என் மலர்
இந்தியா

இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினையில் தலையிட்டால் பொறுத்துக் கொள்ளமாட்டோம்: மம்தானிக்கு பாஜக கண்டனம்
- நியூயார்க் மேயர் மம்தானி உமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
- நாங்கள் அனைவரும் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்காவின் நியூயார்க் மேயராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி நேற்று பதவியேற்றார். நியூயார்க் நகரின் முதல் முஸ்லீம் மேயரான அவர் திருக்குர்ஆன் மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றார். மேயர் தேர்தலில் மம்தானியை டிரம்ப் கடுமையாக எதிர்த்தது அறிந்ததே.
இந்நிலையில் 2020 டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தில் வெடித்த வன்முறை தொடர்பான வழக்கில் கைதாகி 5 வருடங்களாக சிறையில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் உமர் காலித்துக்கு மம்தானி கைப்பட கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில், "அன்புள்ள உமர், கசப்பான அனுபவங்களைப் பற்றியும், அவை நம்மைச் சிதைக்க அனுமதிக்கக் கூடாது என்பதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் நீங்கள் கூறிய வார்த்தைகளை நான் அடிக்கடி நினைத்துப் பார்க்கிறேன். உங்கள் பெற்றோரைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. நாங்கள் அனைவரும் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம்" என்று மம்தானி குறிப்பிட்டுள்ளார்.
உமர் காலிதின் நண்பர் பனோஜ்யோத்ஸ்னா லாஹிரி இந்த கடிதத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த நிலையில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் யாரேனும் தலையிட்டால் இந்தியா பொறுத்துக் கொள்ளாது என பாஜக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பஜக தேசிய செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறுகையில் "இந்திய இறையாண்மைக்கு சவால் ஏற்பட்டால், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 140 கோடி மக்களும் ஒன்றிணைந்து நிற்பார்கள். இந்திய மக்கள் நாட்டின் நீதித்துறையின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.






