என் மலர்
இந்தியா

ரூ.50 பந்தயத்திற்காக பேனாவை விழுங்கிய மாணவன்
- முரளி கிருஷ்ணாவை குண்டூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
- ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்த போது அவரது பெருங்குடலில் பேனா இருப்பது தெரிய வந்தது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் கோத்தபேட்டையை சேர்ந்தவர் சீனிவாச ராவ். இவரது மகன் முரளி கிருஷ்ணா (வயது 16).
இவர் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 9-ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது இவரது நண்பர்கள் பேனாவை விழுங்கினால் ரூ.50 தருவதாக பந்தயம் கட்டினர். அப்போது முரளி கிருஷ்ணா பேனாவை விழுங்கினார்.
அன்று முதல் முரளி கிருஷ்ணாவுக்கு வயிற்று வலி இருந்து வந்தது. இருப்பினும் தனக்கு வயிற்று வலி இருப்பது குறித்து பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி முரளி கிருஷ்ணாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அவரது நண்பர்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முரளி கிருஷ்ணா பேனாவை விழுங்கியதாக அவரது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து முரளி கிருஷ்ணாவை குண்டூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்த போது அவரது பெருங்குடலில் பேனா இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து டாக்டர்கள் கவுண்டர் குழாய் மூலம் ரெட்ரோகிரேட் எண்டோஸ்கோபி முறையில் பெருங்குடலில் இருந்த பேனாவை அறுவை சிகிச்சையின்றி அகற்றினர். இதனால் மாணவரின் பெற்றோர் நிம்மதி அடைந்தனர்.






