என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காங்கிரஸ், திராவிட கட்சிகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே பா.ஜ.க.வின் திட்டம்- திருமாவளவன்
- சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
- தேர்தல் ஆணையத்தின், பா.ஜ.க. அரசின் கூட்டு சதியை அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு மேலானது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. இதற்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளன.
இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
எஸ்.ஐ.ஆர். வேண்டாம் எனவும் இது குடியுரிமையை பறிக்கும் செயலாகும் என்றும் கண்டனம் முழக்கங்களை திருமாவளவன் வாசித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-
எல்லோரும் தேர்தல் காலத்தில் தீவிரமாக பம்பரம் போல் சுற்றி சுழன்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். தேர்தல் ஆணையத்தின், பா.ஜ.க. அரசின் கூட்டு சதியை அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு மேலானது.
இந்த ஆட்சியாளர்கள் உள்நோக்கத்தோடுதான் இதை கையாளுகிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த ஆர்ப்பாட்டத்தால் எஸ்.ஐ.ஆர். என்ற இந்த நடவடிக்கையை உடனே நிறுத்தி விட முடியுமா? என்றால் முடியாது. எஸ்.ஐ. ஆர். என்பது எவ்வளவு தீவிரமான உள்நோக்கம் கொண்ட ஒரு நடவடிக்கை என்பதை மக்களுக்கு அம்பலப்படுத்துவதே இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம்.
எஸ்.ஐ.ஆர்.-ஐ நிறுத்த வேண்டும், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தடை செய்ய வேண்டும் என்று கோரி நமது கட்சியின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். தேர்தல் வரப்போகிறது வாக்காளர் பட்டியலில் நமது பெயர்கள் இடம் பெற்றால்தான் வாக்களிக்க முடியும். நம்முடைய வாக்குகளை பறிகொடுத்துவிட்டு நடுத்தெருவில் நிற்க முடியாது.
எனவே நாமும் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையில் இறங்கித்தான் ஆக வேண்டும். அப்படி ஒரு நெருக்கடியை பா.ஜ.க. அரசு அரசியல் கட்சிகளுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
தேர்தல் நேரத்தில் இதை அறிவித்தால் இதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பெரிதாக எதுவும் செய்து விட முடியாது. கட்டாயம் அவர்கள் விமர்சனங்களை செய்து கொண்டே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுத்தான் ஆக வேண்டம். நான் கூட என் பெயரை பதிவு செய்துதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை. தேர்தலில் நான் ஓட்டு போட்டே ஆக வேண்டும்.
இதுவரை நாடாண்டவர்களுக்கும், இப்போது நாடாண்டு கொண்டு இருக்கும் பா.ஜ.க.வினருக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. இவர்கள் வழக்கமான சராசரியான அரசியல்வாதிகள் இல்லை. மோடி, அமித்ஷா, அவர்களை வழி நடத்தக்கூடிய ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் வெறுமனே தனி நபர்களுக்கான அதிகார வெறியர்களாக இருக்கிறார்கள் என்று கணக்கு போட்டு விடக்கூடாது.
அதிகாரத்தை பயன்படுத்தி இந்திய தேசத்தையே அடியோடு புரட்ட பார்க்கிறார்கள். அதிகாரத்தை தக்க வைப்பதற்கான ஏற்பாடுகளை தொடர்ந்து செய்கிறார்கள். எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்துவது, காங்கிரசே இல்லாத ஒரு இந்தியாவை உருவாக்குவது, இடது சாரிகளே இல்லாத ஒரு இந்தியாவை உருவாக்குவது, திராவிட அரசியல் பேசக் கூடிய கட்சிகளே இல்லை என்கிற நிலையை எதிர்காலத்தில் உருவாக்குவது என்பதெல்லாம் பா.ஜ.க.வின் அரசியல் செயல் திட்டங்களில் ஒன்றாகும்.
இந்தியாவில் ஒரே மதம்தான் இருக்க வேண்டும், இந்தியாவில் ஒரே மொழிதான் ஆள வேண்டும், இந்தியாவில் மனுதர்மம் தான் ஆட்சியியல் கோட்பாடாக இருக்க வேண்டும் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த அவர்கள் விரும்பும் இந்தியாவை படைக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். அம்பேத்கர் கனவை சிதைப்பதே பா.ஜ.க.வின் திட்டம் ஆகும்.
இவ்வாறு அவர் பேசினார்.






