என் மலர்tooltip icon

    இந்தியா

    • போக்குவரத்து மண்டலங்களைப் பொறுத்து, எரிவாயு விலை குறைப்பு மாறுபடும்
    • பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தின் கட்டண சீர்திருத்தத்தைத் தொடர்ந்து இந்த விலைகுறைப்பு ஏற்பட்டுள்ளது.

    இயற்கை எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் நிறுவனம் சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விலையை குறைத்துள்ளது. சிஎன்ஜி மற்றும் வீட்டிற்கு குழாய் மூலம் வழங்கப்படும் இயற்கை எரிவாயு (PNG) விலையை 4 ரூபாய் வரை குறைத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தின் கட்டண சீர்திருத்தத்தைத் தொடர்ந்து இந்த விலைகுறைப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து மண்டலங்களைப் பொறுத்து, எரிவாயு விலை குறைப்பு மாறுபடும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. குஜராத் மற்றும் அதை ஒட்டிய மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா பகுதிகளில், சிஎன்ஜி விலை தற்போது கிலோவுக்கு ரூ. 0.50 முதல் ரூ. 1.90 வரை குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், வீடுகளுக்கான பிஎன்ஜி (PNG) எரிவாயு விலை ஒரு கன மீட்டருக்கு  ரூ. 1.10 வரை குறைக்கப்பட்டுள்ளது. 

    ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா-என்சிஆர், வடக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் எல்லையோர உத்தரப் பிரதேசத்தில், சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.1.40 முதல் ரூ.2.55 வரை குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், வீட்டு உபயோகத்திற்கான பிஎன்ஜி விலை ஒரு கன மீட்டருக்கு ரூ.1.10 முதல் ரூ.4.00 வரை குறைக்கப்பட்டுள்ளது.

    ATGL-ஐத் தவிர, GAIL Gas நிறுவனமும் சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விலையில் ஒரு ரூபாய் குறைத்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய நகர எரிவாயு விற்பனை நிறுவனமான இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் (Indraprastha Gas Ltd), டெல்லி மற்றும் NCR நகரங்களில் சமையலறைக்கு குழாய் மூலம் விநியோகிக்கப்படும் இயற்கை எரிவாயுவின் (PNG) விலையை ஒரு கன மீட்டருக்கு (scm) 70 காசுகள் குறைத்துள்ளது. அதே நேரத்தில், திங்க் கேஸ் (Think Gas) நிறுவனம் CNG விலையை ஒரு கிலோவிற்கு ரூ. 2.50 வரையிலும், PNG விலையை ஒரு கன மீட்டருக்கு ரூ. 5 வரையிலும் குறைத்துள்ளது


    • மும்பை- அகமதாபாத்தை இணைக்கும் வகையில் 508 கி.மீ. தொலைவிற்கு புல்லட் ரெயில் திட்டம்.
    • 8 சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட இருக்கின்றன.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, குஜராத் மாநிலம் அகமதாபாத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரெயில் திட்டம் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பல இடங்களில் மலையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் பல்கார் மாவட்டத்தில் 1.5 கி.மீ. தொலைவிலான சுரங்கப்பணி நிறைவடைந்துள்ளது. விஹார் மற்றும் பொய்சர் நிலையத்திற்கு இடையில் மலையை குடைந்து இந்த சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நிறைவடைந்த 2-வது மிகப்பெரிய சுரங்கப்பணி நிறைவடைந்துள்ளது. முன்னதாக 5 கி.மீ. தூரம் கொண்ட தானே- பிகேசி இடையிலான சுரங்கப்பணி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது. மொத்தமாக 5 சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மும்பை- அகமதாபத்தை இணைக்கும் 508 கி.மீ. தொலைவில் உள்ள புல்லட் ரெயில் குஜராத், மகாராஷ்டிரா, தாத்ரா அண்டு நகர் ஹவேலி வழியே செல்லும். இந்த திட்டம் நிறைவடைந்த பிறகு, மும்பை- குஜராத் இடையிலான பயணம் ஒரு மணி நேரம் 58 நிமிடங்களாக குறைக்கப்படும். இந்த திட்டம் ஜப்பானின் தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.

    மலையை குடைந்து 8 சுரங்கம் அமைக்கப்பட இருக்கிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 7 சுரங்கம் அமைக்கப்பட இருக்கிறது. இது 6.05 கி.மீ. தூரத்தில் அமைக்கப்பட இருக்கிறது. குஜராத்தில் 350 மீ. தூரததில் அமைய இருக்கிறது.

    508 கி.மீ. தூரத்தில் 27.4 கி.மீ. சுரங்கம் வழியாக செல்லும். இதில் 21 கி.மீ. பூமிக்கு அடியில் தோண்டப்படும் சுரங்கப்பாதை ஆகும்.

    இந்த மெகா திட்ம் சபர்மதி, அகமதாபாத், ஆனந்த், வதோதரா, பரூச், சூரத், பிலிமோரா, வாபி, பொய்சர், விரார், தானே, மும்பை பகுதிகளை இணைக்கும்.

    • வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை ரூ. 9.20 கோடிக்கு வாங்கியது.
    • ஷாருக்கான் ஒரு முஸ்லிம் என்பதால் அவர் மீது இத்தகையத் தாக்குதல் நடத்தப்படுவதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

    உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான சங்கீத் சோம், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை துரோகி என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

    சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில், ஷாருக்கானுக்குச் சொந்தமான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை ரூ. 9.20 கோடிக்கு வாங்கியது.

    இதுகுறித்து அண்மையில் பேசிய பாஜக தலைவர் சங்கீத் சோம், "ஒருபுறம், வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள். மறுபுறம், ஐபிஎல் ஏலத்தில் கிரிக்கெட் வீரர்கள் வாங்கப்படுகிறார்கள்.

    ஷாருக் கான் 9 கோடி ரூபாய் செலவழித்து ரஹ்மானை வாங்கியுள்ளார். இன்று, வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. பிரதமரை அவமதிக்கிறார்கள்.

    ஆனால் ஷாருக்கான் போன்ற துரோகிகள் 9 கோடி ரூபாய் செலவழித்து அவர்களுக்கு உதவுகிறார்கள். அவர்களுக்கு இந்த நாட்டில் வாழ உரிமை இல்லை.

    முஸ்தபிசுர் ரஹ்மான் போன்ற வங்கதேச வீரர்கள் இந்தியாவுக்கு விளையாட வந்தால், அவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியே வர முடியாது. அவர்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பும்" என்று தெரிவித்தார்.

    இதனை வெறுப்பு அரசியல் என்றும், ஷாருக்கான் ஒரு முஸ்லிம் என்பதால் அவர் மீது இத்தகையத் தாக்குதல் நடத்தப்படுவதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.  

    • பேரழிவால் சிதைந்த மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரு முயற்சி
    • எல்ஸ்டன் எஸ்டேட் நிலத்தில் மொத்தம் 410 வீடுகள் அமைய உள்ளன

    வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக  300 வீடுகள் மற்றும் அவற்றுக்கான வசதிகள் தயார் செய்யப்பட்டு, அடுத்த மாதம் ஒப்படைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

    நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கேரள அரசின் 'லைஃப் மிஷன்' திட்டத்தின் கீழ் இதுவரை 4.76 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், 1.24 லட்சம் வீடுகளின் கட்டுமானம் தற்போது பல்வேறு கட்டங்களில் உள்ளது, பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

    முண்டக்காய்-சூரல்மலா நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக வயநாட்டில் உள்ள கல்பெட்டா பைபாஸ் அருகே உள்ள எல்ஸ்டன் எஸ்டேட் நிலத்தில் கட்டப்பட்டு வரும் டவுன்ஷிப்பின் ஒரு பகுதியாக இந்த வீடுகள் உள்ளன. இதில் மொத்தம் 410 வீடுகள் அமைய உள்ளன. இந்த வீடுகளில் அத்தியாவசிய வசதிகள் அனைத்தும் இருக்கும் எனவும் தெரிவித்தார். 

    இது வெறும் வீடுகளை வழங்குவது மட்டுமல்லாமல், பேரழிவால் சிதைந்த மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரு முயற்சி. பேரிடர்களால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பமும் முன்பை விட பாதுகாப்பான மற்றும் சிறந்த வாழ்க்கை இடத்தைப் பெறுவதை உறுதி செய்வதே எங்கள் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார். 

    • திரிணாமுல் காங்கிரஸ் 2021-ல் 294 தொகுதிகளில் 213-ல் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
    • வரும் தேர்தலில் பாஜக 3-ல் 2 பகுதி இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும் என அமித் ஷா தெரிவித்திருந்தார்.

    மேற்கு வங்க மாநிலத்தில் வருகிற மார்ச்- ஏப்ரல் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த வாரம் அமித் ஷா மேற்கு வங்கம் சென்றிருந்தார். அப்போது, மேற்கு வங்கத்தில் ஊடுருவல்காரர்களை அடையாளம் மட்டும் காணமாட்டோம். அவர்களை வெளியேற்றுவோம். மேற்கு வங்கத்தில் 3-ல் இரண்டு பங்கு இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்" எனக் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யான அபிஷேக் பானர்ஜி கூறியதாவது:-

    தேர்தல் ஆணையம் போன்ற சக்திகளுக்கு எதிராக என்னுடைய சண்டை இன்றிலிருந்து தொடங்குகிறது. என்னுடைய வார்த்தைக்கு குறித்து வைத்துக் கொள்ளுங்கள். கடந்த 2021 தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்களில் வென்றதோ, அதைவிட தற்போது குறைந்தபட்சம் கூடுதலாக ஒரு இடத்திலாவது வெற்றி பெறும்.

    இவ்வாறு அபிஷேக் பானர்ஜி தெரிவித்தார்.

    2021 தேர்தல் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனியாக போட்டியிட்டு 294 தொகுதிகளில் 213-ல் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

    • ஒருங்கிணைந்த ஆந்திராவில் அநீதிக்கு ஆளாக்கப்பட்டதால், தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது.
    • கிருஷ்ணா, கோதாவரி நீர் பயன்படுத்துதலில் பி.ஆர்.எஸ். ஆட்சியில் மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கானா ஆந்திர மாநிலத்துடன் ஒன்றாக இருந்தபோதிலும் விட, கே. சந்திரசேகர ராவ் ஆட்சிச் காலத்தில் நீர்ப்பாசன திட்டத்திற்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டது. இதற்காக பி.ஆர்.எஸ். ஆட்சியில் நீர்ப்பாசன துறை அமைச்சர்களாக இருந்த சந்திரசேக ராவ் மற்றும் அவருடைய மருமகன் டி. ஹரிஷ் ராவ் ஆகியோர் தூக்கில் போட தகுதியானவர்கள் என தெலுங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கடுமையாக விமர்சித்துள்ளார்.

    ஆற்று நீர் பிரச்சினை தொடர்பாக, நீர்ப்பாசனத்துறை அமைச்சர் என். உட்டம் குமார் ரெட்டி உருவாக்கப்பட்ட திட்டம் குறித்து விளக்கினார். அப்போது ரேவந்த் ரெட்டி கூறியதாவது:-

    ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநிலத்தில் அநீதிக்கு ஆளாக்கப்பட்டதால், தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. கிருஷ்ணா, கோதாவரி ஆற்று நீர் பயன்படுத்துதல் மற்றும் நிதி ஒதுக்குதல் ஆகியவற்றில் பி.ஆர்.எஸ். ஆட்சியில் மாநிலத்திற்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

    நம்மைச் சுரண்டும் வெளியாட்களை நாம் விரட்டியடிப்போம், நம்மைச் சுரண்டும் நம் சொந்தப் பகுதி மக்களை உயிருடன் புதைப்போம் என்ற தெலுங்கானா கவிஞர் கலோஜி நாராயணா ராவின் கருத்து சுட்டிக் காட்டுகிறேன்.

    பி.ஆர்.எஸ். ஆட்சிக் காலத்தில் தெலுங்கானா மாநில பிரிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முன்னாள் ஆந்திர மாநில முதல்வர் என். கிரண் குமார் ரெட்டியின் நிலையை இருவரும் எதிரொலித்ததால், தெலுங்கானா மாநிலத்திற்கு மிகப்பெரிய தீமை.

    கவிஞர் என்ன சொன்னரோ, அது இந்த இருவருக்கும் பொருந்தும். ஆற்று நீர் விவகாரங்களில் நடந்த அநீதிக்காக அவர்களைத் தூக்கிலிட்டாலும் அது தவறில்லை என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்.

    இவ்வாறு ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    இதற்கு பிஆர்எஸ் கட்சி சந்திரசேகராவ் மற்றும் அவரது மருமகன் டி. ஹரிஷ் ராவ் மரணத்தை விரும்புவதாக ரேவந்த் ரெட்டி மீது குற்றம்சாட்டியுள்ளது.

    • வங்கதேசத்தவரைக் கண்டறியும் இயந்திரத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம் என்று போலீசார் கூறினர்.
    • அவர்கள் கையில் போனை வைத்துக்கொண்டு என் மைத்துனரின் முதுகில் தேய்த்தனர்.

    உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள குடிசைப் பகுதி ஒன்றில் அம்மாநில போலீசார் சிலர் அதிரடியாக நுழைந்து அங்கு யாராவது வங்கதேசத்தவர் சட்டவிரோதமாக வசிக்கிறீர்களா? என சோதனையிட்டனர்.

    இதன்போது ஒரு போலீஸ், அங்கு வசிக்கும் ஒருவரின் முதுகை தனது செல்போனில் ஸ்கேன் செய்து போல தேய்த்து நீ வங்கதேசத்தை சேர்த்தவன் என இதில் காட்டுகிறது என கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.

    வைரல் வீடியோவில், போலீஸ்காரர், அந்த நபரின் முதுகில் மொபைல் போனை வைத்து, சூப்பர் மார்க்கெட் பார்கோடு ஸ்கேனர் போல தேய்க்கிறார். அந்த நபர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விலாசம் இதன் மூலம் தெரிந்துவிடும் என்று அவர் கூறுவது பதிவாகியுள்ளது.

    இந்தச் சம்பவத்தின் போது அங்கிருந்த பாதிக்கப்பட்ட நபரின் உறவினர் ரோஷ்னி இன்று, செய்தியாளர்களிடம் பேசுகையில், டிசம்பர் 23 அன்று உள்ளூர் காவல் நிலைய அதிகாரி (SHO) தலைமையிலான போலீசார் எங்கள் பகுதிக்கு வந்தனர்.

    எங்களிடம் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களைக் கேட்டனர். நாங்களும் ஆவணங்களைக் காட்டினோம்.

    வங்கதேசத்தவரைக் கண்டறியும் இயந்திரத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம் என்று போலீசார் எங்களிடம் கிண்டலாகக் கூறினர்.

    ஆனால் உண்மையில் அங்கே எந்த இயந்திரமும் இல்லை. அவர்கள் கையில் போனை வைத்துக்கொண்டு என் மைத்துனரின் முதுகில் தேய்த்தனர். இவ்வாறு செய்வதன் மூலம் அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவரா என்பது தெரிந்துவிடும் என்று கூறினர்.

    நாங்கள் 1986 முதல் இங்கே வசிக்கிறோம். எங்கள் பூர்வீகம் பீகார் மாநிலம் அராரியா மாவட்டம் ஆகும். அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பிறகு போலீசார் அங்கிருந்து சென்றனர்" என்று தெரிவித்தார்.

    போலீசாரின் இந்த செய்கை, மக்களை அவமானப்படுத்தும் செயல் என்று இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    அவர்களிடம் இருந்து உண்மையையே வரவழைக்கவே இவ்வாறு செய்ததாக சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் தனது செயலுக்கு நியாயம் கூறியுள்ளார். 

    • நோ-பார்க்கிங் இடத்தில் வாகனத்தை நிறுத்தியதால் தகராறு.
    • சப்-இன்ஸ்பெக்டர் எனக்கூட பார்க்காமல் பொது இடத்தில் வைத்து அடித்துள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் கவுன்சிலராக (ஹுகுல்கஞ்ச்) இருப்பவர் சந்திர ஸ்ரீனிவாஸ்தவா. இவரது மகன் நேற்று சவுக் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், வாகனங்களை நிறுத்த தடை செய்யப்பட்ட பகுதியில் வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

    அப்போது, சப்-இன்ஸ்பெக்டர் இங்கே வாகனத்தை நிறுத்தக் கூடாது எனக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பேசிக் கொண்டிருக்கும்போதே, சற்றென்று சப்-இன்ஸ்பெக்டரை கவுன்சிலர் மகன் பளார் என அறைந்துள்ளார்.

    இதனால் சப்-இன்ஸ்பெக்டரும், அங்கிருந்த மக்களும் அதிர்ச்சியடைந்தனர். பொதுமக்கள் ஒன்று கூடி கவுன்சிலர் மகனை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அவரை போலீசார் பொதுமக்களிடம் இருந்து மீட்டனர்.

    கவுன்சிலர் மகன் மீது வழக்குப்பதிவு செய்து, சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

    • 2024 நாடாளுமன்ற தேர்தலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது
    • ஆலந்த் சட்டமன்றத் தொகுதியில் நடந்ததாகக் கூறப்படும் 'வாக்குத் திருட்டு' குறித்து மட்டும் ஏன் பேசவில்லை?

    இந்தியாவில் பண மற்றும் நேரச்செலவை மிச்சப்படுத்தவும், தேர்தலை எளிமையாக்கவும் கடந்த பல ஆண்டுகளாகவே மின்னணு இயந்திரங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நேரம், பொருட்செலவை கணக்கில் கொண்டாலும் இயந்திரங்கள் மூலம் தேர்தலில் மோசடி நடப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. சமீபத்தில் கூட பீகார் தேர்தலுக்கு முன் ராகுல் காந்தி வாக்கு திருட்டு தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    இந்நிலையில் கர்நாடகாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பெரும்பாலான மக்கள் வாக்குச்சீட்டு முறையைவிட மின்னணு இயந்திரங்களைதான் நம்புகின்றனர் என கண்டறியப்பட்டுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த கணக்கெடுப்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது பொதுமக்களுக்கு வலுவான நம்பிக்கை இருப்பதைக் காட்டியுள்ளது என பல்வேறு ஆங்கில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

    பெங்களூரு, பெலகாவி, கலபுரகி மற்றும் மைசூரு ஆகிய நிர்வாகப் பிரிவுகளில் உள்ள 102 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து 5,100 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. "Evaluation of Endline Survey of KAP (Knowledge, Attitude and Practice) of Citizens" என்ற தலைப்பிலான கணக்கெடுப்பின்படி, 83.61% பேர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம்பகமானவை என்று தாங்கள் நம்புவதாகத் தெரிவித்துள்ளனர். 69.39% பேர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் துல்லியமான முடிவுகளை வழங்குகின்றன எனக்கூறியுள்ளனர். 14.22% பேர் இதனை ஒப்புக்கொண்டனர். 

    இந்நிலையில் இந்த சர்வேவை குறிப்பிட்டு கர்நாடக பாஜக தலைவர் ஆர். அசோக், ராகுல் காந்தியை விமர்சித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில், 'பல ஆண்டுகளாக, ராகுல் காந்தி நாடு முழுவதும் பயணம் செய்து ஒரே ஒரு கதையைச் சொல்லி வருகிறார்: இந்தியாவின் ஜனநாயகம் 'ஆபத்தில்' இருக்கிறது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 'நம்பகமற்றவை', நமது நிறுவனங்களை நம்ப முடியாது என்பதுதான் அது. ஆனால், கர்நாடகா இப்போது முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையைச் சொல்லியிருக்கிறது' எனக் குறிப்பிட்டுள்ளார். 

    மேலும் மாநிலம் தழுவிய இந்த ஆய்வு, மக்கள் தேர்தல்களை நம்புகிறார்கள், மக்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்புகிறார்கள், மேலும் மக்கள் இந்தியாவின் ஜனநாயக செயல்முறையை நம்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்தியதாக தெரிவித்த பாஜக, இது காங்கிரஸுக்கு ஒரு சம்மட்டி அடி எனவும் தெரிவித்துள்ளது. 

    பாஜகவின் விமர்சனத்திற்கு பதிலளித்த கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே, இந்த ஆய்வு மாநில அரசால் நடத்தப்படவில்லை என்றும், தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டது என்றும், மேலும் அதை வெளியிட்டது ஒரு அரசு நிறுவனம் என்றும் தெரிவித்துள்ளார். 

    பிரியங்க் கார்கேவை தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த காங்கிரஸின் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள இந்தக் கருத்துக்கணிப்பை மேற்கோள் காட்டும் பாஜக, கர்நாடகாவின் ஆலந்த் சட்டமன்றத் தொகுதியில் நடந்ததாகக் கூறப்படும் 'வாக்குத் திருட்டு' குறித்து மட்டும் ஏன் பேசவில்லை என்று கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். 

    • இந்தூரில் கழிவு நீர் கலந்த குடிநீர் குடித்து 11 பேர் உயிரிழப்பு.
    • விசாரணை நடத்த முதல்வர் குழு அமைத்துள்ளார்.

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இங்குள்ள பாகிரத்புரா பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கடந்த 24-ந்தேதி முதல் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    கழிவுநீர் கலந்த மாசுபட்ட குடிநீரை குடித்ததுதான் இதற்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் முதல்கட்டமாக 7 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த மேலும் 4 பேர் தற்போது பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, விஷம் விநியோகிக்கப்படுகிறது என தனது விமர்சித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி, "நிர்வாகம் கும்பகர்ணன் போன்று தூங்கிக் கொண்டிருக்கையில் இந்தூரில் தண்ணீர் இல்லை, விஷம் விநியோகிக்கப்படுகிறது.

    வீடுதோறும் துயரம் பரவியுள்ளது, ஏழைகள் நிர்க்கதியாய் உள்ளனர். இதற்கெல்லாம் மேலாக, பாஜக தலைவர்களின் ஆணவமான பேச்சுகள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தேவைப்பட்டது; அரசாங்கம் அதற்கு பதிலாக ஆணவத்தை கொடுத்துள்ளது.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இந்தூர் கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்து பொதுமக்கள் உயிரிழந்தது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி பேசிய, மத்திய பிரதேச மாநில தலைவரும், பாராளுமன்ற விவகாரத்துறை துணை மந்திரியுமான கைலாஷ் விஜவர்கியா சர்ச்சைக்குரிய வகையில் பதில் அளித்த்திருந்தார்.

    • Grok AI இடம் Prompt மூலம், அந்தப் பெண்களின் ஆடைகளைக் குறைத்தும், அவர்களை ஆபாசமாகவும் சித்தரிக்கவும் கூறுகின்றனர்.
    • கீழ்த்தரமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் 'Grok' இத்தகு நடத்தையை ஊக்குவிக்கிறது.

    எக்ஸ் தளத்தில் உள்ள Grok செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பெண்களை தவறாக சித்தரிக்க பயன்படுத்தப்படுவது குறித்து உத்தவ் சிவசேனா கட்சி எம்.பி. பிரியங்கா சதுர்வேதி கவலை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரியங்கா சதுர்வேதி, மத்திய ரெயில்வே மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அவரது கடிதத்தில், "

    சமூக வலைதளங்களில், குறிப்பாக எக்ஸ் தளத்தில் ஒரு புதிய ஆபத்தான போக்கு உருவெடுத்துள்ளது.

    எக்ஸ் தளத்தின் 'Grok AI' வசதியைப் பயன்படுத்தி, ஆண்கள் சிலர் போலி கணக்குகளை உருவாக்கி பெண்களின் புகைப்படங்களைப் பதிவேற்றுகின்றனர்.

    பின்னர் அந்த Grok AI இடம் Prompt மூலம், அந்தப் பெண்களின் ஆடைகளைக் குறைத்தும், அவர்களை ஆபாசமாகவும் சித்தரிக்கவும் கூறுகின்றனர். Grok ஏஐயும் அப்பெண்களின் ஆடைகளை குறைகிறது.

    இது சமூக வலைதளங்களில் தங்கள் புகைப்படங்களைப் பதிவேற்றும் பெண்களையும் குறிவைத்து நடத்தப்படுகிறது.

    மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இத்தகைய கீழ்த்தரமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் 'Grok' இத்தகு நடத்தையை ஊக்குவிக்கிறது.

    இது பெண்களின் தனியுரிமையை மீறுவதுடன், அவர்களின் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்துவதுமாகும்.

    பெண்களுக்கான பாதுகாப்பான இடமாக இந்தத் தளம் இருப்பதை உறுதி செய்யும் வகையில், தங்கள் ஏஐ செயலிகளில் பாதுகாப்பு அம்சங்களை உருவாக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் நீங்கள் அமைச்சராக வலுவாக வலியுறுத்த வேண்டும்.

    இதே போன்ற போக்குகள் மற்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தளங்களிலும் எந்தத் தடையுமின்றி அரங்கேறுவதை நாம் பார்க்கிறோம்.

    பொதுவெளியிலும் டிஜிட்டல் முறையிலும் பெண்களின் கண்ணியம் மீறப்படுவதை நம் நாடு வேடிக்கை பார்க்க முடியாது.

    மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களிடம் இதை எடுத்துரைக்கும் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

    • பறவைகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக ஜபல்பூருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
    • இறந்த பறவைகளின் வயிற்றில் அரிசி மற்றும் சிறிய கூழாங்கற்கள் காணப்பட்டது.

    மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் நர்மதா நதிக்கரையில் உணவு விஷம் காரணமாக 200 கிளிகள் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பத்வா பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் உள்ள ஒரு நீர்வழிப் பாலம் அருகே இறந்து கிடந்த கிளிகள் கண்டெடுக்கப்பட்டன. மீட்பு நடவடிக்கைகளின்போது சில கிளிகள் உயிருடன் இருந்தன. ஆனால் உணவின் நச்சுத்தன்மை மிகவும் கடுமையானதாக இருந்ததால் அவை சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டன என்று மாவட்ட வனவிலங்கு காப்பாளர் டோனி சர்மா தெரிவித்தார்.

    வனத்துறை அதிகாரிகள் நீர்வழிப் பாலத்தின் அருகே கிளிகளுக்கு உணவளிப்பதை தடைசெய்து, அந்த இடத்தில் ஊழியர்களை நியமித்துள்ளனர்.

    பறவைகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக ஜபல்பூருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக கால்நடை துறை அதிகாரிகள் கூறுகையில்,

    கிளிகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த கால்நடை மருத்துவர் டாக்டர் மனிஷா சவுகான், கிளிகளில் உணவில் விஷத்தின் அறிகுறிகள் காணப்பட்டதாகவும், பறவைக் காய்ச்சலுக்கான எந்த அறிகுறிகளும் இல்லை. மக்கள் பெரும்பாலும் அறியாமலேயே பறவைகளுக்கு உணவளிக்கிறார்கள். இது அவற்றின் செரிமான அமைப்புக்கு ஆபத்தானது என்று கூறினார்.

    கால்நடை விரிவாக்க அதிகாரி டாக்டர் சுரேஷ் பாகேல் கூறுகையில், இறந்த பறவைகளின் வயிற்றில் அரிசி மற்றும் சிறிய கூழாங்கற்கள் காணப்பட்டது. இறப்புகள் முறையற்ற உணவினால் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட வயல்களில் உணவளிப்பது மற்றும் நர்மதா நதியிலிருந்து வரும் நீர் ஆகியவை இதற்கு காரணங்களாக இருக்கலாம் என்று கூறினார்.

    பாலத்திற்கு வருபவர்கள் சமைத்த அல்லது மீதமுள்ள உணவை பறவைகளுக்கு உணவளிப்பதால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×