search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுதலை சிறுத்தைகள் கட்சி"

    • கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே அம்பலவாணன் பேட்டை கிராமம் உள்ளது.
    • குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே அம்பலவாணன் பேட்டை கிராமம் உள்ளது. இங்கு பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அம்பேத்கர் சிலை உள்ளது. அங்கு நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தனர். அக்கும்பல் திடீரென்று அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீசியது. அந்த குண்டு அம்பேத்கர் சிலை மீது பட்டு பழைய ஊராட்சி மன்ற கட்டிட வளாகத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனை அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து, 4 பேர் கொண்ட கும்பலை பிடிக்க விரட்டினர்.

    ஆனால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இத்தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் பெருமளவில் அந்த பகுதியில் திரண்டனர். குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக 4 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் தொகுதி செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் இளையராஜா, நகர செயலாளர் அம்பேத் மற்றும் நூற்றுக்கணக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் அந்த பகுதியில் மீண்டும் திரண்டனர். பெட்ரோல் குண்டு வீசியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

    இதனை தொடர்ந்து துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு பால் ஊற்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அம்பேத்கர் சிலை மற்றும் பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது. அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

    • மர்ம நபரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி ரெயில்வே ஜங்ஷன் அருகில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர மாவட்ட கிழக்கு அலுவலகத்தை நேற்று மாலை சில மர்ம நபர்கள் அடித்து நொறுக்கி உள்ளனர்.

    இதனை அறிந்த மேற்கு மாநகர் மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ், வழக்கறி ஞர் அணி நிர்வாகி பழனியப்பன், மாநில நிர்வாகி அரசு மற்றும் கட்சியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து அலுவலகத்தை அடித்து சூறையாடிய மர்ம நபரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறை விரைந்து வந்து சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர். திடீர் சாலை மறியலால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அலுவலகத்தை அடித்து சூறையாடியதாக சந்தேகத்தின் பேரில் ராஜா என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவின் 2-வது தலைநகராக தமிழ்நாட்டை அறிவித்தல் ஆகியவை இடம் பெற்றுள்ளது.
    • 3-ம் பாலினத்தவர்களுக்கு பிரதிநிதித்துவம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

    சிதம்பரம்:

    சிதம்பரம் அடுத்த ஜெயங்கொண்ட பட்டினத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை அக்கட்சி தலைவரும் சிதம்பரம் தொகுதி வேட்பாளருமான திருமாவளவன் வெளியிட்டார். இதனை தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்தறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கவர்னரை பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கக் கூடாது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, மாநிலங்களுக்கான உரிய நிதிப்பகிர்வு, அனைத்து மொழிகளிலும் அம்பேத்கர் நூல்கள், அம்பேத்கர் பிறந்தநாளை அறிவுத்திருநாளாக அறிவிப்பு, ராமர் கோவில் கட்டுமானத்தில் ஊழல் குறித்த விசாரணை, கச்சத்தீவு மீட்பு, ஊழல் ஒழிப்பு, லோக்பால் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிர்ப்பு, தேர்தல் ஆணையர் நியமன சட்டம் ரத்து, வாக்குபதிவு முறைக்கு பதிலாக பழையபடி வாக்குத் தாள் முறை விகிதாச்சாரப் பிரதிநிதுத்துவம், தொகுதி மறுசீரமைப்பில் தென்னிந்திய மாநிலங்களுக்கு பாதுகாப்பு, தேவையற்ற தேர்தல் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்.

    தமிழ்ச் செம்மொழி வாரக் கொண்டாட்டம், வறுமைக் கோட்டின் உச்சவரம்பினை உயர்த்துதல், 200 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி சட்டம், விவசாயம் மற்றும் நிலச்சீர்த்திருத்தம், விவசாயிகள் ஓய்வூதியத் திட்டம், ஜி.எஸ்.டி. வரி ஒழிப்பு, வருமான வரி சீரமைப்பு, விவசாயக் கடன் ரத்து , விவசாயத்திற்கு தனி பட்ஜெட், பெட்ரோலியப் பொருட்களின் மீது அரசின் விலைக் கட்டுப்பாடு, ராணுவத்தின் நிதியைக் குறைத்து கல்விக்கான நிதியை அதிகரிக்கப்படும்.

    தனியார்மயமாதலை கைவிடுதல், நீதித்துறையில் இட ஒதுக்கீடு, தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு, சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு, உயர்சாதி இட ஒதுக்கீடு ரத்து, அனைவருக்கும் வீடு அடிப்படை உரிமை, மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையே ஒழித்தல், இடுகாடு பணியில் இருந்து தலித்துகளை விடுவித்தல், மாநில சுயாட்சி, சென்னையில் உச்சநீதிமன்ற கிளை , மாநில அரசுகளின் வழியே உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், வழக்காடு மொழியாக தமிழ், தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்குதல், தமிழ்நாட்டிற்கென தனிக்கொடி, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல், கோதவரி-காவிரி இணைப்புத் திட்டம், அணுமின் நிலையங்களை மூடுதல், வேலி காத்தான் ஒழிப்பு, இந்தியாவின் 2-வது தலைநகராக தமிழ்நாட்டை அறிவித்தல் ஆகியவை இடம் பெற்றுள்ளது.

    பாதுகாப்பு அமைச்சரவையிலும், மேலவைகளிலும் இட ஒதுக்கீடு, ஆணவக் கொலையை தடுக்க தனிச் சட்டம், பழங்குடியினருக்கு தனிப்பட்டா, தலித் கிறிஸ்த்தவர்களை பட்டியலில் இணைத்தல், பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு, மீனவர்களுக்கு தனி அமைச்சகம், மதச் சிறுபான்மையினருக்கு தனி அமைச்சகம், 3-ம் பாலினத்தவர்களுக்கு பிரதிநிதித்துவம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

    • பறக்கும் படையினர் வாகனத்தை சோதனையிட்டனர்.
    • திருமாவளவன் வாகனத்தை பறக்கும் படையினர் சோதனை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து அவரது சொந்த ஊரான அங்கனூர் அருகே பிரசார வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய வேண்டும் என்றனர்.

    இதனை கேட்ட திருமாவளவன் தாராளமாக உங்கள் கடமையை செய்யுங்கள் என்று கூறி அதிகாரிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினார்.

    இதனை தொடர்ந்து பறக்கும் படையினர் வாகனத்தை சோதனையிட்டனர். வாகனத்தின் முன்புறம், உள்புறம் ஆகியவற்றை சோதனையிட்டனர். வாகனத்தில் எதுவும் இல்லாததால் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    பின்னர் திருமாவளவன் மீண்டும் வாகனத்தில் ஏறிச் சென்று அங்கனூருககு புறப்பட்டு சென்றார். திருமாவளவன் எம்.பி.யின் வாகனத்தை பறக்கும் படையினர் சோதனை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 4 கலைஞர்கள் இரவு, பகலாக உழைத்து பைபரால் ஆன 6 பானைகளை செய்துள்ளனர்.
    • சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் தலா ஒரு பானை பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    இந்தியா கூட்டணியில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.

    அவருக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பானை சின்னத்தை மக்களிடம் கொண்டுசென்று சேர்க்க புதுச்சேரியை சேர்ந்த பழங்குடியினர் விடுதலை இயக்க மாநில செயலாளர் ஏகாம்பரம் முடிவு செய்தார்.

    இதற்காக வில்லியனூரை சேர்ந்த துரை என்ற சிற்ப கலைஞரிடம் 6 பானைகள் செய்ய ஆர்டர் செய்தார்.

    4 கலைஞர்கள் இரவு, பகலாக உழைத்து பைபரால் ஆன 6 பானைகளை செய்துள்ளனர். இந்த பானைகள் ஒவ்வொன்றும் 7 அடி உயரம், 6 அடி அகலம் கொண்டவையாகும்.

    இந்த மெகா சைஸ் பானைகள் சிதம்பரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் தலா ஒரு பானை பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

    இதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் வேட்பாளர் ரவிக்குமார் பிரசாரம் செய்யவும் பானைகள் தயாராகி வருகிறது.

    • அமெரிக்கா மாதிரி வெள்ளை, கருப்பு என்கிற பிரிவு இங்கு கிடையாது.
    • தமிழ்நாடு மீனவர்களை காக்க தவறிய அரசு இந்த ஒன்றிய அரசு.

    சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது, மேலவீதி பகுதியில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    சாதியம் தான் என் எதிரி. என் வாழ்க்கையில் சாதிக்கு இடமில்லை. என் சினிமாக்களிலும் அப்படிதான். பிறகு, சினிமாவிற்கு ஏன் ஜாதி பெயர் வைக்கிறீர்கள் என்று கேட்கலாம். குடியின் கொடுமையைப் பற்றி நான் ஒரு குறும்படம் எடுக்க நேர்ந்தால், அதன் மையப் பாத்திரம் யாராக இருப்பான் ? ஒரு குடிகாரனாகத் தான் இருப்பான். அவன் இல்லாமல் அந்த கருத்தை சொல்ல முடியாது.

    அதுபோல், சாதி வெறியனை மையப்படுத்தி தான், படத்தின் நிறைவு கருத்தை சொல்ல முடியும். அவன் பாழான கதையையும், பண்பட்ட கதையையும் கூறுவதால் அது சாதியை உயர்த்திப்பிடிப்பது ஆகாது. விமர்சிப்பதாகும். இது பதில் அல்ல. விளக்கம்.

    ஆனால், சாதியே இல்லை என்கிறீர்கள். சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்கிறீர்களே என்று கேட்கலாம். இன்னும் எத்தனை பேர் அடிகோட்டு விளிம்பில் இருக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரிய வேண்டும்.

    ஏனென்றால், இங்கு அமெரிக்கா மாதிரி வெள்ளை, கருப்பு என்கிற பிரிவு கிடையாது. மாநிறத்தில் இருப்பவனும் விளங்கு போட்டு இருப்பான். கருப்பாக இருப்பவனும் விளங்கு போட்டு இருப்பான். அவனை எல்லாம் விடுவிக்க வேண்டும்.

    தமிழ்நாடு மீனவர்களை காக்க தவறிய அரசு இந்த ஒன்றிய அரசு. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் எப்போதும் இல்லாத அளவில் நம் மீனவர்கள் கைதாவதும், சிறையில் அடைக்கப்படுவதும் இன்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

    ஒன்றிய அரசு என்று சொன்னால் இவர்களுக்கு கோபம் வருகிறது. இவர்கள் ஒன்றிய அரசு கிடையாது. மக்களோடு ஒன்றாத அரசு.

    இதனால் தான் திருமாவளவனோடு தோள் உரசி களம் காண்கிறேன்.

    தமிழ்நாட்டின் குரலாக ஸ்டாலின் திகழ்கிறார்.. இளைஞர்களின் குரலாக தம்பி உதயநிதி திகழ்கிறார்.. குரலற்றவர்களின் குரலாக பெருஞ்சிறுத்தை திருமாவளவன் இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு பெரிய படம் ரிலீஸ் ஆகும்போது அதற்கு 10 நாட்களுக்கு முன்பு டிரெய்லர் ரிலீஸ் செய்வார்கள். நான் வெறும் டிரெய்லர் தான்.
    • இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்படும்.

    சிதம்பரம்:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். சிதம்பரம் தொகுதியில் இன்று அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    இது பிரசார கூட்டம் போல தெரியவில்லை. இது நன்றி அறிவிப்பு விழா போலவும், வெற்றி விழா போலவும் தெரிகிறது. அந்த அளவுக்கு உங்களுடைய எழுச்சி இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் உறுதியாகி விட்டது. ஒன்றிய பா.ஜனதா அரசு தங்களுடன் கூட்டணி வைத்துக்கொண்ட அனைத்து கட்சிகளுக்கும் கேட்ட சின்னத்தை உடனே கொடுத்தது. ஆனால் இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகள் என்ன சின்னம் கேட்டாலும் கொடுக்க முடியாது, அதற்கு பதிலாக வேறு சின்னம் தான் கொடுப்போம் என்று அலைக்கழித்தது. ஆனால் திருமாவளவன் மிகப்பெரிய சட்டப்போராட்டத்தை நடத்தி பானை சின்னத்தை வாங்கி விட்டார்.

    பானை சின்னத்தை வாங்கியதிலேயே நாம் பாதி வெற்றி பெற்றுவிட்டோம். இன்னும் நாம் பாதி வேலைதான் செய்யவேண்டும். அந்த வேலையை செய்ய நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?

    கடந்த முறை நரேந்திர மோடியை ஓட ஓட விரட்டியடித்தது போல, இந்த முறை அதைவிட அதிகமாக ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும்.

    கடந்த முறை திருமாவளவன் 4,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஏனென்றால் கடைசி நிமிடத்தில் தான் பானை சின்னத்தை ஒதுக்கினார்கள். இந்த முறை நாம் கேட்டவுடன் பானை சின்னம் ஒதுக்கியிருந்தால் ஒரே நாள் செய்தியில் முடிந்திருக்கும். ஆனால் இந்த முறை சட்டப்போராட்டம் நடத்தியதால் இந்த பானை சின்னம் தேசிய அளவில் பிரபலமாகி விட்டது. எனவே இந்த முறை குறைந்தது 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை கொடுக்க வேண்டும்.

    கடந்த சட்டசபை தேர்தலின் போது இங்கு பிரசாரத்துக்கு வந்திருந்தேன். அப்போது நமது கூட்டணி கட்சி வேட்பாளர் 17 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தவற விட்டுவிட்டார். இனிமேல் அந்த தவறை நீங்கள் செய்யாதீர்கள். அப்படி செய்தால் நீங்கள் தான் ஏமாந்து போவீர்கள்.

    டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருமாவளவன் அங்கு சென்று விட்டார். அதை நேற்று இரவு அவர் என்னிடம் சொன்னார். எனவே அவரது தம்பியாக நான் இங்கு பிரசாரத்துக்கு வந்துள்ளேன். இந்த முறை 2 தொகுதிகள் கொடுத்தால் திருமாவளவன் நமது கூட்டணியை விட்டு பிரிந்து அ.தி.மு.க. கூட்டணிக்கு சென்று விடுவார், பா.ஜ.க.வுடன் பேசிக்கொண்டு இருக்கிறார் என்று அரசியல் விஞ்ஞானிகள் நிறைய பேர் ஆரூடம் சொன்னார்கள். ஆனால் திருமாவளவன் மன உறுதியோடு இருந்து அ.தி.மு.க. கூட்டணியாக இருந்தாலும் சரி, பா.ஜ.க. கூட்டணியாக இருந்தாலும் சரி அது கொள்ளை கூட்டணி, தமிழக மக்களை ஏமாற்றுகின்ற கூட்டணி, தி.மு.க. கூட்டணிதான் கொள்கை கூட்டணி, சமூக நீதிக்காக போராடுகிற கூட்டணி என்று கூறி நமது கூட்டணியில் உள்ளார். தி.மு.க. 22 இடங்களில் போட்டியிடுகிறது. ஆனால் தி.மு.க.வின் வெற்றியை விட நான் மிக மிக முக்கியமான வெற்றியாக கருதுவது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெற்றியைத்தான்.

    இப்போது எங்கு பார்த்தாலும் பிங்க் பஸ்தான். அதன் உரிமையாளர்கள் பெண்கள் தான். அவர்கள் எங்கு வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம், எங்கு வேண்டுமானாலும் இறங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் மாதம் 900 ரூபாய் சேமிக்கிறீர்கள். எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் அரசு. இந்த 3 வருடத்தில் தமிழக அரசு செய்து கொடுத்துள்ள திட்டங்களில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பயனாளியாவது இருப்பார்கள்.

    ஒரு பெரிய படம் ரிலீஸ் ஆகும்போது அதற்கு 10 நாட்களுக்கு முன்பு டிரெய்லர் ரிலீஸ் செய்வார்கள். நான் வெறும் டிரெய்லர் தான். நமது கழகத்தலைவர் தான் மெயின் பிக்சர். அவர் வருகிற 6-ந்தேதி வருகிறார். அவர் தனது சாதனைகளை, திட்டங்களை எல்லாம் சொல்வார். உங்களிடம் அதிகமாக கேள்விகளை கேட்பார். அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. பற்றி கேள்விகள் கேட்பார். பின்னர் அவர் அடுத்த தொகுதிக்கு சென்று விடுவார்.



    எனவே நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பெடுத்துக்கொண்டு தேர்தல் வரை பிரசாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். பிரதமர் மோடி 10 வருடங்கள் இந்தியாவை ஆட்சி செய்துள்ளார். ஆனால் இந்தியாவுக்கு ஏதாவது செய்தாரா? 2016-ம் ஆண்டு திடீரென்று நடு ராத்திரியில் எழுந்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சொன்னார். ஏ.டி.எம்.மில் ஆயிரக்கணக்கான முதியோர்கள் நின்று இறந்து போனார்கள்.

    பிரதமருக்கு நாம் வைத்திருக்கக்கூடிய புது பெயர் 29 பைசா. இது செல்லாக்காசு தான். ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு பிரதமர் மோடியும் செல்லாக்காசாகி விடுவார்.

    இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்படும். கியாஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு தரப்படும். ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 ரூபாய்க்கு கொடுப்போம். ஒரு லிட்டர் டீசல் விலை 65 ரூபாய்க்கு கொடுப்போம். தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது
    • தேர்தல் ஆணையத்திடம் திருமாவளவன் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்

    பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    பாராளுமன்றத் தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்காக சின்னத்தை பெற தீவிர முயற்சி மேற்கொண்டது.

    அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் திருமாவளவன் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    கடந்த தேர்தலிலும் விசிகவுக்கு தனி சின்னமாக பானை ஒதுக்கப்பட்டது. ஆனால், மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.

    இந்நிலையில், பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம்.

    சிதம்பரம் மக்களவை தொகுதியில் வி.சி.க சார்பில் போட்டியிடுகிறார் திருமாவளவன். விழுப்புரம் மக்களவை தொகுதியில் விசிக சார்பில் ரவிக்குமார் போட்டியிடுகிறார்

    • நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா?
    • 80% இந்துக்களின் பிரதிநிதி என்று இத்தனை நாளும் சொன்னது பொய்யா?

    மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் உள்ளார். இவருக்கு தமிழ்நாடு அல்லது ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததாகவும், தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா? என்று கேள்வி எழுந்தது.

    இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் "என்னுடைய சம்பளம், என்னுடைய சம்பாத்தியம், என்னுடைய சேமிப்பு எல்லாம் என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி எனக்கு சொந்தம் கிடையாது" என்றார்.

    நிர்மலா சீதாராமனின் இந்த கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து ஆளூர் ஷாநவாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஏழைத் தாயின் மகன் மோடிக்கும் ஏழை விவசாயி அ.மலைக்கும் தேர்தலில் போட்டியிட செலவு செய்யும் பாஜக, நிர்மலாவுக்கு செலவு செய்யாதா?

    வாக்கு வலிமையுள்ள சாதி பின்புலம் இல்லாததால் போட்டியிடவில்லை என்றால், 80% இந்துக்களின் பிரதிநிதி என்று இத்தனை நாளும் சொன்னது பொய்யா?

    களத்தை சந்திக்க பயம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த 24-ந்தேதி விடுதலை சிறுத்தை சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
    • வழக்கறிஞர்கள் மகேந்திரன், பார்வேந்தன் ஆகியோர் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் கடந்த மாதம் 20-ந்தேதி கடிதம் கொடுத்தது.

    கடந்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் பானை சின்னத்தில் போட்டியிட்டு எம்.பி., எம்.எல்.ஏ.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதை குறிப்பிட்டு இருந்தனர்.

    தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக செயல்படும் விடுதலை சிறுத்தை கடந்த கால தேர்தல்களில் பெற்ற வாக்கு சதவீதத்தை அதில் குறிப்பிட்டு இந்த தேர்தலில் பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர். அதனை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 21-ந்தேதி ரத்து செய்து தகவல் தெரிவித்தது.

    தொடர்ந்து கடந்த 24-ந்தேதி விடுதலை சிறுத்தை சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து பானை சின்னம் ஒதுக்குவது தொடர்பான கோரிக்கை மனு ரத்து உத்தரவை தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்றது. இதனால் இந்த வழக்கு நேற்று முடித்து வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை தேர்தல் ஆணையம் விடுதலை சிறுத்தைக்கு பானை சின்னம் வழங்க முடியாது என்று அந்த மனுவை ரத்து செய்தது.

    இதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று மீண்டும் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கறிஞர்கள் மகேந்திரன், பார்வேந்தன் ஆகியோர் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். அதனை ஏற்று டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி இதனை அவசர வழக்காக விசாரிக்க முன் வந்துள்ளார். இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.

    தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் கேட்ட சின்னம் ஒதுக்காத நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து இருப்பது தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைக்கு தனி சின்னமாக பானை ஒதுக்கப்பட்டது.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு.

    பாராளுமன்றத் தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்காக சின்னத்தை பெற தீவிர முயற்சி மேற்கொண்டது.

    அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் தொல். திருமாவளவன் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    கடந்த தேர்தலிலும் விடுதலை சிறுத்தைக்கு தனி சின்னமாக பானை ஒதுக்கப்பட்டது.

    ஆனால், மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.

    இந்நிலையில், பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கிறது.

    இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில்," நாளை டெல்லி சென்று மேல்முறையீடு செய்ய உள்ளோம்" என்றார்.

    • சிதம்பரத்தில் 6-வது முறையாக விசிக தலைவரான தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார்.
    • பாராளுமன்றத் தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சி.

    பாராளுமன்ற தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    அதன்படி, சிதம்பரத்தில் 6-வது முறையாக விசிக தலைவரான தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார்.

    விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் மீண்டும் போட்டியிடுகிறார்.

    பாராளுமன்றத் தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்காக சின்னத்தை பெற தீவிர முயற்சி மேற்கொண்டது.

    அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் தொல். திருமாவளவன் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    கடந்த தேர்தலிலும் விடுதலை சிறுத்தைக்கு தனி சின்னமாக பானை ஒதுக்கப்பட்டது.

    இந்நிலையில், மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    நாம் தமிழர், மதிமுக உள்ளிட்ட கட்சிகளை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×