என் மலர்
இந்தியா

நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு பிப்ரவரியில் வீடுகள் ஒப்படைப்பு - பினராயி விஜயன் உறுதி!
- பேரழிவால் சிதைந்த மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரு முயற்சி
- எல்ஸ்டன் எஸ்டேட் நிலத்தில் மொத்தம் 410 வீடுகள் அமைய உள்ளன
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக 300 வீடுகள் மற்றும் அவற்றுக்கான வசதிகள் தயார் செய்யப்பட்டு, அடுத்த மாதம் ஒப்படைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கேரள அரசின் 'லைஃப் மிஷன்' திட்டத்தின் கீழ் இதுவரை 4.76 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், 1.24 லட்சம் வீடுகளின் கட்டுமானம் தற்போது பல்வேறு கட்டங்களில் உள்ளது, பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
முண்டக்காய்-சூரல்மலா நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக வயநாட்டில் உள்ள கல்பெட்டா பைபாஸ் அருகே உள்ள எல்ஸ்டன் எஸ்டேட் நிலத்தில் கட்டப்பட்டு வரும் டவுன்ஷிப்பின் ஒரு பகுதியாக இந்த வீடுகள் உள்ளன. இதில் மொத்தம் 410 வீடுகள் அமைய உள்ளன. இந்த வீடுகளில் அத்தியாவசிய வசதிகள் அனைத்தும் இருக்கும் எனவும் தெரிவித்தார்.
இது வெறும் வீடுகளை வழங்குவது மட்டுமல்லாமல், பேரழிவால் சிதைந்த மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரு முயற்சி. பேரிடர்களால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பமும் முன்பை விட பாதுகாப்பான மற்றும் சிறந்த வாழ்க்கை இடத்தைப் பெறுவதை உறுதி செய்வதே எங்கள் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.






