என் மலர்
நீங்கள் தேடியது "#அன்புமணி ராமதாஸ்"
- மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இரு மாதங்களாகியும் இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை.
- காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் 3 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன.
தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இரு மாதங்களாகியும் இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை. லட்சக்கணக்கான உழவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், அவர்களுக்கு இழப்பீடு வழங்கும் விஷயத்தில் திமுக அரசு திட்டமிட்டு தாமதம் செய்வதும், ஏமாற்ற முயல்வது கண்டிக்கத்தக்கது.
வடகிழக்குப் பருவமழை நடப்பாண்டில் முன்கூட்டியே தொடங்கிய நிலையில் கடந்த அக்டோபர் 20, 21 ஆகிய தேதிகளில் பெய்த மழையில் காவிரி பாசன மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவைப் பயிர்களும், நடவு செய்யப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி பயிர்களும் சேதமடைந்தன. அதன்பின் நவம்பர் இறுதியில் டிட்வா புயல் காரணமாக பெய்த மழையில் சிக்கி காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் 3 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன.
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 22-ஆம் தேதியும், நவம்பர் 30-ஆம் தேதியும் வெளியிட்ட அறிக்கைகளில் வலியுறுத்தியிருந்தேன். அக்டோபர் மாதத்தில் பெய்த மழையில் 2 லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதாக நான் கூறியிருந்த நிலையில், அதே நாளில் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண்துறை அமைச்சர், 16 ஆயிரம் ஹெக்டேரில் ( 40 ஆயிரம் ஏக்கர்) பயிர்கள் பாதிக்கபட்டிருப்பதாகவும், மீதமுள்ள பயிர்களையும் கணக்கிட்டு இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆனால், அதன்பின் சுமார் 2 மாதங்களாகியும் இழப்பீடு வழங்கப்படாதது ஏன்?
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பயிர்கள் அடுத்த 10 நாள்களில் கணக்கிடப்பட்டு இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்பிறகு 15 நாள்களுக்கு மேலாகியும் இன்று வரை பாதிக்கப்பட்ட பயிர்கள் முழுமையாக கணக்கிடப்படவில்லை. நாகை மாவட்டத்தில் 50% அளவுக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 55% அளவுக்கும், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் தலா 65% அளவுக்கும் மட்டுமே கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பயிர்களுக்கான பாதிப்பு எப்போது கணக்கிடப்படும்? எப்போது இழப்பீடு வழங்கப்படும்? என்பது மில்லியன் டாலர் வினாவாக தோன்றுகிறது.
பயிர் பாதிப்புகளை கணக்கிடுவதற்கு போதிய மனிதவளம் இல்லாதது தான் கணக்கெடுப்பு தாமதமாவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. உதவி வேளாண் அலுவலர் நிலையில் உள்ள அதிகாரி ஒருவரால் அதிகபட்சமாக 3 வருவாய் கிராமங்களில் உள்ள பயிர்களை மட்டுமே கணக்கெடுக்க முடியும். ஆனால், ஒவ்வொரு உதவி வேளாண் அலுவலருக்கும் 14 முதல் 16 வருவாய் கிராமங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் அவர்கள் பாதிப்பை கணக்கிடுவதற்கு இன்னும் பல நாள்கள் ஆகும். உழவர்கள் கடன் வாங்கி சாகுபடி செய்திருக்கும் நிலையில், இழப்பீடு வழங்குவதை தாமதித்துக் கொண்டே செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதுமட்டுமின்ன்றி, காவிரி பாசன மாவட்டங்களில் ஒரு ஏக்கர் சம்பா, தாளடி பயிர்களுக்கான சாகுபடி செலவு ரூ.40,000 ஆகும் நிலையில், ஏக்கருக்கு ரூ.8000 மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 2014-ஆம் ஆண்டின் சாகுபடி செலவுகளை கணக்கிட்டு நிர்ணயிக்கப்பட்ட இந்தத் தொகையை 11 ஆண்டுகளுக்குப் பிறகும் உழவர்களுக்கு வழங்குவது பெரும் அநீதி.
கடன் வாங்கியும், கடுமையாக உழைத்தும் வளர்த்தெடுத்த பயிர்களை இழந்து விட்டு தவிக்கும் விவசாயிகளுக்கு இனியும் தாமதிக்காமல் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். ஏக்கருக்கு ரூ.8,000 என்ற இழப்பீடு போதாது என்பதால் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
- கட்சியில் இருந்த மூத்தவர்களை கடுமையாக அவமானப்படுத்தியவர் அன்புமணி.
- துரோகிகள் என அன்புமணி கருதும் அனைவரும் கட்சியை விட்டு வெளியேற தயார்.
சென்னை:
துரோகிகள் இருக்கும் வரை ஒன்றிணைய முடியாது என அன்புமணி கூறியிருந்தார். இதற்கு, ராமதாசும், அன்புமணியும் ஒன்றாக இணைவார்கள் எனில் கட்சியை விட்டு வெளியேற தயார் என்று ஜி.கே. மணி கூறியுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் ஜி.கே.மணி கூறியிருப்பதாவது:-
* பா.ம.க. நிறுவனர் ராமதாஸை கொல்லுங்கள் என பதிவிட்டவரை கூப்பிட்டு அன்புமணி பாராட்டினார்.
* ராமதாசுடன் இருப்பவர்களை துரோகி என அன்புமணி அவமானப்படுத்துகிறார்.
* கட்சியில் இருந்த மூத்தவர்களை கடுமையாக அவமானப்படுத்தியவர் அன்புமணி.
* அ.தி.மு.க. பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமியைக் கூட மிக கடுமையாக அன்புமணி விமர்சித்தார்.
* வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை கெடுத்தது நான்தான் என்றும் அன்புமணி அவதூறாக பேசினார்.
* ஆட்சி மாற்றம் காரணமாக 10.5 சதவீத இடஒதுக்கீடு கிடைக்காமல் போனதற்கு நான் எப்படி காரணமானேன்.
* ராமதாசும், அன்புமணியும் ஒன்றாக இணைவார்கள் எனில் கட்சியை விட்டு வெளியேறத் தயார். நானும் எனது குடும்பத்தினரும் கட்சியை விட்டு வெளியேற தயார்.
* ராமதாஸ், அன்புமணி இணைவதற்காக பா.ம.க.விலிருந்து விலகுவதுடன் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்யவும் தயார்.
* துரோகிகள் என அன்புமணி கருதும் அனைவரும் கட்சியை விட்டு வெளியேறத் தயார் என்று கூறினார்.
- அன்புமணிக்கு நான் ஒரு போதும் துரோகம் செய்யவில்லை.
- அன்புமணிக்கு தேர்தலில் சீட் அளிக்க வேண்டும் என பேசியது நான் தான்.
சென்னை:
பா.ம.க.வில் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் அன்புமணி மட்டுமே என செய்தியாளர்கள் சந்திப்பில் ஜி.கே. மணி குற்றம்சாட்டினார். மேலும் அவர், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ஜி.கே.மணி கூறியதாவது:-
* அன்புமணியை இளம் வயதில் மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தவர் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்.
* அன்புமணி மத்திய அமைச்சராக கூடாது என உறுதியாக இருந்தவர் ஜெ.குரு.
* அன்புமணியின் செயல்பாடுகளால் கண்ணீர் வடித்தார் ராமதாஸ்.
* ராமதாஸ் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அன்புமணி பேசியிருக்கிறார். அன்புமணி மனசாட்சியோடு பேச வேண்டும்.
* அன்புமணியால் பா.ம.க.வுக்கு ஏற்பட்ட சோதனை, நெருக்கடி சொல்லி மாளாது.
* என் அப்பாவுக்கு அடுத்ததாக உங்களை நினைக்கிறேன் என கூறியவர் அன்புமணி.
* பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள பிளவிற்கு நான் காரணம் என பேசியிருக்கிறார் அன்புமணி.
* பா.ம.க.வில் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் அன்புமணி மட்டுமே.
* மனதளவில் கூட துரோகம் நினைக்காத என்னை துரோகி என்று அன்புமணி பேசுகிறார். இது மிகவும் வருத்தமாக உள்ளது.
* அன்புமணிக்கு நான் ஒரு போதும் துரோகம் செய்யவில்லை.
* அன்புமணிக்கு தேர்தலில் சீட் அளிக்க வேண்டும் என பேசியது நான் தான்.
* அன்புமணியை மத்திய அமைச்சராக வேண்டும் என ராமதாசிடம் பேசினேன்.
* மாவட்டந்தோறும் அன்புமணியை அழைத்து சென்று அறிமுகப்படுத்தினேன்.
* தந்தையையும், மகனையும் பிரித்து விட்டதாக மனசாட்சி இல்லாமல் அன்புமணி பேசுகிறார்.
இவ்வாறு ஜி.கே.மணி பேசினார்.
- 30 லட்சம் பேருக்கும் கூடுதலாக வேலை கிடைத்திருப்பதாக திமுக அரசு கூறி வருவது அப்பட்டமான பொய்.
- திமுக அரசின் பொய்கள் தோலுரிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தனியார் துறைகளில் 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாக திமுக அரசு தொடர்ந்து தெரிவித்து வந்த தகவல்கள் பொய்யானவை என்பதை இந்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. தொழில் வளர்ச்சிக்காக துரும்பைக் கூட கிள்ளிப்போடாத திமுக அரசு தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து விட்டதாக பொய்யுரைத்து வருவது கண்டிக்கத்தக்கது.
திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு ரூ.11.32 லட்சம் கோடி முதலீடுகள் வந்ததாகவும், அதன் மூலம் 34 லட்சத்திற்கும் கூடுதலான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டு வந்த பொய்யை அம்பலப்படுத்தும் வகையில், திமுக அரசின் பொய் முதலீடுகள் என்ற தலைப்பிலான ஆவணத்தை நான் வெளியிட்டிருந்தேன். அதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதிலளிக்க முடியாத திமுக அரசு, தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) தரவுகள் தெரிவிப்பதாக விளக்கமளித்திருந்தது. அதுவும் பொய் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது.
இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலத்தின் பொருளாதார நிலை, தொழில், விவசாயம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளின் நிலை குறித்த தரவுகளைத் தொகுத்து இந்திய மாநிலங்கள் குறித்த புள்ளி விவரங்கள் அடங்கிய கையேடு ( Handbook of Statistics on Indian States) என்ற ஆவணத்தை இந்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது. அதில் தான் திமுக அரசின் பொய்கள் தோலுரிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த 2020-21-ஆம் ஆண்டின் இறுதியில் தமிழகத்தில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 39,393 ஆகவும், அவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 46,453 ஆக இருந்தது. அதன் பின் மூன்றாண்டுகள் கழித்து 2023-24ஆம் ஆண்டில் இறுதியில் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 40,121 ஆகவும், அவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 75,675 ஆகவும் உயர்ந்திருப்பதாக ரிசர்வ் வங்கி ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 3 ஆண்டுகளில் 728 தொழிற்சாலைகள் மட்டுமே புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இது வெறும் 1.85% வளர்ச்சி தான். அதேபோல், இந்த தொழிற்சாலைகளில் பணியாற்றுவோரின் எண்ணிக்கையும் 4.29 லட்சம் மட்டுமே அதிகரித்திருக்கிறது. இதில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட தொழிற்சாலைகள் மட்டுமின்றி, உள்ளூர் அளவில் சொந்த நிதியிலும், வங்கிக் கடன் மூலமாகவும் உருவாக்கப்பட்ட சிறும், குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் அடங்கும்.
திமுக ஆட்சியில் தொழில்துறையில் வெறும் 4.29 லட்சம் பேருக்கு மட்டுமே வேலைவழங்கப்பட்டுள்ள நிலையில், 30 லட்சம் பேருக்கும் கூடுதலாக வேலை கிடைத்திருப்பதாக திமுக அரசு கூறி வருவது எவ்வளவு அப்பட்டமான பொய் என்பதை அனைவரும் அறிந்து கொள்ளலாம். அதேபோல் தமிழகத்தில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 52,614 ஆக உயர்ந்து விட்டதாக திமுக அரசு கூறி வந்த நிலையில், 2023-24ஆம் ஆண்டின் இறுதியில் தமிழகத்தில் இருந்த தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 121 மட்டும் தான் என்பதையும் ரிசர்வ் வங்கி அம்பலப்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 40,121 தொழிற்சாலைகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளின் மதிப்பு ரூ.3.74 லட்சம் கோடி மட்டும் தான். அதிமுக ஆட்சியின் இறுதியில் 39,393 தொழிற்சாலைகளின் மதிப்பு ரூ.3.02 லட்சம் கோடியாக இருந்தது. அடுத்த மூன்றாண்டுகளில் ரூ.72,770 கோடி மட்டுமே தொழிற்சாலைகளின் முதலீடுகள் அதிகரித்துள்ளன. இதிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக வந்த முதலீடுகள் இல்லாமல் தனியாக செய்யப்பட்ட முதலீடுகளும் அடக்கம். அவ்வாறு இருக்கும் போது ரூ.11.32 லட்சம் கோடி முதலீடுகள் குவிந்து விட்டதாகவும், 34 லட்சம் வேலைகள் வழங்கப்பட்டு விட்டதாகவும் திமுக அரசு கூறிவருவது அப்பட்டமான பொய் என்பதை உணர முடியும்.
தொழில் முதலீடுகள், தமிழ்நாட்டின் வளர்ச்சி ஆகியவை சார்ந்த விஷயங்களில் திமுக அரசு கூறுவதெல்லாம் பொய் தான் என்பதை ரிசர்வ் வங்கி தரவுகள் நிரூபித்துள்ளன. கடந்த நான்கரை ஆண்டுகளாக பொய்களை மட்டுமே கூறி மக்களை ஏமாற்றி வந்த திமுக அரசுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்.
- திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக மாற்றவல்ல தங்களின் Style Magic ரசிகர்களை மகிழ்விக்கட்டும் பல்லாண்டு!
- நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழ்ந்து மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
தமிழ்த் திரையுலகின் அசைக்க முடியாத பேராளுமையாக 50 ஆண்டுகளாக கோலோச்சி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக மாற்றவல்ல தங்களின் Style Magic ரசிகர்களை மகிழ்விக்கட்டும் பல்லாண்டு!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
இன்று 76-ஆம் பிறந்த நாளைக் கொண்டாடும் நடிகர் நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழ்ந்து மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளன.
- வருகிற 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை ஒரு வாரத்திற்கு விருப்ப மனுக்கள் பெறப்படும்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தல்களில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் உள்ள தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோரிடம் இருந்து வருகிற 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 20-ந்தேதி (சனிக்கிழமை) வரை ஒரு வாரத்திற்கு விருப்ப மனுக்கள் பெறப்படும்.
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள கட்சித் தலைவர் அலுவலகத்தில் மேற்குறிப்பிடப்பட்ட நாள்களில் தினமும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். போட்டியிட விருப்பம் தெரிவிப்பதற்கான விண்ணப்பங்களை வாங்குபவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாளான திசம்பர் 20-ந் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை நிரப்பி, பனையூர் அலுவலகத்தில் தலைமை நிலைய நிர்வாகிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இரு ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை 5 லட்சத்து 31,394 குறைந்திருக்கிறது.
- திமுகவின் ஒட்டுமொத்த 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில் அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை சுமார் 13.28 லட்சம் குறைந்திருக்கும்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை இரு ஆண்டுகளில் 5.31 லட்சம் குறைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. அரசு பள்ளிகளை மேம்படுத்துவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, திட்டமிட்டு அரசு பள்ளிகளை சீரழித்து வருவது கண்டிக்கத்தக்கது.
நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விடையளித்த மத்திய அரசு, இந்தியா முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் எண்ணிக்கை, மாணவர்கள் & ஆசிரியர்கள் எண்ணிக்கையை மாநில வாரியாக வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 2022&23ஆம் ஆண்டில் மொத்தமுள்ள 37,658 அரசு பள்ளிகளில் 50 லட்சத்து 42,026 மாணவர்கள் பயின்று வந்தனர். இது 2023&24ஆம் ஆண்டில் 48 லட்சத்து 40.034 ஆகவும், 2024&25ஆம் ஆண்டில் 45 லட்சத்து 10,612 ஆகவும் குறைந்திருக்கிறது. அதாவது இரு ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை 5 லட்சத்து 31,394 குறைந்திருக்கிறது.
திமுக ஆட்சியில் இரு ஆண்டுகளில் அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை இந்த அளவுக்கு குறைந்திருக்கிறது என்றால், திமுகவின் ஒட்டுமொத்த ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை சுமார் 13.28 லட்சம் குறைந்திருக்கும். அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 5 முதல் 6% அளவுக்கு குறைந்து வருவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாததாகும்.
அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக தொடர்ந்து கூறி வருகிறேன். கடந்த 2015&16ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 75.52 லட்சமாக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 45.10 லட்சமாக குறைந்து விட்டது என மத்திய அரசே தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் பாட்டாளி மக்கள் கட்சி கூறி வந்த குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை 30 லட்சம் குறைந்திருக்கிறது என்றால் அதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு சரி செய்யப்பட வேண்டும்.
அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதற்கு இரு முக்கிய காரணங்கள் உண்டு. அவற்றில் முதலாவது அரசு பள்ளிகளின் மேம்பாட்டுக்காக போதிய நிதி ஒதுக்காதது, ஆசிரியர்களை நியமிக்காதது, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாதது ஆகியவை ஆகும். இரண்டாவது, தனியார் பள்ளிகள் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக அரசு பள்ளிகளை திட்டமிட்டு சீரழிப்பது ஆகும். இந்த இரு வழிகளிலுமே அரசு பள்ளிகளின் வீழ்ச்சிக்கு திமுக காரணமாக இருப்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. 2021-ஆம் ஆண்டு தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில் ''மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு 3 மடங்காக உயர்த்தப்படும்'' என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குறுதி பத்தாண்டுகளில் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக 2020-& 21-ஆம் ஆண்டில் பள்ளிக்கல்விக்கான ஒதுக்கீடு ரூ.34 ஆயிரத்து 181 கோடியாக இருந்தது. இது 2020&-21ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பான ரூ.20 லட்சத்து 65 ஆயிரத்து 436 கோடியில் முறையே 1.65%ஆகும். 2024-&25ஆம் ஆண்டுக்கு கணக்கிட்டால் கல்விக்கான ஒதுக்கீடு ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 271 கோடி ரூபாயாக இருக்க வேண்டும். ஆனால், கல்விக்கு ரூ.44,042 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது திமுக அரசு. இது திமுக ஒதுக்குவதாக கூறிய தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவு.
அதிமுக ஆட்சியில் கல்விக்கு ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 1.65% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் இப்போது அது 1.39% ஆக குறைந்து விட்டது. ஒரு மாநிலத்தின் நிதிநிலை அறிக்கை மதிப்பில் குறைந்தது 15% கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், தமிழக அரசு அதன் நிதிநிலை அறிக்கை மதிப்பில் வெறும் 13.7% மட்டுமே ஒதுக்கியுள்ளது. கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தமிழ்நாடு 22&ஆம் இடத்தில் உள்ளது. தமிழக அரசு பள்ளிகளுக்கு வெகு காலமாகவே ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. அரசு பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் தற்காலிக ஆசிரியர்கள் தான் நியமிக்கப்பட்டு வருகின்றனர் என்ற போதிலும் 2022&23ஆம் ஆண்டில் இருந்ததை விட, 2024&25ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கை 7884 குறைந்திருக்கிறது. இத்தகைய சூழலில் அரசு பள்ளிகள் பராமரிக்கப்பட்டு வந்தால், மாணவர் எண்ணிக்கை குறைவதை தடுக்க முடியாது.
அடுத்ததாக பத்தாண்டுகளுக்கு முன் 36.56 லட்சமாக இருந்த தனியார் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை இப்போது 63.42 லட்சமாக அதிகரித்து விட்டது. அரசு பள்ளிகளின் மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு மாறியதால் தான் இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. தனியார் பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே அரசு பள்ளிகளை ஆட்சியாளர்கள் திட்டமிட்டு சீர்குலைத்து வருகின்றனர் என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் குற்றச்சாட்டு இதன் மூலம் உறுதியாகிறது.
அரசு பள்ளிகளை மேம்படுத்தியவர் கர்மவீரர் காமராசர் என்றால், அவற்றை சீர்குலைத்தது திமுக அரசு தான் என்பது வரலாற்றில் அழிக்க முடியாத அளவுக்கு பொறிக்கப்பட்டிருக்கிறது. அரசு பள்ளிகளை சீரழித்தது மட்டும் தான் திமுகவின் சாதனையாகும். இந்த சீரழிவை திமுக அரசால் சரி செய்ய முடியாது. அடுத்து அமையவுள்ள ஆட்சியில் இந்த சீரழிவுகளை சரி செய்து, அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு பா.ம.க நடவடிக்கை எடுக்கும்.
- அருள், ஜி.கே.மணி போன்றோர் சொல்லும் பொய்களை பா.ம.க.வினர் நம்ப வேண்டாம்.
- அய்யா ராமதாஸ் பெயரில் வரும் அறிக்கையில் என்ன இருக்கிறது என்று அவருக்கே தெரியாது.
மாமல்லபுரம் பூஞ்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியதாவது:
* என்னை தலைவராக்கிய அடுத்த நாளில் ஜி.கே.மணி சூழ்ச்சியை ஆரம்பித்து விட்டார்.
* சூழ்ச்சி செய்து அப்பா-பிள்ளையை பிரித்தது ஜி.கே.மணிதான்.
* ஜி.கே.மணி போன்றோர் மனிதர்களாக இருக்கவே தகுதி இல்லாத நபர்கள்.
* டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர்கள் தரப்பு தோற்றுவிட்டது, ஆனால் வெற்றி பெற்றதாக ராமதாசிடம் பொய் சொல்லி உள்ளனர்.
* அருள், ஜி.கே.மணி போன்றோர் சொல்லும் பொய்களை பா.ம.க.வினர் நம்ப வேண்டாம்.
* அய்யா ராமதாஸ் பெயரில் வரும் அறிக்கையில் என்ன இருக்கிறது என்று அவருக்கே தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பா.ம.க.வை களத்தில் நேரடியாக சந்திப்பதற்கான தைரியம் தி.மு.க.வுக்கு கிடையாது.
- தைலாபுரம் தோட்டத்தை தி.மு.க. கட்டுப்பாட்டில் எடுத்து விட்டது.
மாமல்லபுரம் பூஞ்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியதாவது:
* விரைவில் நாம் மிகப்பெரிய மெகா கூட்டணியை அமைக்க இருக்கிறோம்.
* மெகா கூட்டணி முன்பு தி.மு.க. படுதோல்வியை சந்திக்கப் போவது உறுதி.
* பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கும் தி.மு.க. தான் காரணம்.
* அய்யா ராமதாசை சுற்றி தீய சக்திகளும், தி.மு.க.வின் கைக்கூலிகளும் இருக்கிறார்கள்.
* பா.ம.க.வை களத்தில் நேரடியாக சந்திப்பதற்கான தைரியம் தி.மு.க.வுக்கு கிடையாது.
* பா.ம.க.வில் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர்காய நினைக்கிறது தி.மு.க.
* தி.மு.க.வினர் சூழ்ச்சி செய்து வன்னியர்களையும் பட்டியலின மக்களையும் ஒன்றுசேர விடாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.
* தைலாபுரம் தோட்டத்தை தி.மு.க. கட்டுப்பாட்டில் எடுத்து விட்டது.
* எவ்வளவோ அசிங்கங்களையும் அவமானங்களையும் தாங்கிக் கொண்டிருக்கிறேன்.
* துரோகிகளை ஒருபோதும் நான் மன்னிக்கப்போவது கிடையாது.
* ராமதாஸ் குழந்தை மாதிரி, அவருக்கு தன்னைச் சுற்றி நடப்பது எதுவும் தெரியாது. அவருக்கு 87 வயதாகி விட்டது.
* டெல்லியில் 30 பேர் போராட்டம் நடத்திவிட்டு 3,000 பேர் கலந்து கொண்டதாக ராமதாசிடம் பொய் சொல்லி இருக்கிறார்கள்.
* நான் நடத்தும் கூட்டங்களில் கூட்டம் குறைவாக இருப்பதாக ராமதாசிடம் தவறான தகவல்களை சொல்லி வருகிறார்கள்.
* இன்னும் 3 மாதத்தில் யார் யார் சிறைக்கு செல்ல போகிறார்கள் என பார்த்துக்கொண்டிருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தருமபுரி மாவட்டத்தை தி.மு.க. புறக்கணித்துள்ளது.
- தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 505 வாக்குறுதிகளை கொடுத்தார்கள். இப்போது 13 சதவீத வாக்குறுதிகள் தான் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தருமபுரி:
தருமபுரியில் பா.ம.க. மூத்த நிர்வாகி இல்ல திருமணத்திற்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு வருவது போல் இல்லை. தி.மு.க. ஒரு துரும்பை கூட செய்யவில்லை. சிப்காட் தொழிற்சாலை மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழிற்சாலைகள் வரவில்லை.
தருமபுரி மாவட்டத்தை தி.மு.க. புறக்கணித்துள்ளது. அதற்கு வருகிற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள். வருகிற டிசம்பர் 17-ம் தேதி எனது தலைமையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
அதற்கு தி.மு.க.வை தவிர, அனைத்து கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். பீகாரில் நிதிஷ் குமார் வெற்றி பெற்றதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியே காரணம். தமிழ்நாட்டில் சமூக நீதியை மு.க.ஸ்டாலின் குழித் தோண்டி புதைந்துள்ளார்.
கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, ஒப்பந்தத்தில் பட்டியல் சமூகத்தினருக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதுதான் சமூக நீதி.
தமிழ்நாட்டில் நகாராட்சி துறையில் ரூ.888 கோடி ஊழல் நடந்துள்ளதாக குற்றப்பத்திரிகையை, காவல் துறைக்கு கொடுத்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியாளர் பணிக்கு ரூ.25 லட்சம் வரை ஹவாலா பணம் வந்ததாக 232 பக்கம் அறிக்கை கொடுத்தும் இந்த அரசு விசாரணை நடத்தவில்லை. ஆனால் இந்த செய்தி வெளியானதற்கு விசாரணை நடத்துகிறார்கள். மணல் கொள்ளை நடந்துள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.
கூட்டணி குறித்து மிக விரைவில் அறிவிக்கப்படும். எங்கள் கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும்.
தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 505 வாக்குறுதிகளை கொடுத்தார்கள். இப்போது 13 சதவீத வாக்குறுதிகள் தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.
தொழிலாளர்கள் முதலீடு முழுமையாக வந்ததாக முதலமைச்சரும், அமைச்சரும் பொய்யாக கூறுகிறார்கள். 9 விழுக்காடு தான் முதலீடு வந்துள்ளது. 80 முதலீடு வந்ததாக சொன்னவர்கள். தற்போது 23 சதவீதம் வந்துள்ளது என சொல்கிறார்கள்.
தமிழ்நாட்டிற்கு வராமல், ஆந்திரா, தெலுங்கானாவுக்கு, தொழில் நிறுவனங்கள் செல்கிறது. இதற்கு தி.மு.க.வின், கலெக்சன், கமிசன் கராப்சன் அதிகம் என்பதால், இங்கு வருவதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழ்நாட்டில் 1.30 கோடி இளைஞர்கள் படித்துவிட்டு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
- லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலை கனவுகளை திமுக அரசு தட்டிப் பறித்திருக்கிறது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகத்துறையில் 2538 பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளை நியமிக்க ஒரு பணிக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை கையூட்டு பெறப்பட்டது குறித்து வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி அமலாக்கத்துறை எழுதிய கடிதம் வெளியானது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த காவல்துறை ஆணையிட்டுள்ளது. தமிழ்நாட்டையே உலுக்கிய ஊழல் அம்பலப்படுத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தத் துடிக்கும் திமுக அரசு, அந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த முன்வராதது கண்டிக்கத்தக்கது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு 2538 அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களை நியமிப்பதற்கான அரசாணை 14.11.2023-ஆம் நாளும், ஆள்தேர்வு அறிவிக்கை 02.02.2024-ஆம் நாளும் வெளியிடப்பட்டன. அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட இந்த ஆள்தேர்வில் ஒவ்வொரு பணிக்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை கையூட்டாக வசூலிக்கப்பட்டதையும், அப்பணம் ஹவாலா முறையில் பல இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதையும் சோதனைகளின் மூலம் கண்டறிந்த அமலாக்கத்துறை, அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தும்படி 232 பக்க ஆவணங்களுடன் அக்டோபர் 27-ஆம் நாள் தமிழக காவல்துறைக்கு கடிதம் எழுதியிருந்தது.
இந்த ரூ.888 கோடி வேலைவாய்ப்பு ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அக்டோபர் 29-ஆம் நாள் நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தது; சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை அமர்விலும், மதுரைக் கிளையிலும் இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த ஆணையிடக் கோரி வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. அந்த வழக்குகளில் ஒன்றின் விசாரணையின்போது, அமலாக்கத்துறையின் அறிக்கை எவ்வாறு வெளியானது? என்று நீதிபதிகள் வினா எழுப்பியிருந்தனர்.
அதையே காரணம் காட்டி, ரூ.888 கோடி வேலைவாய்ப்பு ஊழல் குறித்த அமலாக்கத்துறை அறிக்கை எவ்வாறு வெளியானது? என்பது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. இந்த ஊழல் குறித்த அமலாக்கத்துறையின் அறிக்கை வெளியானது அதிசயம் அல்ல. ஊடகத் தொடர்புகள் கடந்த காலங்களில் இல்லாத அளவில் அதிகரித்திருப்பதுடன், சமூக ஊடகங்கள் பெருகியுள்ள நிலையில், இத்தகைய அறிக்கைகள் வெளிவருவது இயல்பானது தான். கடந்த காலங்களிலும் இதே போன்ற பல அறிக்கைகள் வெளியாகியுள்ளன. அவ்வாறு இருக்கும் போது இந்த அறிக்கை வெளியானது குறித்து விசாரணை நடத்த ஆணையிட்டிருக்கும் தமிழக அரசு, தமிழகத்தையே உலுக்கிய வேலைவாய்ப்பு ஊழல் குறித்து வழக்குப் பதிவு செய்யாதது ஏன்?
தமிழ்நாட்டில் 1.30 கோடி இளைஞர்கள் படித்துவிட்டு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் பட்டப்படிப்பை முடித்து விட்டு, அரசு வேலைக்கு சென்று விட முடியாதா? என போட்டித் தேர்வு பயிற்சி மையங்களிலும், நூலகங்களிலும் தவம் கிடக்கின்றனர். அவர்களைப் பற்றி எந்தக் கவலையும் படாமல் லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு அரசுத்துறை வேலைகளை திமுக அரசு விலை வைத்து விற்பனை செய்திருக்கிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலை கனவுகளை திமுக அரசு தட்டிப் பறித்திருக்கிறது. இதற்கு மன்னிப்பே கிடையாது.
தமிழ்நாட்டில் நல்லாட்சி நடத்துவதாக நாடகமாடும் திமுகவினர், ஊழல்கள் செய்வதை மட்டுமே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருக்கின்றனர். திமுக ஆட்சியில் ஊழல்கள் நடக்காதத் துறையே கிடையாது என்பது தான் அனைத்துத் தரப்பினரின் குற்றச்சாட்டாக உள்ளது. வேலைவாய்ப்பு வழங்குவதில் தொடங்கி, ஆற்று மணல் கொள்ளை, கனிமவளங்கள் கொள்ளை, இராம்சார் தளத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி வழங்குவதில் ஊழல், மின்சாரம் கொள்முதல் செய்வதில் ஊழல், மின்மாற்றிகள் கொள்முதல் செய்வதில் ஊழல், சரக்குந்து போக்குவரத்து ஒப்பந்த ஊழல் என திமுக அரசில் நடந்த ஊழல்களை பட்டியலிட்டால், நீதியரசர் சர்க்காரியா ஆணையத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஊழல்களின் பட்டியலை விட மிகவும் அதிகமாக நீண்டு கொண்டே செல்லும். திமுக என்றால் ஊழல் என்று தான் மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
ஆனால், எந்த ஊழலும் செய்யவில்லை; உலகின் உத்தமமான நிர்வாகத்தை வழங்கிக் கொண்டிருக்கிறோம் என்ற உலகமகா பொய்யை திமுக தொடர்ந்து கூறி வருகிறது. திமுக ஆட்சியாளர்கள் எந்த ஊழலும் செய்ய வில்லை என்றால், குறிப்பாக நகராட்சி நிர்வாகத்துறைக்கு அதிகாரிகளை நியமித்ததில் எந்த ஊழலும் நடைபெற வில்லை என்றால், அது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த திமுக அரசு அஞ்சுவது ஏன்?
இதற்கு முன் தமிழ்நாட்டில் ரூ.4730 கோடி அளவுக்கு மணல் கொள்ளை நடந்திருப்பதாகவும், அதன் மூலம் கிடைத்த பணம் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்த அமலாக்கத் துறை, அது குறித்த ஆதாரங்களை தமிழக அரசுக்கு அனுப்பி, அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்யுமாறு கடந்த ஆண்டு ஜூன் 13-ஆம் தேதி தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு கடிதம் எழுதியது. ஆனால், அதன் மீது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல் தான் வேலைவாய்ப்பு ஊழல் குறித்த அறிக்கை மீது ஒன்றரை மாதமாக நடவடிக்கை இல்லை.
ஆட்சி அதிகாரத்தை தீமைகளில் இருந்து மக்களைக் காக்கும் கவசமாக பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், ஊழல் செய்த தீயசக்திகளை காப்பாற்றுவதற்கான கவசமாக ஆட்சி அதிகாரத்தை திமுகவினர் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. திமுகவினரால் தவறாக பயன்படுத்தப்படும் அந்தக் கவசம் இன்னும் 3 மாதங்களில் காணாமல் போய்விடும். அடுத்து அமையவிருக்கும் அரசில் திமுக ஆட்சியில் நடைபெற்ற அனைத்து ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும். மக்களைச் சுரண்டி ஊழல் செய்த அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்பதை வாக்குறுதியாக அளிக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தேர்தல் ஆணையம் அறிவித்தது செல்லாது என்பது உறுதியாகிவிட்டது.
- வரும் தேர்தலில் கட்சியின் அங்கீகாரத்தை மீட்டெடுத்து மக்களுக்கு உரிமைகளை பெற்று தருவதே என்னுடைய பணியாக ஏற்று மக்கள் பணி ஆற்றுவேன்.
பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நான் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 04.12.2025 அன்று நடந்த விசாரணையில் நேற்று 06.12.2025 தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் நான் தொடர்ந்த வழக்கில் எனக்கு வெற்றி கிடைத்துள்ளது. மருத்துவர் அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது செல்லாது. அதன்படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி என்று சொல்லுவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு சட்ட அதிகாரம் இல்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே அன்புமணி கட்சியின் தலைவர் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு அங்கீகாரம் இல்லாததால், தேவை ஏற்படின் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 28.05.2022 முதல் 28.05.2025 வரை மூன்றாண்டு காலம் தலைவர் பதவி என்பதற்கு மாறாக, ஒரு போலி ஆவணத்தை (கடிதம்) தயாரித்து 2023 முதல் 2026 வரை என்று தேர்தல் ஆணையத்திற்கு அன்புமணி கொடுத்த போலி கடிதத்தை ஏற்று தேர்தல் ஆணையம் அன்புமணி தலைவர் என்று அறிவித்தது. தேர்தல் ஆணையம் அறிவித்தது செல்லாது என்பது உறுதியாகிவிட்டது.
எனவே நான் 46 ஆண்டு காலம் உழைத்து 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று இயக்கத்தை வளர்த்து மருத்துவர் அன்புமணியை மத்திய அமைச்சராக மேலும் பலரை மத்திய அமைச்சர்களாக, பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக, உள்ளாட்சி பிரதிநிதிகளாக வெற்றி பெற செய்த என்னிடமிருந்து கட்சியை பறிப்பதற்கு செய்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் என்னிடமிருந்து கட்சியையும், கட்சி தொண்டர்களையும், நாட்டு மக்களையும் பிரிக்க முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் கட்சியின் அங்கீகாரத்தை மீட்டெடுத்து மக்களுக்கு உரிமைகளை பெற்று தருவதே என்னுடைய பணியாக ஏற்று மக்கள் பணி ஆற்றுவேன்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மீண்டும் வெல்லும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. நீதி வென்றுள்ளது.






