என் மலர்tooltip icon

    இந்தியா

    • இந்தியா மீது 50 சதவீத வரியை டிரம்ப் விதித்தார்.
    • இந்தியா - அமெரிக்கா நாடுகளுக்கு இடையே விரிசல் ஏற்பட்டது.

    ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணை வாங்குவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

    இது உக்ரைன் மீதான ரஷியாவின் போருக்கு மறைமுகமாக உதவுகிறது என்று டிரம்ப் குற்றம்சாட்டினார். இதையடுத்து இந்தியா மீது 50 சதவீத வரியை டிரம்ப் விதித்தார்.

    இவ்விவகாரத்தில் இரு நாடுகள் இடையே விரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் தன்னிடம் தெரிவித்ததாக டிரம்ப் தெரிவித்தார்.

    இதுகுறித்து பேசிய டிரம்ப், "இந்தியா இனி ரஷியாவிடம் இருந்து எண்ணெயை வாங்கப் போவதில்லை. இந்த செயல்முறையை உடனடியாகச் செய்ய முடியாது. ஆனால் அது விரைவில் முடிவடையும். ஏற்கனவே இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நிறுத்திவிட்டனர். அவர்கள் பின்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா சுமார் 38 சதவீத எண்ணையை வாங்கினார்கள். இனி அதைச் செய்ய மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், ரஷ்ய எண்ணெய் வாங்குவதை படிப்படியாக குறைக்க ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ள நிலையில், எண்ணெய் வாங்கும் திட்டத்தை இந்திய அரசின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப சரிசெய்ய திட்டமிட்டுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    • புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரானது.
    • ராம்பாலின் பேரன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுவாமிகாந்தை கைது செய்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ககோரி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் ராம்பால் ராவத் என்ற 65 வயதான முதியவர் அமர்ந்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு கோவில் வளாகத்தில் சிறுநீர் கழித்துள்ளார்.

    இதை அங்கிருந்த சுவாமி காந்த் என்பவர் பார்த்து ஆவேசமடைந்தார். அவர் ராம்பால் ராவத்தை கடுமையான வார்த்தைகளால் திட்டியதோடு அவரை நாக்கினால் நக்கி சுத்தப்படுத்தும்படி கட்டாயப்படுத்தி உள்ளார்.

    இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரானது. இது ராம்பால் குடும்பத்திற்கு தெரியவந்ததும் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக ராம்பாலின் பேரன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுவாமிகாந்தை கைது செய்தனர்.

    • பிரம்மோற்சவ விழாவின்போது சாமியின் காலணிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்கின்றனர்.
    • இந்த நடைமுறை பல ஆண்டுகளாக பாரம்பரிய படி நடந்து வருகிறது.

    தெலுங்கானா மாநிலம் மெகபூப் நகர் மாவட்டம் ஜட் சர்லா அடுத்த கங்காபுரத்தில் லட்சுமி சென்ன கேசவ சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.

    பிரம்மோற்சவ விழாவின்போது சாமியின் காலணிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்கின்றனர்.

    பின்னர் கோவிலில் சாமி தரிசனம் முடிந்து வெளியே வரும் பக்தர்களின் தலையில் சாமியின் செருப்பால் அடித்து ஆசீர்வாதம் செய்து அனுப்புகின்றனர்.

    இந்த நடைமுறை பல ஆண்டுகளாக பாரம்பரிய படி நடந்து வருகிறது. சாமியின் செருப்பால் ஆசீர்வாதம் வாங்கும் பக்தர்களை சாமி நலமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை என தெரிவித்தனர். 

    • ஆந்திரா, மேற்குவங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு ஊழல் பரவியுள்ளதால், விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.
    • ஊழலில் மாநிலங்களுக்கு இடையே குற்றவியல் கும்பலின் தொடர்பும் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

    பா.ஜ.க. ஆட்சி செய்யும் ஒடிசா மாநிலத்தில் காவல்துறையில் துணை ஆய்வாளர்கள் தேர்வில் நடந்த பல கோடி ரூபாய் ஊழல் புகாரை சி.பி.ஐ.-க்கு மாற்றுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    கடந்த அக்டோபர் மாதம் நடந்த தேர்வில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக புகார்கள் எழுந்து நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகள் கடும் அழுத்தத்தை கொடுத்து வந்தன.

    இந்நிலையில் காவல் துணை ஆய்வாளர் பணியமர்த்தலில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்றி ஒடிசா அரசு அறிவித்துள்ளது.

    ஆந்திரா, மேற்குவங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு இந்த ஊழல் பரவியுள்ளதால், விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி ஒப்புதல் அளித்துள்ளார்.

    இந்த ஊழலில் மாநிலங்களுக்கு இடையே குற்றவியல் கும்பலின் தொடர்பும் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த வழக்கை தற்போது விசாரித்து வரும் ஒடிசா காவல்துறையின் குற்றப்பிரிவு போலீசார், இதுவரை 123 பேரை கைது செய்துள்ளனர். இதில் 114 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பித்தவர்களும் அடங்குவர்.

    இந்த திடீர் சம்பவம் எதிர்பாராத சூழ்நிலைகளைக் காரணம் காட்டி ஒடிசா காவல் ஆட்சேர்ப்பு வாரியம் தேர்வை காலவரையின்றி ஒத்திவைக்க வழிவகுத்தது.

    ஒடிசா காவல்துறையில் 933 காவல் துணை ஆய்வாளர் பதவிகளுக்கு சுமார் ஒரு லட்சத்து ஐம்பத்து மூவாயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

    • இந்தியா கூட்டணியில் அதிருப்தியில் இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா பீகார் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தது.
    • கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் ஜே.எம்.எம். இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது.

    பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க.வின் என்.டி.ஏ. கூட்டணிக்கும், லாலு பிரசாத்தின் ஆர்ஜேடி-காங்கிரஸ் இந்தியா கூட்டணிக்கும், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இதனிடையே, இந்தியா கூட்டணியில் அதிருப்தியில் இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா பீகார் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தது. கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் ஜே.எம்.எம். இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது.

    இந்த நிலையில், பீகார் தேர்தலில் இந்தியா கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளராக தேஜஸ்வி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பாட்னாவில் நடைபெற்ற இந்தியா கூட்டணி செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ்- ஆர்ஜேடி தரப்பில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ்- ஆர்ஜேடி இடையிலான சர்ச்சைகளுக்கு மத்தியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி முதல்-மந்திரி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 



    • கொல்லப்பட்டவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • சுட்டுக்கொல்லப்பட்ட 4 குற்றவாளிகளும் பீகார் தேர்தலில் பெரிய அளவில் வன்முறையை கட்டவிழ்க்க திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    டெல்லி ரோஹினி பகுதியில் இன்று அதிகாலை 2.20 மணி அளவில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 4 குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    டெல்லி, பீகார் போலீசார் இணைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ரஞ்சன் பதக், பிம்லேஷ், மகோட்டா, மணீஷ் பதக், அமன் தாக்கூர் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், சுட்டுக்கொல்லப்பட்ட 4 குற்றவாளிகளும் பீகார் தேர்தலில் பெரிய அளவில் வன்முறையை கட்டவிழ்க்க திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 



    • தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக 9 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • உன்னிகிருஷ்ணன் போத்தியை சிறப்பு புலனாய்வு குழு கடந்த 17-ந்தேதி கைது செய்தனர்.

    சபரிமலை கோவிலின் துவார பாலகர்கள் சிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகளை புதுப்பிக்க சென்னைக்கு அனுப்பியபோது 4.600 கிலோ தங்கம் மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    தங்கம் மாயமானதாக புகார் எழுந்த நிலையில், தேவசம் போர்டு அதிகாரிகள் ஒன்பது பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தங்கமுலாம் பூசும் செலவை ஏற்ற, கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவரிடமும் விசாரணை நடந்தது.

    இருப்பினும் இந்த விவகாரம் குறித்து உயர் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    மேலும் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இடைத்தரகாகச் செயல்பட்ட உன்னிகிருஷ்ணன் போத்தி, தேவஸ்வம் போர்டு துணை ஆணையர் முராரி பாபு, செயலாளர் ஜெயஸ்ரீ, செயல் அதிகாரி சதீஷ், நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், திருவாபரண பெட்டியின் முன்னாள் ஆணையர் பைஜு உள்ளிட்ட 9 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    துவாரபாலகர்கள் சிலைகள் மற்றும் கோவில் கதவுகளில் தங்கம் மாயமானது தொடர்பான வழக்குகளில் தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தியின் பெயரே முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டது.

    இதையடுத்து இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான உன்னிகிருஷ்ணன் போத்தியை சிறப்பு புலனாய்வு குழு கடந்த 17-ந்தேதி கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் தங்க தகடு திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.

    சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் கோவில் நிர்வாக அதிகாரி முராரி பாபுவை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கு தொடர்பாக பெங்களூருவை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போத்தி ஏற்கனவே கைதான நிலையில் தற்போது முராரி பாபு கைது செய்யப்பட்டுள்ளார்.

    • கடந்த 40 ஆண்டுகளாக தணிக்கை நடைபெறவில்லை.
    • குருவாயூர் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்படும் குன்றிமணி மூட்டைகள் மாயமாகி உள்ளது.

    திருச்சூர்;

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் கிருஷ்ணன் கோவில் உள்ளது. புகழ் பெற்ற இக்கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம், வெள்ளி, பாத்திரங்கள், தந்தம் போன்றவை அதிக அளவில் உள்ளன. ஆனால், இந்த விலை மதிப்பற்ற பொருட்களுக்கான ஆவணங்கள் சரியாக பராமரிக்கப்படாததால், முறைகேடு நடந்து இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று குருவாயூர் தேவஸ்தானத்தின் 2019-20-ம் ஆண்டு தணிக்கை அறிக்கை மூலம் தெரியவந்து உள்ளது.

    அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    குருவாயூர் தேவஸ்தான புன்னத்தூர் யானைகள் முகாமில் கடந்த 2019-20-ம் ஆண்டு 522.86 கிலோ தந்தம் மற்றும் பொருட்கள் சட்டப்படி வனத்துறையிடம் ஒப்படைக்கப்படாமலும், கோவிலுக்குள் இருக்கும் தங்க கிரீடம், வெள்ளி ஆபரணமாகவும், 2.65 கிலோ வெள்ளி பாத்திரத்துக்கு பதிலாக 750 கிராம் எடையுள்ள வெள்ளி பாத்திரமாகவும் மாற்றப்பட்டுள்ளது.

    குருவாயூர் தேவஸ்தான சட்ட விதிமுறைகள்படி, கோவிலில் உள்ள விலைமதிப்பற்ற பொருட்களை கோவில் நிர்வாகி ஆண்டுதோறும் நேரடியாக சரிபார்க்க வேண்டியது கட்டாயம். ஆனால், கடந்த 40 ஆண்டுகளாக தணிக்கை நடைபெறவில்லை. அதோடு பக்தர்கள் வழங்கிய காணிக்கை பணத்திற்கான ரசீதுகள் முறையாக வழங்கப்படவில்லை.

    குருவாயூர் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்படும் குன்றிமணி மூட்டைகள் மாயமாகி உள்ளது. ரூ.1½ லட்சம் மதிப்புள்ள குங்குமப்பூ குறித்த கணக்குகளும் சரிவர நிர்வகிக்கப்படவில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    சமீபத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்க கவச முறைகேடு சம்பவத்தை தொடர்ந்து, தற்போது குருவாயூர் கோவிலில் முறைகேடுகள் நடந்து உள்ளதாக தணிக்கை அறிக்கையில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கொல்கத்தாவில் இருந்து ஸ்ரீநகர் புறப்பட்டு சென்றது.
    • நடுவானில் பறந்த போது எரிபொருள் கசிவு ஏற்பட்டதாக சந்தேகம்.

    கொல்கத்தாவில் இருந்து ஸ்ரீநகருக்கு இண்டிகோ 6E-6961 விமானம் 166 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.

    டெக்னிக்கல் பிரச்சினை (எரிபொருள் கசிவு) சந்தேகத்தில் விமானி, விமானத்தை உடனடியாக தரையிறக்க முடிவு செய்தார். அதன்படி ஏடிசி-யிடம் வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரப்பட்டது.

    ஏடிசி அனுமதி வழங்க விமானம் பத்திரமாக தரையிறங்கியது. விமானத்தில் பயணம் செய்த 166 பேர் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    பின்னர், ஸ்ரீநகர் செல்ல பயணிகளுக்கு இண்டிகோ நிறுவனம் மாற்று ஏற்பாடு செய்து கொடுத்தது.

    • ரிஷப் பண்ட் தலைமையில் இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • முகமது சிராஜ், கலீல் அகமது உள்ளிட்டோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் சர்பராஸ் கான். 28 வயதான இவர் முதல்தர போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், அதிக உடல் எடையுடன் காணப்பட்டதால் இளம் வயதில் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

    ஆனால், தன்னுடைய தொடர் முயற்சியால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி ராஜ்கோட்டில் தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அறிமுகம் ஆனார். அதன்பின் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடினார். பிப்ரிவரி முதல் நவம்பர் வரை 6 போட்டிகளில் 11 இன்னிங்சில் பேட்டிங் செய்து 1 சதம், 3 அரைசதங்களுடன் 371 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 37.10 ஆகும்.

    அதன்பின் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சில தினங்களுக்கு முன் ரிஷப் பண்ட் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா ஏ அணிக்கெதிரான இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டது. இதில் சர்பராஸ் கானுக்கு இடம் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பெண் செய்தி தொடர்பாளரான ஷமா முகமது, "சர்பராஸ் கான் அவருடைய குடும்ப பெயரால், இந்தியா ஏ கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இந்த விசயத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரின் நிலைப்பாடு எங்கே என்பது எங்களுக்குத் தெரியும்" எனத் தெரிவித்திருந்தார்.

     இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டில் அரசியலை கலப்பதாக பாஜக தலைவர்கள் கடுமையான வகையில் பதிலடி கொடுத்துள்ளனர்.

    பாஜக தலைவர் பூனவல்லா ஷமா முகமதுவுக்கு பதில் கொடுக்கும் வகையில் "இந்தப் பெண்மணியும் அவருடைய கட்சியினரும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். ரோகித் சர்மாவை உருவக் கேலி பிறகு, அவரும் அவருடைய கட்சியினரும் நமது கிரிக்கெட் அணியை வகுப்புவாத அடிப்படையில் பிரிக்க விரும்புகிறார்களா? நாட்டைப் பிரித்த பிறகும் அவர்கள் திருப்தி அடையவில்லையா?).

    இதே அணியில் முகமது சிராஜ் மற்றும் கலீல் அகமதுவும் விளையாடுவார்கள். இந்தியாவை வகுப்புவாத, சாதி அடிப்படையில் பிரிப்பதை நிறுத்துங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

    இதே ஷமா மொகமதுதான் ரோகித் சர்மா பருத்த உடல் கொண்டு விளையாட்டு வீரர் எனக் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தனது பதவியை நீக்கினார்.

    • பதிவு செய்யப்படாத அமைப்பிற்கு பணம் எங்கிருந்து வருகிறது?.
    • நீங்கள் பதிவு செய்திருந்தால், வரி செலுத்த வேண்டும். சட்டத்திற்கு இணங்க வேண்டும்.

    காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான கார்கேயின் மகனும், கர்நாடக மாநில அமைச்சருமான பிரியங்க் கார்கே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பாக பதிவு செய்யாதது குறித்து குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக பிரியங் கார்கே கூறியதாவது:-

    ஆர்.எஸ்.எஸ். ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்பு என்று என் முகத்தின் மீது ஆதாரங்களை தூக்கி வீசினால், பிரச்சினை முடிந்தது. பதிவு செய்யப்படாத அமைப்பிற்கு பணம் எங்கிருந்து வருகிறது?, அவர்களுக்கு ஆடைகள் தைப்பதற்கு, பேரணிகள் நடத்துவதற்கு, டிரம்ஸ் போன்றவற்றை வாங்குவதற்கு, கட்டிடம் கட்டுவதற்கு பணம் எங்கிருந்து வருகிறது?. பதிவு செய்யப்படாத அமைப்பாக இருந்தால், எப்படி பணம் பெற முடியும்?.

    நீங்கள் பதிவு செய்திருந்தால், வரி செலுத்த வேண்டும். சட்டத்திற்கு இணங்க வேண்டும். வெளிநாட்டு மற்றும் தனியார் நன்கொடை குறித்த தகவல்ளை பகிர வேண்டும். ஆகவே, அவர்கள் பதிவு பெறவில்லை.

    இவ்வாறு பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.

    பொது இடங்களில், ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என பிரியங்க் கார்கே முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். அவர்களுக்கு உதவி செய்யும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்திருந்தார்.

    • சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி நிலவியது.
    • சித்தராமையா முதல் 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வகிப்பார்

    கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது முதல்-மந்திரி பதவியை பெற சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் அகில இந்திய தலைமை சித்தராமையாவை முதல்-மந்திரியாகவும், டி.கே. சிவகுமாரை துணை முதல்-மந்திரியாவும் அறிவித்தது.

    இதையடுத்து சித்தராமையா முதல் 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வகிப்பார் என்றும் அடுத்த 2 ½ ஆண்டுகள் டி.கே. சிவகுமார் முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்பார் என்று கூறப்பட்டது.

    இந்நிலையில், நவம்பரில் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கர்நாடக முதலமைச்சராவார் என சில காங்கிரஸ் தலைவர்கள் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், இதுகுறித்து பேசிய சித்தராமையா, "நவம்பர் மாதத்துடன் இரண்டரை ஆண்டுகள் நிறைவடையும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். நான் இரண்டரை ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டேன். மேலும் இரண்டரை ஆண்டுகள் ஆட்சியில் தொடர்வேன்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், சித்தராமையா தனது அரசியல் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருப்பதாக அவரது மகன் யதீந்திரா தெரிவித்துள்ளார். இது கர்நாடகா அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

    ×