என் மலர்tooltip icon

    ஈரோடு

    தமிழகத்தை இப்போது பாரதிய ஜனதாதான் ஆள்கிறது. ஆகவே தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என ஈரோட்டில் திருமாவளவன் கூறியுள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் திருமணம் நடந்தது.

    இதில் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மேற்கு மாவட்டங்களான ஈரோடு, திருப்பூர், சேலம், கோவை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு எனக்கு அதிகமாக வர வாய்ப்பு கிடைக்கவில்லை. திருமணம் மூலம் இங்கு வர இப்போது வாய்ப்பு கிடைத்து உள்ளது.

    ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் ஒரு நிலையான ஆட்சி இல்லை. தமிழகத்தை இப்போது பாரதிய ஜனதாதான் ஆள்கிறது. ஆகவே தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்.


    இந்தியா முழுவதையும் நாம்தான் ஆள வேண்டும் என்று பாரதிய ஜனதா நினைக்கிறது. தமிழகத்தை ஆள நாம்தான் ஆளப் பிறந்தவர்கள். நாம்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும். நமக்கு ஆள தகுதி இல்லையா என்ன?

    இனி தமிழ்நாட்டில் யார் ஆட்சி அமைத்தாலும் விடுதலை சிறுத்தைகளின் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. மேற்கு மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை வலுப்படுத்தி நமது கோட்டையாக மாற்ற வேண்டும்.

    இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
    பெருந்துறை அருகே நூற்பாலை தீ பிடித்து எரிந்ததில் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 39). இவர் அந்த பகுதியில் ஒரு நூற்பாலை (ஸ்பின்னிங் மில்) வைத்து நடத்தி வருகிறார். நேற்று வழக்கம்போல் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் வேலை முடிந்து சென்றுவிட்டனர். மாலை 6.30 மணியளவில் கழிவு பஞ்சு வெளியேறும் இடத்தில் சூடு தாங்காமல் திடீரென தீ பிடித்தது.

    பஞ்சில் தீ பிடித்ததால் மள...மள...வென தீ கொளுந்துவிட்டுஎரியத் தொடங்கியது. அங்கு பணியில் இருந்த ஊழியர் இதுபற்றி மில் உரிமையாளருக்குதகவல் கொடுக்க அவர் உடனடியாக பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

    நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. தீயணைப்பு வீரர்கள் தகுந்த நேரத்தில் சென்று தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அ.தி.மு.க. ஜெ.தீபா அணி எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை ஈரோடு மாநகர் சார்பில் ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ்நிறுத்தம் அருகே போயஸ் கார்டனில் தீபா மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், டி.டி.வி.தினகரனை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    ஈரோடு:

    அ.தி.மு.க. ஜெ.தீபா அணி எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை ஈரோடு மாநகர் சார்பில் ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ்நிறுத்தம் அருகே போயஸ் கார்டனில் தீபா மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், டி.டி.வி.தினகரனை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாநகர் மாவட்ட பொறுப்பாளர் பூக்கடை சரவணகுமார் தலைமை தாங்கினார். வக்கீல்கள் தங்கவேலு, கார்த்திகேயன், டைட்டானிக்தர்மா, செல்லமணி, தங்கமணி, தெட்சிணாமூர்த்தி, சந்திரசேகர், திருநாவுகரசு, மகளிர் அணி செல்வி, கீதா, மாலதி, சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்த போது வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் வந்து இங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்று கூறினார்.

    அதற்கு தீபா பேரவையினர், எதிர்ப்பு தெரிவித்தனர். ‘‘முதலில் ஏன் அனுமதி தந்தீர்கள். இப்போது ஏன் அனுமதி மறுக்கிறீர்கள்’’? என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்ய முயற்சித்தனர்.

    அப்போது தீபா பேரவையினர் டி.டி.வி.தினகரன் உருவ படத்தை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    இதுகுறித்து மாநகர் மாவட்ட பொறுப்பாளர் பூக்கடை சரவணகுமார் கூறும்போது, ‘‘போயஸ் கார்டனில் வைத்து தீபா தாக்கப்பட்டு உள்ளார். கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அவரது உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. இதனை கண்டித்து நாங்கள் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே போலீசார் அனுமதியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

    அப்போது போலீசாரை எதிர்த்து கோ‌ஷம் எழுப்பினோம். உடனே வீரப்பன் சத்திரம் போலீசார் எங்களிடம் வந்து இங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்றனர். முதலில் அனுமதி கொடுத்து விட்டு பின்னர் அனுமதி இல்லை என்கின்றனர். இது என்ன நியாயம்’’! என்று கூறினார்.
    ஈரோட்டில் மதுக்கடையை அகற்ற கோரி சீருடையுடன் அரசு பள்ளி மாணவிகள் மாவட்ட கலெக்டர் பிரபாகரனிடம் மனு கொடுத்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரபாகர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. ஈரோடு நொச்சிக்காட்டு வலசு பாலாஜி கார்டன் பகுதி மக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

    எங்கள் பகுதியில் 200 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு புதிதாக மதுக்கடை அமைய உள்ளதாக தெரிகிறது. அதற்கான இடத்தையும் பார்த்து விட்டு சென்றுள்ளனர்.

    இந்த வழியாகத்தான் இப்பகுதி பெண்கள் மற்றும் மாணவ-மாணவிகள் செல்கிறார்கள். மேலும் இங்கு மாணவிகளின் மழலையர் பள்ளியும் உள்ளது.

    இந்த இடத்தில் மதுக்கடை அமைந்தால் அவர்களுக்கு குடிமகன்களால் அச்சுறுத்தல் ஏற்படும் எனவே எங்கள் பகுதியில் மதுக்கடை அமைக்ககூடாது என கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் வெள்ளி திருப்பூர் அரசு பள்ளி மாணவிகள் பள்ளிக்கூடத்தை புறக்கணித்துவிட்டு சீருடையுடன் ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பிறகு கலெக்டர் பிரபாகரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    வெள்ளி திருப்பூர் மையப் பகுதியில் 9 வருடமாக ஒரு மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடையை அகற்ற கோரி பல முறை மனு கொடுத்துவிட்டோம். இந்த வழியாகத்ததான் மாணவ-மாணவிகள் செல்ல வேண்டியுள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இந்த வழியாக செல்லும் மாணவிகள் மற்றும் பெண்களை போதை ஆசாமிகள் கிண்டல் செய்கிறார்கள். ஆபாசமாக நடந்து கொள்கிறார்கள். இதனால் இந்த மதுக் கடையை உடனடியாக வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மாணவிகள் அந்த மனுவில் கூறி உள்ளனர்.
    சென்னிமலை அருகே கரும்பு பால் அரைக்கும் இரும்பு எந்திரம் தலையில் விழுந்ததில் மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த முருங்கத் தொழுவு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுமித்தரா. இவரது மகன் பூவரசன் (வயது14).

    சுமித்தரா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனது பாட்டி வீட்டில் மகன் பூவரசனுடன் வசித்து வருகிறார். பூவரசன் பெருந்துறையில் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

    சுமித்தரா வெள்ளோட்டில் ஜூஸ் கடை நடத்தி வந்தார். அவர் கடை அருகே கரும்புபால் கடை உள்ளது. பூவரசன் மாலை பள்ளி முடிந்ததும் வெள்ளோட்டில் உள்ள ஜூஸ் கடைக்கு செல்வது வழக்கம்.

    அதே போன்று சம்பவத்தன்றும் பூவரசன் மாலையில் பள்ளி முடிந்ததும் ஜூஸ்கடைக்கு சென்றுள்ளான். அப்போது அருகில் உள்ள கரும்புபால் கடைக்காரர் பூவசரனை அழைத்து கரும்பு எந்திரத்தை தள்ளுவதற்கு உதவி செய்ய கோரினார்.அந்த கடைக்காரர் கரும்புபால் எந்திரத்தை முன்னால் இருந்து தள்ள பூவரசன் பின்னால் இருந்து எந்திரத்தை தள்ளினான்.அப்போது எதிர்பாராத வகையில் கரும்புபால் எந்திரம் பூவரசன் தலை மீது விழுந்தது.

    இதில பூவரசன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினான். பூவரசனை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவனை பரிசோதித்த டாக்டர்கள் பூவரசன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பவானி அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு:

    பவானியை அடுத்த ஊத்துக்காடு, குருசாமி பாளையத்தை சேர்ந்தவர் கணேஷ்குமார். இவரது மனைவி ஜீவிதா. கணேஷ்குமார் ஜீவிதாவை காதலித்து கடந்த 8 மாதத்துக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

    கணேஷ்குமாருக்கும், ஜீவிதாவுக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி கணவன்-மனைவி சண்டை போட்டு கொள்வார்களாம்.

    இந்நிலையில் கடந்த 7-ந் தேதி ஜீவிதா கணேஷ்குமாருடன் கோபித்து கொண்டு அவரின் தாத்தா வீட்டிற்கு சென்று விட்டார்.

    சம்பவத்தன்று கணேஷ்குமார் ஜீவிதாவுக்கு போன் செய்தபோது ஜீவிதா பேசவில்லை என்று கூறப்படுகிறது.இதனால் மனவேதனை அடைந்த கணேஷ்குமார் வீட்டில் இருந்த வி‌ஷத்தை குடித்து மயங்கி உள்ளார்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணேஷ்குமாரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.எனினும் சிகிச்சை பலனின்றி கணேஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குடும்ப பிரச்சனையில் காதல் திருமணம் செய்த தொழில் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோபி:

    கோபி சாரதம்பாள் கோவில் வீதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 36). மனைவி பெயர் தனசக்தி (30).

    இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். வினோத்குமார் கோபியில் கேட்டரிங் நிறுவனம் நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக வினோத்குமார் வேதனையுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது வினோத்குமார் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த பரிதாப சம்பவம் குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வினோத்குமார் தற்கொலை செய்வதற்கு வேறு ஏதும் காரணம் உண்டா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தற்கொலை செய்து கொண்ட தொழில் அதிபர் வினோத்குமார் உடல் பரிசோதனை கோபி அரசு ஆஸ்பத்திரியில் நடத்தப்பட்டு பிறகு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

    காஞ்சிகோவில் மற்றம் துடுப்பதியில் நாளை மின் நிறுத்தம் ஏற்படும் என்று மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    காஞ்சிகோவில் அருகே உள்ள காந்தி நகர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மின் பராமரிப்பு பணி நடக்கிறது.

    இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ் கண்ட இடங்களில் மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிகோவில், பள்ளப்பாளையம், கவுண்டம்பாளையம், கரட்டுப்பாளையம், சின்னியம் பாளையம், அய்யன் வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலப்பாளையம், கந்தம் பாளையம் பிரிவு, சாமி கவுண்டன் பாளையம், வேட்டை பெரியாம் பாளையம், காந்தி நகர், நடு வலசு, கருக்கம் பாளையம்,

    துடுப்பதி, பொன்னாண்டா வலசு, கொளத்தான் வலச, சூரியம்பாளையம், பெத்தாம் பாளையம், இளையாம் பாளையம், ஓசப்பட்டி, மாத நாயக்கன் பாளையம், சாணார் பாளையம், தீர்த்தம் பாளையம், சமாதான புரம், சீரங்க கவுண்டம் பாளையம், பாலக்கரை, தொட்டியனூர், கோவில் காட்டு வலசு.

    இந்த தகவலை ஈரோடு மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (நகரியம்) சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    அம்மாபேட்டை அருகே மாணவி திடீர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சி பேட்டையை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி செல்வி.

    இவர்களுக்கு பிரியா (வயது 17), ராஜேஸ்வரி (10) என்ற 2 மகள்கள் உள்ளனர்.மூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டார். செல்வி கூலி வேலைக்கு சென்று தன் மகள்களை படித்து வைத்து வருகிறார்.

    பிரியா 10-ம் வகுப்பு தேர்வு எழுதி விட்டு விடுமுறையில் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்வி வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த பிரியாவை காணவில்லை.

    வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த செல்வி வீட்டில் மகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தார். ஆனால் பிரியாவை பற்றி எந்த தகவலும் இல்லை.

    இது குறித்து செல்வி அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியாவை தேடி வருகிறார்கள்.

    வெள்ளோடு அருகே விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    பெருந்துறை அருகே உள்ள தோப்புபாளையத்தை சேர்ந்தவர் அரிச்சந்திரன். இவரது மனைவி ராதாமணி (வயது48). இவர்களுக்கு ரமேஷ் (28) என்கிற மகன் உள்ளார்.

    சம்பவத்தன்று ராதா மணியும், ரமேஷூம் வெள்ளோட்டில் இருந்து ஈரோடிற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை ரமேஷ் ஓட்டினார். அப்போது திடீரென கார் கட்டுபாட்டை இழந்து ரோட்டோரத்தில் உள்ள மரத்தில் மோதி கவிழ்ந்தது.

    இதில் ரமேஷூம், ராதா மணியும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த ஆம்புலன்சு மூலம் ராதா மணி, ரமேசை மீட்டு ஈரோடு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து ராதாமணிக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரமேஷ் உடலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அ.தி.மு.க இணைய ஓ.பி.எஸ். விரும்பினாலும் அவருடன் இருப்பவர்கள் சேர விட மாட்டார்கள் என்று ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ தென்னரசு பேட்டியில் கூறியுள்ளார்.

    ஈரோடு:

    அ.தி.மு.க. அணிகள் இணைப்பு முயற்சி இல்லை என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ தென்னரசு கூறியதாவது:-

    ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே ஒரே அணியாக அ.தி.மு.க. இணைய விருப்பம் இல்லை.

    சசிகலா, தினகரன் இவர்கள் எல்லாம் வேண்டாம் என்கிறார். இவர்கள் இல்லாமல் எப்படி இணைப்பு நடக்கும்?

    ஒருவேளை ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க. அணிகள் இணைய விரும்பினாலும் அவருடன் இருக்கும் மைத்ரேயன், முனுசாமி, மா.ப.பாண்டியராஜன், பி.எச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன் போன்றோர்கள் இணைய விட மாட்டார்கள்.

    இவர்கள் எல்லாம் ஆளுக்கு ஒரு கருத்துக்களை கூறி அ.தி.மு.க. அணிகளை ஒருபோதும் இணைய விடாமாட்டார்கள். ஆகவே இனி அ.தி.மு.க. அணிகள் இணைய வாய்ப்பு குறைவே.

    இவ்வாறு தென்னரசு எம்.எல்.ஏ. கூறினார்.

    நடிகர் ரஜினிகாந்த் எனக்கு கல்யாணம் நடக்கும் போதே அரசியலுக்கு வரலாம், வருவார் என பேசப்பட்டவர்; என் பேரன் கல்யாணம் நடக்கும் போதாவது அரசியலுக்கு வருவாரா? என அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
    ஈரோடு:

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் நாடு முழுவதும் தேசிய-மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டன.

    இந்த தீர்ப்புக்கு காரணமாக வழக்கை தொடர்ந்து வெற்றி பெற்ற டாக்டர் ராமதாசுக்கு ஈரோட்டில் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே பாராட்டு வெற்றி விழா பொது கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் பொ.வை.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

    விழாவில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணியும், இளைஞர் சங்க மாநில தலைவரும், எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டனர்.

    தந்தை பெரியார் பிறந்த இந்த மண்ணில் வாழும் பெரியார் மருத்துவர் ராமதாசுக்கு பாராட்டு விழா நடக்கிறது. இதை பொதுக்கூட்டம் என்று நான் சொல்ல மாட்டேன். சில நாட்களுக்கு முன்னால் ஈரோட்டில் நதிநீர் மாநாடு நடந்தது. அங்கு வந்திருந்த மக்களை விட இங்கு மூன்று மடங்கு மக்கள் அதிகமாக வந்துள்ளனர். எனவே இது மாநாடு போன்றது.

    32 மாவட்டங்களுக்கு சென்று லட்சக்கணக்கான பெண்களை திரட்டி மதுவுக்கு எதிராக நான் போராட்டம் நடத்தியுள்ளேன். அடுத்த முறை நான் ஈரோடு வரும் போது பூரண மதுவிலக்கு நடைமுறையில் இருக்கும். அப்போது தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி நடக்கும். 3321 மதுக்களும், இந்தியாவில் 90 ஆயிரம் மதுக்கடைகளும் பா.ம.க.தொடர்ந்த வழக்கு மூலம் மூடப்பட்டுள்ளன. இது பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றி.

    இந்தியாவிலேயே மதுவுக்கு எதிராக முதன் முதலில் போராட்டம் ஈரோட்டில் தான் நடந்தது. 36 ஆண்டு காலமாக மதுவுக்கு எதிராக போராடி இன்று அதில் வெற்றி கண்டவர் தான் ராமதாஸ். இன்று யார் யாரோ மதுவிலக்கு பற்றி பேசுகிறார்கள்.

    50 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி புரிந்த அ.தி.மு.க, தி.மு.க. இரண்டு கட்சிகளும் மதுவை விற்று பிழைப்பு நடத்தியது. 50 ஆண்டுகளில் இரண்டு திராவிட கட்சிகள் ஒன்றும் செய்யவில்லை.


    ஜெயலலிதா, சசிகலா, ஓ.பி.எஸ், இ.பி.எஸ்., தீபா, தீபக், தினகரன் தமிழ்நாட்டில் என்னதான் நடக்கிறது? ஸ்டாலின் ஊடகங்களால் முன்நிறுத்தி வைக்கப்பட்ட தலைவர். அவர் இதுவரை என்ன செய்துள்ளார்? கலர் கலராக சட்டையை போடுவார். இல்லை சட்டையை கிழிச்சு போடுவார். ஸ்டாலின் மதுக்குறித்து பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது. அது பற்றி பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?

    நடிகர் ரஜினிகாந்த் எனக்கு கல்யாணம் நடக்கும் போதே அரசியலுக்கு வரலாம். வருவார் என்றனர். பின்னர் என் மகள் கல்யாணம் நடந்த போது அவர் அரசியலுக்கு வரலாம். வருவார் என்றனர். ஆனால் வரவில்லை. போகிற போக்கை பார்த்தால் என் பேரன் கல்யாணம் நடக்கும் போதாவது அவர் அரசியலுக்கு வருவாரா? தெரியவில்லை.

    ஜல்லிக்கட்டுக்காக பிரதமர் நரேந்திர மோடி வீட்டு முன்பு போராடியவன் நான். அதனால் போராட்டம் என்பது எனக்கு புதிதல்ல

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×