என் மலர்
இந்தியா
- டிசம்பர் மாதம் 1,74,550 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. வசூல் ஆகியுள்ளது.
- இது முந்தைய ஆண்டு டிசம்பரில் வசூலான ஜிஎஸ்டி தொகையை விட 6.1 சதவீதம் அதிகம்.
புதுடெல்லி:
ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி அமலுக்கு வந்தது. அன்று முதல் மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
டிசம்பர் மாதம் 1,74,550 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. வசூல் ஆகியுள்ளது.
அதில், சிஜிஎஸ்டி 34,289 கோடி, எஸ்ஜிஎஸ்டி 41,368 கோடி, ஐஜிஎஸ்டி 98,394 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது.
இது அதற்கு முந்தைய ஆண்டு டிசம்பர் மாதம் வசூல் ஆன 1.64 லட்சம் கோடியை விட 6.1 சதவீதம் அதிகம் ஆகும்.
2025 -2026 நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 16.5 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை காட்டிலும் 8.6 சதவீதம் அதிகம் ஆகும்.
மேலும் 2024 - 2025 நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூலானது 22.08 லட்சம் கோடி ரூபாய் ஆக இருந்தது.
2017-ல் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 1.82 லட்சம் கோடி ரூபாய் வசூல் ஆகியது. வளர்ந்து வரும் பொருளாதார நடவடிக்கை காரணமாக ஆண்டுதோறும் மொத்த ஜிஎஸ்டி வசூலும் அதிகரித்து வருகிறது.
2020- 2021 ல் 11.37 லட்சம் கோடி ரூபாய் ஆக இருந்த மொத்த ஜிஎஸ்டி வசூல் 2023- 24 நிதியாண்டில் 20.18 லட்சம் கோடி ரூபாய் ஆக அதிகரித்தது என தெரிவித்துள்ளது.
- புல்லட் ரெயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2015-ம் ஆண்டில் அறிவித்தார்.
- இந்தத் திட்டத்துக்கு 2017-ம் ஆண்டு செப்டம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டது.
மும்பை மற்றும் அகமதாபாத் நகரங்களுக்கு இடையே அதிவேகம் கொண்ட புல்லட் ரெயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2015-ம் ஆண்டில் அறிவித்தார். இந்தத் திட்டத்துக்கு 2017-ம் ஆண்டு செப்டம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டது.
இவ்விரு நகரங்களுக்கு இடையேயான 508 கி.மீ. தூரத்திற்கு 12 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஜப்பான் தொழில் நுட்பத்தில் அமைக்கப்படும் புல்லட் ரெயில் திட்டத்தின் மதிப்பீடு ரூ.2 லட்சம் கோடி.
இந்நிலையில், நாட்டின் முதல் புல்லட் ரெயில் எப்போது இயக்கப்படும் என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
புல்லட் ரெயில் திட்டம் குறித்து பேசிய அஸ்வினி வைஷ்ணவ், "இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் சேவை 2027 ஆக.15ம் தேதி பயன்பாட்டுக்கு வரும். புல்லட் ரெயிலின் முதல் பிரிவு சூரத் முதல் பிலிமோரா வரை இயக்கப்படும். பின்னர் வாபி - சூரத், வாபி - அகமதாபாத், தானே - அகமதாபாத், மும்பை - அகமதாபாத் வரை விரிவாக்கம் செய்யப்படும்" என்று தெரிவித்தார்.
- 2024-ம் ஆண்டில் 2.55 கோடியாக இருந்த பக்தர்களின் வருகை, 2025ம் ஆண்டில் 2.70 கோடியாக அதிகரிப்பு.
- ஒரே நாளில் மட்டும் 5.13 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
2025-ஆம் ஆண்டில் திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு விற்பனை குறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் மொத்தம் 13.52 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டுகளை விட மிகப்பெரிய வளர்ச்சியாகக் கருதப்படுகிறது.
2024ம் ஆண்டில் மொத்த லட்டு விற்பனை 12.15 கோடியாகவும், 2025-ல் 13.52 கோடியாகவும் உள்ளது. இது, 1.37 கோடி அதாவது 10 சதவீதம் அதிகளவு விற்பனையாகும்.
இதேபோல், 2024-ம் ஆண்டில் 2.55 கோடியாக இருந்த பக்தர்களின் வருகை, 2025ம் ஆண்டில் 2.70 கோடியாக அதிகரித்துள்ளது.
கடந்த டிசம்பர் 27, 2025 அன்று ஒரே நாளில் மட்டும் 5.13 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத ஒரு நாள் சாதனையாகும்.
பக்தர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய, ஒரு நாளைக்குச் சராசரியாக 4 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. விசேஷ நாட்களில் இது 8 முதல் 10 லட்சம் வரை அதிகரிக்கப்படுகிறது.
2024-ல் எழுந்த நெய் கலப்பட சர்ச்சைகளுக்குப் பிறகு, 2025-ல் தரக் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. புதிய ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு, லட்டுகளின் தரம் உறுதி செய்யப்பட்டதால் பக்தர்களின் நம்பிக்கை மற்றும் வரவேற்பு அதிகரித்துள்ளதாகத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
- 'வந்தே பாரத்' ரெயில் பகல் நேர ரெயில் சேவையாக இயங்கி வருகிறது.
- 966 கி.மீ. தூரத்தை ஒரே ஒரு நிறுத்தத்துடன் 14.30 மணி நேரத்தில் இந்த ரெயில் கடக்கும்.
இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்திய ரெயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்டது 'வந்தே பாரத்' ரெயில் சேவை. பகல் நேர ரெயில் சேவையான இதன் மூலம் ஒரு நாளுக்கும் குறைவான நேரத்தில் பயணிகள் நாட்டின் ஒரு நகரிலிருந்து மற்றொரு முக்கிய நகரத்தை அடைய முடியும்.
இந்நிலையில், இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் சேவை மேற்கு வங்கத்தின் ஹவுரா - அசாமின் காமாக்யா இடையே இயக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
966 கி.மீ. தூரத்தை ஒரே ஒரு நிறுத்தத்துடன் (மால்டா டவுன்) 14.30 மணி நேரத்தில் இந்த ரெயில் கடக்கும். உணவுடன் சேர்த்து 3AC- .2,300, 2AC . 3,000, 1AC .3,600 நிர்ணயம். இதனை இம்மாதம் பிரதமர் தொடங்கி வைக்கிறார் என்று மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
- மும்பை, புனே உள்பட 29 மாநகராட்சி களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
- உத்தவ் காம்ப்ளே மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தல் வருகிற 15-ந்தேதி நடக்கிறது. மும்பை, புனே உள்பட 29 மாநகராட்சி களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. புனே மாநகராட்சியின் 34-வது வார்டுக்கு சிவசேனா சார்பில் உத்தவ் காம்ப்ளே, மச்சிந்திரா தவலே ஆகியோர் போட்டியிட்டனர்.
அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளரை அறிவிக்க ஏ, பி விண்ணப்பங்களை வழங்கும். இந்த இருவருக்கும் அந்த வார்டில் போட்டியிடுவதற்கான விண்ணப்ப கடிதத்தை சிவசேனா கட்சி வழங்கி இருந்தது. இதனால் வேட்பு மனு தாக்கலின்போது வார்டு அலுவலகத்தில் இருவருக்கும் இடைேய கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் உத்தவ் காம்ப்ளே ஆத்திரமடைந்து மச்சிந்திரா தவலேயின் கையில் இருந்த கட்சி வழங்கிய அங்கீகார விண்ணப்ப கடிதத்தை பிடுங்கி கிழித்து வாயில் போட்டு விழுங்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சிவசேனா வேட்பாளர் உத்தவ் காம்ப்ளே மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, தேர்தல் பணியின் போது அரசு ஊழியரை அவரது கடமையை செய்ய விடாமல் தடுத்ததாக உத்தவ் காம்ப்ளே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
- இந்த மோசடிக் கும்பல் 23 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஜாமின் பெற்று தந்துள்ளது.
- கொலை வழக்கில் தண்டனை பெற்று ஜாமினில் வெளிவந்த குற்றவாளி உட்பட ஆறு பேர் கைது
கொலை, திருட்டு, பாலியல் வன்கொடுமை என எந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்தாலும், அவர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் ஜாமின் பெற்றுத்தரும் மோசடி கும்பலை உத்தரப்பிரதேச காவல்துறை கைது செய்துள்ளது.
போலி நில வருவாய் ஆவணங்கள், போலியான ஆதார் அட்டைகள் மற்றும் ஜோடிக்கப்பட்ட அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் கிடைக்க உதவும் வகையில், தொழில்முறை ஜாமின் தாரர்களாக இந்தக்குழு செயல்பட்டு வந்துள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் இந்த மோசடிக் கும்பல் 23 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஜாமின் பெற்றுதந்ததை போலீசார் கண்டறிந்துள்ளனர். இதற்காக ஒரு வழக்கிற்கு சுமார் 20,000 ரூபாய் வரை வசூலித்துள்ளது. இந்த வழக்கில், கொலை வழக்கில் தண்டனை பெற்று ஜாமினில் வெளிவந்த குற்றவாளி உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய எஸ்பி சுபோத் கவுதம், பிரவீன் தீட்சித் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஒரு கொலைக் குற்றவாளி. ஆனால் தற்போது உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஜாமினில் வெளியே உள்ளார். இதில் நீதிமன்ற வளாகத்தில் விண்ணப்பங்களை எழுதித் தரும் வேலை பார்த்து வந்த பிங்கு என்கிற பிரேம் சங்கர் தொழில்முறை குற்றவாளிகளுக்கு ஜாமின் தரக்கூடிய நபர்களை ஏற்பாடு செய்வதிலும் மற்றும் போலி ஆவணங்களைத் தயாரிப்பதிலும் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
ராம் கிஷோர் என்பவர் 13 வழக்குகளில் போலி நில வருவாய் ஆவணங்களை ஏற்பாடு செய்ததாகவும், அவரது கூட்டாளியான விஸ்வநாத் பாண்டே மற்றும் பிரவீன் தீட்சித் ஆகியோர் தலா இரண்டு வழக்குகளில் ஜாமின் கையெழுத்து போட்டதாகவும், மற்ற கூட்டாளிகளான தர்மேந்திரா இரண்டு வழக்குகளிலும், பிங்கு ஒரு வழக்கிலும், அமித் மூன்று வழக்குகளிலும் இவ்வாறு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
- பாதுகாப்புப் படையினர் தற்காப்பிற்காகப் பதிலடி கொடுத்தனர்.
- 5.56 மி.மீ INSAS ரகத் துப்பாக்கி, ஒரு நாட்டுத் துப்பாக்கி, 25 தோட்டாக்களும் மற்றும் 15 பயன்படுத்தப்பட்ட (வெற்று) தோட்டாக்களையும் போலீசார் மீட்டனர்.
பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில், முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு ரூ. 50,000 வெகுமதி நிர்ணயிக்கப்பட்டிருந்த நக்சலைட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் தடைசெய்யப்பட்ட சிபிஐ-மாவோயிஸ்ட் (CPI-Maoist) அமைப்பின் வட-பீகார் மத்திய மண்டலக் குழுவின் செயலாளர் தயானந்த் மலக்கர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடைய கூட்டாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பீகார் காவல்துறை தெரிவித்துள்ளது.
"14-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த மலக்கர் என்ற சோட்டு என்ற நக்சலைட், பெகுசராய் மாவட்டத்தின் தேக்ரா பகுதியில் புதன்கிழமை மாலை சிறப்பு அதிரடிப் படை மற்றும் மாவட்ட காவல்துறையினர் அடங்கிய கூட்டுக்குழுவுடன் நடந்த மோதலில் (Encounter) உயிரிழந்தார்.
பாதுகாப்பு படையினர் தங்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், மலக்கர் தனது கூட்டாளிகளுடன் ஒளிந்திருந்த இடத்திற்கு சென்றனர். காவல்துறையினரைக் கண்டதும், மலக்கர் அங்கிருந்து தப்பிக்க முயன்று அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். பாதுகாப்புப் படையினர் தற்காப்பிற்காகப் பதிலடி கொடுத்தனர். இந்த மோதலில் அந்த நக்சலைட் காயமடைந்தார் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
மலக்கர் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த மோதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை" என பீகார் காவல் துறையின் சிறப்பு அதிரடிப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவ இடத்திலிருந்து ஒரு 5.56 மி.மீ INSAS ரகத் துப்பாக்கி, ஒரு நாட்டுத் துப்பாக்கி, 25 தோட்டாக்களும் மற்றும் 15 பயன்படுத்தப்பட்ட (வெற்று) தோட்டாக்களையும் போலீசார் மீட்டனர். முன்னதாக வட பீகாரில் பல்வேறு நக்சலைட் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மலக்கரை பற்றி தகவல் வழங்குபவர்களுக்கு ரூ.50,000 சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
- சொத்து விவரங்களை வெளியிடும் நடைமுறை அனைத்து அமைச்சர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டது.
- நிதிஷ்குமாரிடம் ரூ.20,552 ரொக்கமாகவும், பல்வேறு வங்கி கணக்குகளில் சுமார் ரூ.57,800-ம் உள்ளன.
பீகார் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க- ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. ஐக்கிய ஜனதா தள தலைவரான நிதிஷ்குமார் 10-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்.
இந்த நிலையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் அசையும், அசையா சொத்துக்களின் மதிப்பு வெறும் ரூ.1.65 கோடிதான் என்று தெரிய வந்துள்ளது.
நிதிஷ்குமார் மற்றும் அவரது அமைச்சர்களின் சொத்து விவரங்கள் மாநில அரசின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டன. சொத்து விவரங்களை வெளியிடும் நடைமுறை அனைத்து அமைச்சர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கடைசி நாளில் இந்த முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தற்போதைய சொத்து விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி நிதிஷ்குமாரின் சொத்து விவரம் ரூ.1.65 கோடி என்று தெரியவந்து உள்ளது. இது கடந்த ஆண்டைவிட சுமார் ரூ.68,455 அதிகமாகும்.
நிதிஷ்குமாரிடம் ரூ.20,552 ரொக்கமாகவும், பல்வேறு வங்கி கணக்குகளில் சுமார் ரூ.57,800-ம் உள்ளன. அவரது அசையும் சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ.17.66 லட்சமாகும். அதே சமயம் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.1.48 கோடியாகும். மேலும் அவருக்கு டெல்லியில் கூட்டுறவு வீட்டு வசதி குடியிருப்பில் ஒரு பிளாட்டும் இருக்கிறது.
துணை முதலமைச்சர் சவுத்ரியிடம் ரொக்கமாக ரூ.1.35 லட்சம் உள்ளது. அவரது மனைவி குமாரி மம்தாவிடம் ரூ.35 ஆயிரம் இருக்கிறது. சவுத்ரியிடம் ரூ.4 லட்சம் மதிப்புள்ள ஒரு துப்பாக்கியும், விவசாயம் அல்லாத நிலம் உள்பட ரூ.4.91 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உள்ளன.
மற்றொரு துணை முதலமைச்சரான விஜய்குமார் சின்காவிடம் ரூ.48.46 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துக்களும், ரூ.77,181 மதிப்புள்ள ஒரு கைத் துப்பாக்கியும் உள்ளது.
- பளிங்கு கற்கள் கொண்டு ரூ.12 லட்சத்தில் கல்லறை கட்டியுள்ளார்.
- தனக்குத்தானே கல்லறை கட்டிக் கொண்டது சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது
தெலங்கானா மாநிலம், ஜக்தியால் மாவட்டம், லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் இந்திரய்யா (வயது 80). இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். தனது மரணத்திற்கு பிறகு தனது பிள்ளைகளுக்கு தொந்தரவு ஏற்படக் கூடாது என்பதற்காக தனக்குத்தானே கல்லறை கட்ட முடிவு செய்தார். இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த கொத்தனார் மூலம் தனது மனைவியின் கல்லறை அருகே பளிங்கு கற்கள் கொண்டு ரூ.12 லட்சத்தில் கல்லறை கட்டியுள்ளார்.
இந்திரய்யா தினமும் தனது கல்லறைக்கு சென்று சுற்றுப்புறங்களை சுத்தம் செய்வது, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி விட்டு சிறிது நேரம் அங்கேயே தங்கி இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இது குறித்து இந்திரய்யா கூறுகையில், தனக்குத்தானே கல்லறை கட்டிக் கொண்டது சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
5 வீடுகள், ஒரு பள்ளி மற்றும் ஒரு தேவாலயம் கட்டி இருக்கிறேன் என தெரிவித்தார். மேலும் தனது கல்லறையில் குறிப்பு ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் மரணம் தவிர்க்க முடியாதது. இறுதியாக செல்லும்போது யாரும் செல்வத்தை எடுத்துச் செல்ல முடியாது என எழுதி வைத்துள்ளார்.
- பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் டிரோன் ஒன்று ஊடுருவியது.
- டிரோன் நடமாட்டத்தை கண்காணித்த பாதுகாப்புப் படையினர் உடனடியாக அங்கு விரைந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஆயுதங்கள் அடங்கிய பையை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது.
பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் டிரோன் ஒன்று ஊடுருவியது. இந்திய வான்பரப்பில் சுமார் 5 நிமிடங்கள் வட்டமடித்த அந்த டிரோன், பை ஒன்றை கீழே வீசியது. டிரோன் நடமாட்டத்தை கண்காணித்த பாதுகாப்புப் படையினர் உடனடியாக அங்கு விரைந்தனர்.
அந்தப் பையில் தோட்டங்கள், வெடிமருந்துகள், போதைப்பொருட்கள், மஞ்சள் நிற டிப்பன் பாக்ஸ் ஒன்றில் ஐ.இ.டி வெடிகுண்டு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவல் ஏதேனும் உள்ளதா என தீவிர தேடுதல் வேட்டையில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். புத்தாண்டு தினத்தில் நடந்த இந்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.
- சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர்.
- இன்ஸ்டாகிராமில் சாரா டெண்டுல்கருக்கு மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று பல நிறுவனங்கள் நடத்தி வருகிறார். அவரது மகள் சாரா டெண்டுல்கர். இவர் தற்போது ஒரு மாடல் மற்றும் சமூக வலைதள பிரபலம் (Social Media Influencer) ஆவார். பல முன்னணி ஆடை மற்றும் அழகு சாதன பிராண்டுகளுக்கு விளம்பரத் தூதராகப் பணியாற்றி வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவருக்கு மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
இந்நிலையில் சாரா டெண்டுல்கர் பீர் பாட்டிலைப் பிடித்திருப்பது போன்ற ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. புத்தாண்டைக் கொண்டாட அவர் தனது நண்பர்களுடன் கோவா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதில் சாரா டெண்டுல்கர் தனது சில நண்பர்களுடன் நடந்து வருகிறார். அப்போது அவரது கையில் ஒரு பீர் பாட்டிலை எடுத்துச் செல்வதைக் காண முடிகிறது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைராலாகி விவாத பொருளாக மாறியுள்ளது. சிலர் சாரா டெண்டுல்கரை விமர்சித்தனர். மற்றவர்கள் அவரை ஆதரித்து, அவள் விரும்பியபடி அவள் விடுமுறையை அனுபவிக்கிறார் என என்று கூறினர். மற்றும் சிலர் அது பீர் பாட்டில் தான என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.
இருப்பினும், ஒருவர் அவரை ட்ரோல் செய்து, சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்க்கையில் எந்த மதுபான பிராண்டையும் புகைக்கவோ அல்லது விளம்பரப்படுத்தவோ இல்லை என்றும் ஆனால் அவரது மகள் சாரா கோவாவின் தெருக்களில் பீர் பாட்டிலுடன் சுற்றித் திரிந்துள்ளார் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.
- எனது மக்கள் முழுமையாகப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன்
- வீணான அல்லது பயன்றற கேள்விகளை கேட்காதீர்கள்
இந்தியாவின் தூய்மையான நகரம் என 8வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தூரில், கழிவுநீர் கலந்த குடிநீரை பருகி தற்போதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த உயிரிழப்புகள் தொடர்பாக மத்தியப்பிரதேச அமைச்சரும், அத்தொகுதியின் பாஜக எம்.எல்.ஏவுமான கைலாஷ் விஜயவர்க்கியாவிடம் ஆங்கில ஊடக நிரூபர் ஒருவர் ஒரு கேள்வியை முன்வைத்துள்ளார். அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர், Phokat prashn mat puchiye எனக் கூறியுள்ளார். அதாவது வீணான அல்லது பயன்றற கேள்விகளை கேட்காதீர்கள் எனக் கூறியுள்ளார். மேலும் "கண்டா" (ghanta) என்றும் கூறியுள்ளார்.
ஹிந்தியில் "கண்டா" என்ற சொல் பேச்சுவழக்கில் பயன்றறது, குப்பை, ஒன்றுமில்லை என்பதை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. சில வார்த்தைகள் பேசத் தடுமாறிய பிறகு, அந்த பாஜக அமைச்சர் கண்டா என்ற சொல்லை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு உடனே எதிர்ப்பு தெரிவித்து அமைச்சரை ஒழுங்காகப் பேசுமாறு பத்திரிக்கையாளர் கூறினார். இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பத்துபேர் செத்ததெலாம் ஒரு விஷயமா? என்ற தொனியில் அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்த தற்போது மன்னிப்பு கோரியுள்ளார் பாஜக அமைச்சர். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
"நானும் எனது குழுவினரும் கடந்த இரண்டு நாட்களாக உறக்கமின்றி பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமையைச் சீரமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம். அசுத்தமான நீரினால் எனது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், சிலர் நம்மை விட்டு பிரிந்தும் சென்றுவிட்டனர். இந்த ஆழ்ந்த துயரமான நிலையில், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது எனது வார்த்தைகள் தவறாக வெளிவந்துவிட்டன. இதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால், எனது மக்கள் முழுமையாகப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.






