என் மலர்
நீங்கள் தேடியது "வயநாடு நிலச்சரிவு"
- கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, மத்திய அரசின் பதிலைக் கோரியிருந்தது.
- 555 குடும்பங்களைச் சேர்ந்த 1,620 கடன்களை அரசே செலுத்தும்
வயநாடு நிலச்சரிவில் சிக்கி வீடு, உடமைகளை இழந்த 555 பேரின் வங்கி கடன் தொகை 18,75,69,037.90 ரூபாயை கேரள அரசே ஏற்றுள்ளது. கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு மறுத்த நிலையில், முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்தத் தொகை வங்கிகளுக்கு செலுத்தப்பட உள்ளன. அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன் இந்த செய்தியை உறுதி செய்துள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
"நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பிறகு, பாதிக்கப்பட்ட மக்கள் வாங்கிய கடன்கள் குறித்து விரிவான அறிக்கை தயாரிக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். பேரிடர் மேலாண்மைச் சட்ட விதிகளின் கீழ் இந்தக் கடன்களைத் தள்ளுபடி செய்யுமாறு மாநில அரசு மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, மத்திய அரசின் பதிலைக் கோரியிருந்தது.
எனினும், மத்திய அரசு இந்த விதியைச் சட்டத்திலிருந்து நீக்கிவிட்டதாக இந்திய சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த நடவடிக்கையை நீதிமன்றம் 'மனிதாபிமானமற்றது' என்று குறிப்பிட்டதாக அமைச்சர் கூறினார்.
மேலும் இப்போது, கேரள அரசு, ரூ.18,75,69,037.90 மதிப்புள்ள கடன்களின் பொறுப்பை முழுமையாக ஏற்க முடிவு செய்துள்ளது. மாவட்ட ஆட்சியர் வழங்கிய தரவுகளின் அடிப்படையில், அடையாளம் காணப்பட்ட 555 கடன் வாங்கியவர்களின் முழு கடனையும் அரசே செலுத்தும். இந்தக் கடனுக்கான நிதி முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து பெறப்படும்." என தெரிவித்தார்.
முன்னதாக, மாநில அரசின் கீழ் இயங்கும் கேரள வங்கி நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் கடன்களை ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- பேரழிவால் சிதைந்த மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரு முயற்சி
- எல்ஸ்டன் எஸ்டேட் நிலத்தில் மொத்தம் 410 வீடுகள் அமைய உள்ளன
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக 300 வீடுகள் மற்றும் அவற்றுக்கான வசதிகள் தயார் செய்யப்பட்டு, அடுத்த மாதம் ஒப்படைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கேரள அரசின் 'லைஃப் மிஷன்' திட்டத்தின் கீழ் இதுவரை 4.76 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், 1.24 லட்சம் வீடுகளின் கட்டுமானம் தற்போது பல்வேறு கட்டங்களில் உள்ளது, பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
முண்டக்காய்-சூரல்மலா நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக வயநாட்டில் உள்ள கல்பெட்டா பைபாஸ் அருகே உள்ள எல்ஸ்டன் எஸ்டேட் நிலத்தில் கட்டப்பட்டு வரும் டவுன்ஷிப்பின் ஒரு பகுதியாக இந்த வீடுகள் உள்ளன. இதில் மொத்தம் 410 வீடுகள் அமைய உள்ளன. இந்த வீடுகளில் அத்தியாவசிய வசதிகள் அனைத்தும் இருக்கும் எனவும் தெரிவித்தார்.
இது வெறும் வீடுகளை வழங்குவது மட்டுமல்லாமல், பேரழிவால் சிதைந்த மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரு முயற்சி. பேரிடர்களால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பமும் முன்பை விட பாதுகாப்பான மற்றும் சிறந்த வாழ்க்கை இடத்தைப் பெறுவதை உறுதி செய்வதே எங்கள் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.






