என் மலர்
நீங்கள் தேடியது "foodwaste"
- உலகளவில் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு தனிநபர் 79 கிலோ அளவுக்கு உணவுக் கழிவுகளை ஏற்படுத்துவதாக சொல்லப்பட்டு இருக்கிறது.
- ரஷியாவில் ஒரு நபர் ஆண்டுக்கு 33 கிலோ உணவுக் கழிவுகளை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (யு.என்.இ.பி.) சமீபத்திய அறிக்கையில், உலகில் தனிமனிதர்களால் ஓராண்டில் ஏற்படுத்தப்படும் உணவுக் கழிவுகள் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு இருக்கின்றன? என்ற புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு தனிநபர் 79 கிலோ அளவுக்கு உணவுக் கழிவுகளை ஏற்படுத்துவதாக சொல்லப்பட்டு இருக்கிறது.
இது இந்தியாவில் ஓராண்டில் மட்டும் தனிநபர் மூலம் 55 கிலோ உணவுக் கழிவுகள் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இவை சமைத்த உணவு, காய்கறித் தோல்கள் மற்றும் கெட்டுப்போன உணவுகளை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்ட அறிக்கை ஆகும். இந்த பட்டியலில் குறைந்த அளவில் உணவுக் கழிவுகளை ஏற்படுத்தும் நாடுகளில், ரஷியா இருக்கிறது. ரஷியாவில் ஒரு நபர் ஆண்டுக்கு 33 கிலோ உணவுக் கழிவுகளை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில், தனிநபர் அதிகமாக ஓராண்டில் உணவுக் கழிவுகளை ஏற்படுத்தும் நாடுகளில், மாலத்தீவு (தனிநபர் 207 கிலோ) உள்ளது. அதற்கடுத்தபடியாக, எகிப்து (163 கி.கி.), ஈராக் (143 கிலோ), பாகிஸ்தான் (130 கிலோ), மெக்சிகோ (105 கிலோ), சவுதிஅரேபியா (105 கிலோ), ஆஸ்திரேலியா (98 கிலோ), தென்கொரியா (95 கிலோ), பிரேசில் (94 கிலோ) உள்ளிட்ட நாடுகள் வருகின்றன.
ஐ.நா. உருவாக்கியிருக்கும் இந்த புள்ளி விவரங்களில் வெறும் உணவுக் கழிவுகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. இது இல்லாமல், காகிதம், பிளாஸ்டிக், துணிகள் மற்றும் பிற கழிவுகளையும் சேர்த்தால், இந்த அளவு இன்னும் அதிகரிக்கும் என்றே சொல்லப்படுகிறது. அதன்படி, பார்க்கும் போது, இந்தியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக 0.35 கிலோ முதல் 0.6 கிலோ வரை என எடுத்துக் கொண்டால், ஆண்டுக்கு சுமார் 125 கிலோ முதல் 200 கிலோ வரை மொத்த கழிவுகள் உருவாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பழைய செல்போன், வயர்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் என ஆண்டுக்கு சுமார் 2 கிலோ வரை மின் கழிவுகளை உருவாக்குகின்றனர் என்ற மற்றொரு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உணவுக்கழிவோ, எலெக்ட்ரானிக் கழிவோ எதுவாக இருந்தாலும் அவற்றை மறுசுழற்சி செய்தால் மனித குலத்துக்கு பயன் தரும்.
நம்மில் பெரும்பாலானோருக்கு வீட்டில் சாப்பிடும்போது, பாதி உணவை உண்ணாமல் குப்பை தொட்டிகளில் போடும் வழக்கம் உள்ளது. வீட்டில் மட்டுமல்லாது வெளியே ஹோட்டல்களிலும் இதுபோன்று செய்வதுண்டு. ஹோட்டலில் புதிய உணவுகள் இருந்தால் ருசிபார்க்க முதலில் ஆர்டர் செய்துவிட்டு, பின்னர் பிடிக்கவில்லை என்றால் அதனை கொட்டுவதும் புதிதல்ல.
இதுபோன்று உணவின் அருமை தெரியாமல் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தெலுங்கானாவின் ஹோட்டல் ஒன்று புதிய நடவடிக்கை ஒன்றை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகின்றது.
தெலுங்கானாவின் வாராங்கல் பகுதியில் கேதாரி உணவகம் உள்ளது. இங்கு பல மக்களும் வாடிக்கையாளர்களாக இருந்து வருகின்றனர். இந்நிறுவனத்தில் தரமான உணவுகள் வழங்குவது மட்டுமல்லாமல் உணவை வீணாக்குவதை தடுப்பதும் தங்கள் குறிக்கோளாகும் என ஹோட்டலின் உரிமையாளர் லிங்காலா கேதாரி கூறினார்.
உணவை வீணாக்குவதை தடுப்பதற்காக, அந்த ஹோட்டலின் வாசலில் உணவு வகைகளின் போர்ட்டுடன் சேர்ந்து இதற்கான விளம்பர பலகையும் வைக்கப்பட்டுள்ளது. சாப்பிட்டபின் தட்டில் உணவு மீதம் இருந்து அதனை குப்பைகளில் கொட்ட நேர்ந்தால், வாடிக்கையாளர்கள் ஒரு தட்டிற்கு ரூ.50 கட்டாயம் அபராதம் செலுத்த வேண்டும் என அந்த விளம்பர பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை செய்து, இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் இந்த அபராதத் தொகை தற்போது ரூ.14000 வரை வசூல் செய்யப்பட்டுள்ளது என லிங்காலா தெரிவித்தார். இந்த புதிய நடவடிக்கையால் தற்போது உணவு வீணாவது வெகுவாக குறைந்துள்ளது எனவும், ஆர்டர் செய்வதிலும் கவனமாக உள்ளனர் எனவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதுபோன்ற அறிவிப்பினை செய்த பின்னரும் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய அவர், வாடிக்கையாளர்களுக்கு உணவு பிடிக்கவில்லை என்றால், அபராதம் தர இருப்பதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. #Foodwaste #Hotelcollectfine






