என் மலர்
இந்தியா
- லோக்பால் அமைப்பு 'BMW 3 Series 330Li' ரக கார்களை வாங்கத் திட்டமிட்டிருந்தது.
- ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் லோக்பால் தலைவராக உள்ளார்.
ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பால், சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான 7 சொகுசு பிஎம்டபிள்யூ கார்களை வாங்குவதற்கான சர்ச்சைக்குரிய டெண்டரை ரத்து செய்துள்ளது.
லோக்பால் உடைய தலைவர் மற்றும் அதன் 6 உறுப்பினர்களுகளின் அலுவலக பயன்பாட்டிற்காக மொத்தம் 7 பிஎம்டபிள்யூ சொகுசு கார்களை வாங்குவதற்கான டெண்டர் கடந்த 2025 அக்டோபரில் வெளியிடப்பட்டது.
லோக்பால் அமைப்பு 'BMW 3 Series 330Li' ரக கார்களை வாங்கத் திட்டமிட்டிருந்தது. தற்போது ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் லோக்பால் தலைவராக உள்ளார்.
ஊழலை ஒழிப்பதற்கான ஒரு அமைப்பு, இவ்வளவு பெரிய தொகையில் சொகுசு கார்களை வாங்குவது குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, சொகுசு கார்கள் வாங்கும் முடிவு குறித்துலோக்பால் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதன்படி இந்த கொள்முதல் திட்டத்தை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
- இளம்பெண்கள் அதிக மதுபோதையில் சாலைகளில் தடுமாறி விழுவதும், மயக்க நிலையில் இருப்பதும் பதிவாகியுள்ளது.
- இந்திய நகரங்களின் இரவு நேரக் கலாச்சாரம் குறித்து காரசாரமான விவாதம் நடந்து வருகிறது.
புத்தாண்டு கொண்டாட்டத்துடன் 2026 ஆண்டு ஆண்டு நேற்று இனிதே தொடங்கியது. டிசம்பர் 31 இரவில் புத்தாண்டை வரவேற்க இந்தியாவெங்கும் பலர் வீதிகளில் திரண்டனர்.
அதே சமயம் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இளைஞர்கள், பாட்டு, கச்சேரி, பார்ட்டி என அன்றைய இரவு புத்தாண்டை கொண்டாடித் தீர்த்தனர்.
அந்த வகையில் நாடு முழுவதிலுமிருந்து வந்து, இளைஞர்கள் அதிகம் பணியாற்றும் கர்நாடக தலைநகர் பெங்களூருவிலும் இரவில் கொண்டாட்டம் களைகட்டியது.
ஆனால் பல இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அன்றைய இரவு மது மற்றும் போதையின் பிடியில் வீதிகளில் தள்ளாடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இளைஞர்கள் மத்தியில் வளர்த்து வரும் போதைக் கலாச்சாரம் குறித்த கவலையை இவை ஏற்படுத்தி உள்ளன. பலரும் இந்த வீடியோக்களை தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த வீடியோக்களில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அதிக மதுபோதையில் சாலைகளில் தடுமாறி விழுவதும், சிலர் மயக்க நிலையில் இருப்பதும் பதிவாகியுள்ளது.
குறிப்பாக, பெங்களூருவின் புகழ்பெற்ற எம்.ஜி. சாலைமற்றும் இந்திரா நகர் பகுதிகளில் இதுபோன்ற காட்சிகள் அதிகமாகக் காணப்பட்டன. அதேபோல டெல்லி அருகே உள்ள குரேகானிலும் இதுபோன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன.
இந்த வீடியோக்கள் பகிரப்பட்டு, இந்திய நகரங்களின் இரவு நேரக் கலாச்சாரம் குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
- கழிவுநீர் கலந்த மாசுபட்ட குடிநீரை குடித்தது தான் இதற்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
- குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்தூர்:
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இங்குள்ள பாகிரத்புரா பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கடந்த 24-ந்தேதி முதல் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கழிவுநீர் கலந்த மாசுபட்ட குடிநீரை குடித்தது தான் இதற்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் முதல்கட்டமாக 7 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த மேலும் 4 பேர் தற்போது பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ், 3 நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஒரு மண்டல அதிகாரி மற்றும் ஒரு உதவி பொறியாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்-மந்திரி மோகன் யாதவ் அறிவித்தார்.
குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த பிரச்சனை கடந்த 6 மாதங்களாக நீடித்து வருவதாகவும், இதன் விளைவாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் அந்த பகுதியில் வசிக்கும் 1,400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- 1971-ஆம் ஆண்டு மருத்துவக் கருக்கலைப்புச் சட்டத்தில் குறிப்பிடவில்லை.
- உயர்நீதிமன்ற நீதிபதி சுவீர் செகல் விசாரித்தார்.
கருக்கலைப்புக்கு பெண்ணின் விருப்பமும் சம்மதமும் மட்டுமே போதுமானது என்றும் கணவனின் சம்மதமம் தேவையில்லை எனவும் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பஞ்சாப்பைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவர், தனது 16 வார கருவைக் கலைக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
தனது கணவருடனான உறவு சரியில்லை என்றும், அவர் பிரிந்து வாழ்வதாகவும் அந்தப் பெண் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சுவீர் செகல், "1971-ஆம் ஆண்டு மருத்துவக் கருக்கலைப்புச் சட்டத்தில் , கருக்கலைப்புக்கு கணவனின் சம்மதம் தேவை என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.
தனது கர்ப்பத்தைத் தொடர வேண்டுமா அல்லது கலைக்க வேண்டுமா என்று தீர்மானிக்க திருமணமான பெண்ணே மிகச்சிறந்த நீதிபதி. அவருடைய விருப்பம் மற்றும் சம்மதம் மட்டுமே சட்டப்படி செல்லுபடியாகும்" என தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
அந்தப் பெண் கருக்கலைப்பு செய்து கொள்ளும் அளவுக்கு உடல் ரீதியாகத் தகுதியுடன் இருக்கிறார் என்று மருத்துவக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் அவருக்கு கருக்கலைப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- வெறுப்புக்கும் கும்பல் கொலைகளுக்கும் எதிராகப் பேசிய ஒரு இளைஞரை, 1000 நாட்களுக்கு மேலாக விசாரணையின்றி சிறையில் வைத்திருப்பது ஜனநாயகத்திற்கு அழகல்ல
- CAA சட்டத்தின் கீழ் இலங்கைத் தமிழர்களுக்கும் முஸ்லிம்களை போல குடியுரிமை மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் நியூ யார்க் மேயராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி நேற்று பதவியேற்றார்.
நியூ யார்க் நகரின் முதல் முஸ்லீம் மேரியரான அவர் திருக்குர்ஆன் மீது சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றார். மேயர் தேர்தலில் மம்தானியை டிரம்ப் கடுமையாக எதிர்த்தது அறிந்ததே.
இந்நிலையில் 2020 டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தில் வெடித்த வன்முறை தொடர்பான வழக்கில் கைதாகி 5 வருடங்களாக சிறையில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் உமர் காலித் -க்கு மம்தானி கைப்பட கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில், "அன்புள்ள உமர், கசப்பான அனுபவங்களைப் பற்றியும், அவை நம்மைச் சிதைக்க அனுமதிக்கக் கூடாது என்பதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் நீங்கள் கூறிய வார்த்தைகளை நான் அடிக்கடி நினைத்துப் பார்க்கிறேன்.
உங்கள் பெற்றோரைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. நாங்கள் அனைவரும் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம்." என்று மம்தானி குறிப்பிட்டுள்ளார்.
உமர் காலிதின் நண்பர் பனோஜ்யோத்ஸ்னா லாஹிரி இந்த கடிதத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக 2023-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க வருகைக்கு முன்னதாக நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், உமர் காலிதின் சிறைக் குறிப்புகளை மம்தானி வாசித்தார்.
அப்போது அவர், "வெறுப்புக்கும் கும்பல் கொலைகளுக்கும் எதிராகப் பேசிய ஒரு இளைஞரை, 1000 நாட்களுக்கு மேலாக விசாரணையின்றி சிறையில் வைத்திருப்பது ஜனநாயகத்திற்கு அழகல்ல" என்று தெரிவித்திருந்தார்.
மேலும், கடந்த மாதம் உமர் காலிதின் பெற்றோர்கள் அமெரிக்கா சென்றிருந்தபோது, அவர்களை மம்தானி நேரில் சந்தித்துப் பேசினார். அப்போதுதான் இந்தக் கடிதம் கைமாறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
டெல்லி கலவரம்:
2020 பிப்ரவரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் வன்முறையை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டு 2020 செப்டம்பர் முதல் சிறையில் இருக்கும் உமர் காலிதுக்கு, தனது சகோதரியின் திருமணத்தில் பங்கேற்பதற்காக அண்மையில் 14 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.
டெல்லி கலவரம் தொடர்பான சதி வழக்கில்சமூக வலைதளங்களைப் பயன்படுத்தக் கூடாது, சாட்சிகளைச் சந்திக்கக் கூடாது போன்ற பல நிபந்தனைகளுடன் வழங்கப்பட்ட இந்த ஜாமீன் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 29 அவர் மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறைக்குத் திரும்பும் முன் உமர் காலித் தனது முகநூல் பக்கத்தில், "14 நாட்கள் சுதந்திரத்திற்குப் பிறகு மீண்டும் திகார் சிறைக்குச் செல்கிறேன். இந்த இருளை நாம் விரைவில் கடப்போம் என்ற நம்பிக்கையும் வலிமையும் நம் இதயங்களில் நிலைத்திருக்கட்டும்" என்று பதிவிட்டிருந்தார்.
சிஏஏ
2019 இல் மத்திய பாஜக அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து 2014 டிசம்பர் 31-க்கு முன் இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாத மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை அளிக்கிறது.
ஆனால், குடியுரிமை வழங்குவதில் இருந்து முஸ்லிம்களை விலக்குவதால், இது பாகுபாடு காட்டுவதாகவும், மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு எதிரானது என்றும் விமர்சிக்கப்பட்டது.
இது நாடு முழுவதும் பெரிய போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இலங்கைத் தமிழர்களுக்கும் முஸ்லிம்களை போல குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஆன்லைன் முன்பதிவு செய்யாத பக்தர்கள் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தரிசனம் செய்து வருகிறார்கள்.
- மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணைய தலைவர் மனோஜ்குமார் தலைமையிலான குழுவினர் சபரிமலைக்கு வந்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு சீசனையொட்டி கடந்த மாதம் 27-ந்தேதி மண்டல பூஜை முடிந்தது. தொடர்ந்து மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந்தேதி மாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது.
ஏற்கனவே வருகிற 19-ந்தேதி வரை ஆன்லைன் முன்பதிவு (தினசரி 70 ஆயிரம் பக்தர்கள்) நிறைவடைந்த நிலையில், ஆன்லைன் முன்பதிவு செய்யாத பக்தர்கள் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தரிசனம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி சபரிமலையில் திரளான பக்தர்கள் குவிந்தனர். காலை 11 மணி வரை நெய்யபிஷேகத்திற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு சன்னிதானத்தில் கேரள போலீஸ் சார்பில் பாதுகாப்பு தலைமை அதிகாரி ஏ.டி.ஜி.பி. ஸ்ரீஜித் தலைமையில் தீபம் ஏற்றி கொண்டாடப்பட்டது. மகர விளக்கை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு நேற்று வரை 3 நாட்களில் 2 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் நேற்று மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணைய தலைவர் மனோஜ்குமார் தலைமையிலான குழுவினர் சபரிமலைக்கு வந்தனர். அவர்கள் சபரிமலைக்கு வரும் குழந்தைகளின் நலனை உறுதி செய்வதற்காக பல்வேறு துறைகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக அந்த குழுவினர் ஏ.டி.ஜி.பி. ஸ்ரீஜித் மற்றும் தேவஸ்தான வாரிய உறுப்பினர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினர். மேலும் சபரிமலைக்கு வந்திருந்த சிறுவர், சிறுமிகளிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.
மேலும் சன்னிதானத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் விரைவாக தரிசனம் செய்யவும் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை கேட்டறிந்தனர். தொடர்ந்து சன்னிதானத்திலும், 18-வது படியிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வரிசையை விரிவுபடுத்த வேண்டும் என்றும், அனைத்து குழந்தைகளும் அவர்களது விவரங்கள் அடங்கிய கைப்பட்டை அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆணைய குழுவினர் உத்தரவிட்டனர்.
- புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அந்தப்பெண் தனது வீட்டுக்கு வருமாறு காதலனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
- சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார், அந்த பெண்ணை கைது செய்தனர்.
மும்பை சாந்தாகுரூஸ் கிழக்கு, கலினா பகுதியில் உள்ள ஜம்லிபாடா எனும் இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட 42 வயது நபரும், 25 வயது பெண்ணும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அந்தப்பெண் நீண்ட நாட்களாக திருமணம் செய்துகொள்ளுமாறு காதலனை வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், ஒவ்வொரு முறையும் அந்த நபர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அந்தப்பெண் தனது வீட்டுக்கு வருமாறு காதலனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதனை ஏற்று காதலனும் சென்றுள்ளார். இருவரும் வீட்டில் இருந்தபோது, மீண்டும் திருமண பேச்சு எழுந்துள்ளது. அப்போதும் அவர் மறுக்கவே, ஆத்திரமடைந்த அந்தப்பெண் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து காதலனின் மர்ம உறுப்பை துண்டித்துள்ளார்.
படுகாயமடைந்த அந்த நபர், வலியால் துடித்த நிலையிலும் அந்த பெண்ணிடமிருந்து தப்பித்து, உடனடியாக தனது சகோதரருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவரது சகோதரர் விரைந்து வந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக வி.என்.தேசாய் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார், அந்த பெண்ணை கைது செய்தனர். மேலும், அவர் மீது பாரதிய நியாய சன்கிதா சட்டப்பிரிவுகளின் கீழ், ஆபத்தான ஆயுதங்களை கொண்டு காயம் விளைவித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மனுதாரரின் கணவர் எந்தவொரு சுயாதீனமான முடிவுகளையும் அல்லது நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாத கோமா நிலையில் இருக்கிறார்.
- தாயை பாதுகாவலராக நியமிப்பதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என அந்த தம்பதியரின் இரு குழந்தைகளும் பிரமாண பத்திரங்களை சமர்ப்பித்து உள்ளனர்.
டெல்லி ஐகோர்ட்டில் ஒரு பெண் தாக்கல் செய்த மனுவில், 'கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் எனது கணவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால், தொடர்ச்சியாக சுய நினைவற்ற நிலையில்(கோமா) உள்ளார். கணவரின் மருத்துவத் தேவைகளையும் செலவுகளையும் நிர்வகிப்பதற்காக, அவரது அசையா மற்றும் அசையும் சொத்துக்கள் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் கணவருக்கு பாதுகாவலராக என்னை நியமிக்க உத்தரவிட வேண்டும்' என்று கூறி இருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி சச்சின் தத்தா விசாரித்து வந்தார்.
நேற்று இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், 'மனுதாரரின் கணவர் எந்தவொரு சுயாதீனமான முடிவுகளையும் அல்லது நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாத கோமா நிலையில் இருக்கிறார். மருத்துவ அறிக்கையின் படி, அவர் 100 சதவீதம் மாற்றுத்திறனாளி என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவரது நலனுக்காக, ஒரு சட்டப்பூர்வ பாதுகாவலரை நியமிப்பது அவசியமாகிறது.
தாயை பாதுகாவலராக நியமிப்பதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என அந்த தம்பதியரின் இரு குழந்தைகளும் பிரமாண பத்திரங்களை சமர்ப்பித்து உள்ளனர்.
எனவே, மனுதாரரின் கணவர் மருத்துவ கோளாறு காரணமாக சுயநினைவற்ற நிலையில் இருப்பதால் அவரது மனைவியை சட்டப்பூர்வ பாதுகாவலராக இந்த கோர்ட்டு நியமிக்கிறது' என கூறி உள்ளார்.
- மகாராஷ்டிரா மாநிலத்தில் 38 புலிகளும், கேரளாவில் 13 புலிகளும், அசாமில் 12 புலிகளும் இறந்துள்ளன.
- கடைசியாக, கடந்த 28-ந்தேதி, மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரு ஆண் புலி உயிரிழந்தது.
உலகிலேயே அதிகமான புலிகள் கொண்ட நாடு, இந்தியா. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் கடந்த 2025-ம் ஆண்டில் 166 புலிகள் இறந்துள்ளன. இவற்றில் 31 புலிக்குட்டிகளும் அடங்கும்.
அதற்கு முந்தைய 2024-ம் ஆண்டில் 126 புலிகள்தான் இறந்தன. அதனுடன் ஒப்பிடுகையில், 2025-ம் ஆண்டில் 40 புலிகள் அதிகமாக உயிரிழந்துள்ளன.
இவற்றில் புலிகள் மாநிலம் என்று அழைக்கப்படும் மத்தியபிரதேசத்தில் அதிகபட்சமாக 55 புலிகள் இறந்துள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 38 புலிகளும், கேரளாவில் 13 புலிகளும், அசாமில் 12 புலிகளும் இறந்துள்ளன.
கடந்த ஆண்டு, முதலில் புலி பலியான சம்பவம், ஜனவரி 2-ந்தேதி, மகாராஷ்டிரா மாநிலம் பிரம்மபுரி வனக்கோட்டத்தில் நடந்துள்ளது. அது ஒரு ஆண் புலி ஆகும். அதற்கு 3 நாட்கள் கழித்து, மத்தியபிரதேச மாநிலம் பெஞ்ச் புலிகள் சரணாலயத்தில் ஒரு பெண் புலி இறந்தது. கடைசியாக, கடந்த 28-ந்தேதி, மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரு ஆண் புலி உயிரிழந்தது.
இடப்பற்றாக்குறை காரணமாக ஏற்படும் மோதல்தான் புலிகள் இறப்புக்கு முக்கிய காரணம் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். வேட்டையாடுதல், மின்சார தாக்குதல், இயற்கை மரணம் ஆகிய காரணங்களும் இருப்பதாக கூறுகிறார்கள்.
- இலவச தரிசனத்தில் சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்யலாம்.
- சாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கட்டாயமாக பாரம்பரிய உடைகளை அணிந்து வரவேண்டும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. அதையொட்டி 30-ந்தேதி அதிகாலை 2.30 மணியளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. முதல் 3 நாட்களுக்கு சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்ய மொத்தம் 25 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர். அதில், குலுக்கல் முறையில் 1 லட்சத்து 76 ஆயிரம் பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வான பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய எஸ்.எம்.எஸ். மற்றும் இ.மெயில் மூலம் தகவல்கள் அனுப்பப்பட்டன. அதில், 30-ந்தேதி 57 ஆயிரம் பக்தர்களும், 31-ந்தேதி 64 ஆயிரம் பக்தர்களும், ஆங்கிலப் புத்தாண்டான நேற்று 55 ஆயிரம் பக்தர்களும் டோக்கன்கள் மூலம் சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கான சொர்க்க வாசல் தரிசனம் முழுமையாக நிறைவடைந்தன.
இந்தநிலையில் இன்று முதல் 8-ந்தேதி வரை சொர்க்க வாசல் தரிசனத்துக்கான டோக்கன்கள் தேவையில்லை, டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் வருகிற 8-ந்தேதி வரை சாதாரணமாக இலவச தரிசனத்தில் சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்யலாம்.
அதற்காக கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசனம், ஆர்ஜித சேவைகள், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், மூத்த குடிமக்கள், நோய்வாய்ப்பட்டவர்களுக்கான தரிசனம், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தரிசனங்கள் ஆகியவை இன்று முதல் 8-ந்தேதி வரை நடக்காது, அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன டோக்கன்கள் (டைம் ஸ்லாட் டோக்கன்கள்) வழங்கும் கவுண்ட்டர்கள், ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் கவுண்ட்டர்கள், வி.ஐ.பி. பிரேக் தரிசன டோக்கன் கவுண்ட்டர்கள் இந்த நாட்களில் மூடப்பட்டு இருக்கும். இதற்காக எந்தவிதமான பரிந்துரை கடிதங்களும் ஏற்கப்பட மாட்டாது.
சாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கட்டாயமாக பாரம்பரிய உடைகளை அணிந்து வரவேண்டும். ஆண்கள் வேட்டி அல்லது பைஜாமா அணிய வேண்டும். பெண்கள் சேலை அல்லது சுடிதார் அணிய வேண்டும். சாமி தரிசனத்துக்கு வரும் அனைத்துப் பக்தர்களும் ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள், தேவஸ்தான ஊழியர்கள் வழங்கும் அறிவுறுத்தல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
அதேநேரத்தில் திருமலை, திருப்பதி, ரேணிகுண்டா மற்றும் சந்திரகிரி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் உள்ளூர் பக்தர்களுக்காக 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இ.குலுக்கல் முறையின் மூலம் தினமும் 5 ஆயிரம் தரிசன டோக்கன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 4 ஆயிரத்து 500 டோக்கன்கள் திருப்பதி, ரேணிகுண்டா மற்றும் சந்திரகிரி ஆகிய உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 500 டோக்கன்கள் திருமலை பாலாஜிநகரில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோவிலில் இன்று முதல் 8-ந்தேதி வரை இலவச தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி என்பதால் ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
- நாய் குறுக்கே வந்ததால் டிரைவர் திடீரென காரை திருப்பினார்.
- இதனால் பின்னால் வேகமாக வந்த கார் மந்திரியின் கார் மீது மோதியது.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலத்தின் மீன்வளத்துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் சஞ்சய் நிஷாத். இவர் கோரக்பூரில் உள்ள தனது வீட்டில் இருந்து ஆக்ரா நோக்கி நேற்று காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென நாய் குறுக்கே வந்ததால் அதன்மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் காரை திருப்பியுள்ளார். இதையடுத்து பின்னால் வேகமாக வந்த கார் மந்திரியின் கார் மீது மோதியது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக மந்திரி சஞ்சய் நிஷாத் காயமின்றி தப்பினார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாய் மீது மோதாமல் இருப்பதற்காக வேகமாக திருப்பிய மந்திரி கார் விபத்தில் சிக்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த 1988-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியன்று ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
- ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 முதல் இரு நாடுகளின் வெளியுறவுத்துறை வாயிலாக பரிமாறிக் கொள்ளப்படும்.
புதுடெல்லி:
இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த 1988-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியன்று ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி இரு நாடுகளுக்கு இடையிலான மோதலின் அணுசக்தி நிலையங்கள்மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதே இதன் நோக்கம்.
அதன்படி, தங்கள் நாடுகளில் இருக்கும் அணுசக்தி நிலையங்கள் தொடர்பான விவரங்களை இந்தியாவும், பாகிஸ்தானும் ஒவ்வொரு ஆண்டும் பரிமாறிக் கொள்ள வேண்டும். இந்த நடைமுறையானது 1991-ம் ஆண்டு ஜனவரி 27 முதல் அமலுக்கு வந்தது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி இந்தப் பட்டியல் இரு நாடுகளின் வெளியுறவுத்துறை மற்றும் தூதரகங்கள் வாயிலாக பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளப்படும்.
இந்நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் தத்தம் நாடுகளில் உள்ள அணுசக்தி நிலையங்கள் குறித்த தகவல்களைப் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டன.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியிடம் மத்திய வெளியவுறவுத்துறை அமைச்சகமும், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரியிடம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகமும் இந்தப் பட்டியல்களை ஒப்படைத்தன. தொடர்ந்து 35-வது ஆண்டாக பரஸ்பரம் பட்டியல் பகிரப்பட்டுள்ளது.






