்லை. அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குடிநீர் அல்லது விவசாயிகள் அமர இருக்கைகள் ஏற்பாடு செய்யப்படவில்லை.

    உண்மையான விவசாயிகள் புறக்கணிக்கப்படடு, குறிப்பிட்ட தனி நபர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. இது அநீதியானது. சிஸ்டம் முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • பஸ்சில் இருந்த 19 பயணிகள் மற்றும் பைக்கில் வந்த வாலிபர் உட்பட 20 பேர் பலியானார்கள்.
    • அந்த பேருந்து விதிமுறைகளை மீறி ஸ்லீப்பர் பேருந்தாக மாற்றப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

    ஐதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற ஆம்னி பஸ் நேற்று காலை ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே பைக் மீது மோதி தீப்பிடித்தது.

    பஸ்சில் இருந்த 19 பயணிகள் மற்றும் பைக்கில் வந்த வாலிபர் உட்பட 20 பேர் பலியானார்கள்.

    இந்நிலையில் ஆம்னி பஸ்ஸில் பார்சலில் வைக்கப்பட்டிருந்த ரூ.46 லட்சம் மதிப்புடைய 234 ஸ்மார்ட்போன்கள் வெடித்ததே தீவிபத்து தீவிரமடைய காரணம் என்று தெரியவந்துள்ளது.

    பேருந்தின் சரக்கு வைக்கும் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஸ்மார்ட்போன்களில் உள்ள லித்தியம் அயன் பேட்டரிகள் வெப்பம் காரணமாக வெடித்ததால் தீ மளமளவென பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    பயணிகள் பேருந்தில் செல்போன்கள் பார்சலை எடுத்துச் சென்றது கடுமையான பாதுகாப்பு விதிமீறலாக பார்க்கப்படுகிறது. மேலும் அந்த பேருந்து விதிமுறைகளை மீறி ஸ்லீப்பர் பேருந்தாக மாற்றப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

    பைக்கில் வந்து பேருந்துடன் மோதியவர்கள் விபத்துக்கு சிறிது நேரம் முன் பெட்ரோல் பங்கில் மதுபோதையில் காணப்பட்ட வீடியோவும் வெளியாகி உள்ளது. எனவே விசாரணை முழுமையாக நிறைவடைந்த பின்னரே பஸ் விபத்துக்கான உண்மையான காரணம் தெரிய வரும். 

    • உத்தரவு அமல்படுத்தப்படாதது தேசிய அவமானம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
    • மருந்தகங்கள் மற்றும் பள்ளிகளில் ஒருபோதும் கிடைக்கக்கூடாது.

    இந்தியாவில் சர்க்கரை பானங்களை, ORS எனப்படும் oral rehydration solutions என்று ஸ்டிக்கர் ஒட்டி பல்வேறு நிறுவனங்கள் விற்று வந்தன.

    இந்த பிரச்சனை தொடர்பாக ஐதராபாத்தை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவரான சிவரஞ்சனி சந்தோஷ் கடந்த 8 ஆண்டுகளாக குரல் கொடுத்து வந்தார்.

    இவரது தொடர் முயற்சிகளின் விளைவாக, இந்தியாவில் விற்கப்படும் அனைத்து ஓஆர்எஸும் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த தரநிலைகளுக்கு இணங்க வேண்டும் என்றும் அப்படி அதைப் பூர்த்தி செய்யாதவை 'ORS' என்று விளம்பரப்படுத்தி விற்கப்படக்கூடாது என்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அக்டோபர் 14 அன்று உத்தரவிட்டது.

    ஆனால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 10 நாட்கள் கடந்தும் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. மாநில FSSAI களுக்கு  உத்தரவு தொடர்பான அறிவிருதலைகள் சென்று சேர்வதில் தாமதம் நிலவுகிறது.  

    ORS என்று விளம்பரப்படுத்தப்பட்ட போலி கரைசல்கள் இன்னும் சந்தைகளில் விற்கப்பட்டு வருகிறது. மேலும் தங்களிடம் உள்ள இருப்பை காலி செய்யும் வரை தடையை இடைநிறுத்தி வைக்க இந்நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

    குறிப்பாக JNTL என்ற ஜான்சன் & ஜான்சன் உடைய கிளை நிறுவனம் தங்கள் பொருட்கள் ஸ்டாக் தீரும் வரை விற்பனை செய்துகொள்ள அனுமதி FSSAI இடம் அனுமதி பெற்றதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில் இதுதொடர்பாக மருத்துவர் சிவரஞ்சனி கவலை தெரிவித்துள்ளார். உத்தரவு அமல்படுத்தப்படாதது தேசிய அவமானம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் அனைவரும் உச்சநீதிமன்றத்துக்கு கடிதம் எழுத வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

    அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "உங்கள் அனைவருக்கும் எனது உண்மையான மற்றும் மனமார்ந்த வேண்டுகோள். தயவுசெய்து உச்ச நீதிமன்றத்திற்கு எழுதுங்கள். எதிர்கால சந்ததியினரையும் பாதுகாக்க ஒரு வலுவான சட்டம் இயற்றப்படட்டும்.

    WHO பரிந்துரைத்த மருந்து வகை ORS ஐ தவிர வேறு எதுவும் மருந்தகங்கள் மற்றும் பள்ளிகளில் ஒருபோதும் கிடைக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.  

    ×