என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வெற்றிக் கூட்டணி எது என்று கண்டறிவதில் சிக்கல் உள்ளது- ஜி.கே.மணி
- கூட்டணி அமைப்பதில் டாக்டர் ராமதாசுக்கு எந்த சிக்கலும் இல்லை.
- தேர்தலில் ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்வார்கள்.
திண்டிவனம்:
பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி தைலாபுரத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒரு தேர்தலில் வெற்றி என்பது கட்சியின் பலம். அந்த கட்சியை வழிநடத்தக் கூடிய தலைவருக்கான மிகப்பெரிய சக்தி, அதையும் தாண்டி கூட்டணி. அதற்கும் மேல் அந்த தொகுதியில் வேட்பாளர்களுக்குரிய முக்கியத்துவம். இதெல்லாம் சேர்ந்ததுதான் வெற்றி.
அந்த அடிப்படையில் இதையெல்லாம் கூட்டி கழித்து நேர்காணல் நடத்தி டாக்டர் ராமதாஸ் தலைமையில் ஒரு நல்ல முடிவு எடுப்போம்.
பா.ம.க. இன்று ஒரு நெருக்கடியான சூழலை சந்தித்தால் கூட டாக்டர் ராமதாஸ் பின்னால் கிராமங்களில் உள்ள அடித்தட்டு மக்கள், பா.ம.க.வின் அனுதாபிகள், மூத்த நிர்வாகிகள் ஆகியோர் உள்ளனர். அவர்கள் இந்த தேர்தலில் டாக்டர் ராமதாசின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.
டாக்டர் ராமதாசை பாதுகாக்க வேண்டும் என்று பேசத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த தேர்தல் டாக்டர் ராமதாசுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
கேள்வி: கூட்டணி தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும்?
பதில்: கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்க டாக்டர் ராமதாசுக்கு பொதுக்குழு அதிகாரம் கொடுத்து உள்ளது. அதற்கு பிறகு 3 கட்ட நிர்வாக குழு கூட்டம் நடத்தப்பட்டது. நிர்வாக குழுவிடம் டாக்டர் ராமதாஸ் கருத்து கேட்டார். மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களிடம் தனித்தனியாகவும் கருத்து கேட்டார். அந்த கருத்தின் அடிப்படையில் நல்ல முடிவு எடுப்பார். முடிவை வேகமாக அறிவிக்காமல் சற்று காலதாமதம் ஆவதற்கு என்ன காரணம் என்றால் நல்ல முடிவாக இருக்கணும்.
வெற்றி பெறக்கூடிய கூட்டணியாக இருக்க வேண்டும். டாக்டர் ராமதாஸ் இடம் பெறுகிற கூட்டணிதான் ஆட்சியை பிடிக்கக் கூடிய கூட்டணியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர் அலசி ஆராய்ந்து, யோசனை செய்து கொண்டிருக்கிறார். நல்ல முடிவை விரைவில் அறிவிப்பார்.
கேள்வி: த.வெ.க. சார்பில் கூட்டணி தொடர்பாக பேசினார்களா?
பதில்: எல்லா தரப்பும் பேசுகிறார்கள். தேர்தல் என்று சொன்னாலே சில கட்சிகள் தலைமையில் நேரடியாக பேசுவார்கள். சில கட்சியின் சார்பில் யாராவது ஆள் அனுப்பி பேசுவார்கள். இதெல்லாம் இயல்பானது. இறுதி முடிவுதான் உறுதியானது. இறுதி முடிவை டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார்.
கேள்வி: கூட்டணி அமைப்பதில் ஏதாவது சிக்கல் இருக்கிறதா?
பதில்: கூட்டணி அமைப்பதில் டாக்டர் ராமதாசுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஒரே ஒரு சிக்கல். வெற்றி கூட்டணி எது என்று கண்டறிவதை தவிர வேறு எதுவும் இல்லை.
கேள்வி: மாம்பழம் சின்னம் யாருக்கு?
பதில்: கட்சி யாருக்கு, மாம்பழம் சின்னம் யாருக்கு என்பதை மிக தெளிவாக விரைவில் உங்களிடம் டாக்டர் ராமதாஸ் சொல்வார்.
கேள்வி: அ.தி.மு.க. தலைமையில் இருந்து உங்களிடம் பேசினார்களா?
பதில்: எல்லா தரப்பிலும் பேசப்பட்டு வருகிறது. அதை இப்போது வெளியில் சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது.
கேள்வி: பா.ம.க. இடம்பெறும் கூட்டணியில் இடம் பெற மாட்டோம் என்று திருமாவளவன் கூறி இருக்கிறாரே?
பதில்: தேர்தலில் ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்வார்கள். இன்னொருவர் கருத்துக்கு நாம் பதில் சொல்லக்கூடாது. அது சரியாக இருக்காது. தேர்தலின் போது எல்லோருடனும் இணக்கமாக இருக்க வேண்டும். நான் அப்படித்தான் இருப்பேன்.
கேள்வி: திருமாவளவனை சமாதானப்படுத்தும் முயற்சி நடந்ததா?
பதில்: அப்படி எதுவும் எனக்கு தெரியவில்லை.
கேள்வி: பா.ம.க.வுக்கு கடந்த காலங்களை போல தொகுதிகள் கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா?
பதில்: பா.ம.க. வலிமையான சக்தி. டாக்டர் ராமதாசின் வலிமை எப்போதும் குறையாது. தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக பா.ம.க.வும், டாக்டர் ராமதாசும் இருக்கிறார்கள்.
கேள்வி: கூட்டணி தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலுவிடம் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறதே?
பதில்: இது உங்கள் கற்பனை மற்றும் யூகம்தான்.
கேள்வி: உங்களை தி.மு.க.வின் கைக்கூலி என்று விமர்சித்து சொல்லப்படுகிறதே?
பதில்: டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் ஏற்பட்ட பிரிவுக்கு நான் தான் காரணம் என்று சொல்கிறார்கள். கைக்கூலி என்றும் சொல்கிறார்கள். டாக்டர் ராமதாசையும், அன்புமணியையும் பிரிப்பதற்கு எனது மனசாட்சி இடம் கொடுக்குமா? ஒன்றாக இணைக்கும் முயற்சியை 5 மாதமாக மேற்கொண்டேன். அது நடக்கவில்லை என்ற வருத்தம் இன்று வரை இருக்கிறது. அவர்கள் இருவரும் ஒன்றாக பேச வேண்டும் என்று நினைக்கிற முதல் ஆள் நான்தான். அவர்கள் இணைய தடையாக இருக்க மாட்டேன். கைக்கூலி என்று சொல்வதை கனத்த இதயத்துடன் தாங்கிக் கொண்டு வாழ்கிறேன் என்றார்.






