என் மலர்
இந்தியா

"நாங்கள் அனைவரும் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம்" - உமர் காலிதுக்கு மம்தானி கடிதம்
- வெறுப்புக்கும் கும்பல் கொலைகளுக்கும் எதிராகப் பேசிய ஒரு இளைஞரை, 1000 நாட்களுக்கு மேலாக விசாரணையின்றி சிறையில் வைத்திருப்பது ஜனநாயகத்திற்கு அழகல்ல
- CAA சட்டத்தின் கீழ் இலங்கைத் தமிழர்களுக்கும் முஸ்லிம்களை போல குடியுரிமை மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் நியூ யார்க் மேயராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி நேற்று பதவியேற்றார்.
நியூ யார்க் நகரின் முதல் முஸ்லீம் மேரியரான அவர் திருக்குர்ஆன் மீது சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றார். மேயர் தேர்தலில் மம்தானியை டிரம்ப் கடுமையாக எதிர்த்தது அறிந்ததே.
இந்நிலையில் 2020 டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தில் வெடித்த வன்முறை தொடர்பான வழக்கில் கைதாகி 5 வருடங்களாக சிறையில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் உமர் காலித் -க்கு மம்தானி கைப்பட கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில், "அன்புள்ள உமர், கசப்பான அனுபவங்களைப் பற்றியும், அவை நம்மைச் சிதைக்க அனுமதிக்கக் கூடாது என்பதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் நீங்கள் கூறிய வார்த்தைகளை நான் அடிக்கடி நினைத்துப் பார்க்கிறேன்.
உங்கள் பெற்றோரைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. நாங்கள் அனைவரும் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம்." என்று மம்தானி குறிப்பிட்டுள்ளார்.
உமர் காலிதின் நண்பர் பனோஜ்யோத்ஸ்னா லாஹிரி இந்த கடிதத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக 2023-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க வருகைக்கு முன்னதாக நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், உமர் காலிதின் சிறைக் குறிப்புகளை மம்தானி வாசித்தார்.
அப்போது அவர், "வெறுப்புக்கும் கும்பல் கொலைகளுக்கும் எதிராகப் பேசிய ஒரு இளைஞரை, 1000 நாட்களுக்கு மேலாக விசாரணையின்றி சிறையில் வைத்திருப்பது ஜனநாயகத்திற்கு அழகல்ல" என்று தெரிவித்திருந்தார்.
மேலும், கடந்த மாதம் உமர் காலிதின் பெற்றோர்கள் அமெரிக்கா சென்றிருந்தபோது, அவர்களை மம்தானி நேரில் சந்தித்துப் பேசினார். அப்போதுதான் இந்தக் கடிதம் கைமாறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
டெல்லி கலவரம்:
2020 பிப்ரவரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் வன்முறையை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டு 2020 செப்டம்பர் முதல் சிறையில் இருக்கும் உமர் காலிதுக்கு, தனது சகோதரியின் திருமணத்தில் பங்கேற்பதற்காக அண்மையில் 14 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.
டெல்லி கலவரம் தொடர்பான சதி வழக்கில்சமூக வலைதளங்களைப் பயன்படுத்தக் கூடாது, சாட்சிகளைச் சந்திக்கக் கூடாது போன்ற பல நிபந்தனைகளுடன் வழங்கப்பட்ட இந்த ஜாமீன் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 29 அவர் மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறைக்குத் திரும்பும் முன் உமர் காலித் தனது முகநூல் பக்கத்தில், "14 நாட்கள் சுதந்திரத்திற்குப் பிறகு மீண்டும் திகார் சிறைக்குச் செல்கிறேன். இந்த இருளை நாம் விரைவில் கடப்போம் என்ற நம்பிக்கையும் வலிமையும் நம் இதயங்களில் நிலைத்திருக்கட்டும்" என்று பதிவிட்டிருந்தார்.
சிஏஏ
2019 இல் மத்திய பாஜக அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து 2014 டிசம்பர் 31-க்கு முன் இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாத மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை அளிக்கிறது.
ஆனால், குடியுரிமை வழங்குவதில் இருந்து முஸ்லிம்களை விலக்குவதால், இது பாகுபாடு காட்டுவதாகவும், மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு எதிரானது என்றும் விமர்சிக்கப்பட்டது.
இது நாடு முழுவதும் பெரிய போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இலங்கைத் தமிழர்களுக்கும் முஸ்லிம்களை போல குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






